நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 மே, 2017

தமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக்கும்... நறுக்கும் நூல்






     திருவண்ணாமலையில் வாழும் பாவலர் வையவனின் படைப்புகளைப் பதினைந்து ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். சிந்தனையாளன் ஏட்டில் இவர் வரையும் சமகால நிகழ்வுகளை விளக்கும் பாத்தெறிப்புகள் உள்ளத்தை இழுத்து நிறுத்தும் உறுதி வாய்ந்தவை. பாவலர் தமிழேந்தி அவர்களின் படைப்புக்கு நிகராக எழுதிச் செல்லும் வையவனின் பன்முக ஆற்றலை நான் நன்கு அறிவேன். உதவி வேண்டி யாரேனும் இவரிடம் வந்தால் இயன்ற உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி காண்பவர். தம் வருவாயின் ஒரு கூறினைப் பொதுப்பணிக்கு வழங்குவதில் மனநிறைவு காண்பவர். அறிஞர் ஆனைமுத்துவின் கொள்கைகளை நெஞ்சில் தேக்கிக்கொண்டு, ஆசிரியப் பணியாற்றும் இவர் தமிழ்நாட்டு நடப்புகளை உற்றுநோக்கித் தம் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார். 1) என் மனைவியின் கவிதை(1998), 1). ஞானத்திலிருந்து(2000), 3). மனசு சுற்றிய மாவளி( 20060, 4). சதுரங்கக் காய்கள்(2015) உள்ளிட்ட படைப்புகளைத் தந்த வையவன் ஒரு மிகச் சிறந்த ஓவியர். தம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளை உற்றுநோக்கி, அவற்றை அழியாத கவிதைப் படைப்புகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்.

     பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் வையவன் தம் படைப்புகள் சென்று சேரவேண்டிய இடத்தை மனத்துள் பதியவைத்துக்கொண்டு எளிய வடிவத்தில் "கிறுக்கும்.. நறுக்கும்" என்ற நூலினைத் தந்துள்ளார். தாம் சொல்ல நினைக்கும் செய்தியைப் புரிந்துகொள்வதற்கு வடிவம் ஒரு தடையாக இருத்தல் கூடாது என்று எளிய நடையில் நறுக்குகளைத் தந்துள்ளார். கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் நறுக்குகள் என்ற தலைப்பில் வரைந்துள்ள நூலினை முன்மாதிரியாக அமைத்துக்கொண்டு, இந்த நறுக்குகளைத் தந்துள்ளார். பேராசிரியர் த. பழமலையின் நல்ல அறிமுகம் நூலுக்கு வலிமை சேர்க்கின்றது. தமிழ்க் கவிதையுலகில் புதிய போக்கினை உருவாக்கியவர் பேராசிரியர் த. பழமலை என்பதால் இந்த நூலின் நாடியைப் பிடித்துப் பார்த்து முன்னுரை எழுதியுள்ளார். ஓவியர் மருதுவின் படங்கள் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.

     "கிறுக்கும்... நறுக்கும்" நூல் 208 நறுக்குகளைக் கொண்டு அமைந்துள்ளது. உணர்த்த நினைக்கும் பொருளை எளிமையாகவும் கவிதை நயம் மிளிரவும் வையவன் இந்த நூலில் வழங்கியுள்ளார். சமகால நடப்புகள் அனைத்தையும் விடுபாடு இல்லாமல் எழுதியுள்ளமைக்கு இவரைப் பாராட்டுதல் வேண்டும். தமிழ்த்தேசிய அரசியல், பகுத்தறிவு, பெண்ணியம், அயல்நாட்டு மோகம், உள்ளூர் அரசியல், உலக அரசியல், சுற்றுச்சூழல் சீர்கேடு, கல்விமுறை, ஈழத்து அரசியல் சிக்கல், தேர்தல், இயற்கை,  தன்னம்பிக்கை என்று பல்வேறு பொருள்களில் எழுதியுள்ள நறுக்குகளில் இடம்பெற்றுள்ள செய்திகள் மக்களுக்கு அறிமுகம் ஆகவேண்டியனவாக உள்ளன. தொன்மச் செய்திகளின் துணையுடன் பல நறுக்குகளை வழங்கியுள்ளார். நூலை எடுத்தவர்கள் படித்துமுடித்துவிட்டு வைக்கும் வகையில் உருவமும் உள்ளடக்கமும் உள்ளன.

"ஒருமுறைதான் குறுக்கே போனது
ஓராயிரம்முறை ஓடுகிறது
மனத்துக்குள் பூனை" (நறுக்கு 13)

என்று பாவலர் வையவன் வரைந்துள்ள நறுக்கு இவரின் பகுத்தறிவுப் பார்வைக்கும் மூடநம்பிக்கை ஒழிப்புக்குமான சான்றாக உள்ளது. ஒரு செய்தியைச் சொல்லும் நேர்த்தியுடன் கவிதையாகப் புனையும் ஆற்றல் உள்ளவராக வையவனை இந்த வரிகள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

"வேரொன்றுமில்லை
தரைக்கு மயிர்சிரைக்கும் வேலைதான்
நூறுநாள் வேலை" (நறுக்கு 25)

என்று கிராமப்புறங்களில் இன்று நடைபெறும் நூறுநாள் வேலைத்திட்டப் பணியை கிண்டல்செய்கின்றது வேறொரு நறுக்கு.

"கதவுகள் திறந்தே இருப்பதால்
நாய்கள் நுழைந்துவிடுகின்றன
முகநூல் பக்கத்திலும் இன்பாக்சிலும்" (நறுக்கு 47)

என்று வையவன் வரைந்துள்ள நறுக்கு எவ்வளவு உண்மை என்பதை முகநூல் பயன்படுத்துவோர் நன்கு அறிவர். சமகாலத்துச் செய்திகளைப் பதிந்து வைப்பதில் - படைப்பாக்குவதில் வையவன் வல்லவர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

"இவர் ஏராளமான விருதுகளை
வாங்கியுள்ளார்...
எவரும் "கொடுக்கவில்லை!" (நறுக்கு 55)

என்று இன்றைய இலக்கிய உலகில் நடக்கும் விருது நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

"நெடுநாளாய்ப் புரியாமலிருந்தது
சில ஊடகங்கள் எழுதும்
"கவர்" ஸ்டோரியின் பொருள்" ( நறுக்கு 79)

என்று ஊடகங்கள் காசுக்கு விலைபோகும் தன்மையை அழகாகத் தோலுரித்துக்காட்டும் வையவன் போன்ற படைப்பாளிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

"எளிய சிறகுகளால்
கடலைக் கடந்துவிடுகிறது
பறவை!" (நறுக்கு 78)

என்று தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளைத் தந்துள்ள பாவலரின் கற்பனையாற்றலும் எழுத்து வன்மையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

"போதிமரந்தான் என்பதில்லை
எந்த மரத்தின்கீழும் வரும்
’ஞானம்’"   (நறுக்கு 84)

என்று வையவன் இன்றைய கல்விமுறையை நமக்கு நினைவூட்டி, அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்காமல் தனியார் பள்ளிகளுக்குப் படையெடுக்கும் பெற்றோர்களை மென்மையாகத் திருத்த முனைகின்றார்.

"விரிந்தது மொட்டு
விடுதலையானது
நறுமணம்" (நறுக்கு 86)

என்று இயற்கையை நுண்மையாக நோக்கி எழுதியுள்ள வையவனின் வரிகளில் அடர்ந்த கவிதையாற்றல் இருப்பதை உணரமுடியும்.

"மயிரா அது?
மழித்தால் மறுநாளே முளைக்க...
‘மரம்’டா! (நறுக்கு 93)

என்று குறைந்த சொற்களில் சமூகத்தின் மேல் கொண்ட கோபத்தை வெளிப்படுத்தி, இயற்கையைப் பாதுகாக்க நம்மைத் தூண்டுகின்றார்.

"வண்ண வண்ணப் பலூன்களில்
நிரப்பப்பட்டிருக்கிறது
சின்னஞ் சிறுவர்களின் ஆசை!"  (நறுக்கு 121)

என்று எளிமையான உவமைகாட்டி மிகப்பெரிய உண்மைகளை நமக்கு உணர்த்தும் கவிதையாற்றலின் உரிமையாளரான பாவலர் வையவனை வாழ்த்தி வரவேற்பது நம் கடமையாகும்.

தனித்தனியாய்ச் சிதறிக்கிடக்கிறது
தமிழர்களுக்கான நாடு
உலக வரைபடத்தில் ( நறுக்கு 163)

என்று தமிழர்களின் புலப்பெயர்வையும், தொலைநோக்குப் பார்வையையும் வையவன் கவிதை பதிவு செய்துள்ளது.

"கபிலவஸ்துவில் பிறந்து
முள்ளிவாய்க்காலில் இறந்தான்
புத்தன்" ( நறுக்கு 190)

என்று ஈழத்தின் சோக முடிவினையும் வீரம் தோய்ந்த வரலாற்றையும் நமக்கு மூன்று வரிகளில் நினைவூட்டுகின்றார்.

"கூட்டில் உயிரைவைத்துவிட்டு
இரைதேடப் போகிறது
தாய்ப்பறவை" (நறுக்கு 201)

என்று தாய்மை உணர்வைத் தூண்டும் வரிகள் மிகத் தேர்ந்த படைப்பாளிகளுக்கு உரிய சிறப்பினை இவருக்குத் தருகின்றது.

"வண்டுக்குச்
செய்தி அனுப்புகிறது மலர்
’மணம்’" (நறுக்கு 186)

என்று அழகியல் நழுவும் கவிதையை வையவன் தந்துள்ளமை இவரின் சொல்லாட்சிக்கும் இயற்கை ஈடுபாட்டுக்கும் சான்று பகர்கின்றது.

"வயிற்றிலடித்துக்கொண்டு
வாய்வலிக்கக் கத்துகிறது சேவல்
சூரியத்திருடன்" ( நறுக்கு 37)

என்று அழகிய கற்பனையில் நம் மனக்கண்முன் காலைக் கதிரவனின் காட்சித் தோற்றத்தைப் படிமமாக்கி நம் கவிஞர் நிறுத்துகின்றார். பாரதியிலும் பாவேந்தரிலும், காசி ஆனந்தனிலும் உருவாகும் கற்பனையும், படைப்பாற்றலும், எளிய வெளியீட்டு உத்திகளும் நம் வையவனின் படைப்பில் நெளிந்தோடுவதைக் காணமுடிகின்றது. அப்துல் ரகுமான், காசி ஆனந்தன் கவிதைகளின் தாக்கம் சில இடங்களில் தென்படுகின்றன.

     இந்த நூலில் மிகவும் எளிய செய்திகளை உரைநடை வடிவில் கொண்ட சில நறுக்குகள் உள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். இவற்றைத் தவிர்த்திருக்கலாம். அல்லது செறிவூட்டியிருக்கலாம்.

     தலையணை நூல்களை உருவாக்கி, மக்களைக் குழப்பியடிக்கும்  நடையைக் கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மிக எளிய வரிகளால் அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் வையவனைப் போன்ற மக்கள் படைப்பாளிகள்தான் இந்த நாட்டுக்குத் தேவை. இவர்களால்தான் மொழி ஏற்றம்பெறும். இளம் படைப்பாளிகள் தோன்றுவார்கள். இவருக்கு என்று மேடை அமைத்துத் தருவோம். இவரின் படைப்பினை ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகம் செய்வோம். இவரைப் போலும் கவிதை படைப்பவர்களை வளர்த்தெடுப்பதன் வழியாகத் தமிழர்களுக்குத் தேவையான படைப்புகளை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். சமகாலத் தமிழ்ப் பண்பாட்டு அரசியலைப் பதிவுசெய்துள்ள இந்த அரிய நூலினைக் கவிதை ஆர்வலர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். மாணவர்கள் படித்தால் நல்ல படைப்பாளிகள் நூற்றுக்கணக்கில் உருவாக வாய்ப்பு உள்ளது.

நூல்: கிறுக்கும்... நறுக்கும்
ஆசிரியர்: பாவலர் வையவன்

கிடைக்குமிடம்:

நெசவுக்குடில்,
54, பிள்ளையார் கோயில்தெரு, தமிழ் மின்நகர்,
திருவண்ணாமலை - 606 601, தமிழ்நாடு

பேசி: 0091 94421 10020
விலை: 80.00 உருவா

பக்கம் 96.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் ஐயா
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி.