நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007

  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்இலக்கியத்துறை மெரினா வளாக அரங்கில் சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007 என்னும் தலைப்பில் 2007 ஆகத்து மாதம் 5ஆம் நாள் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தொடங்கியது. காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்ற பட்டறையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் அயல்நாடுகளில் இருந்தும் 274 பேராளர்கள் பங்கு பெற்றனர்.

  இப்பட்டறையில் பங்கு பெற்றவர்களை இருவகையில் அடக்கலாம். கணினித் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து கொண்டு தமிழ் வலைப்பதிவு செய்பவர்கள், கணினித் துறை சாராமல் தமிழில் வலைப் பதிபவர்கள் என்பது அவ்வகைப்பாடாகும்.

  இப்பட்டறையில் தலைவர் உரை, வரவேற்புரை, பொன்னாடை அணிவித்தல், பரிசளித்தல் போன்ற எந்தச் சடங்குகளும் இடம்பெறவில்லை. தாங்கள் கற்றதை மற்றவர்களுக்குத் தானே எதிர்பார்ப்பு இல்லாமல் பயிற்றுவித்தலை நோக்கமாகக் கொண்டவர்கள் வந்திருந்தனர். அதுபோல் கணிப்பொறி தொடர்பாகவோ, இணையம் தொடர்பாகவோ எதுவும் தெரியாது, புதியதாகக் கற்க வந்துள்ளோம் என்று வெளிப்படையாகவே சொல்லி கற்கும் நோக்கம் உடையவர்களும் வந்திருந்தனர். இன்னொரு பிரிவினர் கணினி, இணையம் பற்றிய ஓரளவு அறிமுகமான தகவல்களை மெருகேற்றிக்கொள்ள வந்தனர்.

  விழாவின் தொடக்கமாகப் பட்டறையின் அமைப்பாளர்களுள் ஒருவரான விக்கி அவர்கள் பட்டறையின் நோக்கம், பட்டறை நடைபெறும் விதம் இவற்றைக் கூறி யார் வேண்டுமானாலும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தகவல் பரிமாறும் பொழுது கூடுதல் தகவல் தெரிந்தவர்கள், இடையில் விளக்கம் சொல்லிப் பங்கேற்கலாம். பங்கேற்போருக்குச் சலிப்பு ஏற்பட்டால் இடையில் தனியே அமர்ந்து பேசிக் கொள்ளலாம் என்று பட்டறையின் விடுதலையான நிகழ் முறையைக் குறிப்பிட்டார். சிவக்குமார் இடையில் புகுந்து மேலும் சில தகவல்களைப் பேராளர்களுக்கு விளக்கினார்.

  ஓசை செல்லா அவர்கள் பட்டறை நிகழ் முறையைத் தம் கைப்பேசி வழியாகப் படம் பிடித்து உடனுக்குடன் உலகிற்கு இணையம் வழியாகத் தெரிவித்தார். இது புதியவர்களுக்கு வியப்பாக இருந்தது. எழுத்தாளர் மாலன் தமிழ் வலைப்பதிவுகளில் பொழுதுபோக்கு அம்சம், நிகழ்ச்சிகள், தனிமனிதச் சாடல்கள் உள்ளனவே தவிர தரமான உள்ளடக்கம் தேவை என வலியுறுத்தினார்.

  புதுச்சேரி மு. இளங்கோவன் அரிக்கமேடு, கோபாலையர், பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் போன்ற தமிழறிஞர்களைப் பற்றியும் நிகழ்காலத் தமிழறிஞர்களைப் பற்றியும் வாழ்க்கைக் குறிப்புகள் இணையத்தில் பதியாமல் உள்ளதை விருப்பத்தோடு குறிப்பிட்டார். இராம்கி ஈழம் சார்ந்த தமிழர்கள் தமிழ் வலைப்பதிவுக்கும் பரவலுக்கும் வழி வகுத்ததை நினைவு கூர்ந்தார்.

  தமிழ் வலைப்பதிவில் ஆர்வமுடன் செயல்படும் பல இளைஞர்கள் தங்கள் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். லக்கி, பிணாத்தல், பாலபாரதி, செந்தழல்ரவி, ஓசைசெல்வா, விக்கி, சிவா, காசி, பூர்ணா, முகுந்த் முதலானவர்கள் இடையிடையே விவாதங்களில் பங்கேற்றனர். பல தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். இஸ்மயில் அவர்கள் கணினியில் இரகசியக் குறியீடுகள் திருடப்படும் விதத்தையும், நமக்குத் தெரியாமல் நம் கணினிச் செய்திகள் யார் யாருக்கு அனுப்பப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள விதத்தையும் சொன்ன பொழுது பட்டறையில் இருந்தவர்கள் மருண்டு போயினர். ஏனெனில் நமக்குத் தெரியாமல் நம் கணிப்பொறியை இரகசியமாகக் கண்காணிக்கும் அளவிற்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதை எண்ணி வியந்தனர்.

  கிராமப் புறங்களில் உள்ள படிப்பறிவு குறைந்த மக்களுக்கும் கணினி, இணையப் பயன்பாட்டைப் புரிய வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையம் வழியாக மட்டும் அறிமுகமாகியிருந்த வலைப்பதிவர்கள் நேரடியாக ஒருவருடன் ஒருவர் அறிமுகமாகித் தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொண்டனர். தோழர் ஆசிப் மீரான், அண்ணா கண்ணன் முதலானவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நான் உரையாட முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். அண்ணா கண்ணனின் தமிழில் இணைய இதழ்கள் நூலை முன்பே கற்றவன் என்பதை அவரிடம் சொல்லியிருக்கலாம்.

  ஓசை செல்வாவிடம் எப்படியும் என்னை ஒரு படம் எடுத்து உலவவிடுங்கள் என்று கேட்டபொழுது கைபேசியை எங்கோ மறந்து வைத்து வந்ததைச் சொல்லித் தப்பி விட்டார். அவருக்கு உள்ள பல அலுவல்களில் தமிழில் தட்டச்சுச் செய்ய இயலவில்லை என்று சொல்லிப் பலரை நேர்காணல் கண்டு ஒலி வழியாக அறிமுகம் செய்யும் பெரும்பணியைச் செய்து வருகிறார்.

  கணிப்பொறி நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்த் தோழர்கள் தமிழ் மொழியை எந்த அளவு நேசிக்கின்றனர் என்பதை இப்பட்டறையில் புரிந்து கொள்ள முடிந்தது. உலகத் தொழில் நுட்பங்களை உடனுக்குடன் தமிழிற்கு அறிமுகம் செய்யத் துடிக்கும் அவ்இளைஞர்கள் வழியாகத் தமிழ் மொழி இன்னும் வளம் பெறும்.

வலைப்பதிவர் பட்டறை நடைபெற்ற விதம்

 வலைப்பதிவர் பட்டறைக்கு வந்தவர்கள் இணையம் வழியான அறிவிப்புகளையும், செய்தித்தாள் செய்திகளையும் கண்டே துல்லியமாக வந்தனர். 274பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். இன்னும் கூடுதலாக எண்ணிக்கை இருக்கும். காலையில் வந்ததிலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை உற்சாகத்துடன் அனைவரும் பங்கு பெற்றனர். பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறு குறிப்புச் சுவடி, எழுதுகோல், முகவரி அட்டை, கணிச்சுவடி என்னும் நூல், சாவிக் கொத்து உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 பட்டறை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கீழ்த்தளத்தில் கணினி, இணையம் தொடர்பான விரிவுரைகள் நடைபெற்றன. மேல்தளத்தில் செய்முறை அரங்காகப் பட்டறை நடைபெற்றது. தமிழ்த் தட்டச்சு, எழுத்து உருமாற்றம், பிளாக்கர் தமிழ், வேர்ட்ஸ் தமிழ், யஹச்.டி.எம்.எல்., ஒலி-ஒளிப் பதிவு, பிளாஷ், புகைப்படம், திரட்டிகள் பற்றி கணிப்பொறியில் செய்முறைப் பயிற்சி முறை விளக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களும் பேராளர்களும் பயிற்சி பெற்றனர்.

 செந்தழல் ரவி பலருக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கம் தொடர்பான அடிப்படையான பணிகளைச் செய்து காட்டினார். பிளாக்கரில் எவ்வாறு செய்திகளை உள்ளிடுவது, இணைப்புத் தருவது போன்ற அவர்தம் விளக்கங்கள் புதியவர்களுக்கு நன்கு பயன்பட்டன. இதற்காக மேல்தள அறையில் பல கணிப்பொறிகள் தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்தன.

பட்டறையில் பேசப்பட்ட செய்திகள்...

  தமிழில் இணையம் அறிமுகம், தமிழிணைய மைல் கற்கள், தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகம், வலை நன்னடத்தை, வலைப்பாதுகாப்பு, வலைப்பதிவுகள் மூலம் சம்பாதித்தல், வலைப்பதிவர்களின் சமுதாய அக்கறை, இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும், தமிழ் சார்ந்த புதிய முயற்சிகள் முதலான பொருளில் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விக்கியின் பேச்சில்...

  தமிழ் காலத்திற்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி. உலகின் எந்த மொழியிலும் இதுபோலப் பட்டறை நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழ் வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க இப்பட்டறை உதவும். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். இன்றைய நிகழ்வுகள் யாரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். யாரும் யாரையும் சார்ந்திருக்காமல் விடுதலையாக இந்த அரங்கில் செயல்படலாம் என்றார்.

மாலன்...

  தமிழும் தொழில்நுட்பமும் இணையும் இடத்தில் உதவ வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். இணையத்தில் இடம்பெறும் தமிழின் உள்ளடக்கம் பற்றி சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பம் தமிழ்ப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழ் உள்ளடக்கத்தை நாம்தாம் கொடுக்க வேண்டும். தமிழ் இன்று உலக மொழியாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் உலகம் முழுவதிலிருந்தும் தமிழ்ப் படைப்புகள் கொடுக்கப்படுகின்றன. உலகச் சூழலில் இருந்து தமிழை அணுக வேண்டும். மைக்ரோ சாப்ட் நிறுவனம் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

  சிங்கப்பூர் அரசு தந்த ஊக்கம் தமிழ் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. தமிழ் இணைய மாநாடுகள் கணினி முயற்சியை உலக அளவில் ஒருங்கிணைத்தது. எழுத்தாளர்கள் இணையத்திற்குள் வந்ததால் இணைய இதழ்கள் உருவாயின. புது எழுத்தாளர்கள், படிப்பாளிகள் (வாசகர்கள்) இணையத்திற்கென வந்தனர். இணைய இணைப்புகளைக் கிராமங்களில் பெறுவது பெரும் சிக்கலாக உள்ளது. இணையத்தை, கணிப்பொறியைக் கருவி மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

  கருவி மொழிபெயர்ப்பில் தமிழை நடைமுறைப்படுத்த சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்மொழி பேச்சுவழக்கு, நடை வேறுபாடு கொண்ட மொழி என்பதால் கருவி மொழிபெயர்ப்பில் சிக்கல் உள்ளது. இணையம் வழியாக உடனுக்குடன் பின்னூட்டங்களைத் தெரிவிக்க முடியும். வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஊடகமாக வலைப்பதிவு (பிளாக்கர்) உள்ளது. வலைப்பதிவில் எழுதுவதற்குரிய காரணம் என்னவெனில் தொழில் நுட்பத்தால் உற்சாகம் பெற்றவர்கள் எழுத வருகின்றனர். தன் படைப்புகளைப் பிறர் திருத்துவதை விரும்பாதவர்களும் வலைப்பதிவிற்கு வருகின்றனர் உலகம் முழுவதும் படைப்புகள் செல்வதால், தேடுதல் வசதி உள்ளதால், உடனடியாக வெளி வருவதால் இணையத்தில் எழுத அனைவரும் முன்வருகின்றனர்.

  இணையத்தில் மொழியின் நெறிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டும். தன்னுடைய பக்கத்தை அனைவரும் கவனிக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்திறமையுடன் வலைப்பக்கத்தை வடிவமைக்கின்றனர்.இணையம் ஒரு கட்டற்ற ஊடகம். இதற்குப் பின்னூட்டம் பெரும் உதவியாக இருக்கும். யாருக்குச் சுதந்திரம் அதிகமாக உள்ளதோ அவருக்குப் பொறுப்புணர்வும் அதிகம். எனவே சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்புள்ள இணையப்பதிவில் சமூக நலன் நோக்கிப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். என் வலையுடன் தொடர்பில்லாத பின்னூட்டம் இடப்படாது எனவும் தனிநபரைத் தூற்றும் பின்னூட்டம் இடப்படாது எனவும் அறிவிப்புகளுடன் பதிவுகள் இருந்தால் பல்வேறு தொல்லைகள் குறையும்.

சிவக்குமார்....

 தொழில்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து பெற முடியும். உள்ளீட்டை நாம்தான் தரவேண்டும். தனிநபர்களால்தான் உள்ளடக்கத்தை உள்ளீடு செய்ய முடியும்.

ஆசீப் மீரான்...

தமிழ் வலைப்பதிவர் பட்டறையைத் துபாயில் நடத்த வேண்டும்.

பத்ரி...
 கணிப்பொறி எழுத்துக்கள், கடிதங்கள், ஆவணங்கள் முதலானவற்றைச் சேமிக்கவும் திரட்டவும் பயன்படுகிறது. மின்னஞ்சல், இணைய உலாவி, உரையாடல், தேடல், வலைப்பதிவு, விவாதங்கள், குரல் பதிவு, படப்பதிவு வசதிகள் இணையத்தால் கிடைத்தன. இணையம் இன்று கருவி என்ற நிலையில் இருந்து மக்கள் ஊடகமாக மாறிவிட்டது. செய்திகளைப் பதிப்பிக்கவும் இலக்கியங்களை வெளியிடவும் அறிவுக் களஞ்சியங்களை உருவாக்கவும் இணையம் உதவுகிறது. வணிகம், அரசாட்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
 தமிழ்த் தட்டச்சு அனைத்துக் கணிப்பொறியிலும் இருக்கும்படி அரசு ஆணையிடவேண்டும். தமிழ் இல்லாமல் தமிழ்நாட்டில் செல்பேசி இருக்கக்கூடாது என்று அரசு ஆணையிட வேண்டும்.

முகுந்து...

  தமிழில் முன்பு திஸ்கி,டேம், டேப், முதலான எழுத்து அமைப்புகள் இருந்தன. இன்று ஒருங்கு குறி வடிவில் எழுத்துச் சிக்கல் இல்லாமல் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. 1997-98ல் ஒருங்கு குறி அறிமுகமானது. தமிழைப் படித்துச் சொல்லும் தரமான செயலிகள் இன்று இல்லை. சொல்லச் சொல்ல எழுதும் செயலிகள் இல்லை, சொல் திருத்திகள் இல்லை. புத்தகத்தைப்படித்து வலையில் ஏற்றும் செயலி தேவை என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

இராம்கி...

 இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சில படைப்புகள் ஒருங்குகுறியில் இருந்தால் அனைவரும் படிக்க முடியும்.

காசி...

  இன்று இணையத்தை அரசு, தனியார், குழு, கல்வி நிறுவனம், தனிநபர் எனப் பலரும் வைத்துள்ளனர். வலைப்பதிவு செய்வதற்கு முன்பு எழுதுபவர், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் தேவை. இன்று நாமே தட்டச்சு செய்து வெளியிட்டுவிட முடியும். வாசகர்கள் பங்கேற்கும்படி வலைத்தளங்கள் உள்ளன. வலைப்பதிவில் இடம், காலம், தடையில்லை. எவ்வளவு கடிதங்களையும் வெளியிடலாம். படங்களை வெளியிடலாம்.

வலைப்பாதுகாப்பு பற்றி...

 குடும்பத்தினர் புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படங்களை வெளியிடும் போது இவற்றைப் பிறர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. புதிய பதிவாளர்கள் பதிவு மட்டும் செய்தால் போதும், பிற வலைப்பதிவர்களைத் தேவையற்ற விமர்சனம் செய்வதைத் தவிர்த்தல் நன்று.

  ஈழச்செய்திகளை இன்றைய செய்தித்தாள்கள் சரியாகவும், உண்மையாகவும் வெளியிடுவதில்லை. ஆனால் இணையம் வெளியிடுகிறது. சட்டதிட்டங்களை உடைத்துச் செய்திகளை ஆக்கப்பூர்வமாக வெளியிட இணையம் பெரிதும் உதவும். எழுதுபவர், படிப்பவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை உடைத்து அறிவைப் பரவலாக்க, பொதுமைப்படுத்த இணையம் பெரிதும் உதவுகிறது. மென்பொருள்கள் யாவும் இலவசமாக கிடைப்பதால் யார் வேண்டுமானாலும் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

பெரிய நிறுவனங்களால் மட்டும் செய்தியை உடனுக்குடன் தரமுடியும் என்றில்லை. தனிநபர்களால் தரமுடியும் என்பதற்குச் சற்றுமுன்... என்னும் இணையதளம் பெரிய சான்றாக உள்ளது.

மேற்கண்டவாறு பலரும் பயனுடைய தகவல்களை நிறைவாகப் பரிமாறிக்கொண்டனர்.

பட்டறையின் நிறைகுறைகளைப் படிவத்தில் பதிவு செய்து பேராளர்கள் வழங்கியதுடன் பட்டறையின் வெற்றிக்கு உழைத்தவர்கள் மேடையில் நிறைவாகக் கூடிநின்றனர்.

பயனுடைய சந்திப்பு.பரவ வேண்டிய செய்திகள்.பலரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி, இந்தியா

muelangovan@gmail.com
muelangovan.blogspot.com

நன்றி: திண்ணை இணைய இதழ் 09.08.2007

கருத்துகள் இல்லை: