நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 மார்ச், 2008

என்னை வளர்த்த கண்ணியம் ஆசிரியர் பற்றி...


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஆ.கோ.குலோத்துங்கன்(உள்கோட்டை)

கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க
கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகில் உள்ள ஆயுதக்களம் என்னும் ஊரில் பிறந்தவர்.
இவர்தம் தமையனார் ஆ.கோ.இராகவன் அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர்.
அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர்.ஏறத்தாழ முப்பதாண்டுகளாகக் கண்ணியம் என்னும்
திங்களிதழை நடத்திவருபவர்.அரசியல் சமூக இதழாகத் தொடக்கதில் வெளிவந்தது.
இன்று இலக்கியத் திங்களிதழாக வெளிவருகின்றது.

சென்னை சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் அதன் தொழிற்சங்கத்தில் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தவர்.நிறுவனத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் ஆசைக்கு இணங்காமல் பணிவாய்ப்பை இழந்தவர்.நிறைவில் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றவர்.

பல எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.மாணவ நிலையில்
என்னை அடையாளம் கண்டு என் எழுத்துகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.என் நண்பர்கள்
பலரை எழுதச்செய்து வளர்த்தவர்.என் ஒளிப்படத்தைக் கண்ணியம் இதழின் அட்டைப்படமாக
வெளியிட்டு உதவியர். எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கும் தூய நெஞ்சினர்.எங்களுக்குக் குழந்த பிறந்த செய்தி அவராகக் கேள்வியுற்று
வேலூர் கிறித்தவ மருதுவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வாழ்த்துச் சொல்லிக் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்.

பல நாள் பழகினும் தலைநாள் பழகியது போன்ற அன்பு நெஞ்சினர்.தந்தையாக இருந்து என்னை வளர்த்த அப்பெருமகனார்க்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுரைக்கக் கடமைப்பட்டவன்.திரைப்படப் பாடலாசிரியர் பா.விசய் அவர்களுக்கு இளமைக்காலத்தில் எழுத்தாற்றலை வளப்படுத்தியவர் நம் குலோத்துங்கன் அவர்களே ஆவார்.பா.விசய் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்.அவர் சிற்றப்பா மாசிலாமணி என் பள்ளிக்கூடத்துத்தோழன்.பா.விசய் அவர்கள் மேல்நிலைக்கல்வி பயின்றபொழுது நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தேன்.அவர் பிஞ்சுவிரலால் அன்று எனக்கு எழுதிய மடலை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

எங்களின் வளர்ச்சியில் எங்கள் பகுதியின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்ட ஐயா ஆ.கோ.குலோத்துங்கனார்க்கு வாழ்த்துகள் சொல்லி மகிழ்கிறேன்.

அவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரி பயன்படுத்தலாம் :

திரு.ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள்,
17/93, மூன்றாவது முதன்மைச் சாலை
இராம் நகர்
சென்னை - 600082
இந்தியா

செல்பேசி : 91 9940078307

வியாழன், 27 மார்ச், 2008

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பன்முக நோக்கில் திருக்குறள் கருத்தரங்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 'பன்முக நோக்கில் திருக்குறள்' என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26, 27, 28 - 2008 இல் நடத்துகிறது. 

26.03.2008 காலை நடைபெற்ற தொடக்க விழாவில் முனைவர் பெ.மாதையன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றினார்.


பேராசிரியர் முனைவர் தி.முருகரத்தினம் அவர்கள் தொடக்கவிழா சிறப்புரையாற்றினார்.



28.03.2008 இல் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்ற, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வ.கிருட்டிணகுமார் வாழ்த்துரை வழங்க உள்ளார். தமிழகப் பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்களின் 22 அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.


28.03.2008 காலை 10 மணிக்கு முனைவர் பழ முத்துவீரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அரங்கில் நான் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்(உரை) என்னும் தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன். இக்கட்டுரையில் திருக்குறளும் பரிமேலழகர் உரையும் தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்களை எவ்வாறு உரைகாண வைத்துள்ளன என்பதைப் பாவாணர், பெருஞ்சித்திரனார், இரா.இளங்குமரனார், பொற்கோ, கலைஞர், குழந்தை, பாவேந்தர் உரைகளின் துணையுடன் விளக்க உள்ளேன். நாளை கட்டுரை வழங்கிய பிறகு என் பக்கத்தில் அதனை வெளியிடுவேன்.

செவ்வாய், 25 மார்ச், 2008

அண்ணா பரிமளம் நினைவுகள்...


அண்ணா பரிமளம்

கண்ணியம் இதழில் அண்ணா பரிமளம் அவர்கள் எழுதிய குறிப்புகள், படைப்புகளைப் பல ஆண்டுகளாகப் படித்துள்ளேன்.கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வழியாக அண்ணா பரிமளம் அவர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தேன்.

திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக, தந்தை பெரியாரின் தொண்டராக, தமிழகத்தின் அறிவுசான்ற முதல்வராக விளங்கிப் பல இலக்கம் தம்பிமார்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் அறிஞர் அண்ணா. இவரின் வளர்ப்புச் செல்வமே அண்ணா பரிமளம்.

தந்தையார் அவர்கள்மேல்அவருக்கு இருந்த பற்று அளவிடற்கரிது. தந்தையாரின் படைப்புகளை, படங்களை, ஆவணங்களைத் தொகுத்து அவர்தம் பெயரில் இணையதளம் நிறுவிப் பராமரித்து வந்தார்கள்.

தற்செயலாக அத்தளத்தைப் பார்வையிட்டபொழுது பயனுடைய பல தகவல்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் பக்கத்தில் ஓர் இணைப்பு வழங்கிவிட்டு என் மகிழ்ச்சியை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு மின்மடலிட்டேன். அவர்கள் எனக்குத் தொலைபேசியில் பேசி வாழ்த்துச் சொன்னார்கள். அண்ணாவின் நூற்றாண்டு ஒட்டி ஒரு பரப்புரை அறிக்கை என் முகவரிக்கு நூற்றுக்கணக்கில் தனித்தூதில் அனுப்பிவைத்தார்கள். எனக்கு மடலும் எழுதியிருந்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற புதுவைச்சிவம் நூற்றாண்டு அரசு விழாவில் பேச வந்தபொழுது என் பெயர் சொல்லி விழாக் குழுவினரை வினவியுள்ளார்கள். என்னைப் பார்க்கும் ஆவலை அனைவரிடமும் வெளிப்படுத்தி, என் தொலைப்பேசி எண்ணைப் பலரிடம் கேட்ட பொழுது தற்செயலாக நான் அங்குச் சென்றேன். அப்பொழுது திரு. தமிழ்மணி உள்ளிட்ட அன்பர்கள் அண்ணா பரிமளம் ஐயா என்னைத் தேடியதாகச் சொன்னார்கள்.

நானும் அவர்களைப் படத்தில்தான் பார்த்திருந்தேன். நண்பர்களின் துணையுடன் அவரைக் கண்டு வணங்கிப் பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை என்னும் இரு நூல்களைக் கொடுத்து மகிழ்ந்தேன். சென்னை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.

அத்தன்பின் ஓரிரு மின்னஞ்சல் விடுத்தேன். அவரைக் காண ஆவலாக இருந்ததேன். இன்று கல்லூரிப்பணி முடிந்து இல்லம் திரும்பியபொழுது சுவரில் காணப்பட்ட செய்தித்தாளில் அண்ணாமகன் மறைவு என்ற செய்தி கண்டு கலங்கினேன்.

பண்புள்ள பெருமகனார் திடுமென நீர்பாய்ந்து மறைவுற்றது வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் கூறிக் கையற்று நிற்கிறேன்.

திங்கள், 24 மார்ச், 2008

புதுவைப் பல்கலைக்கழகக் கருத்தரங்க வாயிலிலிருந்து...

 புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, புதுவை இலக்கியப்பொழில் அமைப்பு நடத்திய கருத்தரங்கிற்குச் சென்று வந்தேன். பல்கலைக்கழகக் கணக்குத் துறையில் உள்ள கருத்தரங்க அறையில் காலை 10.30மணிக்குக் கருத்தரங்கம் தொடங்கியது. புலவர் பூங்கொடி பராங்குசம் வரவேற்புரை. முனைவர் அ.அறிவுநம்பி கருத்தரங்க நோக்க உரையாற்றினார்.

 முனைவர் இரா.திருமுருகனார் தமிழிசைப் பாடல் துறைக்குப் புதுவைச் சிவம் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூர்ந்தார். நைவளம் நட்டபாடையாகி, இன்று கம்பீர நாட்டை எனப்பெயர் பெறுவதை விளக்கினார். காரைக்கால் அம்மையார் பாடல் (கொங்கை...), சம்பந்தர் தேவாரம், திரைப்படப் பாடல்கள் (இது ஒரு பொன்மாலைப் பொழுது. என்னவளே...) என்பன நட்டபாடையே என்று விளக்கினார். பாவேந்தர் பல திரைப்பட மெட்டில் அமைந்த பாடல்களைப் பாடியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

 அரசு இசைக்கல்லூரிகளில் தமிழிசை அறிஞர்களின் பெயர்களை வைக்காமல் தியாகராசர், சியாமா சாத்திரி, தீட்சிதர் எனப் பெயர் வைத்துள்ளதைக் கண்டித்தார். இசை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு என நினைக்கும் போக்கு உள்ளது. கர்நாடக இசை என்பது தமிழர்களுடையது என்றார். பகுத்தறிவாளருக்கு இசையில் ஈடுபாடு இல்லாமல் உள்ளதைக் குறிப்பாகத் தந்தை பெரியாரின் இசைகுறித்த கருத்தை நினைவூட்டினார். அண்ணாவுக்குத் தமிழிசையில் இருந்த ஆர்வத்தைப் பாராட்டினார். புதுவைச் சிவம் தமிழர்களுக்குத் தேவையான கருத்துகளை இசையில் தாளம் தட்டாத பாடல்கள் வழி எழுதியதை விளக்கினார்.

 திராவிட இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட தோப்பூர் திருவேங்கடம் புதுவைச் சிவத்தின் படத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கத்தினரின் கோட்பாடுகளாக மூன்றைக் குறிப்பிட்டார். 1.தமிழ்மொழி, இனம் பற்றிய கோட்பாடு 2. சமூகநீதிக் கோட்பாடு 3. பகுத்தறிவுக் கோட்பாடு என்பன அவை. இக்கோட்பாடுகளை வலியுறுத்திக் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் எனத் திராவிட இயக்கத்தினர் பல வடிவங்களில் படைப்புகளைச் செய்தனர். இவ் வடிவங்களைப் புதுவைச்சிவம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

 வாணியம்பாடியில் பெரியார் 1939 இல் நாடகத் தலைமையேற்றுக் குசேலன் நாடகம் இரணியன் நாடகம் பற்றி தெரிவித்த கருதுகளை நினைவுகூர்ந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு புத்தர் பிறந்த நாளில் வைத்ததற்குக் காரணம் ஆங்கிலேயர் கேக் வெட்டுவது போல் நாங்கள் பிள்ளையார் உடைக்கிறோம் என்றதை நினைவுகூர்ந்தார். இனிக் கோயில்களில் நுழையும் உரிமைப் போராட்டத்தை விட்டுவிட்டு கோயிலுக்குத் தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் போராட்டம் தேவை என்றார். மக்களை அறிவாளிகளாக மாற்றும் இடங்களை, வாய்ப்புகளைப் பெரியார் விரும்பினார். மூடர்களாக்கும் எவற்றையும் கண்டித்தார்.

 ஒருகாலத்தில் குழந்தைத் திருமணம் நடந்தது. ஒரு காலத்தில் நாற்பது வயதுவரை திருமணம் ஆகாத பெண்கள் சமூகத்தில் இருந்தனர். அலங்கா நல்லூர் சல்லிக்கட்டுக்குத் தடை என்றதும் கொதித்தெழுந்த தமிழக இளைஞர்கள் சேதுக்கால்வாய்த் தடைக்குக் கொதித்து எழாதது ஏன் என்று வினவினார். புதுவைச் சிவம் பெரியார் கொள்கைகளைத் தாங்கி எழுதியுள்ள படைப்புகளுள் சிலவற்றை எடுத்துரைத்தார்.

 பிற்பகல் அமர்வில் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமையில் மூவர் கட்டுரை படித்தனர். வே.ஆனைமுத்து அவர்கள் தம் தலைமையுரையில் தம் பெரியார் இயக்க இணைவு பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்தார். ஈழத்துச் சிவானந்த அடிகளின் திராவிடநாடு இதழ் வெளியீட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டினைக் குறிப்பிட்டார். இந்தி எதிர்ப்புப் போரில் 'இந்தி ஒழிக' என முதல் குரல் கொடுத்தவர் அவர் என்றார்.

 கர்ப்ப ஆட்சி என்ற தலைப்பில் பெரியார் இயற்றிய நூல் பற்றியும் அதற்கு எழுந்த எதிர்ப்பு, வரவேற்புப் பற்றியும் எடுத்துரைத்தார். புதுவைச் சிவத்தின் கோகிலராணி நாடகத்தில் உள்ள புராண எதிர்ப்புக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்தம் படைப்புகளின் சிறப்பினை நினைவுகூர்ந்தார். தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை, செயல்களை, ஊடங்களைத் தடை செய்யும் ஆட்சி அதிகாரம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் மனுநீதி, சுக்கிரநீதி உள்ளிட்ட ஐந்து நூல்களின் வழி வடிவமைக்கப்பட்டுள்ளதை அரங்கிற்கு விளக்கினார்.

 நிறைவுரையாகப் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள் அண்ணா
முதலானவர்கள் நாடகம் எழுதுவதற்கு முன்பே புதுவைச் சிவம் நாடகம் படைத்துள்ளார். அக்காலச் சூழலைத் திறனாய்வாளர்கள் மனத்தில் கொண்டு திறனாய வேண்டும். கவிதை, சிறுகதை, நாடகத்துறையில் அவரின் பங்களிப்பு தமிழகத்திற்குச் சரியாக அறிமுகம் ஆகாமல் உள்ளது. அவற்றை அறிமுகம் செய்யவேண்டும் என்றார். பல்வேறு செய்திகளை மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் எடுத்துரைத்துப் புதிய திறனாய்வுச் சிந்தனைகளை அரங்கில் எடுத்துரைத்தார். உருசிய நாட்டுக் கவிஞர் மாயாகாவ்சுகி போல் இவர் தென்னாட்டு மாயாகாவ்சுகி என்று சிவத்தைப் புகழ்ந்தார். புதுவைச் சிவத்தின் படைப்புகள் மாணவர்களுக்கு அறிமுகமான ஒரு நல்ல கருத்தரங்காக இது அமைந்திருந்தது.

 வே.ஆனைமுத்து அவர்களின் பேச்சில் நான் வெளியிட்டுள்ள பொன்னி தொர்பான நூல்கள், பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வினை நினைவு கூர்ந்தார். அவருக்கு என் நன்றி.என் முனைவர் பட்ட ஆய்வில் புதுவைச்சிவம் பற்றி விரிவாக 1996 இல் எழுதியுள்ளதும் 16.08.1995 இல் புதுவைச் சிவம் வாழ்வும் படைப்புகளும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை படித்துள்ளதும் 02.11.2007 இல் திண்ணை இணையதள இதழில் மறுமலர்ச்சிக் கவிஞர் புதுவைச்சிவம் என எழுதியுள்ளதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கு

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் புதுவை இலக்கியப் பொழில் இலக்கிய மன்றமும் இணைந்து கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இன்று 24.03.2008 முற்பகல் 10 மணிக்கு நடத்துகின்றன.

முனைவர் அ.அறிவுநம்பி வரவேற்க, முனைவர் இரா. திருமுருகனார் தலைமை தாங்குகிறார். தோப்பூர் திருவேங்கடம் தொடக்கவுரையும், முனைவர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர். தோழர் வே.ஆனைமுத்து திரு. ச. லோகநாதன், முனைவர் சி.இ.மறைமலை (நிறைவுரை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர்.

கவிஞர் புதுவைச்சிவம் பற்றி அறிய திண்ணையில் வெளிவந்த என் கட்டுரையைக் காணலாம்.

ஞாயிறு, 23 மார்ச், 2008

புதுச்சேரியில் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. 5

 புதுச்சேரித் தனித்தமிழ் இலக்கியக்கழகமும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவை நடத்தின. 23.03.2008 காலை 10.30 மணிக்குப் புதுச்சேரி அன்னை மீட்பர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சீனு.அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

 புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் 'பாவாணர் ஆய்வில் சொல்வளச் சுரங்கம்' என்னும் தலைப்பில் அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார். பாவாணரின் சொலாய்வுச் சிறப்புகளை இரண்டு மணி நேரம் எடுத்துரைத்தார். அவையோர் மகிழ்ந்தனர். தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரியில் வாழும் அறிஞர் பெருமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 21 மார்ச், 2008

புதுச்சேரியில் அயல்நாட்டு அறிஞர்களின் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரி உளவியல் சங்கத்தின் சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் 21.03.2008 மாலைஆறு மணிக்கு அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் பாஞ்.இராமலிங்கம் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி எடுத்துரைக்க உள்ளார். முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

செர்மணி செம்ணிட்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பீட்டர் செடில்மேயர், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

முனைவர் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

அனைவரையும் புதுச்சேரி உளவியல் சங்கம் அழைக்கிறது.

ஞாயிறு, 9 மார்ச், 2008

புலவர் இ.திருநாவலன் வருகை...

புலவர் இ.திருநாவலனார் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற புலவர். கடற்கரை ஊரான புதுக்குப்பத்தில் பிறந்தவர் (28.06.1940). பல்வேறு அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிபவர். புதுச்சேரியில் தமிழாசிரியர்களுக்கு மதிப்புக் கூடுவதற்குப் பல்வேறு ஆக்கப் பணிகள் செய்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர்கள்.

தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் பல பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்து நன் மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமகனார். புதுவைப்பல்கலைக்கழகத்தில் யான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது என் அச்சக ஆற்றுப்படை என்னும் நூல் வெளியிட அழைக்கப்பெற்று, ஆசிரியர் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாநோன்பிருந்ததால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. அவர் வரவில்லை என்றாலும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்னும் அன்பர் வழியாக எனக்குச் சிறப்புச் செய்து அழகு பார்த்தவர். வாழ்த்துப்பா எழுதி அனுப்பியவர்.

1992 இல் ஏற்பட்ட தொடர்பு வளர்பிறை போல் வளர்ந்தது. புதுச்சேரியில் அரசுப்பணிக்கு வந்தநாள் முதல் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் அவர்கள் இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எங்களை மகிழ்வித்தார்கள். அவர்களின் வருகை எங்கள் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தருகிறது. புலவர் பெருமானைப் போற்றி இடப்படும் பதிவு இஃது.

செயங்கொண்டம் பேருந்துநிலையத்தில் கண்ட அதிசயம்...

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் பேரூராட்சியாக உள்ள ஊர். பள்ளிகள்,கல்லூரி, நீதிமன்றம்,மருத்துவமனை,வங்கிகள்,பத்திரப்பதிவு அலுவலகம்,வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எனப் பல அரசு அலுவலகங்கள் உள்ள ஊர்.செயங்கொண்டத்தில் நிலக்கரி நிறுவனம் ஏற்பட உள்ளது.பின்தங்கிய பகுதியான இங்கு அரசு கல்லூரிகள்,தொழில்நுட்பப் பள்ளிகள்,பொறியியல் கல்லூரிகள் என எதுவும் இல்லை.இங்குள்ள மக்கள் 100 கல் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி,40 கல் தொலைவில் உள்ள குடந்தை,சிதம்பரம் சென்று கல்வி கற்கும் அவலநிலை.உடையார்பாளையம் வேலாயுதம்,செகதாம்பாள் வேலாயுதம்,தமிழ்மறவர் பொன்னம்பலனார்,சுண்ணாம்புக்குழி கோ.தியாகராசன், ஆ.கோ.இராகவன், க.சொ.கணேசன், முதலான திராவிட இயக்க முன்னோடிகள் தோன்றிய பகுதி.முனைவர் பொற்கோ,முனைவர் சோ.ந.கந்தசாமி,செ.வை.சண்முகம்,மருதூர் இளங்கண்ணன் போன்ற சான்றோர்கள் தோன்றிய பகுதி.

அனைத்து நிலையிலும் கண்டுகொள்ளப்படாத,புறக்கணிக்கப்பட்டுள்ள இவ்வூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாதபடிபேருந்துநிலையம்உள்ளது. கழிவறைக்குச் செல்ல விரும்புவோர் நீண்ட தூரம் நடக்கவேண்டும். இரவுநேரம்பெண்கள் செல்ல அஞ்சுகின்றனர்.வயதுமுதிர்ந்தவர்கள்,தொலைதூரம் பயணம் செய்தவர்கள் ஓய்வெடுக்க வசதி இல்லை.

பேருந்து நிலையம் பயணிகளுக்கு என்று இல்லாமல் கடைக்காரர்கள் கடை வைக்கும் இடமாக உள்ளமை வேதனை தரும் ஒன்றாகும்.அனைத்து இடங்களையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளமையால் பயணிகள் பாடு திண்டாட்டம்.மழைக்காலம் என்றால் பயணிகள் நனைந்துகொண்டுதான் நிற்கவேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் பலர் இருந்தாலும் இந்த அவலநிலையை யார் மாற்றுவது?பேருந்து நிலையங்களில் புத்தகக்கடை வைக்கப்படும் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் இப்பேருந்து நிலையத்தை மக்களுக்கு உரியதாக மாற்றுவாரா?

புதன், 5 மார்ச், 2008

பதிற்றுப்பத்து அறிமுகமும் பாடிய புலவர்களும்

சேர அரசர்கள் பதின்மரைப் பற்றி அறிவதற்குப் பெரிதும் துணைசெய்யும் நூல் பதிற்றுப்பத்து ஆகும்.ஒவ்வொரு அரசரைப் பற்றியும் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் கொண்டு இந்நூல் விளங்கிப் பதிற்றுப்பத்து என்னும் பெயரினைப் பெற்றது.எனினும் முதற் பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.இப்பொழு எட்டுப் பத்துகளில் அமைந்த எண்பது பாடல்களே கிடைக்கின்றன.இந்நூலைத் தொகுத்தவர்,தொகுப்பித்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலிலும் வரும் சிறப்புமிக்க தொடரை அப்பாடலின் தலைப்பாக்கி வழங்கியுள்ளார். புண்ணுமிழ் குருதி,ஏறா ஏணி, சுடர்வீ வேங்கை, புலாம்பாசறை,கமழ்குரல் துழாய் என்னும் தலைப்புகள் எண்ணி இன்புறத்தக்கன.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடல் அமைந்த துறை,அதன் இசைத்தன்மை குறிப்பிடும் வண்ணம்,தூக்கு,தலைப்பு ஆகியன தரப்பட்டுள்ளன.ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் அமைப்பு உள்ளது.அப்பதிகத்தில் பாடப்பெற்றுள்ள அரசன்,பாடியபுலவர்,அப் பத்துப் பாடல்களின் தலைப்புகள்,பாடியமைக்காகப் புலவர் பெற்ற பரிசில்,அரசனின் காலம் முதலிய குறிப்புகள் காணப்படுகின்றன.பாடல்கள் யாவும் செறிவும் திட்பமும்,நுட்பமும் கொண்டவை.சேரநாட்டு வரலாற்றை அறிவதற்கு இந்நூல் பெரிதும் உதவுகின்றது.

(பட்டியலின் விவரம் முறையே,பத்து,புலவர்,அரசன், பரிசு,ஆண்டு)
2ஆம்பத்து, குமட்டூர்கண்ணனார், இமயவரம்பன்நெடுஞ்சரலாதன், 500 ஊர்கள்,58ஆண்டு

3ஆம்பத்து, பாலைக்கௌதமனார், பல்யானைச்செல்கெழுகுட்டுவன்,பத்துவேள்வி,25ஆண்டு

4ஆம்பத்து,காப்பியாற்றுக்காப்பியனார்,களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,நாற்பத்து
நூறாயிரம்பொன்,25ஆண்டு

5ஆம்பத்து, பரணர், நெடுஞ்சேரலாதன்மகன் செங்குட்டுவன் உம்பற்காட்டுவருவாய்,தன்மகன் 55ஆண்டு

6ஆம்பத்து, காக்கைப்பாடினியார், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், நூறாயிரம்காணம் பொற்காசு, 88ஆண்டு

7ஆம்பத்து,கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதன்,நூறாயிரம்காணம்பொன்,நன்றா என்னும் குன்றேறி நின்று காணும் ஊர்கள்,22ஆண்டு

8ஆம்பத்து,அரிசில்கிழார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, ஒன்பது நூறாயிரம்பொன்,அரசு. 17ஆண்டு

9ஆம்பத்து,பெருங்குன்றூர் கிழார், இளஞ்சேரல் இரும்பொறை, முப்பத்தோராயிரம்பொன்,ஊர், 16ஆண்டு


புண்ணுமிழ் குருதி என்னும் தலைப்பில் அமைந்த பாடல்

பாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த போரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண்கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரா஢ நறவின் ஆர மார்பின்
போர்அடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி
பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய போரிசை இமயம்
தென்னம் குமரியொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. 25

பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்

பாடலின் பொருள்

அலைகள் மலைபோல் எழுந்து,வெண்மையான சிறுதுளிகளாக உடையும்படி காற்று வீசுகிறது.இத்தகு நிறைந்த நீரையுடைய கரிய கடல்பரப்பினுள் சென்று,அவுணர்கள் கூடிக்காவல் செய்யும் சூரபத்மனின் மாமரத்தை வெட்டிய முருகபெருமான் பிணிமுகம் என்னும் யானைமீது ஏறி வந்தான்.

அதனைப்போலும்(சேரமன்னன்) பகைவரின் மார்பைப்பிளந்து,அக்குருதி பெருக்கெடுத்து ஓடி,நீர்நிலையில் உள்ள நீலநிறம் குங்குமநிறமாக மாறியது.பகைவர்களின் அரண்களை அழித்தாய்.பகைவர்களின் கடப்பமரத்தை வெட்டி அழிக்கும்படி வீரரை ஏவியவன்.அம்மரத்தில் முரசம் செய்தாய்.இவ்வாறு போர்செய்யும் ஆற்றலும்,மாலை அணிந்த மார்பும் அறப்போர் செய்யும் படையையும் உடைய சேரலாதனே!

முருக்கமரங்கள் நிறைந்த மலையில் இரவில் உறங்கும் கவரிமான்கள் பகலில் தாம் மேய்ந்த நரந்தம் புல்லையும் அவை வளர்ந்துள்ள பரந்துவிளங்கும் அருவிகளையும் கனவிலே கண்டு மகிழ்கின்றன.இவ்வியல்பு கொண்ட ஆரியர்கள் நெருங்கி வாழும் புகழ்கொண்ட வடபுலத்து இமயமலை,தெற்கில் குமரி எனும் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் மன்னர்கள் செருக்குற்றுத் தம்மை உயர்த்திக்கூறிக்கொண்டால் அவர்களின் வீரம் அழியும்படி போரிட்டு வென்றாய்.

மார்பில் பசியமாலை அணிந்து பொன்னரி மாலை அணிந்த யானையின் பிடரியில் ஏறியிருக்கும் நின் புகழைக்கண்டு வியந்தோம்!நீ வாழ்க.

இப்பாட்டில் சேரலாதன் போரில் பகைவர்களின் மார்பைப் பிளந்தபோது அப்புண்களிலிருந்து சிவந்த குருதி வெள்ளமாகப் பெருகியது.அதனால் நீர்க்கழியில் நீல நிறம் மாறுபட்டு குங்கமக் கலவையானது.புண்ணிலிருந்து குருதி மிகுதியாக வெளிப்பட்டதைச் சிறப்பித்து இப்பாடல் பாடுவதால் புண்ணுமிழ் குருதி என்னும் பெயர் பொருந்துகிறது.

மேற்கண்ட பாடலில்வரும் சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான்.இவன் இமயம் முதல் குமரி வரை அரசாண்டவன்.இவனுக்கு இரு மனைவியர்.சோழர்குடியில் வந்த நற்சோணை ஒருத்தி.செங்குட்டுவன்,இளங்கோவடிகளை ஈன்றவள்.மற்றொருத்தி வேளிர்குடியில் வேளாவிக்கோமான் பதுமன் என்பவளின் மகள்.இவள் வழியாக களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் என்னும் இரு ஆண்மக்கள் தோன்றினர்(காண்க : பதி.4,6ஆம் பத்து)

இமயவரம்பன் தன்காலத்தில் கடம்பர்கள் என்னும் பிரிவினர் தம் கடல் எல்லையில் கலங்களை மடக்கிக் கடல்கொள்ளையில் ஈடுபட்டபொழுது அவர்களை அடக்கி,அழித்து அவர்களின் காவல்மரத்தை வெட்டுவித்து அதில் முரசு செய்து முழக்கினான்(அகம்.127,347)

இமயவரம்பன் தன்னைப்புகழ்ந்து பாடிய குமட்டூர்க்கண்ணனார்க்குத் தமக்குரிமையான உம்பர்காட்டில் உள்ள வளம்மிக்க ஐந்நூறு ஊர்களையும் வரிநீக்கி வழங்கி,தென்னாட்டு வருவாயில் பாகம்பெறும் உரிமையை முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளான் என்பதை அறியும்பொழுது அவனின் கொடையுள்ளமும் செல்வ வளமும் புலனாகின்றது.

சனி, 1 மார்ச், 2008

அகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றிய செய்திகளை விரிவாகத் தரும் நூல் அகநானூறு ஆகும்.அகம்+நானூறு என இதனைப் பிரித்துப் பார்க்கலாம். அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது என்ற அடிப்படையில் இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது. இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நெடுந்தொகை எனவும் இந்நூலை அழைப்பர். இந்நூல் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்னும் புலவர் பெருமானால் தொகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுக்கச் செய்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்னும் பேரரசன் ஆவான்.

இந்நூல் முப்பிரிவாகப்பகுக்கப்பட்டுள்ளது.

1.களிற்றியானை நிரை (1-120 பாடல்கள்)
2.மணிமிடைப்பவளம் (121-300 பாடல்கள்)
3.நித்திலக்கோவை (301-400 பாடல்கள்)

அகநானூற்றைத் தொகுத்த புலவர் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி தொகுத்துள்ளார்.

1,3,5,7,9,11 போன்ற ஒற்றைப்படையில் அமையும் பாடல்கள் பாலைத்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 200பாடல்கள்),2,8,12,18 என 2,8 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 80 பாடல்கள்),6,16,26,36 என ஆறாம் எண்ணுடைய பாடல்கள் மருதத் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்),4,14,24 என நான்காம் எண்ணுடைய பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகவும்(மொத்தம் 40பாடல்கள்), 10,20,30 எனவரும் பத்தாம் எண்ணுடைய பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்) உள்ளன.

அகநானூறு நூலை முதன்முதல் 1920 இல் பதிப்பித்தவர் கம்பர் விலாசம் வே.இராசகோபால் ஐயங்கார் ஆவார். இந்நூலுக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் உரை வரைந்து வெளியிட்டுள்ளனர். பிற்காலத்தில் பலர் உரை வரைந்துள்ளனர்.

தமிழர்தம் பண்டைய திருமண முறை இந்நூலில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது (86,136). குடவோலை முறையில் நடந்த தேர்தல் பற்றிய குறிப்பையும் (77) இந்நூல் தருகின்றது. இலக்கியச் சுவையை மிகுதியாகக் கொண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற குறிப்புப் பொருளுடைய பாடல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது.

அகப்பொருள் பற்றிய செய்திகளை இந்நூல் தருவதுடன் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தருகின்றது. வடநாட்டை ஆண்ட மோரியர் (69,251,281), நந்தர்(251,265), வடுகர் (107,213,253, 281,295,375,381) பற்றிய செய்திகளும் தமிழ்நாட்டை ஆண்ட சேரர் (55,127,149,209,347), சோழர் (60,93,96,123,137,201,213 ,336,356,369,375,385), பாண்டியர் (27,201) பற்றிய குறிப்புகளும் அத்தி(44,376,396), கங்கன்(44), கடலன்(81), கட்டி(44,226), காரி (35,209), கோசர்(15,90,113,196, 205,216,251,262), தித்தன்(152,226), நன்னன் (15,44,142,152,173,199,208, 258,349,356,392,396), பாரி(78,303), பண்ணன்(54,177),பிட்டன் (77,143), புல்லி(61,83,209, 295,311,359,393) போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய குறிப்புகளையும் வரலாற்றையும் அகநானூறு அறிவிக்கின்றது.

பண்டைத் திருமணம் பற்றிய பாடல்கள் :

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடி,
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. (86,அகம்.)

கூற்று :வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.

புலவர் - நல்லாவூர் கிழார்

(பொருள்)

இருள் நீங்கிய விடியல்பொழுழுதில் திங்களை உரோகிணி விண்மீன் சேரும் நல்ல நேரத்தில் உளுத்தம் பருப்பிட்டுச் செய்யப்பெற்ற உணவினை(களி) உறவினர்களுக்கு வழங்கினர். இதனால் ஆரவாரம் இடைவிடாமல் கேட்டது.தி ருமண வீட்டில் புதுமணல் பரப்பி இருந்தனர். விளக்கேற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர்.தலையில் குடம் ஏந்தியவரும், அகன்ற வாயுடைய மண்பாண்டங்கள் கொண்டவரும், திருமணத்தை நடத்திவைக்கும் முதிய மகளிரும் முன், பின்னாகத் தரவேண்டியவற்றை எடுத்து வழங்கித் திருமணச் சடங்குகளைச் செய்தனர்.

மகனைப் பெற்ற குடும்பம் சார்ந்த மகளிர் ஒன்று கூடி'கற்பினின்று வழுவாமல் நல்ல உதவிகளைச் செய்து நின்னை மனைவியாகப் பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆவாய்' என வாழ்த்தினர். மங்கல நீருடன் கலந்த பூக்கள், நெல் அவளின் கூந்தலில் பொருந்தும்படி வாழ்த்தினர். சுற்றத்தார் தலைவியை நோக்கி, 'நீ பெரிய மனை வாழ்க்கைக்கு உரியவளாகுக என வாழ்த்தினர். அவளை என்னிடம் கூட்டி வைத்தனர்.

தனி அறையில் புணர்ச்சிக்காகக் கூடிய அவள் நாணத்தால் தலை குணிந்து புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்புடன் அவள் முகத்தை மூடியிருந்த புடவையைச் சிறிது நீக்கினேன். அவளின் பெண்மை உணர்வு மேலிட பெருமூச்செறிந்தாள். அவளிடம் உன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்வாயாக என வினவினேன். பல்வேறு அழகுகளும் பொருந்திய அவள் மகிழ்ந்தவளாகி, முகத்தைத் தாழ்த்தி வெட்கத்தால் தலைகுனிந்தாள். (பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பிய தலைவனைத் தோழி வாயில் மறுத்தாள். அதுபொழுது தலைவன், திருமண முதல்நாள் இரவில் இவ்வாறு தலைவி நடந்துகொண்டாள் என்றான்).


மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.(136, அகம்.)

கூற்று : உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

திணை : மருதம்
புலவர் : விற்றூற்று மூதெயினனார்

(பொருள்)தலைவி ஊடல்கொண்டிருந்தபொழுது தான் குற்றமற்றவன் என்பதைக் கூறித் தலைவன் தலைவியின் ஊடலைப் போக்க நினைத்தான்.தலைவி ஊடல் நீங்கவில்லை. தலைவி கேட்கும்படி தன் நெஞ்சுக்குச் சொல்லியது. 'என் நெஞ்சமே! நெய் மிக்க உணவை உறவினர் உண்ணுமாறு செய்து,பறவைகளின் நிமித்தம் நன்றாக அமைய,வானம் நல்ல ஒளியுடன் விளங்க, திங்கள் உரோகினியுடன் சேரும் நாளில் திருமண இல்லத்தை அழகுப்படுத்தியிருந்தனர். இறையை வழிபட்டனர். மணமுழவுடன் மங்கல முரசுகள் ஒலித்தன.தலைவிக்கு மகளிர் மணநீர் ஆட்டினர்.தலைவியின் அழகை இமைமூடாமல் பார்த்து மகிழ்ந்தனர்.

அறுகம்புல்லின் கிழங்குடன் அமைந்த அரும்புகளுடன் சேரக்கட்டிய வெண்மையான காப்பு நூலை அணிவித்தனர். தூய திருமணப் புடைவையால் அழகுப்படுத்தினர். மழைபெய்தது போல் விளங்கும் தூய பந்தரில் இவளுக்கு உண்டான வியர்வையை நீக்கினர்.

இவளை நன்கொடையாக வழங்கிய முதல்நாள் இரவில் என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுவதும் போர்த்தியதால் வியர்வைத் துளிகள் உடலில் தென்பட்டன. அவ்வியர்வைத் துளிகளை நீக்க காற்று வருவதற்கு வாய்ப்பாக ஆடையைத் திறவாய் எனச் சொல்லி அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுடன் ஆடையைப் பற்றி இழுத்ததால் உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போன்று அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையிலிருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். நாணமுற்றாள்.

தன் இருண்ட கூந்தலையே போர்வையாகக் கொண்டு மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து விரைவாக நாணங்கொண்டாள். வணங்கினாள். (முன் நிகழ்ந்தது இது). அத்தகையவள் நாம் பலமுறை எடுத்துச்சொல்லியும் ஊடல் நீங்காதவளாய் ஊடல் கொள்கின்றாளே! இனி இவள் நமக்கு என்ன உறவினள் எனத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது.

பண்டைத்தமிழரின் திருமணமுறைகளை விளக்கும் அரிய பாடல்கள் இவை.

(அகநானூற்றுப் புலவர்களின் பட்டியலைப் பின்பு இணைப்பேன்)

ஐங்குறுநூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

ஐங்குறுநூறு என்னும் நூல் சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. மூன்று அடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலத்தில் அமையும் ஐந்து ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்களைக் கொண்டது.

ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் என்ற வகையில் பாடல்களின் எண்ணிக்கை ஐந்நூறாகும். ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டு, அப் பத்துப்பாடலும் கருத்தாழம் மிக்க ஒரு தொடரால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது. இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார். எனவே கடவுள் வாழ்த்துடன் 501 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் 129,130 ஆம் பாடல்கள் கிடைக்கவில்லை (ஒளவை.பதி.).

மருதத் திணையை ஓரம்போகியாரும் நெய்தல் திணையை அம்மூவனாரும் குறிஞ்சித் திணையைக் கபிலரும் பாலைத்திணையை ஓதலாந்தையாரும் முல்லைத் திணையைப் பேயனாரும் பாடியுள்ளனர். இதனை,

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருது குறிஞ்சி கபிலர் -கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்னும் பழம்பாடல் குறிப்பிடுகின்றது.

ஐங்குறுநூற்றிணைத் தொகுப்பித்தவன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனாவான். தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தி இந்நூலுள் உள்ளது. உ.வே.சாமிநாதர் 1903 இல் ஐங்குறுநூற்றை முதன் முதல் தமிழுலகிற்குப் பதிப்பித்து வழங்கினார். பின்னர் ஒளவை துரைசாமியார் ஐங்குறுநூற்றிற்கு அரிய உரை வரைந்து பதிப்பித்துள்ளார் (1957,58). இவ்வுரை அறிஞர்களால் போற்றப்படுவது. பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் ஐங்குறு நூற்றுக்கு உரைவரைந்துள்ளார். ஈழத்திலும் இந்நூல் உரை வரைந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.

என் உள்ளங் கவர்ந்த ஐங்குறுநூற்றுப் பாடல்:

'அன்னாய் வாழிவேண் டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்(டு)
உவலைக் கூவற் கீழ்
மானுண் டெஞ்சிய கலிழி நீரே' (ஐங்குறுநூறு, 203)

(விளக்கம்) தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்தி மீண்ட தலைவியிடம் தோழி, தலைவன் நாட்டின் வளம் பற்றி கேட்டபொழுது,'அன்னையே யான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக! நம் தலைவரது நாட்டிலுள்ள தழை மூடிய கிணற்றிலுள்ள மான்குடித்து எஞ்சிய கலங்கல் நீர் நம் படப்பையில் (தோட்டம்) உள்ள தேன் கலக்கப்பட்ட பாலின் இனிமையை விட இனிது' என்றாள்.

புறநானூற்று உண்மைகள்

தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்யும் நூல் புறநானூறு ஆகும்.புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக்கொண்ட நூல் இஃது.எனினும் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை(267,268).பதினான்கு பாடல்களை இயற்றியுள்ள புலவர்களின் பெயர் தெரியவில்லை(244,256,257,263,297,307,323,327,328,333,339,340,355,361)(2+14+=16).சில பாடல்கள் சிதைந்துகாணப்படுகின்றன.ஏறத்தாழ 18o புலவர்களின் பெயர் இந்நூலின்வழி அறியமுடிகிறது(கழகம்).ஒளவை துரைசாமியார் 155 புலவர்களின் வரலாற்றுக்குறிப்புகளை விளக்கியுள்ளார்.

புறநானூற்றில் அமைந்துள்ள பாடல்கள் சில ஒழுங்குமுறையில் உள்ளன.

முதல்பாடல் கடவுள் வாழ்த்து.
2-86 மூவேந்தர்கள் பற்றியன.
87-165 வள்ளல்கள் பற்றியன.
166-181 படைத்தலைவர்கள் பற்றியன.
182-195அறிவுரைப்பாடல்கள்;
196-256 துன்பியல் செய்திகள் இடம்பெறுவன.
257-400 வரையுள்ள பாடல்கள் புறத்திணைகளானஅமைந்துள்ளன.

வெட்சி(257-270),
வஞ்சி,
உழிஞை(271-272),
தும்பை(273-310),
வாகை(311-335),
காஞ்சி(336-366),
பாடாண்(367-400)

எனும் திணை சார்ந்து பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.(நன்றி:சங்க கால மன்னர்களின் காலநிலை,உ.த.நி.)

புறநானூற்றில் புலவர்களின் பெயர் 'அர்' ஈற்றிலும்,அரசர்களின் பெயர் 'அன்' ஈற்றிலும் குறிக்கப்பட்டுள்ளன.
புறநானூற்றில் பண்டைத்தமிழரின் போர்,அறம்,கொடை,மானம்,வீரம் முதலிய இயல்புகள் பதிவாகியுள்ளன.பழந்தமிழ்நூல்களின் வழி அரசன்,புலவர் பற்றிய தெளிந்த வரலாற்றைத் துல்லியமாகக் கணிக்க இயலாமல் இடர்ப்படும் தன்மையை இந்நூலிலும் காண்கிறோம். புறநானூற்றுப் புலவர்களின் பெயர்ப்பட்டியல் அடுத்த பதிவுகளில் உள்ளிடுவேன்.