நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 9 மார்ச், 2018

வேலூர் கவிஞர் இரா. நக்கீரன்



கவிஞர் இரா. நக்கீரன்(இரா. கிருஷ்ணமூர்த்தி) 

      புதுச்சேரியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் செய்தித் தாள்களை ஆர்வமாகப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு இலக்கியக் குழுவினர் பாவேந்தர் இல்லத்தில் நுழைந்தனர். சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்தும், நினைவுப்பொருள்களைச் சுட்டி விளக்கம் கேட்டும், உரையாடியபடியும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர்.

     அக்குழுவில் இருந்த அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவர், இந்தத் தெருவில் பாவேந்தரைப் பார்ப்பதற்கு முகவரி தெரியாமல் நாங்கள் நடந்தபொழுது, எங்களை அழைத்து, நான்தான் பாரதிதாசன். வாருங்கள்! என்று வரவேற்றார் என்று தம் கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த இடத்தில்தான் பாவேந்தர் அமர்ந்திருந்தார்; எங்களை அருகில் அமர வைத்து அன்பாக விருந்தோம்பினார்; நான் இங்குதான் பாவேந்தர் கால்மாட்டில் அமர்ந்திருந்தேன்” என்று அந்த இடத்தைச் சுட்டிக்காட்டியபொழுது அருகிலிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. கோவேந்தனுடன் வேலூரிலிருந்து வந்து, பாவேந்தரைச் சந்தித்த அந்த நாளை மறக்க முடியாது என்றார் அந்தப் பெரியவர். ஐம்பதாண்டுகளுக்கு முந்திய நிகழ்வை நினைவுகூர்ந்த அந்தப் பெரியவரின் முகத்தில் மகிழ்வும், பெருமிதமும் போட்டியிட்டுத் தெரிந்தன.

     இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த நான் ஐயா, நீங்கள் யார் என்று வினவி, என்னை அறிமுகம் செய்துகொண்டேன். கோவேந்தனைத் தங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன். அவரோ, கோவேந்தன் என் குருநாதர் என்றார். பாரதியார், பாவேந்தர், கோவேந்தன் படங்களைத் தம் இல்லத்தில் வைத்து நாளும் போற்றி மதிப்பதை அவர் உரையாடலின் வழியாகத் தெரிந்துகொண்டேன். பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் நான் முனைவர் பட்ட ஆய்வு செய்ததையும், கோவேந்தனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பையும் சொன்னவுடன் அந்தப் பெரியவருக்கு அடங்காத ஆர்வம். கோவேந்தனின் நண்பர் தங்கப்பா புதுவையில் உள்ளார் என்று அவரே கூறி, அடுக்கடுக்காகப் பேசிக்கொண்டே இருந்தார். பேச்சில் அவர் பிறவி நகைச்சுவையாளர் என்பது தெரிந்தது.

     தங்கப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று உரையாடலை மீண்டும் தொடர்ந்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போரில் பெருஞ்சித்திரனார் ஈடுபட்டு, கைதாகி, வேலூர் சிறையிலிருந்தார். தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவந்தபொழுது, கோவேந்தன், தங்கப்பா ஆகியோருடன் சென்று சிறைவாயிலில் அவரை வரவேற்றேன் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். சிறைவாசலிலிருந்து வெளிவந்த பெருஞ்சித்திரனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரின் கையைத் தங்கப்பா பற்றிக்கொண்டு அழுததைச் சொன்னதும் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றித் தென்மொழி ஏடுகளில் படித்த நினைவுகள் எனக்குத் தோன்றின.

     உடனடியாகத் தங்கப்பாவுடன் தொடர்புகொண்டு வேலூர் அன்பரைப் பற்றிச் சொன்னேன். அவரும் ஆமாம்! ஆமாம்! அவரைத் தெரியும் என்று தம் பழைய நண்பரை நினைவுகூர்ந்தார். இருவரும் தொலைபேசியில் சிறிது நேரம் உரையாட வழியமைத்துத் தந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

     மாதங்கள் உருண்டோடின. தொலைபேசியில் அந்த பெரியவருடன் என் நட்பு வளர்ந்தது. மீண்டும் புதுவைக்கு வரும் சூழலை அந்தப் பெரியவர் சொன்னபொழுது என் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் வருகைக்குக் காத்திருந்தேன்.

அவர்தான் வேலூர் கவிஞர் இரா. நக்கீரன்

     கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர் இரா. நக்கீரன் வேலூர் மாவட்டம் காட்டுப்பாடியை அடுத்த தாராப்படைவீட்டில் 26.06.1938 இல் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன், பட்டம்மாள் ஆவர். தமது பதினாறாவது வயதுமுதல் நாடகத்துறையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். கவியரங்குகள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு கேட்போர் வியக்க உரையாற்றியவர். கவியரங்குகளில் இசையுடன் பாடி அரங்கத்தை ஆச்சரியத்தில் உறைய வைத்தவர். இவரின் கவிதையைக் கேட்டுக் கவியரசு கண்ணதாசன் “இன்னிசைக் கவிஞர்” என்று பாராட்டியுள்ளார். பாடகர், நடிகர், இயக்குநர், சோதிட ஆராய்ச்சியாளர் என்று பன்முகம் கொண்ட இவர் 42 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, பொறியாளராக உயர்ந்து, ஓய்வுபெற்று இப்பொழுது வேலூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். எழுத்தும், பேச்சுமாக உள்ள கவிஞர் நக்கீரனுடன் உரையாடியதிலிருந்து பல விவரங்களைப் பெறமுடிந்தது.

     பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச்சொல்வர் ம.பொ.சி. கவிஞர் சுரதா, சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, ஆரூர் தாஸ், கவிஞர் சுப்பு ஆறுமுகம், கவிஞர் த. கோவேந்தன், நாரண. துரைக்கண்ணன், ஜஸ்டிஸ் மகாராஜன், பாவாணர், கு. மு. அண்ணல் தங்கோ, பெருஞ்சித்திரனார் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட தமிழகத்துக்கு நன்கு அறிமுகமான அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர் இரா. நக்கீரன்.

     திரைத்துறைக் கலைஞர்களான ஜம்பு, ஏடி. கிருஷ்ணசாமி, சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி, சித்ராலயா கோபு, டி.என்.பாலு, நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன், நடிகர் இரவிச்சந்திரன், செந்தாமரை, ஆர். முத்துராமன், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகி, அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.

     கல்பனா நாடக மன்றம், ரெயின்போ கிரியேஷன்ஸ் என்ற நாடக மன்றங்களை நிறுவிப் பல நாடகங்களை அரங்கேற்றியவர். இவரின் நாடகங்கள் வேலூர், கோவை, திருச்சி, சென்னை, இராணிப்பேட்டை முதலிய ஊர்களில் நடிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் புகழ்பெற்ற பல நாடகங்களுக்குப் பாடல்களை எழுதியவர். போர்வாள், சீமான் மகள், கனிமொழி, அபலை, வாழ்வும் வளமும், சாம்ரட் அசோகன், மணிமகுடம், டிரைவர் சின்னசாமி, மனமாற்றம், அன்பின் சிகரம், சத்ரபதி மைந்தன், மீர்ஜாபர், என் கதை, ஜம்புலிங்கம், தனிமரம், சுந்திரபல்லவன், வாழ்க்கைத் திருப்பம், சிக்கல், திருட்டு மாமா, குன்றிமணி, மலர்விழி, சுழல், உதிர்ந்த முத்துகள், வாழ்த்துங்கள், பாக்குவெட்டி, ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, ஐஸ்காரன், இணைகோடுகள், என்னங்க சம்பந்தி, நினைவுகள் அழிவதில்லை உள்ளிட்ட நாடகங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின.

     வானொலிக்கு மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த. இவரது பாடல்களைத் தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். நடிகர் ஆர் முத்துராமனுக்கு “நவரசத் திலகம்” என்ற பட்டத்தையும், எழுத்தாளர் சோ. இராமசாமிக்கு “நகைச்சுவைத் தென்றல்” என்ற பட்டத்தையும் வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

     கவிஞர் நக்கீரன் அபலை, டிரைவர் சின்னசாமி, திருப்பம், சிக்கல், சுழல், புதர், சத்ரபதி மைந்தன், சிலம்புச்செல்வி முதலிய ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார்.

     வேலூரிலிருந்து அக்காலத்தில் வெளிவந்த கவிஞன் என்ற கையெழுத்து ஏட்டுக்கு இணையாசிரியாக இருந்து 16 ஏடுகளை வெளிக்கொண்டு வந்த பெருமையும் இவருக்கு உண்டு. கவிஞன் இதழின் ஆசிரியர் த. கோவேந்தன் ஆவார்.

     கவிஞர் இரா. நக்கீரன் தம் கவிதை, நாடகம், மெல்லிசைப் பணிகளுக்கு இடையிலும் அரசுப்பணியை விடாமல் இருந்து நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி, பலருக்கும் உதவியாக வாழ்ந்தவர். தம் மனைவி விஜயலெட்சுமியின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்ட இவர், தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எளியவர்களுக்கு வழங்கிய ஈகைக்குணம் கொண்டவர். படிக்கும் மாணவர்களுக்கு உதவுவது இவரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தொண்டுணர்வு கொண்ட இப்பெருமகனாருக்கு அகவை எண்பதை நெருங்குகின்றது.

     இசைப்பாடல்கள் இயற்றுவதிலும், நாடகப்பாடல்கள் வரைவதிலும் ஈடுபாடு கொண்ட இந்த இசைக்கலைஞர் பாடுவதிலும் வல்லவர். தமிழிசைப் பாடல்கள்(1956), மேடைப் பாடல்கள்(1957), தென்னவர் மன்னன்(1958), இசையணங்கு(1967), கவிதாஞ்சலி(1968), இசையருவி(1968), பேரறிஞர் அண்ணா (1968 இல் தந்தை பெரியார் வெளியிட்டது), ஏலகிரி(1968), காந்திஜி சரிதம்(1970), கவிஞன் குரல்(1970), உதிர்ந்த முத்துக்கள்(1972), முத்துக் குவியல்(1978), கனவுப்பூக்கள்(1978), ஸ்ரீ சத்ய சாயியின் தத்துவ மொழிகள்(1974), ஸ்ரீ காஞ்சிப் பெரியவரின் அருள் வாக்கு(1978), ஞானக்கடல்(1978), ஜோதிட நுணுக்கங்கள்(2003), காற்றினிலே வரும் கீதம், திருவேங்கடத் திருப்பதிகம், கீத கோவிந்தம் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தம் எழுத்துப்பணியைத் தொய்வின்றிச் செய்து வருபவர்.

 கண்ணதாசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நக்கீரன், கண்ணதாசனின் வெளியுலகிற்குத் தெரியாத உயர் பண்புகள் பலவற்றை உரையாடலில் பகிர்ந்துகொள்பவர். நாடகத்துறையில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய மூத்த கலைஞர்களின் அகப் புற வாழ்க்கைகளை அறிந்து வைத்துள்ள நக்கீரன் ஒவ்வொருவரிடம் இருந்த உயர்ந்த ஆற்றல்களை எடுத்துரைக்கும் தகவல் களஞ்சியமாக விளங்குகிறார். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதிய எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள் குறித்த அரிய தகவல்களைத் தெரிந்துகொண்டு ஒரு நடமாடும் நூலகமாக வாழ்ந்து வருகின்றார்.

     சமூகச் சீர்திருத்தத்திலும், பகுத்தறிவிலும் சமரசம் செய்துகொள்ளாத இந்த முற்போக்குச் சிந்தனையாளர் அரசுக் கோப்புகளை ஆங்கிலத்தில் வரைந்தாலும் தமிழ்ச் சிந்தனையோடு பணியாற்றியவர். எந்த இடத்திலும் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் இருக்கும் இவரின் எழுத்துப்பணியும், கலைப்பணியும் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இவரைப் போன்ற அறிஞர்களைக் காணும்பொழுது, “தொண்டைநாடு சான்றோருடைத்து” என்னும் பழந்தமிழ் வரிகள் உண்மைதான் என்ற முடிவுக்கு வரலாம்.

குறிப்பு: கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.



2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வழக்கம்போல ஓர் அரிய மனிதரைப் பற்றி அறிந்தோம். ஒவ்வொருவரையும் பற்றி நீங்கள் தொகுத்தளிக்கும் விதம், அவர்களுடன் பேசும் விதம் எங்களை வியக்கவைக்கின்றன. பாராட்டுகள்.