நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 15 ஆகஸ்ட், 2007

தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 - 11.06.1995)


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் பெருமைமிகு வாழ்க்கை

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னுவிவிம் பெயரில் கையயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையயழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950 இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்  பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972 இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973 இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச் செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),  பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981 இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981 இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவித் தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982 இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84 ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988 இல் 'செயலும் செயல்திறனும்' என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

பெருஞ்சித்திரனாரின் நூல்கள் :

1. எண்சுவை எண்பது
2. பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
3. ஐயை
4. கொய்யாக் கனி
5. கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
6. பள்ளிப் பறவைகள்
7. மகபுகுவஞ்சி
8. கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
9. நூறாசிரியம்
10. தன்னுணர்வு
11. இளமை உணர்வுகள்
12. பாவேந்தர் பாரதிதாசன்
13. இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
14. வாழ்வியல் முப்பது
15. ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
16. உலகியல் நூறு
17. அறுபருவத் திருக்கூத்து
18. சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
19. இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
20. செயலும் செயல்திறனும்
21. தமிழீழம்
22. ஓ! ஓ! தமிழர்களே
23. தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
24. நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
25. இளமை விடியல்
26. இட்ட சாவம் முட்டியது
27. நமக்குள் நாம்....

நன்றி: திண்ணை இணையதளம் நாள்: 16.08.2007


2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

முனைவர் மு.இளங்கோவன் ஐயா,

பெருஞ்சித்திரனார் பற்றிய மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தை தொகுதளிதிருக்கிறீர்கள். படிக்கும் போதே தமிழ் பெருமக்களைப் பற்றி மிக்க நெகிழ்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

பெருஞ்சித்திரனார் ஐயாவின் நூல்களை இனி தேடி படிக்கவேண்டும் என்ற உறுதி பூண்டுள்ளேன்.

தொடுப்புக் கொடுத்து அறியதந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

தமிழ் இயலன் சொன்னது…

Elango aiya
vanakkam
Arumai arumai
arivaarndha thangal pani thodarattum

Thamizhiyalan