தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் ஓலைச்சுவடிகள், அதன் முதல்பதிப்புகள் வெளிநாட்டு நூலகங்களில் எங்கேனும் பாதுகாக்கப்படுகின்றனவா? என்று என் வெளிநாட்டுப் பயணத்தின்பொழுது தேடுவது வழக்கம். அவ்வகையில் இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து (லெய்டன்), டென்மார்க்கு (ஹோபனகென்) நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நூலகங்களில் தேடிப்பார்த்துள்ளேன். என் முயற்சி பலனளிக்கவில்லை. எனினும் தேடுதல் பணி தொடர்ந்தபடியே இருந்தது.
அண்மையில் இலண்டன், இராயல் ஆசியவியல் கழகத்தின் (Royal Asiatic Society) நூலகத்தை இணையம் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது, தென்னாசியப் பகுதியின் சுவடிப்பகுதியில் தொல்காப்பிய ஓலைச்சுவடியொன்று பாதுகாக்கப்படுவதைக் கவனித்தேன். தொண்ணூற்று மூன்று பக்கங்களில் மட்டும் படமாக (Image) தொல்காப்பிய நூற்பாக்களும் அந்நூற்பா எண்ணிக்கையைக் குறிக்கும் குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன (இது தவிர சற்றொப்ப இருபத்து நான்கு பக்கங்களில் எழுத்துகள் இல்லாமல் ஓலையும் மரச்சட்டமுமாக இச்சுவடி உள்ளது 93+24=117 பக்கங்கள்).
ஓலைச்சுவடிகளைப் பயன்படுத்துவோர் ஓலைகள் சிதையாமல் இருக்க மேலும் கீழும் மரச்சட்டம் வைத்துக் கட்டுவது மரபு. அவ்வகையில் மேலும் கீழும் மரச்சட்டமும் இடையில் ஓலைகளை வைத்தும், இரண்டு துளையிடப்பெற்றுக் கயிற்றால் இத் தொல்காப்பியச் சுவடி கட்டப்பட்டுள்ளது. கயிற்றின் நிழல் எழுத்துகளை மறைப்பதால் சில எழுத்துகளைப் படிக்கமுடியாமல் சிரமம் ஏற்படுகின்றது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு பகுதிகள் மட்டும் (மூலம் மட்டும்) இச்சுவடியில் இடம்பெற்றுள்ளதைக் கவனித்தேன். இச்சுவடி படிக்கும் வகையில் நல்ல கையெழுத்தில் உள்ளது. தொல்காப்பிய நூல் எனக்குப் பயிற்சியான நூல் என்பதால் சுவடிகள் முன் பின்னாக மாறி இருந்தன என்றாலும் ஒருவாறு சுவடியை முற்றாகப் படித்துப்பார்த்தேன்.
சுவடியில் “அந்தமில்லாக் கல்விகளுக்காலயமாமிச் சென்னைக் கல்விச் சங்கத்திற்குத் தலைவராய்ச் செந்தமிழ் கொடுந்தமிழெனுங் கடலைக் கசடறக் கற்றதில் வல்லவராய்ச் சந்ததமுமெண்ணமில்லாத் தமிழ் நாவலர்களாற்றுதிக்கும் மஹாராஜ ராஜஸ்ரீ- ஹென்றி – ஆர்க்கினேஸ் துரையவர்கள் சமூகத்திற்கித் தொல்காப்பியமெனுஞ் சூத்திர புஸ்தகந் திருநின்றவூர் பக்த்தவச்சலய்யராலெழுதிப் பரிசாகச் சமர்ப்பிக்கப்பட்டது” என்று இடம்பெற்றிருந்த குறிப்பினைக் கண்டேன். இச்சுவடியின் வாசகத்தை யாவரும் அறிந்துகொள்வதற்காகப் பின்வருமாறு எளிமைப்படுத்தி வழங்குவது பொருத்தமாக இருக்கும். ’கல்விக் கோவிலாக விளங்கும் சென்னைக் கல்விச்சங்கத்தின் தலைவராக விளங்குபவர் ஹென்றி ஹார்க்கினஸ். இவர் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் இரண்டிலும் வல்லவர். எப்பொழுதும் புலவர் பெருமக்களால் போற்றப்படும் பெருமைக்குரியவர். இவருக்குத் தொல்காப்பியம் என்ற புத்தகத்தின் சுவடியை எழுதித் திருநின்றவூர் பக்தவத்சல ஐயர் பரிசாக வழங்கினார்.
இத் தொல்காப்பியச் சுவடி 1831 சனவரி 1 இல் அளிக்கப்பட்ட விவரம் இடம்பெற்றுள்ளது. மேலும் ‘தேவி சகாயம் தேவி துணை’ எனவும் ’சுபமஸ்து அவிக்நமஸ்து’ (சுபமாகட்டும் தடையில்லாமல் இருக்கட்டும்) என்றும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன.
’சென்னைக் கல்விச் சங்கம், அதன் செயலராக 1831 -இல் விளங்கிய ’ஹென்றி ஹார்க்கினஸ், ’திருநின்றவூர் பக்தவத்சலவய்யர்’ இக்குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள முயன்றேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பயிற்சியுடைய பலரைத் தொடர்புகொண்டு கேட்டேன். சென்னைக் கல்விச் சங்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. எனினும் ஹென்றி ஹார்க்கினஸ் பற்றியோ, திருநின்றவூர் பக்தவத்சல ஐயரைப் பற்றியோ கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகிலும் யான் அறிந்தவரை பதிவாகவில்லை.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு, சென்னை இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் வரலாறு, சென்னை ஆட்சிப்பணி அதிகாரிகளின் வரலாறு, சென்னைக் கல்விச் சங்கம், சென்னை இலக்கியக் கழகம், சென்னைக்கு வந்த கிறித்தவ மத போதகர்களின் வரலாறு, சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சான நூல்கள், இலண்டன் ராயல் ஆசியவியல் கழகத்தின் இதழ்கள், ராயல் ஆசியவியல் கழகத்தின் தோற்ற வரலாறு, இலண்டன் ஆசியவியல் கழகத்துடன் தொடர்புடையவர்களின் வரலாறு, நூற்றாண்டு மலர், இலண்டன் திருமணப் பதிவுகள், இலண்டன் இறப்பேட்டுப் பதிவுகள் என்று பல்வேறு ஆவணங்களையும் படித்துப் பார்த்தபொழுது ஹென்றி ஹார்க்கினஸ் அவர்களின் வாழ்வும் பணிகளும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக ஒளிக்கீற்றாய் தெரியத் தொடங்கின. இலண்டன் ராயல் ஆசியவியல் கழகத்தின் நூலகருக்குப் பல மின்னஞ்சல் விடுத்தும் ஹார்க்கினஸ் குறித்த சில விவரங்களைப் பெற்றேன்.
ஹென்றி ஹார்க்கினஸ் (Captain Henry Harkness ) அவர்கள் 1787-இல் பிறந்தவர் என்று மட்டும் அறியமுடிகின்றது. பெற்றோர், இளமைக்கல்வி குறித்த விவரங்களை அறியமுடியவில்லை. இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு 1805 -ஆம் ஆண்டு, ’மெட்ராஸ் இராணுவத்தில்’ பணியாற்ற வந்தவர். கர்னாடகப் பகுதியில் தொடக்க காலத்தில் லெப்டினன்ட் நிலையில் பணியாற்றியவர். திருவிதாங்கூர், மைசூர், நிஜாம் நாடு (ஆந்திரா), சாண்டேஷ்(Candeish) உள்ளிட்ட பகுதிகளில் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். 1824 -இல் கேப்டன் நிலைக்கு உயர்ந்தவர். அப்பொழுது இந்தியப் படைவீரர்கள் அடங்கிய 21-ஆம் காலாட்படையணிக்குத் தளபதியாக இருந்தவர். சென்னைக் கல்விச் சங்கத்தின் செயலாளராக 1827 முதல் 1831 வரை பணியாற்றியவர். மொத்தத்தில் இருபத்தாறு ஆண்டுகள் இவரின் இந்தியப் பணி அமைந்தது.
ஹென்றி ஹார்க்கினஸ் 1832 -ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாகத் தம் தாய்நாடான இங்கிலாந்துக்குத் திரும்பியவர். 1833 (மே 18)-இல் ராயல் ஆசியவியல் கழகத்தின் உறுப்பினராகவும் அது முதல் 1837 வரை அதன் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றியவர்.
ஹென்றி ஹார்க்கினஸ் சென்னைக் கல்விச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியபொழுது, இவரின் கீழ் தமிழறிஞர்கள், வடமொழி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி அறிஞர்கள் பலர் பணிசெய்துள்ளனர். அவர்களுள் ஒருவரே நம் திருநின்றவூர் பக்தவத்சல ஐயர். இவரின் அழகிய கையெழுத்தில் அமைந்த தொல்காப்பியம் ஓலைச்சுவடிதான் ஹென்றி ஹார்க்கினஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓலைச்சுவடி இலண்டன் ராயல் ஆசியவியல் கழகத்திற்குக் கொடையாக ஹென்றி ஹார்க்கினஸ் 1832 மே 19 -இல் அக்கழகத்திற்கு அளித்துள்ளமையை Transactions of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Vol III, பக்கம் 723, 1835) என்ற நூலின் குறிப்பிலிருந்து அறியமுடிகின்றது. ஹென்றி ஹார்க்கினஸ் சென்னைக் கல்விச் சங்கத்தில் பணியாற்றியபொழுது தாண்டவராய முதலியார், முத்துச்சாமிப் பிள்ளை ஆகியோரால் திருவள்ளுவமாலை, திருக்குறள், நாலடியார் அடங்கிய நூல் 1831 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் “மேம்பட்ட துரையவர்கள்” என்று ஹார்க்கினஸ் குறிப்பிடப்பட்டுள்ளார்.
23.04.1838 -இல் ஹென்றி ஹார்க்கினஸ் எலிசபெத் மார்க்கரெட் அவர்களை மணந்து கொண்டுள்ளார். இவர் எட்வர்டு பேகன் என்பவரின் மகளாவார்.
ஹென்றி ஹார்க்கினஸ் இந்தியாவில் நீண்டகாலம் பணியாற்றியதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவராக விளங்கினார். இந்தியாவின் பல பகுதிகளிலும் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியுள்ளதால் இந்தியப் புவியியல் அமைப்பு நன்கு உணர்ந்தவர். இந்திய மக்களின் குறிப்பாகப் பழங்குடி மக்களின் மன உணர்வுகளையும், பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்துவைத்திருந்தவர். குறிப்பாக நீலகிரி மலைப்பகுதியில் தங்கி, அந்த மக்களுடன் பழகி அவர்களின் வாழ்வியலைப் பதிவுசெய்துள்ளார். இவரின் நீலகிரி குறித்த நூல் இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய நீலகிரியை நமக்கு அடையாளப்படுத்துகின்றது.
நீலகிரியின் அமைவிடம், இயற்கைச் சூழல், நீலகிரிப் பழங்குடி மக்களுள் ஒரு பிரிவினரான தோடர்களின் வாழ்க்கை முறை, மற்ற பிரிவினர்களான குறும்பர், இருளர்கள் குறித்த செய்திகளைத் தம் நூலில் பதிவுசெய்துள்ளார். பழங்குடி மக்களின் உடை, அணிகலன், பண்பாடு, பண்புநலன், நுண்ணறிவு, வழக்குச் சொற்கள் குறித்து A Description of a Singular Aboriginal Race, Inhabiting the summit of The Neilgherry Hills, or Blue Mountains of Coimbatore, in the Southern Peninsula of India (1932) என்னும் ஹார்க்கினஸின் நூல் மிகச் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. 184 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஏழு இயல்களாகப் பகுத்துக்கொண்டு எழுதியுள்ளார். நீலகிரியை நினைவூட்டும் நான்கு ஓவியங்கள் படங்களாக்கப்பட்டு இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் Ancient and Modern Alphabets of the Popular Hindu Languages, of the Southern Peninsula of India என்னும் நூலையும் ஹார்க்கினஸ் எழுதி, இராயல் ஆசியவியல் கழகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார். இந்த நூலில் தேவநாகரி, கிரந்தம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எழுத்துகளின் வரி வடிவ ஒற்றுமைகளை ஆராய்ந்து விளக்கியுள்ளார். உயிர், மெய்யெழுத்து வடிவங்களின் வளர்ச்சி, ஒற்றுமைகள் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளன.
ஹென்றி ஹார்க்கினஸ் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள், அவர்களிடம் பரவியிருந்த நம்பிக்கைகள், அறிவு ஆற்றல் குறித்து உயர்ந்த மதிப்பீடுகளை வைத்திருந்தார். இந்தியர்களுக்கு உரிய வாய்ப்பும், மதிப்பும் வழங்கினால் மிகச் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்று தம் நாட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். ’மெட்ராஸில்’ வழக்கத்தில் இருந்த கல்வி முறை குறித்தும், இந்தியர்களுக்கு அளிக்க வேண்டிய கல்வி குறித்தும் 1832 ஆம் ஆண்டு அளவில் மிகச் சிறந்த பரிந்துரைகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வழங்கியவர். மெக்கன்சியின் தொகுப்புகளைப் பாதுகாப்பதில் இவரின் ஆலோசனை பயன்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து தாம் கொண்டுசென்ற அரிய நூல்கள், கல்வெட்டுகள் குறித்த குறிப்புகளை ராயல் ஆசியவியல் கழகத்திற்கு வழங்கி அனைவரின் பயன்பாட்டுக்கும் ஹென்றி ஹார்க்கினஸ் வழி செய்துள்ளார். அவ்வகையில் வானியல் பற்றிய ’ஆரியப்பட்டர் சூரிய தேவாட்ச மற்றும் எல்லாயன் பற்றிய விரிவுரை கருத்தாய்வினை’ ஓலைச்சுவடியாக வழங்கியுள்ளார். இது தமிழ் கிரந்த எழுத்துகளில் அமைந்தது. மேலும் ’சூரிய சித்தாந்தாவின் பதினான்கு இயல்கள் கருத்தாய்வுரை மற்றும் இராசிச் சக்கரத்தின் தெய்வங்களின் பெயர்கள்’ என்னும் கைப்படியையும் ராயல் ஆசியவியல் கழகத்திற்கு வழங்கியுள்ளார். நில அளவை மதிப்பீட்டாளரும், அரும்பொருள் தொகுப்பாளருமாகிய காலின் மெக்கன்சியின் பணிகளையும் திறமையையும் அறிந்தவர். மெக்கன்சியில் மறைவுக்குப் பிறகு அவரின் தொகுப்புகள், ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்த கருத்துரைஞராகவும் கடமையாற்றியவர்.
இந்தியக் கட்டடக்கலை குறித்த ஆய்வில் தனித்தடம் பதித்தவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதியரசராக விளங்கியவருமான, தஞ்சையைச் சேர்ந்த இராமராஜ் அவர்களுக்குப் பல வகையில் ஹென்றி ஹார்க்கினஸ் உதவிகள் செய்துள்ளார். இவரை மைசூருக்கு முதல் ஆணையராகப் பரிந்துரைத்து அனுப்பினார். மேலும் இந்துக் கட்டடக்கலை (Essay on the Architecture of the Hindus) என்னும் இராமராஜ் நூலுக்கு அரியதோர் முன்னுரையை ஹென்றி ஹார்க்கினஸ் எழுதியுள்ளார். இந்த முன்னுரையின் வழியாக இராமராஜ் அவர்களின் வாழ்வியலும், அவர்தம் பல்வேறு திறமைகளும், ஆற்றல்களும் நமக்குத் தெரியவருகின்றன. இராமராஜ் அவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்தின் அலுவலகத்தில் தலைவராகவும், ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
ஜேம்ஸ் ஏ. ஸ்டீவர்டு மெக்கன்சி என்பவர் 1832 சூலை 27 -இல் இலண்டனில் நடத்திய ஆய்வுக்குழுக் கூட்டத்தில் ஹென்றி ஹார்க்கினஸிடம் பல்வேறு வினாக்களை எழுப்பினார். அக்கூட்டத்தில் ஹார்க்கினசின் எழுத்துப்பணி, இராணுவப்பணி, சமயப்பணி, இந்திய மக்களின் திறமை, கல்வியறிவு, மனவுணர்வு குறித்து வினவியபொழுது, இந்திய மக்கள் மீது உயரிய கருத்துகளை அவர் கொண்டுள்ளமையை அவரின் விடைகளிலிருந்து அறிய முடிகின்றது. இந்தியர்கள் தங்களின் மாண்பினை உயர்த்திக்கொள்ள அன்றைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும், வழிவகைகளைச் செய்யவில்லை எனவும் நாகரிகமாகக் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டீஷ் இந்திய அரசில் அவர்கள் பங்குகொள்ளுமாறு பொறுப்பு, மரியாதை, மதிப்பு, நம்பிக்கை உள்ள பணிகளில் அமர்த்த வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
சென்னைக் கல்விச் சங்கத்தில் தாம் செயலாளராகப் பணியாற்றியபொழுது இந்திய மக்கள் அனைவரும் கல்வி கற்க ஆர்வமாக இருந்தமையையும், ஐரோப்பிய இலக்கியங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதையும் நினைவூட்டியுள்ளார். மேலும் நம் வருவாயின் ஒரு பகுதியைக் கல்விக்கு ஒதுக்கவேண்டும் எனவும், அன்றைய இந்திய மக்கள் அரசுப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்கியதையும் பதிவுசெய்துள்ளார். மேலும் கிறித்தவ மிஷனரிமார்கள் நடத்திய பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்பியதையும் தம் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்திய மேற்பார்வையாளர்களின் தலைமையில் கீழமைப் பணிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தலாம் எனவும் அப்பணி ஜில்லா நீதிபதி, முதன்மை வருவாய் அதிகாரி தரத்தில் இருக்கலாம் எனவும் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார். மேலும் அக்காலத்தில் இருந்த கிறித்தவ தேவாலய வழிபாடுகள், அதனை நடத்தியவர்கள், ஆங்கிலேய அதிகாரிகள், ஆங்கிலேய வணிகர்கள் குறித்த விவரங்களும் ஹார்க்கினஸ் வாழ்க்கையைத் தேடும்பொழுது கிடைக்கின்றன.
இந்தியாவுக்கு இராணுவ வீரராக வருகைபுரிந்த ஹென்றி ஹார்க்கினஸ் தம் அதிகாரம் மிக்க பதவியில் இருந்தபொழுதும் இந்திய மக்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவும், அவர்களுக்கு உரிய வழிபாட்டு உரிமைகள் கிடைக்கவும் சிந்தித்துள்ளார். தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படவும், தமிழ்க் கல்வியாளர்களும், பிற திராவிட மொழி அறிஞர்களும் மதிக்கப்படவுமான உயர்ந்த உள்ளம்கொண்டவராக விளங்கியுள்ளார்.
இலண்டனில் இராயல் ஆசியவியல் கழகத்தை உலக அளவிலான அமைப்பாக மாற்றி வளம்பெறச் செய்வதில் பெரும்பங்களிப்பைச் செய்த ஹென்றி ஹார்க்கினஸின் வாழ்க்கை வரலாறு முழுமைபெறும்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு வெளிச்சம்பெற வாய்ப்பு உள்ளது.
நன்றி:
இந்து தமிழ் நாளிதழ் (08.11.2020)
பேராசிரியர் ழான் லூக் செவ்வியார்
முனைவர் கு.சிவமணி
திரு. மணிமாறன்( சரசுவதி மகால் நூலகம்)
இராயல் ஆசியவியல் கழகம், இலண்டன்
குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக