நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள்...


ம.இலெனின் தங்கப்பா நூல் அறிமுக விழா

புதுச்சேரியில் நேற்று (27.02.2010) இரண்டு இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன.
பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் பெங்குவின் நிறுவன் வெளியிட்ட LOVE STANDS ALONE (selections from tamil sangam poetry)(விலை 390 உருவா)என்ற நூல் அறிமுக விழாவும்,ஒரிசா பாலு அவர்களின் தமிழகக் கடலாய்வுகள் குறித்தும் பேச்சும் இந்த இரண்டு நிகழ்வுகளாகும்.இரண்டு நிகழ்வுக்கும் செல்ல வேண்டும்.என்ன செய்வது?.

முதலில் திரு.பாலு அவர்களை அவர்கள் தங்கியிருந்த விடுதியில் கண்டு உரையாடி அவரைப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் அரங்கில் அழைத்து வந்து அமரச் செய்தேன்.நண்பர்களிடம் சிறிது இடைவெளியில் வருவதாகச் சொல்லி அருகில் இருந்த வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தங்கப்பா நூல் அறிமுகக் கூட்டத்துக்குச் சென்றேன்.தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதற்கும் நான் செல்வதற்கும் சரியாக இருந்தது.

தங்கப்பா அவர்களின் மகன் த.செங்கதிர் அனைவரையும் வரவேற்றார்.பேராசிரியர் க.பஞ்சாங்கம் நீண்டதொரு தலைமையுரையாற்றினார்.அடுத்து வானொலி நிலையத்தில் பணியாற்றும் முனைவர் பழ.அதியமான் அவர்கள் தங்கப்பா பற்றியும் அவர் மொழிபெயர்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.கவிஞர் இரா.மீனாட்சி,பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் உரையாற்றினர்.தங்கப்பாவும் நிறைவில் உரையாற்றினார்.

100 நூல்கள் விழா அரங்கில் விற்றுத் தீர்ந்தன.மேலும் தேவையானவர்களுக்கு அனுப்பி வைப்பதாகப் பணம் பெற்றுக்கொண்டு பெங்குவின் நிறுவனத்தார் உறுதி சொன்னார்கள் நான் உட்பட யாரும் தங்கப்பாவின் நூல்கள் 100 ஒரே நேரத்தில் விற்கும் என நினைக்கவில்லை. பேராசிரியரின் நூல்கள் விற்பனையாகாமல் பரணில் கட்டிக்கிடப்பதையும் என்னைப் போன்றவர்களுக்கு அவர் அன்பளிப்பாக வழங்குவதையும் இருபதாண்டுகளாக அறிவேன்.அவர் போல் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு பாவலரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.அவர்போன்ற மொழிபெயர்ப்பாளரையும் நான் கண்டதில்லை.என்னே அவரின் ஆங்கிலப்புலமை?சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதை முனைவர் பிரேமா நந்தகுமார் உள்ளிட்டவர்கள் வாயாரப் புகழ்ந்துள்ளைதைக் கேட்டுள்ளேன்.

நான் இடையில் புறப்பட்டு மீண்டும் பாலு அவர்களின் நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தேன்.கடலாய்வு பற்றிய அரிய செய்திகளை அவர் முன்வைத்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.குறைந்த எண்ணிக்கை என்றாலும் அனைவரும் சுவைத்துக் கேட்டனர்.


புதுச்சேரித் தமிழ்ச்சங்கத்தில் ஒரிசா பாலு

புதுவைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு அவரை மீண்டும் அழைக்க வேண்டும் என்று புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் தம் விருப்பத்தைச் சொன்னார்கள். பாலுவிடம் விடைபெற்று வரும்பொழுது நண்பர் பொறியாளர் முருகையன் எதிர்ப்பட்டார்.ஐயா இரா.திருமுருகனின் தெளிதமிழ்,தமிழ்க்காவல் இதழ்களை இணையத்தில் வடிவமைத்து வெளியிட்டவர் முருகையன்.திருமுருகனாரின் மறைவுக்குப் பிறகு இதழ்கள் நின்றன.மீண்டும் விரைவில் தமிழ்க்காவல், தெளிதமிழை இணையத்தில் ஏற்றுவது பற்றி உரையாடினோம்.விரைந்து தெளிதமிழ்,தமிழ்க்காவல் இணையத்தில் வெளிவர ஏற்பாடு செய்துவருகிறோம்.

2 கருத்துகள்:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஆக இரு நிகழ்ச்சிகளின் நிகழ்வுகளும் நாங்கள் அறியக்கிடைத்ததற்கு நன்றி!

// தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்// தமிழில் வந்துள்ள இந்த
தட்டச்சிட்டால் ஒலிக்கும் இந்த மென்பொருளை தரவிறக்கம் பண்ண இயலுமா?

Unknown சொன்னது…

வணக்கம் அய்யா, மிக்க மகிழ்ச்சி, நான் ஏற்கெனவே தங்களிடம் அளித்த உறுதிமொழின் படி, தெளிதமிழ், தமிழ்க்காவல் மீண்டும் மலர என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்குவேன்.
தமிழ்நாடன்.