நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தொல்காப்பியச் சிறப்புகள் குறித்த “செம்மொழி” முனைவர் க. இராமசாமி அவர்களின் உரை

 

 

முனைவர் க. இராமசாமி

ஈராண்டுகளுக்கு முன்னர் அரியலூரில் உடல்நலம் குன்றியிருந்த பேராசிரியர் . இராமசாமி ஐயா அவர்களை, நலம் வினவி வரும்நோக்கில் அவ்வூருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். அப்பொழுது என் ஒளி ஓவிய நண்பர்களையும் அழைத்துச் சென்றால் உரையாடலைப் பதிவுசெய்து வர இயலும் என நினைத்து அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். முதலில் என் பிறந்த ஊர் சென்றோம். ஊரில் இருந்த தோட்டத்தில் வைத்திருந்த சின்னஞ்சிறு மரக் கன்றுகள் வாடியிருப்பதைக் கண்டு, அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சியும், நிலபுலங்கள் சார்ந்த ஐம்பேராயக் குழுப் பூசல்களை எதிர்கொண்டும் களைப்படைந்த கோலத்தில் அரியலூர் சென்று சேர்ந்தேன். செம்மொழி நிறுவனத்தின் பெருகிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றி, ஓய்வுப்பொழுதில் இருந்த பேராசிரியர் . இராமசாமியார் அவர்கள் என் வருகைக்குத் தம் இல்லத்தில் காத்திருந்தார்கள்

சவ்வூடு பிரிப்பு(Dialysis) செய்து களைப்பாக இருந்த அவர்கள், தம் வாழ்நாள் பணிகளைச் சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். நேர்காணலுக்குப் பிறகு நிறைவில் தொல்காப்பியம் குறித்த தங்களின் எண்ணம் என்ன? என்று ஆர்வத்தோடு வினவினேன். நெடுநாழிகை உரையாடிக் களைப்புற்றிருந்தாலும் என் தொல்காப்பிய ஈடுபாடு நினைந்து ஐயா அவர்கள் தொல்காப்பியச் சிறப்புகள் குறித்த தம் கருத்துகளை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். மிகவும் குறுகிய நேரத்தில் அமையும் தொல்காப்பியச் சிறப்புகள் குறித்த இந்தப் பதிவை முதலில் உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். அடுத்த பதிவில் பேராசிரியர் . இராமசாமி ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காணொலிப் பதிவாக வைக்க உள்ளோம். எங்கள் மீது அன்பு காட்டி, நேர்காணல் வழங்கிய முனைவர் . இராமசாமி ஐயா அவர்களுக்கும், விருந்தோம்பி வழியனுப்பி வைத்த அவர்தம் குடும்பத்தார்க்கும் எம் நன்றி. வழக்கம்போல் எம் முயற்சியை ஊக்கப்படுத்தும் தமிழுலகத்தார் இந்த முயற்சியையும் வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.

உரை கேட்க இங்கு அழுத்துக

கருத்துகள் இல்லை: