நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

தம்பி ம. இளவரசன் மறைவு


ம. இளவரசன்

மலேயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியரும், எங்கள் அருமை அண்ணாருமாகிய திரு. ம. மன்னர் மன்னன் அவர்களின் திருமகனார் தம்பி ம. இளவரசன் அவர்கள் இன்று (18.01.2015) டெங்கு என்னும் கொடிய காய்ச்சலால் இயற்கை எய்திய கொடுஞ்செய்தி அறிந்து ஆற்ற ஒண்ணாத் துயரம் அடைந்தேன்.

27. 12. 2014 இல் நான் மலேசியா சென்றபொழுது தந்தையாருடன் தம்பி ம. இளவரசன் என்னை வரவேற்று விருந்தோம்பினார். அவரை ஒரு நிறுவனத்தின் நேர்காணலுக்கு நாங்கள் அழைத்துச் சென்று விட்டுவந்தோம். இசையமைப்பாளர் இராஜ்குமார் அவர்களைக் கோலாலம்பூர் வானூர்தி நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழியனுப்ப, மகிழ்வுந்து ஓட்டி வந்து உதவினார். 

மேலும் காலைப்பொழுதொன்றில் அவருடன் அருகமர்ந்து உணவு உண்டதும், அவர் என்னைப் பேருந்து நிலைக்கு அழைத்து வந்து வழியனுப்பி வைத்ததுமான நினைவுகள் என்னைத் தாக்கி வருத்துகின்றன. தம்பி ம. இளவரசரை இழந்து தவிக்கும் எங்கள் அண்ணன் ம. மன்னர் மன்னன் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் அடிமனத்திலிருந்து பீறிட்டெழும் வருத்தங்களும் ஆறுதல்களும் அமைவதாகுக.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்” என்ற திருக்குறள் நினைவுக்கு வருகின்றது. கண்ணீருடன் கீழ்வரும் வரிகளைத் தம்பி இளவரசருக்குப் படைக்கின்றேன்.)

கண்ணே மணியே இளவரசா!

அண்ணன் அண்ணி அழுதரற்ற,
அன்புச் சுற்றம் மயங்கியழ,
கண்ணே! மணியே! இளவரசே!
கடிதின் நீங்கி மறைந்தனையே!
கண்ணே! மணியே! இளவரசே!
கடிதின் நீங்கி மறைந்தசெய்தி
புண்மேல் அம்பாய் பாய்ந்ததடா!
புலம்பி நாங்கள் கதறுகின்றோம்!

மலையக மண்ணில் உனைக்கண்டேன்!
மார்பு தழுவிப் பழகினையே!
உலையிடை உருகும் மெழுகாக
உண்மை அன்பைக் காட்டினையே!
உலையிடை உருகும் மெழுகாகி
உண்மை அன்பைக் காட்டியதால்
அலைகள் போலுன் நினைவுவந்தே
ஆழத் தாக்கி வீழ்த்துதடா!


படித்துப் பட்டம் நீபெற்றாய்!
பணியில் இணைந்து நீசிறந்தாய்!
வடித்த சிலைபோல் தோற்றம்கொண்டு
வானுற ஓங்கி நின்றனையே!
வடித்த சிலைபோல் நின்றவுனை
வானக் காலன் கவர்ந்ததனால்
துடித்தே அழுது துவலுகின்றோம்!
தூய்மை மகனே போய்வாடா!

ஓய்ச்சல் இன்றித் தமிழுக்கே
உழைக்கும் குடும்பம் உன்னதடா!
பாய்ச்சல் புலிபோல் நீபிறந்து
பாலை நெஞ்சில் வார்த்தனையே!
பாய்ச்சல் புலிபோல் வாழ்ந்தவனே!
பாசம் நெஞ்சில் நிறைந்தவனே!
காய்ச்சல் வந்தே  உனைக்கவ்விக்
கவர்ந்து போன தெப்படியோ?

மணத்தை முடித்து மகிழ்வதற்கே,
மாளிகை ஒன்று மனக்கண்ணில்
குணத்தால் கட்டிக் காத்திருந்தோம்,
குறைந்த அகவை கோமகனே!
குணத்தால் உயர்ந்த கொற்றவனே!
குடும்பம் தவிக்க விட்டபடி,
இணர்போல் கிடக்கும் உனதுடலை
எந்தப் பிறப்பில் காண்பமடா!


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா