நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 ஆகஸ்ட், 2025

கயிலை மாமுனிவர் தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்

 


கயிலை மாமுனிவர் 
தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்
(22.03.1931 – 19.08.2025)
 

[தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் 21 ஆம் பட்டத்து அதிபராக விளங்கியவர். சிதம்பரத்தை அடுத்துள்ள காரைமேடு என்னும் ஊரில் தோன்றியவர். சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் கல்வி பயின்றவர்; தருமபுர ஆதீனத்தின் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பட்டம் பெற்றவர். தருமை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாகப் பல ஊர்களில் திருமடத் தொண்டுகளில் ஈடுபட்டவர். திருபனந்தாள் காசித் திருமடத்தின் இளவரசாகவும், பின்னர் அதிபராகவும் விளங்கித் தமிழ் நூல்கள் பல வெளிவரவும், சமயப்பணிகள் பல நடைபெறவும் தொண்டாற்றியவர். அறக்கட்டளைகள் பலவற்றை நிறுவி, அருளறத் தொண்டுகள் இடையறவுபடாமல் நடைபெறக் காரணமாக விளங்கியவர். தருமபுர ஆதீனகர்த்தரால் “கயிலை மாமுனிவர்” என்னும் விருது அளிக்கப்பெற்றுப் பாராட்டப்பெற்றவர்.] 

கரைபுரண்ட கண்ணீர் நினைவுகள் 

19.08.2025 இரவு எட்டுமணியளவில் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் தவத்திருகயிலை மாமுனிவர்  முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் பரிபூரணம் அடைந்தார்கள் என்ற செய்தி கிடைத்ததும் என்னைப் பெருந்துயர் சூழ்ந்தது.  சற்றொப்ப நாற்பான் ஆண்டுகள் அப்பெருந்தகையரின் தமிழ்ப்பணிகளையும், சமயப் பணிகளையும் நாளும் கண்டும், கேட்டும் பெருமிதம் கொண்டிருந்த அத்தனை நினைவுகளும் நெஞ்சில் நிழலாடின. 

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபொழுது(1987-1992) மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை. பேச்சு, மனப்பாடம் என்ற தலைப்புகளில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அவர்களின் திருக்கையால் பல பரிசுகளை வாங்கியுள்ளேன். பெரும்பான்மையான பரிசுகளை முதலாண்டில் நான் வாங்கியதால் அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் விழாக்களில் பரிசு விவரங்களை மொத்தமாக அறிவிக்கச்செய்து, அனைத்துப் பரிசுகளையும் ஒரே தவணையில் எனக்குக் கொடுத்து, மகிழ்ச்சியடைவார்கள்

நான் எழுதிய மாணவராற்றுப்படை என்ற என் முதல் நூலினை அவர்களுக்கு அந்நாளில் படையல் செய்தேன்(1990). அவர்களின் திருக்கை வழக்கமாக ஐந்நூறு உரூபாய் பரிசாக வழங்குமாறு அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்(அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கியவர்கள்தான் இற்றைத் தருமபுர ஆதீனத்தின்  இருபத்தேழாம் பட்டம், முனைவர்,  தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்). 

என் இளங்கலை, முதுகலைப் படிப்பு அங்கு முடிந்து, ஆய்வுப்படிப்புகளில் இருந்தபொழுதும், பணிக்குச் சென்ற பிறகும் திருப்பனந்தாள் செல்லும்பொழுது அவர்களைக் கண்டு வணங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அவர்களின் அருளாட்சிக் காலத்தில் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலாது. அவற்றின் தொகை மிகுதியாக இருக்கும்.

 

திரு. சுந்தரமூர்த்தித் தம்பிரான், தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்கள், மு. இளங்கோவன் (கோப்பிலிருந்து)

எங்களின் அருகமைந்த ஊர்களில் நடைபெறும் திருக்குடமுழுக்கு விழாக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைப் பெற ஊர்ப் பெரியோர்கள் நேரில் கண்டு வணங்கி, விண்ணப்பிக்கும் பொழுது, அவற்றைக் கொடையாக வழங்குவதுடன், அக் குடமுழுக்கு விழாக்களைத் தலைமையேற்று நடத்துவதில் ஆர்வம் காட்டியவர்கள். சைவ சமய நூல்களைக் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பதற்கு வழிகண்டவர்கள். சமய மாநாடுகளுக்குப் பெரும்பொருள் நல்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள். காசிக்குச் செல்லும் அன்பர்கள் காசித்திருமடத்தில் தங்கி, வழிபாடு செய்வதற்கு உதவுவார்கள். யாரும் எளிதில் இவர்களை அணுகி வணங்கி மகிழலாம். 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி முதலியவற்றின் வழியாகப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதற்குத் துணைநின்றவர். அதுபோல் திருப்பனந்தாள், திரைலோக்கி, ஆடுதுறை முதலான ஊர்களில் திருமடத்தின் சார்பில் இயங்கும் பள்ளிகளின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு, மாணவர்களின் கல்வியறிவுக்குப் பெரும்பங்களிப்பு நல்கிய தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் தமிழ் வாழ்வைத் தொகுத்து எழுதுவதை என் கடமையாகக் கருதுகின்றேன்.

தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்களின் வாழ்வும் பணிகளும் 

திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இருபத்தியொன்றாம் பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்த தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்குத் தென்பாலுள்ள திருக்கழிப்பாலை என்னும் பாடல்பெற்ற ஊரினை அடுத்துள்ள காரைமேடு என்னும் ஊரில் 22.03.1931 இல் (பிரமோதூத ஆண்டு, பங்குனித் திங்கள் ஒன்பதாம் நாள், ஞாயிற்றுக் கிழமை) பிறந்தவர். இவர்தம் பெற்றோர் மாணிக்கம் பிள்ளை, குஞ்சம்மாள் என்னும் பெரியோர் ஆவர். பெற்றோர்கள் இவருக்கு இளம்பருவத்தில் வைத்த பெயர் நடனசபாபதி என்பதாகும். நடனசபாபதி அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் ஞானாம்பாள், தர்மாம்பாள்,   நாகவல்லி, கலியமூர்த்தி, முத்தையன் என்போர் ஆவர். நடனசபாபதி அவர்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். “பரணியில் பிறந்தவர் தரணியை ஆள்வார்” என்பது மக்கள் மொழி. அந்த வாக்கிற்கு இணங்கும் வகையில் பின்னாளில் காசித்திருமடத்தின் அதிபராக விளங்கியமை இவண் சிந்தனைக்கு உரியது. 

நடனசபாபதி அவர்களின் பாட்டனார் பெயர் சபாபதி என்பதாகும். இவர் கங்கைகொண்டசோழபுரம் திருக்கோவிலில் அந்நாளில்  அதிகாரியாகப் பணியாற்றியவர். பின்னாளில் கோவில் பணியை இவர் விட்டுவிட்டு, காரைமேட்டில் வணிகம் செய்தனர். பாட்டனாரின் பெயரைப் பெயரனுக்குச் சூட்டுதல் தமிழர் மரபு ஆதலின், தில்லைப் பெருமானின் நினைவோடு தம் மகனுக்கு நடனசபாபதி என்று மாணிக்கம் பிள்ளை தமக்கு மூன்றாவதாகப் பிறந்த மகனுக்குப் பெயர் சூட்டினர். 

சிதம்பரத்தில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு ஒரு கிளை மடம் உள்ளது. அந்த மடத்தினை மேற்பார்வை செய்ய, இராசமாணிக்கம் பிள்ளை என்பவர் பணியாற்றினார். இவர் மாணிக்கம் பிள்ளையின் மைத்துனர் ஆவார். இராசமாணிக்கம் பிள்ளை காரைமேட்டுக்கு ஒருமுறை வந்தபொழுது, சிறுவனாக இருந்த நடனசபாபதியைத் தம்முடன் சிதம்பரம் வந்து, அங்குள்ள காசித் திருமடத்துக் கிளையில் தங்கியிருந்தவாறு படிக்கலாம் என்று அழைத்து வந்தார். அவ்வகையில் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் நடனசபாபதியின் படிப்புத் தொடர்ந்தது. இராசமாணிக்கம் பிள்ளை காசித் திருமடத்துப் பணியிலிருந்து விலக நேர்ந்தபொழுது, அங்கிருந்து, நடனசபாபதி வெளியேறி, பெற்றோர்கள் வாழ்ந்த சிதம்பரநாதன் பேட்டையிலிருந்து படிப்பைத் தொடர்ந்தார். அப்பொழுது இவர் 1946 ஆம் ஆண்டு, பச்சையப்பன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிப்பைத் தொடர்ந்தார். நடனசபாபதி தம் பதினைந்தாம் வயது முதல் கந்தர் சஷ்டி கவசம் உள்ளிட்ட அருட்பனுவல்களைப் படிக்கத் தொடங்கினார். பள்ளியிறுதி வகுப்பு வரை சிதம்பரத்தில் பயின்ற பிறகு வேலை தேடத் தொடங்கினார்.

நடனசபாபதியின் கணியக் குறிப்பைப் பார்த்த பெற்றோர்கள் இவர் துறவியாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அறிந்து, இவருக்கு உரிய காலத்தில் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர். அம்முயற்சி யாவும் தோல்வியுற்றன. 

நடனசபாபதியின் தமக்கையின் கணவர் தருமபுர ஆதீனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் வழியாகத் தருமபுர ஆதீனத்தில் பணியில் இணைந்தார். அந்நாளில் அருளாட்சிசெய்துகொண்டிருந்த கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்கள் கடைக்கண்ணருளால் நடனசபாபதி எழுத்தராகவும். பின்னாளில் வேறு பணிகளிலும் பணியமர்த்தப்பட்டார். இவர் எழுத்தர் பணியேற்பதற்கு முன்பாக அவ்விருக்கையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அப்பணியைச் செய்துவந்தார்கள். 

நடனசபாபதி அவர்களுக்குத் துறவுநெறியில் நாட்டம் இருப்பதை உணர்ந்த தருமை ஆதீனம் இருபத்தைந்தாம் பட்டம் அவர்கள் இவர்களுக்கு 1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் முத்துக்குமாரசாமி என்னும் திருப்பெயர் சூட்டி, துறவியராகத் தம் திருமடத்தில் இருந்து சமயப்பணி செய்ய அனுமதியளித்தார்கள். 15.11.1953 இல் குருநாதர் இவருக்குச் சமயதீட்சை நல்கினார்கள். 23.11.1953 இல் சிவபூசை எடுத்தருளினார்கள். முத்துக்குமாரசாமி அவர்களின் பக்குவநிலையை உணர்ந்த குருநாதர், இவருக்குப் படிநிலைத் துறவுகளை விளக்கியருளினார்கள். 

திருக்கொருக்கை, மயிலாடுதுறை குமரக்கட்டளை,  திருக்கடவூர், சீர்காழி, திருப்பனந்தாள் ஆகிய தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கோவில்களில் கட்டளை விசாரணையாக முத்துக்குமாரசாமி அவர்கள் நியமிக்கப்பெற்று, சமயப்பணியாற்றினார்கள். 

தருமபுர ஆதீனம் கல்லூரியில் நடனசபாபதி அவர்கள் இணைந்து 1955 முதல் 1959 ஆம் ஆண்டு வரை பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் பட்டம் பெற்றவர். 

திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபராக விளங்கிய அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, காசித் திருமடத்தின் இளவரசாக 1960 ஆம் ஆண்டு, முத்துக்குமாரசாமித் தம்பிரான் பட்டம் சூட்டப்பெற்றார். இளவரசு பட்டம் சூட்டப்பெற்ற முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் பல்வேறு பணிகளிலும் கவனம் செலுத்தித், திருமட வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் பெரிதும் பாடுபட்டார். அவ்வகையில்  காசித்திருமடத்தின் ஆன்மீகப்பணிகள், மொழி வளர்ச்சிப் பணிகள், சாத்திர, தோத்திர வளர்ச்சிப் பணிகள், பரப்புரைப் பணிகள் என அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்துவந்தார்கள். 

திருப்பனந்தாளில் இயங்கிய செந்தமிழ்க் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்று, நூல் நிலையம், கல்விநிலைய வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டினார். திருப்பனந்தாள் குமரகுருபர சுவாமிகள் நடுநிலைப்பள்ளி, திரைலோக்கி குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, திருவைகுண்டத்தில் அமைந்துள்ள குமரகுருபரர் கல்லூரியின் வளர்ச்சிகளுக்குத் தொண்டாற்றினார். திருவைகுண்டத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த குமரகுருபரன் இதழ் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார். 

முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் காசித் திருமடத்தின் இளவரசாகப் பணியேற்ற பிறகு திருக்குறள் உரைக்கொத்து (அறம், பொருள், இன்பம்),  பல பதிப்புகளாக வெளிவந்தது.  திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் முதலிய நூல்கள் மூலமாகவும் உரைநடையாகவும் வெளிவந்தன. பன்னிரு திருமுறைகளும் தொடர்ந்து வெளிவந்தன. இவற்றின் பதிப்பாசிரியராக இருந்து சுவாமிகள் செய்த தமிழ்ப்பணிகள் கணக்கற்றவையாகும். பதிப்புப் பணிகளும் அச்சுப்பணிகளும் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, திருப்பனந்தாள் காசித்திருமடத்தில் அச்சகம் நிறுவப்பெற்றது. சற்றொப்ப பதினொரு ஆண்டுகள் காசித்திருமடத்தின் இளவராசக இவர்கள் பணியாற்றியுள்ளார்கள். 

1972 ஆம் ஆண்டு, மே மாதம் 16 ஆம் நாள்  இருபதாம் பட்டம் தவத்திரு அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் காசியில் பரிபூரணம் அடைந்த சூழலில் திருப்பனந்தாள் காசித்திருமடத்திற்கும், காசி குமாரசாமி மடம் உள்ளிட்ட ஆறு திருமடங்களுக்கும் அதிபராகத் தவத்திரு காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் என்னும் திருப்பெயர் தாங்கி, அதிபரானார்கள். 

கயிலை மாமுனிவர் பட்டம்பெறுதல்

தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் 15.07.1982 அன்று கயிலை சென்று, வழிபாடு செய்தார்கள். பரணி விண்மீனில் பிறந்த இவர்கள் அதே பரணி விண்மீன் நாளில் கயிலையை வழிபடும் பேறு பெற்றார்கள்.  அதனால் தருமை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் அவர்கள் 16.08.1982 இல் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்குக் கயிலை மாமுனிவர் என்னும் விருது அளித்துப் பாராட்டினார்கள். 

திருவைகுண்டத்தில் குமரகுருபரர் என்னும் பெயரில் 1950 இல் தொடங்கப்பெற்ற திங்களிதழ்  1977 முடிய 27 ஆண்டுகள் வெளிவந்து, இடையில் நின்றது. இதழ்களின் வழியாகச் சமயப்பணியாற்றுதல் வேண்டும் என்ற நோக்கில்  18.10.1978 முதல் குமரகுருபரர் என்ற சமய இலக்கியத் திங்கள் இதழைத் திருப்பனந்தாள் காசித் திருமடத்திலிருந்து இவர்கள் வெளியிட்டார்கள். இந்த இதழின் 150 ஆம் இதழாகக் கயிலை மாமுனிவர் மணிவிழாச் சிறப்பு இதழ் வெளிவந்தது. ஒவ்வொரு இதழிலும் அரிய ஆன்மீகக் கருத்துகளையும், சித்தாந்த மெய்ப்பொருளையும் தொடர்ந்து எழுதிவந்தார்கள். 

கல்விப் பணிகள் 

தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த பெருந்தகை ஆவார். திருப்பனந்தாளில் இயங்கிய செந்தமிழ்க் கல்லூரியை இவர்கள் காலத்தில் கலைக்கல்லூரியாக மாற்றினார்கள். மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக வளர்த்தெடுத்தார்கள். புதியதாகப் பதின்நிலைப் பள்ளியொன்றையும் (மெட்ரிகுலேஷன் பள்ளி), ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் தோற்றுவித்தார்கள். இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து, வெளிவருகின்றனர். 

குமரகுருபரர் முந்நூறாம் ஆண்டு நிறைவு விழா 

திருவைகுண்டத்தில் பிறந்த தவத்திரு குமரகுருபர சுவாமிகள் 1688 இல்  முக்தி பெற்றவர்கள். அதனை நினைவுகூரும் வகையில் 1988 இல் குமரகுருபரர் முந்நூறாம் ஆண்டு நிறைவு விழாவைத் திருப்பனந்தாளில் மிகச் சிறப்பாக நடத்தினார்கள். 04. 06. 1988 முதல்  1989 மே மாதம் வரை ஓராண்டுக் காலம் இந்தியா முழுவதும் 47 இடங்களில் இப்பெருவிழா கொண்டாடப்பட்டது. 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் பொன்விழா 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரித் தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ்க் கல்லூரியாக 1945 முதல் செயல்பட்டு, பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் கற்று, ஆசிரியர் பெருமக்களாகவும், பேராசிரியர்களாகவும், ஆய்வறிஞர்களாகவும் தமிழ்ப்பணியாற்ற வாய்ப்பு நல்கிய கல்லூரியாகும். இக்கல்லூரியின் பொன்விழா, தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் அருளாட்சிக் காலத்தில் 1996 இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் மணிவிழா

தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் மணிவிழா திருப்பனந்தாளில் 18.03.1991 முதல் 20.03.1991 வரை மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கயிலை மாமுனிவர் மணிவிழாவின்பொழுது பன்னிரு திருமுறைகளும், பதினான்கு  சைவ சித்தாந்த சாத்திர நூல்களும், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்களும், திருக்குறள் உரைக்கொத்துகள் யாவும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்குமாறு அச்சிட்டு அன்பர்களுக்கு வழங்கப்பட்டன. 

அறக்கட்டளைகள் 

திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர்களாக விளங்கிய சைவப் பெரியோர்கள் தமிழுக்கும், சைவத்துக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்கள் தொண்டுக்கும் பல்வேறு அறக்கட்டளைகளை நிறுவியுள்ளனர். அவ்வகையில் இருபதாம் பட்டத்தில் வீற்றிருந்த அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் நிறுவிய அறக்கட்டளைகளின் எண்ணிக்கை 533 எனவும் (இதன் மதிப்பு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1. 8 கோடி உருவா), அதன் பின்னர் 21 ஆம் பட்டத்தில் வீற்றிருந்த தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் வளர்த்தெடுத்த அறக்கட்டளைகளின் எண்ணிக்கை 810 என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. தம் காலத்திற்குப் பிறகும் நல்ல அறப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் அறக்கட்டளைகளை அமைத்த இவர்களைப் போற்றுதல் வேண்டும். 

தலயாத்திரை 

பாடல்பெற்ற சிவத்தலங்கள் 274 இல் 272 தலங்களுக்குத் தலயாத்திரை செய்து வழிபட்டுள்ளார்கள். எஞ்சிய திருக்கேத்தீசுவரம், திருகோணமலை ஆகிய தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. மேலும் வைப்புத்தலங்கள், திருவாசகத் தலங்கள், திருவிசைப்பாத் தலங்கள், வைணவத் தலங்கள், முருகத் தலங்கள்  பலவற்றையும் கண்டு வழிபட்ட பெருமையும் இவர்களுக்கு உண்டு. 

அயல்நாட்டுப் பயணங்கள் 

தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள். 

 தமிழுக்கும் சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள், தமது வயது மூப்பு காரணமாக 19. 08. 2025 இரவு எட்டு மணிக்கு முக்திப்பேறு அடைந்தார்கள். 

குறிப்பு: 

தவத்திரு கயிலை மாமுனிவர் அவர்கள் காசித் திருமடம் குறித்தும், அதன் ஆதிமுதல்வர் குமரகுருபர சுவாமிகள் குறித்தும் எடுத்துரைக்கும் உரையைத் தாங்கள் கேட்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

 

இணைப்பு:  https://www.youtube.com/watch?v=vMpfIfMZ60Q

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

மலேசிய மக்கள் போற்றும் மதிராசன்…

 

த. மதிராசன்

[மலேசியாவில் பிறந்து வளர்ந்த மதிராசன் இந்தியச் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 24 ஆண்டுகளும், மலேசியா இந்தியச் சிகை அலங்காரச் சங்கத் தோற்றுநராகவும், தலைவராகவும் செயல்பட்டவர். தாம் சார்ந்த இயக்க வளர்ச்சிக்கு மூன்று கட்டடங்களை மலேசியாவில் வாங்குவதற்குத் தொண்டாற்றியவர். “கடந்து வந்த என் வாழ்க்கைப் பயணம் - Autobiography of My Life Journey” என்னும் தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். மலேசியத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பட்டறிவு பெற்றவர்; பல்வேறு தமிழமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர்]. 

மலேசிய நாட்டில் மக்கள் தொண்டாற்றும் மகத்தான தலைவர்களுள் .  மதிராசன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். மலேசியத் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் போற்றும் வகையில் . மதிராசனாரின் பணிகள் அமைந்துள்ளன.  சிலாங்கூர் டாருள் ஏனான் கூட்டரசு வளாக இந்தியச் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 24 ஆண்டுகளும், மலேசியா இந்தியச் சிகை அலங்காரச் சங்கத் தோற்றுநராகவும், தலைவராக 12 ஆண்டுகளும் பணியாற்றிப் பல்வேறு மக்கள் பணிகளைச் செய்த பெருமை நம் தலைவர் த. மதிராசன் அவர்களுக்கு உண்டு. 

சிகை அலங்காரச் சங்கத்துக்கு என மலேசியாவில் மூன்று கட்டடங்களை வாங்கியும், நவீன சிகை அலங்காரத் தொழிலில் புதுமைகளை வரவேற்றும் இவர் செய்த பணிகள் அனைவராலும் நன்றியுடன் நினைவுகூரப்படுகின்றன. சங்கத்தில் இளைஞர் பகுதியை நிறுவிய வகையிலும், சாதனைபுரிந்த சங்கப் பொறுப்பாளர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய வகையிலும், அரசியல் தலைவர்களின் ஆதரவினைப் பெறுவதற்கு இவர் செய்த செயல்பாடுகள் யாவும் போற்றத்தக்கன. மதிராசனாரின் பணிகளைப் பாராட்டி மலேசிய பேரரசர் அவர்கள் AMN என்னும் உயரிய பட்டமும்,  சிலாங்கூர் சுல்தான் அவர்கள் PJK என்னும் உயரிய பட்டமும் அளித்துப் பாராட்டியுள்ளனர். சமூகச் சீர்திருத்த எண்ணம்கொண்ட த. மதிராசன் அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றைக் “கடந்துவந்த என் வாழ்க்கைப் பயணம்” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். 262 பக்கங்களில் மலர்ந்துள்ள இந்த நூல் தன் வரலாற்று நூல் (autobiography) வரிசையில் குறிப்பிடத்தகுந்த நூலாகும். நூலில் இடம்பெற்றுள்ள அறிஞர் பெருமக்களின் வாழ்த்துரைகளும், புகழ்ப் பாடல்களும் இவர்தம் பன்முக ஆளுமையை எடுத்துரைக்கின்றன. தம் குடும்ப வரலாற்றையும் இயக்க வரலாற்றையும் மக்கள் அறிந்துகொள்வதற்கு வழிசெய்த த. மதிராசனார் நம் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரியவர். 

த. மதிராசன் வாழ்க்கைப் பயணம் 

மலேசியாவின் கோலாலம்பூரில் வாழ்ந்த ப. அ. தங்கையா - இராசாமணி ஆகியோரின் மகனாக 23.01.1943 இல் மூன்றாவது மகனாக மதிராசன் பிறந்தவர். இவரின் உடன் பிறந்தவர்கள் மதிராணி, மதியூகி, மனோகரன், சுதந்திரன், ரவீந்திரன், செல்வன், வாசுகி, மல்லிகா, வனிதா ஆகியோர் ஆவர். மதிராசனின் தந்தையார் தஞ்சை மாவட்டம் வடுவூர் அருகில் உள்ள அருமலை என்னும் ஊரில் பிறந்தவர். அங்கிருந்து தஞ்சாவூர் சோழ வன்னியன் குடிகாடு என்னும் கிராமத்திற்குக் குடிபுகுந்தவர். அருமலையில் இவர்களின் முன்னோர்கள் மருத்துவத் தொழில் செய்து வந்தனர். 

மதிராசனின் தந்தையார் ப. அ. தங்கையா அவர்கள் தமிழகத்திலிருந்து இலங்கை சென்று, கொழும்பிலிருந்து கப்பலில் மலேயா தலைநகர் சிங்கப்பூருக்கு தம் பத்தொன்பதாம் வயதில் 1930 ஆம் ஆண்டு வந்தவர். மலேயா கோலாலம்பூரில் பல முடித்திருத்தகங்களில் சம்பளத்துக்கு வேலைபார்த்தவர். பின்னர் தாமே புதியதாகக் கடையொன்றைச் சொந்தமாக வாங்கித் தொழில் நடத்தியவர். மதிராசனின் தந்தையார் ப. அ. தங்கையா அவர்கள் 1936 முதல் சிலாங்கூர் மருத்துவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். 1949 முதல் 1953 வரை தலைவராகவும் பதவி வகித்தவர். 

த. மதிராசன் அவர்கள் மலேசியாவைச் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பிறந்தவர்(1943). அப்பொழுது இவரின் தந்தையார் தொழிலின் பொருட்டுப் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர். 

த. மதிராசன் கோலாலம்பூர் ஜாலான் சன் பெங், லொக்யூ தமிழ்ப்பள்ளி,  கோலாலம்பூர்  ஜாலான் புடு பாசார்ரோட் ஆங்கிலப்பள்ளி, கோலாலம்பூர்  மத்திய நகரப்பகுதியில் அமைந்துள்ள ஜாலான் பண்டார்  ஹய் ஸ்கூல் முதலான பள்ளிகளில் பயின்றவர். 

த. மதிராசனின் தந்தையார் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூழலில் குடும்பப் பொறுப்பை இவர் ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதனால் தம் ஒன்பதாம் வகுப்பு வரையிலான படிப்பை முடித்துக்கொண்டு, தம் பதினெட்டாம் வயதில்  முடித்திருத்தகக் கடையைக் கவனிக்கத் தொடங்கினார். கடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் செய்தித்தாள்கள் படிப்பது, நூல்கள் படிப்பது என்று தொடங்கித் தமிழை நன்கு எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டார். 

1967 ஆம் ஆண்டு மதிராசன் தம் தாயாருடன் முதன் முதல் தமிழகத்திற்கு வந்தவர். தம் உறவினர்களைப் பார்ப்பதற்குக் கோலகிள்ளான் ஸ்டேட் ஆப் மதராஸ் கப்பலில் ஏறி, ஏழு நாட்களில் நாகப்பட்டினம் சென்று, அருகில் உள்ள பட்டுக்கோட்டை ஊரில் உள்ள உறவினர்கள் இல்லம் சென்றுள்ளார். அதன் பிறகு திருச்சிராப்பள்ளியிலிருந்து விமானம் ஏறி, இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று,  ரயிலில் பயணம் செய்து, குருநாகலில் அமைந்துள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று, தம் உறவினர்களைக் கண்டு வந்தவர். 

1969 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 23 ஆம் நாள் த. மதிராசன் – மல்லிகா திருமணமும். உடன்பிறப்பு  த. மனோகரன் – வசந்தவல்லி திருமணமும் ஒரே நாளில் நடைபெற்றன. இத்திருமணங்கள் கோலாலம்பூர் ஜாலான் கேம்பல் ஈஸ்டன் ஹோட்டல் நடன அரங்கில்  மாண்புமிகு மேலவை உறுப்பினர் டத்தோ ஆதி நாகப்பன் தலைமையில் நடைபெற்றன. தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் திருமணவினை இயக்குநராக இருந்து திருமணத்தை நடத்திவைத்தார். இத் திருமணத்தில் தமிழ்நேசன் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன், வார்தா மலேசியா தமிழ்ப்பதிப்பு ஆசிரியர் சி.வி. குப்புசாமி, கோலக்கங்சார் அ. இராசகோபால், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மெல்லிசை மன்னர் ரெ. சண்முகம் தமிழ் வாழ்த்துப்பாடல் பாட, மலேசிய வானொலியைச் சேர்ந்த அசன்கனி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 

திருமண அழைப்பிதழ்

தொல்காப்பிய அறிஞர் நெல்லை இரா. சண்முகம் அவர்கள் 
மணவினை இயற்றி,
த. மதிராசன்- மல்லிகா,   த. மனோகரன் – வசந்தவல்லி ஆகியோரின்  திருமணத்தை நடத்திவைக்கும் காட்சி(1969).

த. மதிராசன் – மல்லிகா இணையருக்கு மாலதி, மலர்விழி, மணியரசி, மதனன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

த. மதிராசன் அவர்கள் மலேசியா முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, தமிழ்நேசன் ஆசிரியர் முருகு. சுப்பிரமணியம், டான்ஸ்ரீ குமரன் உள்ளிட்ட பெருமக்களுடன் நல்ல தொடர்புகளைப் பெற்றவர். த. மதிராசன் அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் மலேசியக் கிளையின் தலைவராகவும் உள்ளவர். இந்தியாவுக்குப் பலமுறை சுற்றுலா வந்து, கண்டுகளித்தவர். அதுபோல் மலேசியாவுக்குச் செல்லும் தமிழன்பர்களை வரவேற்று, விருந்தோம்பிப் பாரட்டி, வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டவர். அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உள்ளிட்டவர்கள் பல்வேறு சூழல்களில் மலேசியாவுக்கு வந்தபொழுது அவர்களின் உரைகளை நேரில் கேட்கும் பெருமை த. மதிராசனுக்கு வாய்த்துள்ளது. 

மதிராசனின் சமூகப்பணி, மக்கள் பணி, சமுதாயப் பணிகளைப் போற்றிப் பலரும் விருதுகளையும் பாராட்டுகளையும் நல்கியுள்ளனர். அவற்றுள் சமுதாயத் திலகம், தொண்டர் நாயகன், தமிழ்ச் செல்வம், பொதுநலச் சேவைச் செம்மல், சங்க நாயகன்,  வாழ்நாள் சாதனையாளர், பண்டிட்,  டாக்டர் என்று பலவாறு இவரை இவ்வுலகம் ஏத்திப் போற்றுவதை நினைவுகூர விரும்புகின்றேன். த. மதிராசன் அவர்கள் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவம் உடையவர். 



த. மதிராசன் அவர்களின் வாழ்வு பொதுவாழ்வாகும். மலேசிய மண்ணில் பல்வேறு இயக்கப் பணிகளைக் கவனிப்பதுடன், குடும்பத்தினரையும் உறவினர்களையும் அரவணைத்து வாழும் உயர்ந்த உள்ளம்கொண்டவர். சமூகத்தில் பலதரப்பு மக்களுடன் பழகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் சற்றும் தயக்கம் காட்டாத பெருமைக்கு உரியவர். தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் திறம்படச் செய்துமுடிக்கும் ஆற்றல்பெற்றவர். இவரின் வாழ்க்கை வரலாறு பல நூறு படங்களையும் அரிய குறிப்புகளையும் கொண்டு, “கடந்து வந்த என் வாழ்க்கைப் பயணம் - Autobiography of My Life Journey” என்னும் தலைப்பில் நூலாக அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த நூல் தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் உள்ளமை பெருஞ்சிறப்பிற்கு உரியதாகும். 

“சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்” 

என்னும் தமிழ்மறைக்கு ஏற்பத் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதி, அரிய ஆவணமாகத் தமிழ் இலக்கிய உலகில் பதிவுசெய்துள்ள த. மதிராசன் பல்வேறு சிறப்புகளை மேலும் பெற்று, நீடு வாழ வாழ்த்துகின்றேன்.

 நன்றி: எழுத்தாளர் ந. பச்சைபாலன், மலேசியா

சனி, 9 ஆகஸ்ட், 2025

மலேசியாவில் வெளிவந்த "தேனீ" மாத இதழ்!

 

தமிழ் மலர் நாளிதழ், மலேசியா (09.08.2025)

  நெல்லை இரா. சண்முகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தேனீ என்னும் பெயரில் மாத இதழ் 1965, செப்டம்பரில் வெளிவந்துள்ளதை அறிய முடிந்தது. இந்த இதழ் குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்ற நோக்கில் கிடைத்த குறிப்புகளை வைத்து ஒரு கட்டுரையை உருவாக்கினேன். மலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் மலர் நாளிதழ் அக்கட்டுரையை இன்று (09.08.2025) வெளியிட்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. தமிழ் மலர் இதழின் ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 

 தேனீ இதழைப் பாதுகாக்கும் அன்பர்கள் அதன் படியை வழங்கி உதவினால் மேலாய்வுகளுக்கு வழிவகுக்கும்.

தொடர்புக்கு: muetamil@gmail.com

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

புலிகரம்பலூர் புலவர் அ. பொன்னையன்

 

புலவர் . பொன்னையன் 

[ புலவர் . பொன்னையன் கடலூர் மாவட்டம் புலிகரம்பலூர் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிங்கப்பூர் முன்னாள் தலைமை அமைச்சரின்(பிரதமர்) வாழ்வையும், அருட்பிரகாச வள்ளலார் வாழ்வையும் காப்பியமாகப் பாடியவர். கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியங்களுக்குத் தொண்டாற்றி வருபவர்; பன்னூலாசிரியர். வள்ளலார் கொள்கையில் வாழ்ந்து வருபவர். ] 

சிங்கப்பூர் முன்னாள் தலைமை அமைச்சர்(பிரதமர்) சீர்மிகு லீ குவான் யூ அவர்களின் வாழ்வியலைக் காப்பியமாக்கிய பெருமை புலிகரம்பலூர் புலவர் . பொன்னையன் அவர்களுக்கு உண்டு. சிங்கப்பூர் முன்னாள் தலைமை அமைச்சரின் மறைவின்பொழுது(2015) சிங்கப்பூரில் புலவர் . பொன்னையன் தங்கியிருந்துள்ளார். பலமுறை சிங்கப்பூர் சென்று, அந்நாட்டின் சிறப்பை முன்பே அறிந்திருந்த புலவர் அவர்கள் முன்னாள் தலைமை அமைச்சர்(பிரதமர்) லீ அவர்களின் மறைவையொட்டி அவர்தம் பெருமைகளையும் சிறப்புகளையும் நன்கு அறிந்து மரபு வடிவில் 1303 செய்யுள்களால் இக்காப்பியத்தைப் புனைந்துள்ளார். வெண்பா, கலிவெண்பா, கலித்தாழிசை, கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கலித்துறை எழுசீர் விருத்தம், பஃறாழிசை கொச்சகக் கலிப்பா, கலிப்பா, கலிநிலைத்துறை எனப் பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ள இக்காப்பியம் அந்தாதித்தொடையிலும் யாக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் சீர்காழியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபொழுது புலவர் அவர்களின் தமிழ்ப்புலமையை அறிந்து அவர்களின் தமிழ் வாழ்க்கையை உரையாடித் தெரிந்துகொண்டேன். அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் நெறியில் தம் அறவாழ்வை அமைத்துக்கொண்ட புலவர் அ. பொன்னையன் அவர்கள் வள்ளலார் கொள்கைகளை மக்கள் மன்றத்துக்கும் மாணவர் மன்றத்திற்கும் கொண்டுசேர்ப்பதைத் தம் வாழ்நாள் கடமையாகச் செய்து வருபவர். தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் கடலூரில் நெருங்கிப் பழகித் தென்மொழி வெளியீட்டுப் பணிகளில் துணைநின்றவர். பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, பேராசிரியர் மு. தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுடன் நட்பு பாராட்டியவர். பள்ளியில் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும் கடமையாற்றிய இப்பெருமகனாரின் வாழ்வு தமிழ் வாழ்வாகும். இவர்தம் பணிகள் யாவும் தமிழ்ப்பணியாகும். புகழ் வெளிச்சம் பெறாத இப்புலவர் பெருமானின் தமிழ்ப்பணிகளையும் தமிழ்வாழ்வையும் இவண் அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன். 

புலவர் அ. பொன்னையன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

புலவர் அ. பொன்னையன் அவர்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் புலிகரம்பலூர் என்னும் ஊரில் வாழ்ந்த அப்புப் படையாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் மகனாக 22.09.1946 இல் பிறந்தவர். திண்ணைப்பள்ளியில் பயின்ற இவர், பின்னர் புலிகரம்பலூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். அதன் பிறகு தொழுதூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 12 வகுப்பு வரை பயின்றவர் (1964). 

கடலூர், மஞ்சள்குப்பம் பகுதியில் இயங்கிய அடிப்படை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்று ஆசிரியர் பயிற்சி பெற்றவர்(1964-1966). தனித்தேர்வராகப் புலவர், பி.லிட் படிப்புகளைப் படித்துப் பட்டம் பெற்றவர். 13.11.1979 இல் விருத்தாசலம் வட்டம், முதனை என்னும் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பயின்று 1982 இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் இளவல்(B.Ed) பட்டத்தை 1982-1984 இல் பெற்றவர். 

திட்டக்குடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982 இல் தமிழாசிரியராகப் பணியேற்றவர். பின்னர்த் தொழுதூர் அரசு   உயர்நிலைப் பள்ளியில் 1988 முதல் 1996 வரை பணியாற்றியவர். கீழக்கல்பூண்டி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 2004 இல் பணியோய்வு பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்த பட்டறிவுகொண்ட புலவர் பொன்னையனார் நல்லாசிரியராக விளங்கியதுடன் பல்வேறு நூல்களை எழுதித் தமிழுக்கு வளம்சேர்த்தவர். 

புலவர் அ. பொன்னையன் அவர்கள் பள்ளி மாணவராக இருந்தபொழுது  செஞ்சி ந. நடராசன் அவர்கள் தொழுதூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். நம் புலவர் அவர்களின் தமிழார்வம் கண்டு, இவருக்கு மரபு இலக்கணங்களைப் பயிற்றுவித்து, மரபுப் பாடல் எழுதும் சூழலை உருவாக்கித் தந்தார். அது முதல், வாய்ப்பு நேரும் பொழுதிலெல்லாம் மரபுப் பாடல் வரைவதை வழக்கமாக்கிக்கொண்டு, பின்னாளில் காப்பியக் கவிஞராகப் புலவர் அ. பொன்னையன் மிளிர்ந்துள்ளார். 

தென்னார்க்காடு மாவட்டத்தில் அந்நாளில் பள்ளிகளில் கலைக்கழகம் என்ற அமைப்பு இருந்தது. அவ்வமைப்பின் வழியாக மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பேச்சாளராகவும், படைப்பாளிகளாகவும் அவர்களை மாற்றுவது ஆசிரியர்களின் கூடுதல் விருப்பப் பணிகளாக இருந்தன. நம் புலவர் அவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, திறன் வாய்ந்த பல மாணவர்களை உருவாக்கியுள்ளார். 

இல்லற வாழ்க்கை 

புலவர் பொன்னையன் அவர்களுக்கு 13.11.1972 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் மனைவியின் பெயர் கௌரி அம்மாள். இவர்களுக்கு அருள் ஒளி, அருட்சுடர், அருள்மதி (சிங்கப்பூரில் தமிழாசிரியராகவும் கல்வித்துறை அதிகாரியாகவும் பணியாற்றுபவர்), அருள் தணிகை என்னும் நான்கு பெண் மக்களும், செவ்வேள் என்ற மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

கடலூர் புலவர் சீனி சட்டையன் (திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்), அவர்களும் சிதம்பர சாமிகள் அவர்களும் புலவர் பொன்னையன் அவர்களுக்கு அருட்பிரகாச வள்ளலார் பாடல்களையும் நெறிகளையும் அறிமுகப்படுத்திய பெருந்தகைகள் ஆவர். அவர்களின் துணையால் வள்ளலார் நெறியை  இவர் வாழ்க்கை நெறியாக அமைத்துக்கொண்டவர். 1000 கணக்கான மேடைகளில் வில்லுப்பாட்டுகள் வழியாக வள்ளலார் கருத்துகளைப் புலவர் அ. பொன்னையன் தம் குழுவினருடன் கொண்டுசேர்த்துள்ளார். வானொலி, தொலைக்காட்சிகள் வழியாகவும் வில்லுப்பாட்டுகள் வழியாக வள்ளலார் கருத்துகள் பரவியுள்ளன. மனுமுறை கண்ட வாசகத்துக்கு இவர் வில்லுப்பாட்டு எழுதியுள்ளார். 


2008 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் சென்றுவரும் புலவர் அ. பொன்னையன் அவர்கள் அந்த நாட்டின் சிறப்பையும், முன்னாள் தலைமை அமைச்சர்(பிரதமர்) லீ அவர்களின் பணிகளையும் காப்பியமாக்கித் தமிழுலகுக்குத் தந்துள்ளார். 

புலவர் அ. பொன்னையன் அருளரசர் வள்ளற் பெருமான் என்ற வரலாற்றுப் பெருங்காப்பியத்தை எழுதியுள்ளார்(2003). சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், கடிதங்கள் என இவரின் படைப்புப் பணி விரிவானது. 

புலவர் அ. பொன்னையன் படைப்புகள் 

1.   மலைத்தேன் (பல்சுவைப் பாடல்கள்)    2002

2.   சிறுவர் முன் வள்ளலார் (சிறுவர்க்கு)  2002

3.   சிறுவர் முன் ஆபுத்திரன் (சிறுவர்க்கு)  2003

4.   அருளரசர் வள்ளற் பெருமான் (காப்பியம்) 2003

5.   பொற்குவியல் (சிறுவர் பாடல்கள்)       2004

6.   வண்ண மலர்கள் (சிறுவர் பாடல்கள்)   2004

7.   உலகை ஆள்வோம் (சிறுவர் பாடல்கள்)  2005

8.   சிறுவர் விரும்பும் சிறுகதைகள்         2006

9.   குமுதன் (புதினம்)                     2006

10. அக்கரைச் சீமை அத்தானுக்கு (கடிதங்கள்) 2006

11. வியப்பூட்டும் விருந்துகள் (கட்டுரைகள்)  2008

12. தமிழை அரியணை ஏற்றிடுவோம்            (2010)