மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் இணைந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 40 ஆம் ஆண்டுக் கருத்தரங்கைச் சிறப்புடன் நடத்துகிறது.
23.05.2009 காலையில் நடந்த தொடக்கவிழாவில் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றிய சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும் இரண்டுமுறை சாகித்திய அகாதெமியின் விருதை வென்றவருமான பேராசிரியர் கவிஞர் சிற்பி தொடக்க உரையாற்ற எழுந்தபொது ஈழத்தில் களப்பலியானவர்களுக்கு வீர வணக்கம் எனவும் இறந்தவர்களுக்கு எங்கள் அஞ்சலி எனவும் அரங்கில் பேசத் தொடங்கியதும் உலகம் முழுவதும் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அவர் பேச்சை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்.
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிக் கருத்தரங்கினை நடத்துகிறது. இதுவரை 39 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வருகிறது. 40 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் மே 23,24 நாள்களில் நடக்கிறது.
23.05.2009 காலை 11 மணிக்குத் தொடங்கிய விழாவில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மலேசியா,சிங்கப்பூரிலிருந்தும் 500 மேற்பட்ட ஆய்வு அறிஞர்கள் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் மணிவேல் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.முனைவர் இரா.மோகன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கற்பக குமாரவேல் அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழகத்தில் உயர்கல்வி தமிழ்வழியில் அமையாமைக்கு உரிய காரணம் பற்றி எடுத்துரைத்த துணைவேந்தர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழில் அடிப்படை அறிவு இருக்கவேண்டும் என்றார். கன்னட மொழியின் வளர்ச்சிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்குக் கருநாடக அரசு ஒரு கோடி உரூவா கொடுத்துள்ளதையும் எடுத்துரைத்தார். அறிவுப்பெருக்கமும், அறிவுப்பரவலாக்கமும் என்ற இரண்டு கொள்கைக்களைக் குறிக்கோளாக் கொண்டு பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும் என்றார்.
கருத்தரங்க ஆய்வுக்கோவையை (நான்கு தொகுதிகள்) பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் வெளியிட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் தமிழண்ணல் வாழ்த்துரை வழங்கினார்.ஆறு அழகப்பன் தமிழர்கள் தமிழ் எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடக்கவுரையாற்றிய சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஈழத்தமிழர்களை இழந்து கையறு நிலையில் இருக்கும் என்னை தொடக்கநிலையில் உரையாற்ற அழைத்துள்ளனர். தென்திசை நினைவிலிருந்து விடுபடாதவராய்ச் சிற்பி பேசினார். அண்மையில் தாம் படித்த நான்கு நூல்கள் மிகச்சிறந்தன என்றுரைத்தார்.அவை திராவிடச்சான்று, காதல்கோட்டை (நாவல்), தமிழகத்தில் வைதீகம்,ஒரு நகரமும் ஒரு கிராமமும் என்று நூல்கள் அவை.இதன் சிறப்புகளைப் பலபட எடுத்துரைத்தார்.
துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள் அடுத்த ஆண்டு நெல்லையில் இந்தக் கருத்தரங்கம் நடக்க உள்ளதைக் கூறியதும் அரங்கம் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. தமிழ் இன உணர்வுடன் பேசி அரங்கிற்குத் தமிழ் உணர்வேற்றி சபாபதிமோகன் தன் உரையை நிறைவு செய்தார்.
பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் தம் இளமைக்காலம் தொடங்கித் தன்முன்னேற்றம் வரை எடுத்துரைத்து அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டினார். எதிர்காலத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுத் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட உள்ளதைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
பிற்பகல் ஆய்வரங்கு நடந்தது.
மாலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு என்ற என் கட்டுரையைக் காட்சி விளக்கத்துடன் வழங்கினேன். பேராசிரியர்கள் சிற்பி,தமிழண்ணல், இரா.மோகன், ஆறு.அழகப்பன், காவ்யா சண்முகசுந்தரம்,பேராசிரியர் சுபாசு சந்திரபோசு, மணிவேல், சேதுபாண்டியன், பேராசிரியர் சபாபதி(மலேசியா) உள்ளிட்ட அறிஞர்களுக்கு நடுவே என் கட்டுரை வழங்கப்பெற்றது.பேராசிரியர் சிறீகுமார் தலைமை தாங்கினார்.
மாலையில் இசையறிஞர் மம்முது அவர்களின் தொல்காப்பியர் இசையியல் என்ற தலைப்பிலான உரை அமைந்தது.
1 கருத்து:
இலட்சக்கணக்கான பேர் மடிந்த செய்தி தமிழ்நாட்டில் இன்னும் பரவாநிலையில், வெளிப்படையாக 100-கணகான தமிழ் முனைவர்கள் கூடும் அவைக்கண் வீர வணக்கம் செலுத்திய கவிஞர் சிற்பி அவர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் மக்கள் தொ.கா. தடையா?
கருத்துரையிடுக