நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை


தில்லை சிதம்பரப்பிள்ளை

     இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிசர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டுக் காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர்; 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969 இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

     தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் படைப்புநூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

     தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

     இவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

     எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் . குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் - சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்

     இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

                1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிசர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கிய செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது



     1993 புரட்டாசி மாதம் சுவிசர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ் மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத் தனித்தனியாக பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                தில்லை சிதம்பரப்பிள்ளை 1985 ஆம் ஆண்டு முதல் சுவிசர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

     தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ் இதழினை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                2013 ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப்பாலமாகச் சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014 இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015 இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

     சுவிசர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்த பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


     புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

****இக்கட்டுரையைப் பயன்படுத்துவோர், திருத்தி எழுதுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

கருத்துகள் இல்லை: