நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 ஜூலை, 2020

இலக்கணப் பேரறிஞர் சு.அழகேசன் மறைவு!


இலக்கணப் பேரறிஞர் சு.அழகேசன்

தமிழ் இலக்கணத் துறையில் பேரீடுபாடு கொண்டவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்ப் பேராசிரியரும், உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நெறியாளர்களுள் ஒருவருமான பேராசிரியர் சு.அழகேசன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை மிகுந்த துயரத்தோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம் பழவூர் என்ற ஊரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர்(20.03.1955). இவர்தம் பெற்றோர் .சுப்பையா பிள்ளை, திருவாட்டி காந்திமதி அம்மாள் ஆவர். பள்ளி இறுதி வகுப்பு வரை வடக்கன்குளம் தூய தெரேசாள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் புகுமுக வகுப்பையும்(1972), இளம் அறிவியல் வகுப்பையும்( 1975) நிறைவுசெய்தவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை நெல்லை .தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர். மொழியியலில் முதுகலைப்பட்டமும், சான்றிதழும், சைவசித்தாந்தத்தில் பட்டயமும் பெற்றவர். முப்பது ஆண்டுகளாகப் பேராசிரியர் பணியாற்றிய இவர் 32 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற நெறியாளராக விளங்கியுள்ளார். 80 ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார். 21 நூல்களையும் 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வரைந்துள்ளார். "அழகு" என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகள், கல்விக்குழுக்கள், சமூக மேம்பாட்டு அமைப்புகளில் பொறுப்புகள் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டுள்ளார்.

தொல்காப்பியர் மன்றம் என்ற அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் தொல்காப்பியக் கருத்தரங்குகளும் இலக்கணக் கருத்தரங்குகளும் தம் சொந்த செலவில் நடத்துவதற்குத் திறம்படப் பணியாற்றியுள்ளார். இக்கருத்தரங்கச் செய்திகள் காற்றில் கரைந்துவிடாமல் நூல்வடிவில் ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம்.
தமிழ் இலக்கதணத் துறை சார்ந்த பல நூல்களை இயற்றியுள்ள சு. அழகேசனார் எம் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பெருமைக்குரியவர்.

அன்னாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.

பேராசிரியர் சு.அழகேசனின் தமிழ்ப்பணிகளை அறிய என் வலைப்பதிவுக்கு வருக!


கருத்துகள் இல்லை: