நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 ஆகஸ்ட், 2007

புதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU

 தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

 அரிக்கமேடு எனும் பகுதி புதுவையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியாகும். அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் பாதையில் காக்காயன்தோப்பு எனும் ஊருக்கு வடக்கே அமைந்துள்ளது. அரிக்க மேட்டின் வடக்கே தேங்காய்த்திட்டும், தெற்கே காக்காயன்தோப்பும், கிழக்கே வீராம்பட்டினமும், மேற்கே அரியாங்குப்பமும் எல்லைகளாக உள்ளன.


(கி.பி.17 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்ட கட்டடப் பகுதிகள்)


 அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

 அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.




 அரிக்கமேடு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமேல் பண்டைக்காலத்தில் புகழ் பெற்ற ஊராக விளங்கினாலும் அது பற்றிய எந்தக் குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பதிவாகாமல் உள்ளமை வியப்பளிக்கிறது. எனினும் அரிக்கமேட்டை அகழாய்வு செய்த அயல்நாட்டு அறிஞர்கள் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளனர். ரோமானிய அரசன் அகஸ்டஸ் காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்று விளங்கியமையை இங்குக் கிடைத்த அகஸ்டஸின் உருவம் பொறித்த காசுகள் தெரிவிக்கின்றன.

 அரிக்கமேடு என்ற ஊரின் பெயர்காரணம் பற்றி அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களைச் சொல்கின்றனர். அருகர் சமயத்தார் இங்கு மிகுதியாக இருந்தனர். எனவே அருகன்மேடு - அரிக்கமேடு என்றானது என்பர். மேலும் அருகர் - புத்தர். புத்தர் சிலை இங்கு இருந்ததால் அரிக்கமேடு என்றானது என்பர். இவ்வாறு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அரிக்கமேட்டின் இயற்கை அமைப்பைப் பார்க்கும்பொழுது ஆற்று நீரும், கடல் நீரும் பல காலம் பரந்துபட்ட பகுதியை அரித்து மேடாக ஒரு பகுதியை மாற்றியதால் ஊர்மக்கள் வழக்கில் அரிச்சமேடு - அரிக்கமேடு என்று வழங்கி இருப்பார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாதபடி மேட்டுப்பகுதியாக மாமரத் தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

  தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

  அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையெடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

  புதுவையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் பலமுறை முயற்சி செய்தனர் எனினும் பிரெஞ்சியரின் ஆட்சிக்குட்பட்டுப் புதுச்சேரி இருந்தது. புதுவைக்குப் பிரான்சு நாட்டிலிருந்து பலர் கல்வி, ஆட்சி, ஆய்வின் பொருட்டு வந்தனர். அவர்களுள் லெழாந்தீய் ( Le Gentil ) என்பவர் அரிக்கமேட்டின் சிறப்பை முதன்முதல் வெளியுலகிற்குத் தெரிவித்தார். 1769 இல் இவர் தம் முயற்சி நூலாக வெளிவந்தது. இதில் அருகன்சிலை ஒன்று இருந்ததை வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஏற்பட்ட போர் முயற்சியால் இவ்வாய்வு முயற்சி தொடரவில்லை போலும்.



  1908-இல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய் (Jouveau Dubreuil ) என்பவர் அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி 1939இல் வியட்நாமில் இருந்து அரிக்கமேட்டு ஆய்விற்கு அறிஞர் ஒருவர் வந்தார். கொலுபேவ் என்னும் அந்த அறிஞரின் ஆய்வின் பயனாக அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட உரோமானிய நாணயங்களைக் கண்டு வெளியிட்டார்.

 1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளை நடுவதற்குக் குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்குத் தெரியவந்தன.

  1949இல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சில் நூலாக வெளியிட்டார். 1980இல் அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி ஆய்வு செய்து 1983இல் ஒரு கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர்ப் பகுதிகளைப் பற்றி ஆராய்ந்து எழுதினார். தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையை முழுவதும் தாங்கியுள்ளன.

முனைவர் மு.இளங்கோவனும், முனைவர் சு. வேல்முருகனும்
(2007 இல் எடுக்கப்பட்ட படம்)


அயல்நாட்டினர் பல்வேறு காலங்களில் உருவாக்கிய ஆய்வு முயற்சிகளைத் தொடர்ச்சியாக இன்று கிடைக்கும் அறிவியல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்திச் செய்திருந்தால் மிகப்பெரும் உண்மைகள் தெரிந்திருக்கும். பழமையைப் போற்றாத நம்மக்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.

அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :

  அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப் பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

  பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணிஉருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

 கூர்முனைச் சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச் சாடிகள் சான்றுகளாக உள்ளன.

  எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.

    உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன. அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்யும்பொழுது, பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.

நன்றி: 
தினமணி புதுவைச்சிறப்பிதழ் நாள் :19.07.2007 (அனைத்துப் பதிப்புகளிலும்)

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

நல்லுழைப்பு. மனமாரப் பாராட்டுகிறேன்!
-தேவமைந்தன்