ப.சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் துன். ச.சாமிவேலுவும் அதனைப் பெறும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்களும். அருகில் தருண்விஜய் எம்.பி. டத்தோ குமரன் ஐயா அவர்கள்.
மலேசியத் திருநாட்டில் தமிழர்களின் அடையாளமாக விளங்கிய துன் ச. சாமிவேலு அவர்கள் இன்று (15.09.2022) இல் இயற்கை எய்திய செய்தியை அன்பர்கள் வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் அறிந்து பெருங்கவலையுற்றேன். 2014 திசம்பர் 28 இல் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை மலேசியாவில் நாங்கள் வெளியிட்டபொழுது தலைமை தாங்கி, அதனை வெளியிட்ட பெருமை துன். ச. சாமிவேலு ஐயா அவர்களுக்கு உண்டு. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பெரும் உதவிபுரிந்த டத்தோ சூ. பிரகதீஷ்குமார், பேராசிரியர் மன்னர் மன்னன் ஆகியோரின் உதவியை என்றும் நினைவுகூர்வேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துன். ச. சாமிவேலு ஐயா அவர்களிடம் ப.சு. ஆவணப்பட ஒளிவட்டுகள் உலகம் முழுவதும் செல்வதற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, துன். சாமிவேலு ஐயா அவர்கள் ஆவன செய்தார்கள்.
உலகத் தொல்காப்பிய மன்றம் மலேசியக் கிளை தொடங்கியபொழுது(2017) தம் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் நிகழ்வுக்கு வருவதற்கு முன்வந்தார்கள். ஐயா அவர்கள் மாடிப்படியில் ஏறி வருவதில் சிக்கல் உள்ளதை எடுத்துச் சொல்லி, அடுத்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க எண்ணியிருந்தோம்.
தமிழ்ப்பற்றும், கொடையுள்ளமும் வாய்த்த துன்.
ச. சாமிவேலு ஐயாவின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள்,
அவர் சார்ந்த இயக்கத் தோழர்கள், மலேசியத் தமிழர்கள் யாவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக