நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 2 ஜூலை, 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!!

கயானா பிரதமர் திரு. மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிட, வி..டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். அருகில் பொன்ராஜ், கே.பி.கே. செல்வராஜ், மு.இளங்கோவன், சிவம் வேலுப் பிள்ளை, புஷ்பராணி, செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, வலைத்தமிழ் பார்த்தசாரதி.

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடும் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களும் அதனைப் பெற்றுக்கொண்ட வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் அவர்களும். அருகில் மு.இளங்கோவன், சிவம் வேலுப்பிள்ளை.

அமெரிக்காவின், மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் 01.07.2017 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்
புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை, கயானா பிரதம மந்திரி மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு நூல் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டினார்.

புதுவையில் பணியாற்றும் மு.இளங்கோவன் இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும், இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக்கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர்கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.


2017, சூலை முதல்நாள்(சனிக்கிழமை) அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை(பெட்னா) விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. கயானா நாட்டிலிருந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரும், பிரதம மந்திரியுமான மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை வெளியிட்டார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார்.  மறைந்த அறிஞர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப்பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்பபடத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர். 

பின்னர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பேராளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவனுக்குக் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் சிறப்புச் செய்தல்



2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகிழ்ந்தேன் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழா நிகழ்வுப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன். தங்களது சாதனைகள் தொடரட்டும்.