நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 செப்டம்பர், 2013

ஆறு செல்வனின் தமிழ் உணர்வு...


புதுவைக்குப் புகழ் சேர்ப்பவர்களுள் ஆறு செல்வன் அவர்களும் ஒருவர். நான் புதுச்சேரியில் பலவாண்டுகளாக வாழ்ந்தாலும் இவர் பற்றி அறியாமல் இருந்தமைக்கு வருந்துகின்றேன். திருவாளர் இராமலிங்கனார் அவர்கள் வழியாகத் திரு. ஆறு செல்வன் அவர்களின் நட்பு அண்மையில் அமைந்தது. சவகர்லால் முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரியும் ஆறு செல்வன் அவர்கள் மிகச்சிறந்த கவிதையுணர்வும் நாடகப் புலமையும் கொண்டு விளங்குவதை அறிந்து வியந்தேன். 

ஆறு செல்வன் அவர்கள் எனக்குக் கையுறையாக வழங்கிய தமிழா! தமிழா! என்ற பாட்டுநூலை மருத்துவமனையில் இருந்த ஓய்வுநேரத்தில் ஒரு நோட்டமிட்டேன். மிகச்சிறந்த கற்பனை வளமும், பாட்டு உணர்வும் மரபு ஆளுமையும் கண்டு மகிழ்ந்தேன். இவர் இன்னும் யாப்புத்துறையை முழுமையாக அறிந்தால் காப்பியம் பாடும் ஆற்றலைப் பெறலாம்.

தமிழா! தமிழா! என்ற பாட்டு நூல் 42 பாடல்களைக் கொண்டுள்ளது. தமிழ், தமிழர் சிறப்பும் பெருமையும் குறித்த பாடல்கள், தலைவர்கள், சான்றோர்களைப் பற்றிய பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. தனித்தமிழ் அறிஞர் முனைவர் இரா. திருமுருகனார் குறித்து ஆறு செல்வனார்,
"அய்யா! நீ
மனித வடிவெடுத்த மதுரைத் தமிழ்ச்சங்கம்....
செல்லாக் காசுகளும், பொல்லாத் தூசுகளும்
பல்லால் கடித்துன்னைப் பதம்பார்த்த வேளையிலும்,
நில்லா தோடிய நெடுந்தமிழ் ஆறே!
வெல்வார் இல்லாத வீரத்தின் கூறே!" (பக்கம்90)
என்று வரைந்துள்ள வரிகள் ஐயா திருமுருகனாரை மனக்கண் முன் நிறுத்தின.

திருவள்ளுவர், வ.உ.சி, பெரியார், அண்ணா, வைரமுத்து உள்ளிட்டவர்களை வரைந்துள்ள வைர வரிகள் ஆறு செல்வன் மிகச்சிறந்த பாத்திறம் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும். ஈழத்தமிழ் மக்களுக்காக இவர் வடித்துள்ள கண்ணீர் ஆறு நூலின் பக்கம்தோறும் கரைபுரண்டு ஓடுகின்றது. தமிழ் மக்கள் ஈழப்போரில் பட்ட துயரங்களை இந்த நூலில் நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். தமிழ் மக்களுக்கு விடியல் வாழ்க்கை என்று வாய்க்கும்? என்று வருந்திப் பாடியுள்ளார்.

நாட்டு நடப்பும் நாட்டுப்புறக் காதலும் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள வரிகள் சமகால நடப்பைப் படைப்பில்கொண்டுவரும் இவர்தம் பேராற்றலை நமக்குக் காட்டுகின்றது. நாட்டுப்புற மெட்டில் உள்ள இந்தப் பாடல் தக்க பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கையில் கிடைத்தால் ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றுவிடும். ஆணும் பெண்ணும் தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தில் ஆறு செல்வனாரின் தமிழ்ப்பற்றும் சமூக அக்கறையும் புதுமை அறிந்த மனப்போக்கும் நமக்குப் புலனாகின்றன.

ஆண்:
கம கமன்னு மணக்குறியே கண்ணே குருவம்மா!- உன்னைக்
கண்ட ஒடனே குளிரடிக்குது தெற்குத் துருவமா.
செவ, செவன்னு வளர்ந்து நிக்கிறே செவ்வாய் கிரகமா- நாம
புதனுக்குத்தான் மணமுடிக்கப் போயி வருவோமா?
பெண்:
தேர்தல் வந்த தொகுதிபோல பளபளக்குற -அந்தச்
சீனநாட்டுச் சுவரப்போல உடம்பிருக்குற
காதல் தந்து மனசுக்குள்ள கலகம் பண்ணுற - தினம்
கனவில் வந்து என்னை அள்ளி மொன்னு தின்னுற!
ஆண்:
ஸ்கேனுக் கருவி போல உன்னைத் தொழவிப் பாக்கனும்- உன்
சின்னச் சின்ன அணுவில்கூட என்னைச் சேக்கணும்
யானை எனக்குத் தீனிபோட்டு நீதான் அடக்கணும்- பேங்கு
ஏ.டி.எம்மு மிஷினப் போல இன்பம் குடுக்கணும்!
பெண்:
அனாமத்தா பெத்துப் போட்ட ஆளு இல்லய்யா- என்னைத் தெனாவட்டா தீண்டிடாம தூரம் நில்லுய்யா
இனாமுக்கு மயங்கிப் போகும் ஏழை இல்லய்யா!- நான்
சுனாமிக்கே சுருண்டிடாத இமயக் கல்லுய்யா!...

என அமையும் இந்தப் பாட்டு அனைவரின் உள்ளத்தையும் சுண்டி இழுக்கும் பேராற்றல் பெற்றது.

தமிழ் உணர்வுடன் படைப்புகளைத் தந்திடும் ஆறு செல்வம் அவரகளின் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

ஆறு செல்வன் அவர்கள் புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டையில் (செவராயப்பேட்டையில்) 29.05.1959 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் ஆறுமுகம் – முனியம்மாள் ஆவர். குருசுகுப்பம் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்று, தாகூர் கல்லூரியில் புகுமுக வகுப்பினை நிறைவு செய்தவர். 1983 மார்ச்சு 25 முதல் சிப்மர் மருத்துவமனையில் பணியில் இணைந்து இன்று கணக்காளராக உயர்ந்து நிற்கின்றார். கவிதை, சிறுவர் பாடல், நாடகம் என்ற துறைகளில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

கவிதை நூல்கள்
1.   வானவில்
2.   அமுதம்
3.   ஆய்த எழுத்து
4.   பறை
5.   தமிழா! தமிழா!

சிறுவர் பாடல்
1.பட்டாம் பூச்சி

நாடகம்
1.உழைக்கும் கைகளே!
2.ஒருதாய் மக்கள் நாம் என்போம்!

வானொலி, தொலைக்காட்சி, மேடைகளுக்காகப் பல நாடகங்களை உருவாக்கித் தந்துள்ளார். இருபது ஆண்டுகளாக மேடை நாடகப் பட்டறிவுகொண்டவர். 150 மேற்பட்ட நாடகங்களை அரசு, தனியார் நிறுவனங்களுக்காக அரங்கேற்றியுள்ளார்.

ஆறு செல்வன் அவர்களின் துணைவியார் பெயர் லைலா என்பதாகும். இவருக்குத் தமிழ்வேந்தன் என்ற மகனும், கலைமுகில், திருமதி என்னும் மகள்களும் உள்ளனர். ஆறு செல்வனின் தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தொடர எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

தொடர்புக்கு:

ஆறு.செல்வன் அவர்கள்
கலைமுகில் பதிப்பகம்
எண் 4, காமராசர் தெரு,
வி.பி.சிங் நகர், சண்முகாபுரம்,
புதுச்சேரி- 605 009

செல்பேசி: 98947 55985


கருத்துகள் இல்லை: