நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 மார்ச், 2026

கலைமாமணி முனைவர் கா. இராசமாணிக்கம்

 

முனைவர் கா. இராசமாணிக்கம் 

[முனைவர் கா. இராசமாணிக்கம் புதுச்சேரியில் வாழ்ந்துவரும் இசை, நாட்டிய அறிஞர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக வாய்ப்பாட்டினைப் பயின்றவர். இளங்கலை – நாட்டியம் பயின்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கியங்களை நாட்டிய வடிவில் வழங்கிப் புகழ்பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்கு இசை, நாட்டியம் பயிற்றுவித்து வருபவர்.] 

கா. இராசமாணிக்கம் அவர்கள் 19. 07. 1963 இல் புதுச்சேரியில் உளைவாய்க்கால் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் காத்தவராயன் – பச்சையம்மாள் என்பனவாகும். வில்லியனூர் விவேகானந்தா பள்ளியில் இளமைக் கல்வியை நிறைவு செய்தபின்னர். முத்தரையர்பாளையம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பினைப் பயின்றவர். 

முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் இசைத்துறையிலும் நாட்டியத்துறையிலும் பேரறிவுபெற்ற பெருந்தகையாளர். இவரும் இவரின் குடும்பத்தாரும் இசைத்துறைக்கும் நாட்டியத்துறைக்கும் ஆற்றிவரும் பங்கு சிறப்பிற்குரியனவாகும். முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை மாமணி என்னும் பட்ட வகுப்பில் நான்கு ஆண்டுகள் பயின்று வாய்ப்பாட்டில் புலமைபெற்றவர். கலைக்காவிரி இசைக்கல்லூரியில் பயின்று நாட்டியத்தில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் பொருளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மேடைகளில் பாடிவரும் இவர், தஞ்சாவூர் கே. பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் நாட்டியம் பயின்ற சீடர் ஆவார். 

1992 ஆம் ஆண்டு முதல் சங்கீத சலங்கை நாட்டியாலயா – கலையருவி என்னும் இசை நாட்டியப் பள்ளியை நடத்திப் பல்லாயிரம் மாணவர்களுக்கு, இசை நாட்டியத்தைப் பயிற்றுவித்து வருபவர். ஆதித்யா வித்யாசரமம் பள்ளியில் கடந்த இருபது ஆண்டுகளாக இசைத்துறை இயக்குநராக இருந்து பல மாணவர்களுக்கு இசையைப் பயிற்றுவித்து வருபவர். மாணவர்கள் நாட்டியக்கலையையும்  இவரிடம் பயின்று வருகின்றனர். 

கா. இராசமாணிக்கம் பாடிய ஒலிவட்டுகள் 

  1. இது நல்ல தருணம்
  2. மணல்மேட்டு மழலைகள்
  3. நாட்டியப் பாடல்கள்
  4. பாரதியார் பாரதிதாசன் பாடல்கள் 

நாட்டியப்பணி 

  1. அருங்கலைச்செல்வி ஆயி
  2. வளம் காண வாருங்கள்
  3. நிலமகள் நலம் காப்பாள்
  4. இராமாயணம்(சீதா கல்யாணம்)
  5. வீரத்தாய் (பாரதிதாசன்)
  6. மகுடத்தின் மணிகள்
  7. ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது.
  8. பாரதி போற்றுதும்
  9. புரட்சிக்கவி
  10. கொடி முல்லை(வாணிதாசன்) 

ஆவணப்படங்களில் பாடியமை 

  1. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்
  2. விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் 

அயல்நாட்டுப் பயணம் 

பிரான்சு, செர்மனி, சுவிசர்லாந்து, டென்மார்க்கு, மலேசியா, ரியூனியன், கம்போடியா முதலான நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். 

சங்கீத நாடக அகாதெமி, தென்னகப் பண்பாட்டு மையம் முதலிய நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து கலைத்தொண்டு செய்துள்ளார். 

இல்வாழ்க்கை 

கா. இராசமாணிக்கம் அவர்கள் இராஜேஸ்வரி அவர்களை 1989 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரும் மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு இராஜ்குமார், இரஞ்சனி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். அனைவரும் இசைக்கலையை முறைப்படி பயின்று, பரப்பி வருகின்றனர். இக் கலைக்குடும்பம் தமிழ்போல் தழைத்து இனிது புகழ்பெறுக.

ஞாயிறு, 8 மார்ச், 2026

தொல்காப்பிய ஆய்வறிஞர் சந்திரா கிருட்டிணன்

 

பேராசிரியர் சந்திரா கிருட்டிணன்

[முனைவர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பேராசிரியராக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தொல்காப்பியம் குறித்த ஆய்வினை நிறைவுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டு வருபவர். பன்னூலாசிரியர். பேராசிரியர் சென்னியப்பனார் அவர்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்] 

    கோவை மாநகரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் தொல்காப்பிய ஆய்வு உள்ளமும் தமிழ் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியும் கொண்ட பெருந்தகையாளர் ஆவார். மாணவர்களின் உள்ளங்கவர்ந்த பேராசிரியரான இவர்தம் ஆய்வுப்புலம் தொல்காப்பியம் சார்ந்தது ஆகும்.  31 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு உடையவர். தொல்காப்பியச் செய்திகளை ஆய்வுகள் வழியாகவும் மொழிபெயர்ப்புகள் வழியாகவும் நாடக வடிவிலும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும்பணியை விருப்பமுடன் செய்து வருபவர். பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்களின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரம்  ஊரில் வாழ்ந்த அ. சிவதாணு பிள்ளை - சீ மீனாட்சி ஆகியோரின் மகளாக 27. 07. 1960 இல் பிறந்தவர். தாத்தா வாத்தியார் அம்பலவாணர் பிள்ளை ஆச்சி வள்ளியம்மாள் ஆகியோரின் வளர்ப்பில் வளர்ந்தவர். 1 முதல் 5 வகுப்பு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதி புரம்,  அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றவர். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கணபதிபுரம் அ. வி தே. உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பத்தாம் வகுப்பினை விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். 11 ஆம் வகுப்பினைச் சத்தியமங்கலம்  . ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். இலக்கிய இளவல் (பி.லிட்), முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளைப் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். கல்வியியல் இளையர், நூலகவியல் இளையர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று பெற்றவர். 

    சந்திரா கிருட்டிணன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு தொல்காப்பியம் செய்யுளியலும் யாப்பருங்கல விருத்தியும் ஒப்பாய்வு என்பதாகும்.இவர்தம் நெறியாளர் முனைவர் உமாபதி ஆவார். 

    1976 இல் முதலாம் ஆண்டு படிக்கின்ற பொழுது விஞ்ஞானச் சுடரில் முதல் கட்டுரை வெளிவந்தது. செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், செங்கரும்பு, தமிழ்நேயம், பூம்புனல் முதலான இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். சமயத்தமிழ் இதழில் 7 ஆண்டுகளாகக் கட்டுரை எழுதி வருகிறார். எழுத்துலகப் பயணத்தில் இது 50 ஆவது ஆண்டு ஆகும். 

    நெதர்லாந்து சூரியத் தமிழ் தொலைக்காட்சியில் தொல்காப்பியத்தைத் தொடர்ந்து இணையம் வழியாக நடத்தித், தேர்வு வைத்துத்  தொல்காப்பியத் தேனீ என்ற பட்டம் வழங்கிய இவர்தம் தொல்காப்பியப் பணி போற்றுதலுக்கு உரியது. 

பணியனுபவம்: 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் 1989 முதல் 1993 வரை இமாகுலேட் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1993 முதல் 1995 வரை சபர்பன் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1995 முதல் 96 வரை நிர்மலா கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1996 முதல் 2007 வரை வி. எல். பி. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 2008 முதல் 2009 வரை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் பணியாற்றியவர். 2009 முதல் 2019 வரை கோவை அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

இல்வாழ்க்கை: 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் 05. 11. 1984 இல் பொறியாளர் க. ச. பாலகிருட்டிணன் அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

எழுதியுள்ள நூல்கள்:

1. கதிர் நோக்கும் கவின் மலர்

2. நகை என்னும் மெய்ப்பாடு

3. பன்முகப் பார்வைகள்

4. அனிதா கிருஷ்ணமூர்த்தி (கட்டுரை ஆசிரியர் வரிசை)

5. கவிஞர் செல்வமணி (கவிஞர் வரிசை)

6. நலம் தரும் நந்தி

7. சுகம் தரும் சுகப்பிரம்மர்

8. தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை

9. நிலை (புதினம்)

10. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

11. தொல்காப்பியம் உவமை இயல்

13. அருணோதயம் (புதினம்) 

ஆங்கில நூல்கள்: 

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருமதி அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியவை: 

1. தொல்காப்பியம்  - அகத்திணை இயல்

2. புறத்திணை இயல்

3. களவியல்

4. கற்பியல்

5. உவமவியல்

6. மெய்ப்பாட்டியல்

7. பொருளியல்

8. செய்யுளியல்

9. மரபியல் 

சமூகப் பணி: 

1.   நாட்டு நலப்பணித்திட்டச் செயல் அலுவலர்

2.   செஞ்சுருள் மன்ற அலுவலர்

3.   செஞ்சிலுவைச் சங்க அலுவலர்

4.   கோவை மாவட்ட பேரிடர் பயிற்சி அலுவலர் (ஓராண்டு) 

தொகுப்பாசிரியர்: 

1. தாவரக் களஞ்சியம்

2. கொங்கு நாட்டு மலைகள்

3. பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு உரைக்கோவை

(ஞாலம் நின் புகழே பேச வேண்டும்) 

பாடப் பகுதியாக வந்தவை:

1.   மாசுக் கட்டுப்பாடு.  கட்டுரை,  பாரதியார் பல்கலைக்கழகம்

2.   கதிர் நோக்கும் கவின் மலர்

கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடப் பகுதி

 3. சிறுகதை தொகுப்பில் வந்த சிறுகதை (பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில்      பாடப் பகுதியாக உள்ளது)

4. அருணோதயம் புதினம் வி எல் பி கல்லூரியில் பாடப் பகுதியாக   வைக்கப்பட்டுள்ளது

5.  பாரதியார் பல்கலைக்கழகம், முதுகலைத் திறந்தவெளிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சைவசித்தாந்தம் என்னும் பாடத்தினை இருவர் இணைந்து எழுதியுள்ளனர். 

உரையாசிரியர்: 

1.   கந்தசாமி சுவாமிகள் எழுதிய அன்னூர் தல புராணம். 

    கோவை செம்மொழி மாநாட்டில் பண்ணத்தி குறித்து கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். பணிநிறைவுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் ஆய்வுப்பணிகளிலும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்.






 

வியாழன், 5 மார்ச், 2026

பேராசிரியர் சு. திருஞானம்

 

பேராசிரியர் சு. திருஞானம் 

 [திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் இயற்பியல் பேராசிரியர் ஆவார். முசிரியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மிகச் சிறந்த சித்தமருத்துவ அறிஞர்; வர்மக்கலை அறிந்தவர்; இசையாய்வாளர். மூலிகை மருத்துவம் குறித்துப் பல நூல்களை எழுதியவர். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் தாள முழக்கியல் என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.] 

திருச்சிராப்பள்ளியில் யான் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியபொழுதில் (1993-1997) எனக்கு அறிமுகமானவர் பேராசிரியர் சு. திருஞானம் ஆவார். கொடுங்கூர் வறுமைப்பிடியில் நான் சிக்கியிருந்து, ஆய்வேடு எழுதப்பெற்றும் அதனைத் தட்டச்சிட்டு வழங்க இயலாமல் தத்தளித்தபொழுது என் ஆய்வேட்டை வடிவமைத்து, அச்சிட்டு அந்நாளில் தந்த பெருமை பேராசிரியர் சு. திருஞானம் ஐயாவுக்கும் அவர்களின் அருமைத் திருமகளார் தி. மதியரசி அவர்களுக்கும் உரியதாகும். 

நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வேடு அளித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ஒராண்டு இடைவெளியில் பத்துத் திங்கள் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் உதவியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது திருச்சிராப்பள்ளி, கலைஞர் கருணாநிதி நகரில் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் சிறப்புப் பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வேற்பாட்டைச் செய்தவர் பேராசிரியர் சு. திருஞானம் ஆவார். 

வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் இசையாய்வு சார்ந்த உரையால் அமையும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது யார்? என்று நினைந்தபொழுது தமிழ்த்தந்தி சிவலிங்கனார் அவர்கள் தலைமை தாங்கியதாக நினைவு வருகின்றது. திருச்சிராப்பள்ளி சார்ந்த அறிஞர்கள் பலர் அவ்வுரை கேட்க வந்திருந்தனர். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரைகேட்டேன். அப்பொழுதுதான் இயற்பியல் பேராசிரியராகிய சு. திருஞானம் அவர்களின் இசைத்துறைப் புலமையை அறிந்தேன். அவர்களுக்கு இசையின் மீது இருந்த ஈடுபாட்டால்தான் வீ. ப. கா. சுந்தரத்தின்  பழந்தமிழ் இலக்கியத்தில் தாள முழக்கியல்(1995) என்னும் நூலை வெளியிட்டிருந்தார்கள். ஒலியியல் துறையில் வல்லுநர் என்பதால் திருஞானம் ஐயாவுக்கு இசை குறித்த மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிவு இருந்ததை அன்பர்கள் வழியாக அறிந்துகொண்டேன். 

பேராசிரியர் திருஞானம் ஐயா அவர்கள் சித்த மருத்துவத்தில் வல்லவர் என்பதும், தம் பேராசிரியர் நண்பர்களுக்கும் பிற பொதுமக்களுக்கும் சித்தர் வழியில் மருந்துகளை உருவாக்கி, நோய்நீக்கும் பணியைச் செய்து வருவதையும் அவரிடம் மருந்து வாங்கி உண்டு, நலம்பெற்றவர்களையும் நான் நன்கு அறிவேன். 

காலச்சக்கரம் பலவாண்டுகள் உருண்டுகொண்டிருந்தது. யானும் பணியின் பொருட்டுப் பல ஊர்களில் வாழ நேர்ந்தது. எனினும் திருச்சிராப்பள்ளி அன்பர்கள் யாரையேனும் காண நேர்ந்தால் திருஞானம் ஐயாவின் நலம் வினவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் தி. அருட்செல்வி அவர்களைக் காணும்பொழுதும் தந்தையாரின் நலம் கேட்டு, மனம் நிறைவடைவேன். 

மு.இளங்கோவன், சு. திருஞானம், செ.குணாளன்(மலேசியா)

அண்மையில் திருச்சிராப்பள்ளிக்குத் தமிழகன் ஐயாவின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தபொழுது பேராசிரியர் சு. திருஞானம் ஐயா அவர்களை நேரில் கண்டு, நலம் அறிந்து மகிழ்ந்தேன். அவர்களின் சித்த மருத்துவப்பணி, தமிழ்ப்பணிகளை அறிந்து உவந்தேன். உலகத் தமிழர்களின் பார்வைக்கு நம் காலத்தில் வாழும் சித்த மருத்துவப் பேரறிஞர் ஒருவரின் தமிழ் வாழ்வை அறிமுகம் செய்துவைப்பதில் மகிழ்கின்றேன். 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் அறிவுலக வாழ்க்கை: 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நாட்டரசன்கோட்டையில் வாழ்ந்த சு. அம்மாளு, மா. சுப்பையா ஆகியோரின் அன்புமகனாக 09.11.1942 இல் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் பிறந்தவர். ஈச்சங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். அதன் பிறகு கோவிலூர் அரசு உயர்தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை திருவையாறு சீனிவாசராவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர்(1955-58). மன்னர் சரபோஜி கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் வகுப்பு - இயற்பியல் பிரிவில் பயின்றவர். முதுநிலை அறிவியல் படிப்பினைத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் பயின்றவர்(1963-1965). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் (M.Phil.) படிப்பினைப் படித்து, நிறைவுசெய்தவர். இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயங்களையும் பெற்றவர். 

பேராசிரியர் பணி 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் தஞ்சாவூர், திருபுட்பம் கல்லூரியில் 1965-66 இல் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்னர்த் திருச்சிராப்பள்ளி, பெரியார் அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் முதலான ஊர்களில் அமைந்துள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றி, நிறைவாக முசிரி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர்(1999-2001). தமிழகத்துக் கல்லூரிகளில் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். 

1986 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் பரம்பரை சித்த மருத்துவரிடம் முறையாகப் பயிற்சிபெற்று, இதுவரை தொடர்ந்து சித்த மருத்துவத்துறைக்குப் பங்களிப்பு நல்கிவருபவர். மருந்து செய்முறையிலும், நோய் நாடுவதிலும், நோய் முதல்நாடுவதிலும் அதுதணிக்கும் முறையினையும் நன்கு அறிந்த அறிஞர் இவர். 

இசைத்தமிழ் ஈடுபாடு 

1965 இல் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினைப் படித்து, ஆராய்ந்ததிலிருந்து பேராசிரியர் சு. திருஞானம் அவர்களுக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. யாழ்நூல் உள்ளிட்ட இசையாய்வு நூல்களைப் பயின்று இசை நுட்பங்களை அறிவதற்குப் பொன்மலை ஜி.கே.கணேசன் என்ற இசையாசிரியரிடம் 1970 முதல் 1972 வரை முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். 

அனைத்து இந்திய வானொலி நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஒலி எவ்வாறு உண்டாகின்றது? எக்ஸ் கதிர்கள், லேசர் குறித்த பொருண்மைகளில்  உரையாற்றியுள்ளார். அதுபோல் தினம் ஒரு மூலிகை என்னும் தலைப்பிலும் பலநாள் வானொலியில் உரையாற்றியுள்ளார். 

மூலிகைப் பயன்பாடு, மூலிகைகளைக் காட்சிப்படுத்தல் என்ற வகையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு மூலிகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுதவற்குப் பல அமைப்புகளுடன் இணைந்து, மூலிகைக் கண்காட்சிகளை நடத்தியவர். 

இல்வாழ்க்கை: 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் 1968 ஆம் ஆண்டு தி. செயலட்சுமி அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்குத் தி. அருட்செல்வி, தி. மதியரசி, தி. அருண்மொழி, தி. அம்பலவாணர் முதலிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இயற்பியல் துணைப்பாட நூல் (பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக)

2.   மூலிகை மருத்துவம் – தொகுதி 1 (1992)

3.   திருக்கோவில் மரங்களின் மருத்துவப் பயன்கள்(1998)

4.   Indian medicinal Plants and Home Remedies (2010)

5.   மூலிகை மருத்துவம் - தொகுதி 2  (2015) 

பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் முயற்சியால் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் தாள முழக்கியல் என்ற அரிய நூல் வெளிவந்தமையும் போற்றுதலுக்கு உரியது. 

சித்த மருத்துவத்துறைக்கும், இசைத்துறைக்கும் தொண்டாற்றியுள்ள பேராசிரியர் சு. திருஞானம் அவர்களை அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் அழைத்துப் போற்றும் நாளே தமிழுக்கு ஆக்கமான நாளாக இருக்கும். 

இயற்பியல் அறிஞராகத் துலக்கம்பெற்று, சித்த மருத்துவ வல்லுநராக ஒளிவீசி, இசையாராய்ச்சியாளராக நிறைவாழ்வு வாழ்ந்துவரும் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் தமிழ் வாழும் காலம்வரை நிலைத்த புகழ்பெற்று வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.







ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

முனைவர் பி. தமிழகன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா!

 

முனைவர் பா.மதிவாணன்  நூலினை வெளியிடுதல்

முனைவர் மு.இளங்கோவன் நூலினை வெளியிடுதல்


மலேசியக் கவிஞர் செ.குணாளன் நூலினைப் பெற்றுக்கொள்ளுதல்

 முனைவர் பி. தமிழகன் அவர்கள் எழுதிய சங்க இலக்கியத்தில் நிலைத்திணைப் பெயர்கள், மரபுப்பெயர்களும் சங்க இலக்கியமும் என்னும் தலைப்பில் அமைந்த நூல்களின் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளியில் 21.02.2026 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த  நிகழ்வுக்கு அருள்முனைவர் அமுதன் அடிகளார் தலைமை தாங்கினார். பேராசிரியர் கு. திருமாறன் வரவேற்புரை நல்கினார். சங்க இலக்கியத்தில் நிலைத்திணைப் பெயர்கள் என்னும் நூலினைப் பேராசிரியர் பா. மதிவாணன் வெளியிட மருத்துவர் இரா. கலைக்கோவன் பெற்றுக்கொண்டார். மரபுப்பெயர்களும் சங்க இலக்கியமும் என்னும் நூலினை முனைவர் மு.இளங்கோவன் வெளியிட, பொறியாளர் ஓவியன் பெற்றுக்கொண்டார். இவர்களைத் தொடர்ந்து தமிழறிஞர்களும், பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்த பேராளர்களும் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். மலேசியாவிலிருந்து வருகைபுரிந்த கவிஞர் செ.குணாளன் அவர்கள் நூல்களின் சிறப்புப் படிகளைப் பெற்றுக்கொண்டார். அறிஞர்களின் வாழ்த்துரைக்குப் பிறகு முனைவர் பி. தமிழகன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.


நன்றி: தினமணி, திருச்சிராப்பள்ளி(23/02/2026)

திங்கள், 16 பிப்ரவரி, 2026

தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு நூலுக்கான அணிந்துரை - புலவர் பெ. கறுப்பண்ணனின் அறிவுத் தெளிவை விளக்கும் அரிய நூல்

 


தொல்காப்பியம்திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் பெரும்புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் இயற்றியுள்ள அரும்பெரும் ஆராய்ச்சி நூலினைக் கண்ணுற்றுப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. இவ்வாய்ப்பை எனக்கு நல்கியவர் கரூரின் சீர்சால் செந்தமிழ்த்தொண்டரும் புலவரும் புரவலருமான அருணா பொன்னுசாமியார் ஆவார். அருணா பொன்னுசாமியார் அவர்கள் என் மாணவப்பருவத்திலிருந்து என் முயற்சியினை உற்றுநோக்கி நெறிப்படுத்தும் சான்றோர் ஆவார். பொன்னுசாமியாரின் புலமைத் தொடர்பால் எனக்கு அரும்பெரும் புதையலாகப் பெ. கறுப்பண்ணன் அவர்களின் நூல் என் பார்வைக்குக் கிட்டியது

புலவர் அருணா பொன்னுசாமியாருடன் இணைந்து அளப்பரும் தமிழ்ப்பணிகளை அன்றன்றும் ஆற்றிவரும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்நூற்கடல் தி. வே. கோபாலையரின் அன்புக்குரிய மாணவராக அமர்ந்து, தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்; பன்னூலாசிரியர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் செயல் மறவராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர். தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாக விளங்கும் கருவூரில் தம் பணியோய்வுக்குப் பிறகு அமைதி வாழ்க்கை வாழ்ந்துவரும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் தமிழ்த்தாய்க்கு அரிய அணிகலனாகத் தொல்காப்பியம்திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் இத் தண்டமிழ்ப் பனுவலைத் தந்துள்ளார்

தொல்காப்பியச் செய்திகள் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூலாக இந்நூல் மிளிர்கின்றது. புலவர் பெ. கருப்பண்ணன் அவர்களின் தொல்காப்பிய அறிவும், திருக்குறள் புலமையும் சங்கப் பனுவல்களில் தோய்ந்த இவர்தம் அரும்புலமையும் இந்த நூலில் வெளிப்பட்டு நிற்கின்றன

தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் என்பதை நாம் அறிவோம். தமிழின் உயிராக விளங்கும் இந்த நூலினை மோலோட்டமாகக் கற்றவர்கள் இந்நூல் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறும் நூல் என்று மட்டும் கூறிவிட்டு, ஒதுங்கிக்கொள்வார்கள். ஆயின் அதில் தோய்ந்தவர்கள்ஊடாடி ஒன்றாகக் கலந்தவர்கள் தொல்காப்பியரின் உள்ளத்தை அறிந்து நவில்வதுடன் அந்நூலில் பொதிந்துகிடக்கும் அரிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, நம் அறிவுப்பசிக்கும் சிந்தனைத் தூண்டலுக்கும் இரை போடுவார்கள்

                மாணிக்க நாயகர், சோமசுந்தர பாரதியார், தி.வே.கோபாலையர், அடிகளாசிரியர், கு. சுந்தரமூர்த்தியார், .சுப.மாணிக்கம், தமிழண்ணல், சிவலிங்கனார், . பாலசுந்தரனார், வீ..கா. சுந்தரம், இரா. இளங்குமரனார் உள்ளிட்ட அறிஞர்கள் அவ்வகையில் தொல்காப்பிய ஆராய்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு நல்கியுள்ளனர். அவ்வகையில் தொல்காப்பியத்தை ஊன்றிக் கற்ற புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் தொல்காப்பியச் செய்திகளைக் கொண்டு, நூல் படைத்துள்ள திருவள்ளுவரையும் சங்கப் புலவர்களையும் ஆழ்ந்து கற்று, நமக்கு ஒப்பற்ற அருந்தமிழ்ப் பனுவலாம் இந்த நூலை வழங்கியுள்ளமைக்குத் தமிழுலகம் இவருக்கு நன்றி தெரிவிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது

தொல்காப்பியம்திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் அமையும் இந்த நூல்வள்ளுவப் பெருமகனாரின் வாழ்வியல் இலக்கிய நூலுக்குத் தொல்காப்பியனாரின் ஆழ்நிலை இலக்கண நூலே முதல் நூலாக இருந்துள்ளதுஎன்னும் கருதுகோளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளைப் பற்றிச் செய்யுளியலில் குறிப்பிடும்பொழுதுபயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஎன்று குறிப்பிடுவதை எடுத்துக்காட்டியும் பிற உரையாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டியும் நூலினால் பயன் உருவாகும் தன்மையை இந்த நூலில் நம் புலவர் அவர்கள் விளக்கியுள்ளார். “பயன் என்பது சொல்லிய பொருளால் பிறிதொன்று பயப்பச் செய்தல்என்பது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அவர்களின் கருத்தாகும்

அவ்வகையில் தொல்காப்பியர் நால்வகையில் அமையும் பாக்களைக் கொண்டு மூவகைப் பொருளை (அறம்,பொருள்,இன்பம்) வெளிப்படுத்த இயலும் என்பதைத் தம் செய்யுளியலில்

அந்நிலை மருங்கி னறமுத லாகிய

மும்முதற் பொருட்கு முரிய வென்ப” (செய். 102) 

என்று உரைத்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு நம் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் இந்த நூலில் அரும்பெரும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்

அறம் பொருள் இன்பம் வீடு என்பது பிற்கால வழக்கு எனவும் தொல்காப்பியர், காலத்தில் அறம் பொருள் இன்பம் என்னும் மூவகைப் பயனே மக்களிடம் இருந்தது எனவும் இதனை உளங்கொண்டே திருவள்ளுவப் பெருமான் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் வகுத்தனர் என்பதும் இந்த நூலின் வழியாக அறியப்படும் முதல் அறிவு விருந்தாகும். வடநூலார் குறிப்பிடும்தர்மார்த்த காம மோட்சம்என்பன பிற்கால வழக்கு என்று கூறித் தமிழ் மரபை அரணிட்டுக் காக்கும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் அறிவுத்தெளிவை எண்ணி எண்ணி வியக்கின்றேன்

வீடுபேறு அடைய விரும்பும் துறவோர்களைப் பற்றித் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் குறிப்பிடுவதையும் இந்த நூலில் குறித்துள்ளார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் என்று செய்திகள் இடம்பெற்றுள்ளதை நினைவிற்கொண்டே அறத்துப்பாலில் (பாயிரவியலை நீக்கி) இல்வாழ்வை முதற்கண் வைத்து, அதன் பின்னர் பொருள்சார்ந்த செய்திகளை நவின்று, ஈற்றில் களவு, கற்பு வாழ்வை வள்ளுவர் அமைத்துள்ளார் என்பது புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் ஆய்வு எண்ணமாக உள்ளது

தொல்காப்பிய நூற்பாவடிகளும், தொல்காப்பியரின் கருத்துகளும் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்று சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டும் இந்த நூலாசிரியரின் ஒப்பீட்டுப் புலமை பாராட்டுதலுக்கு உரியது

புறத்திணையும் அகப்பொருளின் ஒரு கூறே என்று உணர்த்தவே புறப்பொருளை அகத்திணைக்கும் களவியலுக்கும் இடையில் வைத்துள்ளார்எனவும்பொருள் என்னும் சொல் பலபொருள் ஒரு சொல்லாகப் பல்வேறு இடங்களிலிலும் பயின்று வருகிறதுஎனவும் பெ. கறுப்பண்ணன் கண்டு காட்டும் உண்மைகள் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் ஆழமாக ஆராய விழைவார்க்கு நல்வழிகாட்டும் திசைகாட்டிகளாகும்

 திருக்குறளில் இடம்பெறும் 133 அதிகாரத் தலைப்புகளைக் குறிக்கும் சொற்கள் தொல்காப்பியத்தில் எவ்வாறு வடிவம் பெற்று நிற்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டும் புலவர் கறுப்பண்ணரின் செயல் இவர்தம் தொல்காப்பியப் புலமைக்குக் கட்டியம் கூறும்

 உரையாசிரியர்கள் திருக்குறளை எவ்வாறு பொருத்தமுடன் ஆண்டு, தொல்காப்பிய நூற்பாக்களை விளக்கியுள்ளனர் என்பதையும் புலவர் பெ. கறுப்பண்ணன் இந்த நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்

தொல்காப்பியத்துள் இடம்பெறும் தெய்வம், கடவுள், இறை, அமரர் முதலான சொற்களை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் இறை என்று குறிப்பிடும் பொருத்தப்பாட்டையும் இந்த நூல் விளக்கியுள்ளது. அவ்வகையில் தொல்காப்பிய நூற்பாக்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ள புலவரின் ஆய்வுச் சிறப்பினையும் நுண்ணாய்வு நோக்கினையும் பாராட்டுதல் வேண்டும்

 கருத்துகள் சங்கப்பாடல்களில் பொருந்திப் போகும் இடங்களையும் புலவர் எடுத்துக்காட்டிப் பட்டியலிட்டுள்ளார். அவ்வகையில் அறத்துப்பால் செய்திகள், பொருட்பால் செய்திகள், இன்பத்துப்பால் செய்திகள் சங்கப் பனுவல்களில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்பதைத் தனித்தனித் தலைப்புகளில் எடுத்துக்காட்டும் பாங்கினை அறியும் பொழுது புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு அளித்துள்ள பங்களிப்புத் தெளிவாகத் தெரிகின்றது

புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் தொல்காப்பியப் புலமையும் வள்ளுவப் புலமையும் உரையாசிரியர்களின் கருத்தறிந்த தன்மையும், சங்கநூற் புலமையும் இந்த நூலின் வழியாக ஒருசேரப் புலப்படுகின்றன

திருக்குறளுக்கு முன்னரே ஒருவரியில் தொகுப்புரை வரைந்த பெருமகனார் புலவர் பெ. கறுப்பண்ணர் அவர்கள் கொங்குநாட்டின் கண்ணர்குலத்தில் தோன்றித் தமிழ்த்தாயின் திருவடியில் இந்நூலாம் ஆய்வுமலர் ஒன்றைச் சூட்டியுள்ளமைக்கு இத்தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது

தொல்காப்பியம்திருக்குறள் என்னும்  இருநூல் கடலுள் மூழ்கி அறிவு முத்துகளைக் கண்டெடுத்து வழங்கியுள்ள புலவர் பெ. கறுப்பண்ணர் அவர்கள் காவிரி மணலின் எண்ணிலமையும் ஆண்டுகள் கவின்மிகு வாழ்வில் திளைக்க, எம் தமிழ்த்தாய் அருள்புரியட்டும். இந்நூல் ஆய்வறிஞர்களின் கைகளில் தவழட்டும். இந்நூலால் தமிழாய்வு உலகம் பயன்பெறட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்

பணிவுடன்

மு. இளங்கோவன்

புதுச்சேரி – 605008

26.12.2025


புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் பணிகளை அறிய இங்குச் செல்க.