நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 ஜனவரி, 2019

சீர்காழி உ.செல்வராசுவின் ’பெண்ணே ஒரு பரிசுதான்’ நூலுக்கான வாழ்த்துரை!


  

  சிங்கப்பூர் நாட்டுக்கு இலக்கிய நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தபொழுது அறிமுகமானவர் என் அருமை நண்பர் சீர்காழி . செல்வராசு. பத்தாண்டுகளுக்கும் மேலாக அமைந்த இவருடைய நட்பு, வளர்பிறைபோல் வளர்ந்து,  நினைக்குந்தோறும் மகிழ்ச்சி ஏற்படுத்தும். எளிமையும் அன்பும் ஒருங்கே வாய்த்த உ. செல்வராசு கவிஞராகவும், பேச்சாளராகவும் சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் வலம் வருபவர். அடிப்படையில் இவர் ஒரு கப்பல் பொறியாளராக இருந்தாலும், கவிதை உள்ளம் கொண்டவர் என்பதால் சமூக முன்னேற்றத்தில் இவருக்கு எப்பொழுதும் அக்கறை உண்டு.

 சீர்காழியார் சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இணைந்து, தமிழ்ப்பணியாற்றி வருபவர். சிலர் ’அமைப்பு’ வளையத்தைவிட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் நம் சீர்காழியாரோ எல்லா அமைப்புகளுடனும் இணைந்து பணிசெய்யும் பக்குவம் கொண்டிருப்பதைப் பாராட்டியாக வேண்டும். ’யாவரையும் கேளிராகப்’ பார்க்கும் உயர்ந்த உள்ளத்தினர் இவர்.  இளகிய உள்ளம் கொண்டவர் இவர் என்பதால் பசிப்பிணி நீக்குவதைப் பரிவோடு செய்பவர். இயல்தமிழில் ஈடுபாடுகொண்டவர்களை நான் மிகுதியாக அறிவேன். செல்வராசனாரோ இசைத்தமிழ் வளர்ச்சிக்குச் சீர்காழியில் கால்கோள் அமைத்தவர். "தமிழிசை மூவர்" தடம் பதித்த ஊரில் பிறந்தவர் என்பதால் இவருடன் இசைத்தமிழ் இணைந்துகொண்டது போலும்.

 யான் இயக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழாக்கள் சிங்கப்பூரில் நடைபெற்றபொழுது ஆதரவுக் கரம் நீட்டியவர்களுள் சீர்காழியாரும் ஒருவர்.

  சிங்கப்பூரில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவதற்கு வாய்ப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு அண்மையில் நான் சிங்கப்பூர் வந்திருந்தேன். அருமை நண்பர் சீர்காழியாரும், பாவலர் எல்ல. கிருட்டினமூர்த்தியும், தமிழாசிரியர் ஜகூர் உசேனும் மனந்திறந்து உரையாடித் தொல்காப்பிய மன்றம் சிங்கப்பூரில் தொடங்குவதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்துத் தந்தனர். பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகள் சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான தொல்காப்பியம் குறித்து, அறிமுகம் அமைவதற்குச் சிங்கப்பூர்த் தொல்காப்பிய மன்றம் பாடுபடவேண்டும் என்ற வேட்கையை விதைத்தவர் நம் சீர்காழியாரே.

 சீர்காழியாருக்குக் கவிதை எழுதுவது என்பது மூச்சுவிடும் உயிர்த்தொழில் போன்றது. நாட்டு நடப்புகளையும், சமூக அவலங்களையும் தம் பாட்டுச் சாட்டையைச் சொடுக்கிக் கண்டிப்பதைப் பல கவியரங்குகளில் கேட்டுள்ளேன். நல்ல தமிழில் நாளும் எழுதிக்குவிக்கும் இவரிடம் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சந்த நயம் பிடிபட்டுள்ளது. எனவே இவரைக் குழந்தைகளுக்கு உரிய பாடல்களை எழுதித் தருமாறு அன்புடன் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். குழந்தைகளுக்குப் பாடல் எழுதுவோர் அருகிவரும் இக்காலகட்டத்தில் சீழ்காழி செல்வராசனார் முயன்றால் மிகச் சிறந்த குழந்தைப் பாவலராகச் சுடர்விட முடியும்.

 பெண்ணுரிமைக்கும், மக்களின் நல் வாழ்க்கைக்கும், உலக முன்னேற்றத்திற்கும் மாந்த நேயத்துக்கும் தொடர்ந்து குரல்கொடுக்கும் சீர்காழி உ. செல்வராசனார் தம் படைப்புகளால் தமிழர்களின் உள்ளமெல்லாம் வாழ்வார். சிங்கப்பூரையும், தமிழகத்தையும் தம் இருகண்களாகப் போற்றும் சீர்காழியாரைத் தமிழார்வலர்கள் முன்வந்து, ஊக்கப்படுத்தவேண்டும் எனவும், இவர்தம் படைப்பு நூல்களை  வாங்கிப் போற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

  பிறதுறையினரின் உழைப்பும், ஈடுபாடும் தமிழுக்கு வளம்சேர்த்து வருகின்றன என்பதில் நான் பெரிதும் நம்பிக்கையுடையவன். சீர்காழி உ. செல்வராசு அவர்கள் தம் கப்பல்துறை அனுபவங்களைப் படைப்புகளில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற அன்புவேண்டுகோளுடன் இவரைப் போற்றிப் பாராட்டுகின்றேன். பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்த இவரையும் இவர் படைப்புகளையும் தமிழுலகம் என்றும் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு.

மு. இளங்கோவன்
29.11.2018கருத்துகள் இல்லை: