நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 6 ஜூலை, 2020

தமிழ்மாமணி மன்னர் மன்னன் அவர்கள் மறைவு!


முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப. அவர்களுடன் 
தமிழ்மாமணி மன்னர் மன்னன், மற்றும் கவிஞர் கோ. பாரதி


 பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் ஒரே மைந்தரும், புதுவையின் புகழ்மிக்க ஆளுமைகளுள் ஒருவருமான மன்னர் மன்னன் ஐயா இன்று (06.07.2020) பிற்பகல் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன். ஐயாவைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

 நான் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்த காலம் (1993) முதல் ஐயாவுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். புதுவையில் நாங்கள் ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப்படுத்தியுள்ளார். இல்லம் சென்று நேர்காணல் கண்டு, அவரின் தமிழ் வாழ்க்கையை இணையத்தில் பதிவுசெய்துள்ளேன். பாவேந்தரை நேரில் காணும் நிறைவு அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் ஏற்படும். மிகச் சிறப்பாக உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்.

 சிலவாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்கள் புதுவையில் அமைந்துள்ள பாரதிதாசன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட விரும்பினார். அவரை வரவேற்று அருங்காட்சியகத்தில் உரையாடி மகிழ்வதற்கு ஐயா மன்னர் மன்னன் அவர்களும், கவிஞர் கோ. பாரதி அவர்களும் வந்திருந்து, அரசு செயலாளரை வரவேற்றமை இப்பொழுதும் என் மனக்கண்ணில் உள்ளது. கவிஞர் தங்க. காமராசு அவர்களும் (இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்) செயலாளருடன் வருகை தந்து இந்தப் பயணத்தைச் சிறக்குமாறு செய்தார்.

 ஒவ்வொரு ஆண்டும் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள், நினைவுநாளில் பாவேந்தரின் திருவுருவப் படத்திற்கும் திருவுருவச் சிலைக்கும் மலரும் மாலையும் அணிவித்து மன்னர் மன்னன் ஐயா தலைமையில் ஒன்றுகூடி மகிழ்வோம். இனி அந்த வாய்ப்பு அற்றுப் போனது.

 மன்னர் மன்னன் அவர்களின் தமிழ்ப்பணி என்றும் அவரை நினைவுகூரச் செய்யும்.

தமிழ் மாமணி மன்னர் மன்னன் வரலாறு குறித்த முழுவிவரமும் என் பழைய வலைப்பதிவில் உள்ளது.

கருத்துகள் இல்லை: