நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 30 அக்டோபர், 2015

'தமிழர் கணக்கியல் அறிஞர்' வளையாம்பட்டு கு. வெங்கடாசலம்

பொறியாளர் கு. வெங்கடாசலம்

வளையாம்பட்டு கு. வெங்கடாசலம் ஐயா என்னைப் பார்க்க விரும்புவதாக ஆரண்யா சரவணன் செல்பேசியில் கூறி, என் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். அலுவலகப் பணிகளில் அழுந்திக் கிடக்கும் நேரங்களில் மனத்திற்கு மகிழ்ச்சிதரும் வகையில் சில நண்பர்களின் வருகை அமைவதுண்டு. அந்த வகையில் நேற்று (29.10.2015) மாலை பொறியாளர் கு.வெங்கடாசலம் ஐயா தம் நண்பர்களுடன் அலுவலகத்திற்கு மகிழ்வுந்தில் வந்தார். அகவை முதிர்ச்சி காரணமாக மாடிப்படியில் அவரால் ஏறமுடியவில்லை. நான் கீழே சென்று ஐயாவைக் கண்டு வணங்கினேன்; தேநீர் பருகும்படி அன்புடன் கேட்டுக்கொண்டேன். துறைப் பணிகளை முடித்துக்கொண்டு, அனைவருமாக வீட்டுக்குத் திரும்பினோம்.

30.07.2005 இல் நான் வளையாம்பட்டில் பொறியாளர் அவர்களின் இல்லத்தில் சென்று சந்தித்ததையும், சங்க கால மன்னன் நன்னன் தொடர்பான செய்திகளைப் பெற்றுவந்ததையும் நினைவூட்டி, மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி என்றேன். ஐயா அவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் குறித்து, இந்து ஆங்கில நாளிதழில் என் படத்துடன் வந்த செய்தியை எடுத்துக்கொண்டு என்னைச் சந்திக்க வந்தமையைச் சொன்னார்கள். பெரிதும் மகிழ்ந்தேன்.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பிற பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள கணக்கு, அளவுப்பெயர்கள், நிறைப்பெயர்கள் குறித்த செய்திகளைப் பொறியாளர் கு. வெங்கடாசலனார் அவர்கள் எடுத்துரைத்து விளக்கியபொழுது வியப்பில் மிதந்தேன். இன்று காலைதான் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், தொகைமரபு என்னும் இயலின் நிறைவுப்பகுதியை நடத்தும்பொழுது சில நூற்பாக்களில் இடம்பெறும் அளவுப்பெயர், நிறைப்பெயர் குறித்த சொற்களான உழக்கு, ஆழாக்கு, பலம், கஃசு, தொடி, உரி, கழஞ்சு, கலம், பனை, கா, சாடி, தூதை, பானை, தாழி, மண்டை, வட்டில், அகல், சீரகம், நிறை, மா, வரை, அந்தை, உழுந்து உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு விளக்கினேன். எனக்குச் சில சொற்களுக்கு விளக்கம் தெரியவில்லை. அந்தச்சொற்களைக் குறிப்பிட்டு ஐயாவிடம் என் ஐயம் போக்கும்படிக் கேட்டபொழுது எனக்குத் தெரியாத பல சொற்களுக்கு விளக்கம் சொன்னார்கள்தொல்காப்பியம் 480 ஆம் நூற்பாவில் மண்டை என்ற அளவுப்பெயர் பற்றிக் குறிப்பு வருகின்றது என்று குறிப்பிட்டார். சில சொற்களுக்கு விளக்கம் தெரியவில்லை என்று அவர்களின் பெருமைநலம் தோன்றக் கூறினார். அளவுப்பெயர், நிறைப்பெயர் தொடர்பான கணக்கியல் சார்ந்த செய்திகள் எழுத்ததிகாரத்தில் எழுபத்தைந்து நூற்பாக்களில் உள்ளன எனவும், சொல்லதிகாரத்தில் மூன்று நூற்பாக்களில் உள்ளன எனவும், பொருளதிகாரத்தில் ஓர் இடத்தில் உள்ளதாகவும் போகிற போக்கில் குறிப்பிட்டார்கள்.

 கழஞ்சுக்காய்

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கழஞ்சு என்ற அளவு குறித்துக் கேட்டேன். தம் கைப்பையிலிருந்து கழஞ்சுக்காய் படத்தைக் காட்டி, இதுதான் கழஞ்சு என்று குறிப்பிட்டார்கள்; கழற்சிக்காய் என்பதும் இதுதான் என்று விளக்கினார். மேலும் தமிழர் கணக்கியலில் குன்றிமணியின் முக்கியத்துவத்தை விளக்கினார். மடுமுழுங்கி என்ற நெல்லின் படத்தைக் காட்டி , இதுதான் செந்நெல் என்று விளக்கினார். இன்றும் கேரளாவில் இந்த நெல் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு- 1 உழக்கு
2 உழக்கு- 1 உரி
2 உரி – 1 நாழி(படி)
8 படி -1மரக்கால்
12 மரக்கால் - 1 கலம்
5 மரக்கால் - 1 பறை

என்று நம் பழந்தமிழ் அளவுகளைத் தயக்கமின்றி எடுத்துரைக்க அனைவரும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தோம். நடமாடும் கணக்குக் களஞ்சியமாக பொறியாளர் கு. வெங்கடாசலனார் விளங்குவதைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பொறியாளர் கு.வெங்கடாசலம் வாழ்க்கைக் குறிப்பு

பொறியாளர் கு.வெங்கடாசலம் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு என்னும் ஊரில் 12.09.1927 இல் பிறந்தவர். பெற்றோர் குப்புசாமி செட்டியார், அமிர்தம் ஆவர்செங்கத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். பின்னர்க் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டயப் படிப்பை (1947-49) நிறைவு செய்தவர். கட்டடப் பொறியியலை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து சென்னை மாகாணத்தில் (தமிழகம், ஆந்திரா,   கர்னாடகா கேரளா) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.

     இந்திய அஞ்சல் மற்றும் தொலைபேசித் துறையில் கட்டடப் பொறியாளராகப் பணியில் நேர்மையுடன் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற பெருமைக்குரியவர்.

பொறியாளர் கு. வெங்கடாசலம் அவர்களுக்கு 1953 இல் திருமணம் நடைபெற்றது. மனைவியார் பெயர் திருவாட்டி கண்ணம்மாள். இவர்களுக்கு இரு ஆண்மக்கள் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். முதல் மகன் பேராசிரியர் வெ. பெருவழுதி, திருவள்ளவர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். மற்றொரு மகனான திரு. வெ. அறிவுடைநம்பி அவர்கள் எம். எஸ். சுவாமிநாதன் நிறுவனத்தில் அறிவியல் அறிஞராகப் பணிபுரிகின்றார்.

ஐயா அவர்கள் அசாமில் (1972-74) பணிபுரிந்தபொழுது கொங்கு இதழில் ‘காமரூபத்தில் தமிழ்க் கணிதம்’ என்ற கட்டுரையை எழுதி அனைவரின் பாராட்டையும் பெற்றார். தமிழ்க்கணிதம் அசாம் பகுதியில் பரவியிருந்ததைச் சான்றுகளுடன் நிறுவினார். அசாமில் நில அளவைகளாகத் தமிழகத்தில் இருக்கும் காணி, குழி, மா போன்றவை இருப்பதை அறிந்து, தமிழுலகுக்கு அறிவித்தார்.

1982 இல் Science Today இதழில் திரு.எஸ்.ஆர். இராவ் அவர்கள் ‘சிந்து சமவெளியில் உள்ள எடைக்கற்கள்’ பற்றி எழுதியதை அடிப்படையாகக் கொண்டு ‘சிந்து வெளியில் முந்திரி வாய்பாடு’ என்னும் கட்டுரையை உருவாக்கினார். இக்கட்டுரையில் தொல்காப்பியர் காலத்தில் இருந்த கணிதமுறை சிந்து சமவெளியிலும் இருந்துள்ளதை எடுத்துக்காட்டினார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  முனைவர் வ. . சுப்பிரமணியம் அவர்கள் துணைவேந்தராக இருந்தபொழுது முனைவர் ஐராவதம் மகாதேவன் தலைமையில் 1983 ஆம் ஆண்டு (ஏப்பிரல் 12-14) நடைபெற்ற கருத்தரங்கில் இவர் வழங்கிய கட்டுரை அனைவராலும் பாராட்டப்பட்டது.


தம் கணக்கு குறித்த ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும், இவர் நடத்திய ‘நன்னன் நாடு’ என்னும் இதழில் (1993-94) வெளியிட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

1991 உலகக் கணித ஆசிரியர்கள் சங்கம் நடத்திய  வெள்ளி விழாக் கருத்தரங்கில் உலக எண் கணிதத்துடன் ஒப்பிட்டுத் தமிழ்க் கணிதமுறை சிறந்தது என்று நிறுவினார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனதில் வழங்கிய கட்டுரையில் ‘வடிவக் கணிதம்’ பற்றிய அரிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார். 24 விரல் ஒருகோல் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுவதையும், 25 அங்குலம் ஒரு கோல் என்று சிந்து சமவெளியில் காணப்படுவதையும் விளக்கி இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

தமிழர்களின் நிறை அளவுகளில் குன்றிமணி குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிடும் கு. வெங்கடாசலம் முற்கால வேதத்தில் இது குறிப்பிடப்படவில்லை என்கின்றார்.

செந்நெல்(அ) மடுமுழுங்கி

மானம்(த) அங்குலம்(ச) விளக்கும் படம்


8 நெல் – 1 பெரு விரல் (உத்தமன் பெருவிரல்) என்ற பழைய அளவுமுறையைக் குறிப்பிடுவார்.

4 நெல்லைப் படுக்கவைப்பதும் 8 நெல்லைக் குத்திட்டு வைப்பதும் சமம் என்பதை 1: 2 என்ற கணக்கீட்டுக்கு இணையாகக் குறிப்பிடுகின்றார்.

1 குன்றிமணி 110 மிலி கிராம்.
100 கடுகு(1 குன்றிமணி) - 1சீரகம்
360 குன்றிமணி – 1 பலம் என்று குறிப்பிட்டுக் குன்றிமணியின் முக்கியத்துவம் அளவீட்டில் இருந்ததை எடுத்துரைப்பவர்.


குன்றிமணி
21 குன்றிமணியின் எடை= 1 கழற்சிக்காயின் எடை


குன்றிமணி என்பது இந்திய அளவில் இருந்த அளவியல் முறை. இன்றும் இது ஆந்திரா. கர்னாடகா, கேரளாவில் உள்ளது.

தமிழ்க்கணிதம், வடமொழிக் கணிதம், அரேபியக் கணிதம், பிரமிடு கணிதம் யாவும் ஒன்றுபோல் உள்ளது என்று குறிப்பிடுபவர்.

கு.வெங்கடாசலம் அவர்களின் வணிகப் பாதைகள் குறித்த ஆய்வுகள்:

தொல் தமிழகத்தில் வணிகம் எந்த ஊர்களின் வழியாக நடந்துள்ளது என்பதையும், வெளிநாட்டார் வணிகத்தின் பொருட்டுத் தமிழகத்தில் எந்த வழித் தடங்களைப் பின்பற்றினர் என்பதையும் சிறப்பாகத் தம் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

பொறியாளர் கு.வெங்கடாசலம் அவர்கள் தமிழ்க்கணிதம் மட்டுமன்றி, பாபிலோனிய, உரோமானிய, வடமொழிக் கணிதங்களையும் அறிந்து, தமிழ்க்கணிதத்தின் மேன்மையைச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

சிறிய எண்ணுடன் பெரிய எண் சேரும்பொழுது பண்புத்தொகையாக அமையும் என்கின்றார்.

.கா. இருபது (இரண்டு+ பத்து), முப்பது (மூன்று+பத்து)

பெரிய எண்ணுடன் சிறிய எண் சேரும்பொழுது உம்மைத் தொகையாக இருக்கும்.
.கா. இருபத்திரண்டு (இருபதும் இரண்டும். அத்து - சாரியை)

என்று மிக எளிமையாகத் தமிழையும் கணக்கையும் இணைத்துக் காட்டுகின்ற இவர்தம் திறமை பாராட்டுவதற்குரிய ஒன்றாகும்.

கு. வெங்கடாசலம் அவர்கள் இயற்கைப் பாதுகாப்பு, வரலாற்றைத் தேடுதல் எனப் பலதுறை ஆர்வலராக விளங்குகிறார். நன்னன் நாடு இதழாசிரியர், கட்டுரையாசிரியர் என்பதுடன் மேற்குத் தொடர்ச்சிமலைப் பாதுகாப்பு இயக்கம், சவ்வாதுமலைப் பாதுகாப்பு இயக்கம், பாரம்பரிய விதை காப்போம் (1998) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்பட்டுத் தம் தமிழார்வத்தையும் இயற்கை ஈடுபாட்டையும் பதிவுசெய்துள்ளார்.

தமிழர்களின் கணக்கியல் அறிவை வெளிப்படுத்தும் இவர்தம் கட்டுரைகளும், சிந்தனைகளும் விரைந்து நூல்வடிவம் பெற உள்ளது. தமிழர்களின் கணக்கியலை அயலகத்தாரின் கணக்குகளுடன் ஒப்பிட்டு ஆராயும் இவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ப்பெருமை மீட்க அனைவரும் வாழ்த்துவோம்.


கு.வெங்கடாசலம் அவர்கள்

கு.வெங்கடாசலம் அவர்களுடன் மு.இளங்கோவன்

குறிப்பு: கட்டுரையைப் பயன்படுத்துவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

பேரறிஞருடனான சந்திப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. 1983இல் கருத்தரங்கின்போது நான் பல்கலைக்கழகத்தில் இளநிலைஉதவியாளராகப் பணியாற்றினேன். பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை தமிழ்ப்பல்கலைக்கழகம் எனக்குத் தந்தது. தற்போது தங்களின் மூலமாக ஐயாவைப் பற்றி அதிகமான செய்திகளை அறிந்தேன்.