நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 டிசம்பர், 2024

பேராசிரியர் வெ. அ. நாகரத்தினம்

 

பேராசிரியர் வெ. . நாகரத்தினம் 

[வெ. . நாகரத்தினம் அவர்கள் கோயம்புத்தூரில் வாழ்ந்துவரும் தமிழ்ப் பேராசிரியர்; பன்னூலாசிரியர்; அறிஞர் கு. அருணாசலக் கவுண்டர் அவர்களிடமிருந்து அரிய நூல்களைப் பெற்றுவந்து, தாம் பணியாற்றிய சேரன் கலை அறிவியல் கல்லூரியில் ஒப்படைத்தவர். “கோவை மாவட்ட அகமுடையார் (தேவர்) குலமரபும் பண்பாடும்“ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தவர். “கலித்தொகையில் உருவமும் உள்ளடக்கமும்” என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிற்காகப் பெருந்திட்டப்பணியைச் செய்தவர். கலைஞரும் தொல்காப்பியரும் என்ற ஆய்வு நூலையும் படைத்துள்ளார்.] 

பேராசிரியர் வெ. அ. நாகரத்தினம் அவர்கள் கோவை மாவட்டம் வெள்ளலூரில் வாழ்ந்த அங்கண்ணத் தேவருக்கும் பேச்சியம்மாளுக்கும் நான்காவது மகளாகப் பிறந்தவர் (18.02.1960). தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் வெள்ளலூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்(1976 வரை). புகுமுக வகுப்பினைப் பீளமேடு கிருட்டினாம்பாள் கலை அறிவியல் கல்லூரியில் பயின்றவர். கணிதவியல் பட்ட வகுப்பினை கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியில் பயின்றவர்.  முதுகலைத் தமிழ் இலக்கியப் படிப்பினைக் கோவை, பி.எஸ்.ஜி. கலை,அறிவியல் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் படிப்பினைக் கோவைப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று “கலித்தொகையில் இயற்கை” என்னும் தலைப்பில் ஆய்வேடு ஒப்படைத்துப்(1987) பட்டம் பெற்றவர். தம் முனைவர் பட்ட ஆய்வினைக்  “கோவை மாவட்ட அகமுடையார்(தேவர்) குலமரபும் பண்பாடும்” (1997) என்ற தலைப்பில் மேற்கொண்டு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சைவ சித்தாந்தப் பாடத்தினை இரண்டு ஆண்டுகள் பயின்று, “சைவ சித்தாந்த இரத்தினம்” என்னும் பட்டம்பெற்றவர். 

முனைவர் பட்டம் பெற்றபொழுது பேராசிரியர் வெ.அ. நாகரத்தினம்

பேராசிரியர் வெ. அ. நாகரத்தினம் அவர்கள் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ்மிக்க பேச்சாளர்கள், எழுத்தாளர்களான வலம்புரி ஜான், சாலமன் பாப்பையா, சிலம்பொலி செல்லப்பன், லேனா தமிழ்வாணன், ஈரோடு தமிழன்பன், புட்பவனம் குப்புசாமி, பேராசிரியர் அப்துல்காதர், சுகி சிவம், ஜெயகாந்தன், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோரைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, மாணவர்களுக்குத் தமிழின்பம் கிடைக்கச் செய்தவர். புலவர் செ. இராசு, கல்வெட்டியல் அறிஞர் பூங்குன்றனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் பழகிய பெருமைக்குரியவர். 

பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும், தேசியக் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கிய பெருமைக்குரியவர். மாணவர்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்புடன் பழகும் பண்பினைப் பெற்றவர். பல்வேறு கல்வி நிறுவனங்களின் அழைப்பினை ஏற்றுத் தம் தமிழறிவை அடுத்த தலைமுறையினருக்கு ஆர்வமுடன் கற்பிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். 

2011 முதல் 2013 வரை பல்கலைக்கழக நல்கைக் குழு வழங்கிய நிதி உதவியுடன்கலித்தொகையில் உருவமும் உள்ளடக்கமும்” என்ற தலைப்பில் பெருந்திட்டப் பணியைச் செய்து ஒப்படைத்தவர்.  

வெ. அ. நாகரத்தினம் அவர்கள் பணிபுரிந்த கல்லூரிகள்: 

·   சேரன் கலைஅறிவியல் கல்லூரி காங்கேயம். தமிழ்த்துறைத் தலைவர் (1994 முதல்2005 வரை)

·         எஸ்.எம்.எஸ். கல்லூரி,  கோவை (2005 – 2007)

·     அரசுக் கல்லூரியில் உதவிப்பேராசிரியர் பணி கிடைத்து,  2007 டிசம்பர் 26 இல் திருப்பூரில் அமைந்துள்ள எல்.ஆர்.ஜி. கல்லூரியில் பணியேற்றவர்.  

·  கோவை அரசுக் கல்லூரிக்கு 2010 இல் மாறுதலாகி வருகை தந்த பேராசிரியர்     நாகரத்தினம் அவர்கள் 2018 வரை  பணியாற்றி  ஓய்வு பெற்றவர். 

வெ. அ. நாகரத்தினம் அவர்களின் தமிழ்க்கொடை: 



1. கோவை நாட்டுப்புறப் பாடல்கள்(2006)

2. அறிஞர் பேராசிரியர் வெள்ளிமலையவர்களின் இலக்கியப் பணி(2014)

3. அருள்மிகு ஸ்ரீதேனீஸ்வரர் திருக்கோயில் வரலாறு(2015)

4. கவிஞர் சென்னிமலை தண்டபாணியின் இலக்கியப் பணி(2016)

5. அருள்மிகு ஆனைமலையம்மன் தலவரலாறு(2019)

6.  அருள்மிகு இருளப்பசாமி () உமாமகேஸ்வரர் தலவரலாறு

7. கலைஞரும் தொல்காப்பியமும்(2023) 

வெளிவர உள்ள நூல்கள்: 

1. கலித்தொகை உருவமும் உள்ளடக்கமும்

2. பழமை சொல்லும் பழமொழிகள்

3. கொங்கு மண்ணில் பெண்ணியம் 

வெ. அ. நாகரத்தினம் அவர்கள் பெற்ற விருதுகள் 

·         அன்னை விருது, தமிழ் ஐயா கல்விக்கழகம், ஔவைக் கோட்டம்

· நல்லாசிரியர்  விருது, தேவர் சமூக கல்வி அறக்கட்டளை இராமநாதபுரம்

·         சக்தி விருது, திருப்பூர் அரிமா சங்கம்

· கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, தமிழ் ஐயா கல்விக்கழகம், திருவையாறு.

வெள்ளி, 13 டிசம்பர், 2024

"தமிழ் இலெமுரியா" ஆசிரியர் சு. குமணராசன்

 

 

சு. குமணராசன் 

[மும்பையில் வாழும் சு. குமணராசன் கடல்சார் பொறியாளர் ஆவார். தனித்தமிழ் ஆர்வமும், சமூகப் பணியாற்றும் எண்ணமும் கொண்டவர். தமிழ் இலெமுரியா” என்னும் இதழின் ஆசிரியர். பன்னூலாசிரியர். எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் புகழ்பெற்றவர். தொல்காப்பிய ஈடுபாடும் திருக்குறள் ஈடுபாடும் நிறைந்தவர். மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகளை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றி வருபவர்].

 

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மூலைக்கரைப்பட்டியில் திரு. சுந்தரராசன் - திருவாட்டி மூக்கம்மாள் ஆகியோருக்கு மகனாக 05-02-1957 இல் பிறந்தவர் குமணராசன் ஆவார். இவர் தன் தொடக்கக் கல்வியை (பள்ளியிறுதித் தேர்வு வரை) மூலைக்கரைப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று, முதன்மை மாணாக்கராக விளங்கியவர்

1973 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து மகராட்டிரா மாநிலத் தலைநகர் மும்பைக்குப் புலம் பெயர்ந்து,  இன்று வரை மும்பையில் வாழ்ந்து வருபவர். 1975  முதல் 1979 வரை இந்தியக் கப்பல்படைப் பயிற்சியகத்தில் கடல்சார் பொறியியல் படிப்பை நிறைவுசெய்தவர். 

கல்வியின் தொடர்ச்சியாகக் கடல்சார் பொறியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், சுற்றுச் சூழல், மேலாண்மை, ஒளிப்படக் கலை எனப்  பல துறைகளில் படித்துப் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள் பெற்றவர். தொழிலில் இந்தியப் பாதுகாப்புத் துறைக் கப்பல் தளம், கடலோரப் பாதுகாப்புப்  படை,  கிரேட் ஈஸ்ட்டன் சிப்பிங்,   எஸ்ஸார் எரிவாயு மற்றும் எண்ணெய்க் குழுமம் ஆகிய நிறுவனங்களில் மூத்த பொறிஞர், மேலாளர், துணைப் பொது மேலாளர், பொது மேலாளர் எனப் பல பதவிப் படிநிலைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்

மும்பையில் தமிழ் மொழி, தமிழர் இன நலம் சார்ந்த சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்வில் தொடர்ந்து இயங்கி வருபவர். தனது 14 ஆம் அகவை முதல் சமூக ஈடுபாட்டுடன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர்  ஆகிய தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடியவர். இளமைக் காலம் தொட்டுத் தமிழக அறிஞர் பெருமக்களான ஆட்சிமொழிக் காவலர் கீ. இராமலிங்கனார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி. . பெ. விசுவநாதம், பேராசிரியர் . நன்னன், தமிழண்ணல், .. அறவாணன், மாவீரன் பழ. நெடுமாறன், ஆசிரியர் கி. வீரமணி, கவிஞர்கள் அறிவுமதி, கலைக்கூத்தன், வா.மு.சே, எழுத்தாளர்கள் சோமலெ, நாஞ்சில்நாடன், சுப. வீரபாண்டியன் ஆகியவர்களோடு நட்புடன் பழகித்  தமிழுணர்வையும், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டவர். கேட்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் திறம் வாய்ந்த சொற்பொழிவாற்றும் ஆற்றல் பெற்றவர்

இவரை 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு மும்பைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறங்காவலாராக நியமனம் செய்தது. மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் தென் மத்திய ஆசிய நாடுகளின் குழுமத்தில் பாதுகாப்புத் துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.


 

மும்பையில் தமிழ் மொழி, தமிழர் இன நலம் சார்ந்த சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்வில் தொடர்ந்து இயங்கி வருபவர். “தமிழ் இலெமுரியாஇதழின் முதன்மை ஆசிரியர். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட கழக இலக்கியங்கள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் உரையாற்றியும் வருபவர்

இவருடைய இல்லத்து நூலகம் பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய எட்டாயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்டதாகும்

இவர் பணியின் நிமித்தமும், தமிழ் அமைப்புகளின் அழைப்பின் பேரிலும்  அமெரிக்கா, கனடா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிரான்சு, எகிப்து, ஐரோப்பிய நாடுகள், டென்மார்க், ஆசுத்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, இலங்கை, அரபு நாடுகள், மத்திய தரைக் கடல் நாடுகள் எனச் சற்றொப்ப 40 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளவர். பன்னாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டு மொரிசியசு, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உரையாற்றியவர்

இவருடைய வாழ்விணையர் திருவாட்டி நங்கை ஆவார். இப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர் தமிழறிஞர் மு.வ. அவர்களாவார். (நங்கை அவர்கள்  மும்பையின் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் மகளாவார்). இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இங்கர்சால், மருத்துவர் சகானா என்பன இவர்களின் பெயர்களாகும். இருவருக்கும் திருமணமாகி, மும்பையில் வாழ்கின்றனர். 

சு. குமணராசன் எழுதியுள்ள நூல்கள்:

 


·                     பார்வையின் நிழல்கள்,

·                     உலகை அறிவோம்,

·                     மனக்குரல்,

·                     துணை எழுத்து,

·                     உலகை மாற்றிய சொல்வெட்டுகள்,

·                     பனித்துளியின் நுனித்துளிகள்,

·                     மறந்து போன நினைவுகள்,

·                     தமிழ் அறிவோம்,

·                     செய்நன் விதைகள்,

·                     செவ்வியல் இலக்கியங்கள் ஓர் அறிமுகம்,

·                     THE FIFTH PILLAR (ENGLISH) 

 

ஆகிய 11 நூல்களை எழுதியுள்ளார். இவை தவிர நூற்றுக் கணக்கான கட்டுரைகளை நாளேடுகளிலும், பருவ இதழ்களிலும் எழுதியுள்ளார். 

சு. குமணராசன் பணிபுரிந்த, உருவாக்கிய தமிழமைப்புகள்: 

·                             பம்பாய் பகுத்தறிவாளர் கழகம்,

·                             பம்பாய் திருக்குறள் பேரவை,

·                             மும்பைத் தமிழர் பேரவை,

·                             திராவிட முன்னேற்றக் கழகம்,

·                             பம்பாய்த் திருவள்ளுவர் மன்றம்,

·                             ஈழ நட்புறவுக் கழகம்,

·                             மும்பை தமிழ் இலக்கிய வளர்ச்சிக் கழகம்,

·                             மராத்திய மாநில எழுத்தாளர் மன்றம்

ஆகிய அமைப்புகளின் நிறுவன அமைப்பாளராகவும், செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு, தமிழ்த் தொண்டாற்றியவர்

இவருடைய தமிழ் ஆர்வத்தின் கரணியமாகத் தன் சொந்தப் பொறுப்பில்தமிழ் இலெமுரியாஎன்ற பருவ இதழைத் தொடங்கி, தொடர்ந்து 13 ஆண்டுகள் வெளியிட்டுள்ளார். இந்த இதழ் தமிழ் நாட்டின் சிறந்த இதழ் என்ற தகுதியைப் பெற்று 2018 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் தமிழ்ப் பேராயம்சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதுபெற்றது. தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் தமிழ்த் தொண்டுக்காகவே செலவிட்டவராவார்

இலெமுரியா அறக்கட்டளைஎன்ற தொண்டு நிறுவனத்தை நிறுவிக்  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மாணவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி உதவி அளித்து, ஊக்கம் தருபவர்.  கோவித்-19 தீநுண்மியின் காரணமாக வாழ்வாதாரம் இழந்த மும்பை மக்களுக்கு உணவுத் தொகுப்புகள்,  மருந்துகள், மருத்துவ உதவிகள் வழங்கி, உலக அளவில் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். சற்றொப்ப ஒன்றேகால்   கோடி உரூபாய்க்கும் அதிகமான அளவு மக்களுக்குப் பேரிடர் காலத்து உதவிகளைக் கொண்டு சேர்த்தவர். இவருடைய அறக்கட்டளைப் பணிகளைப் பாராட்டி மகராட்டிரா மாநில ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர் பெருமக்கள் வாழ்த்தியுள்ளனர்

தமிழ் மொழியைக் கற்க வாய்ப்பின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பெங்களூருவில் தொடங்கப் பெற்றதமிழ் அறக்கட்டளைஎன்ற அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருபவர்.  இதுகாறும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வாழும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் இவ்வறக்கட்டளை உதவியுள்ளது. 

பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்  நிறைந்த இவர் தமிழ் மொழி, தமிழர் உரிமை, இனநலம், சமூகவியல் சார்ந்து  இன்றளவும் மகராட்டிரா மாநிலத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர்.  சிலவாண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப்பட்டுள்ள அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் அறிவுரைஞராகவும் செயல்பட்டுவருகின்றார். அயலகத் தமிழர் வரலாற்றில் சு.குமணராசனின் பணி என்றும் நினைவுகூரப்படும். 

**** சு. குமணராசன் அவர்களின் இலெமுரியா அறக்கட்டளையின் இணையத்தளம்:  இலெமுரியா

ஞாயிறு, 17 நவம்பர், 2024

தஞ்சையில் தமிழ்க்கூடல்…

 


    அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையும் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து 2024, நவம்பர்த் திங்கள் 23, 24(காரி,ஞாயிறு) ஆகிய நாள்களில் தமிழ்க்கூடல் நிகழ்வினைத் தஞ்சாவூரில் நடத்துகின்றன. 

இந்த நிகழ்வில் மாண்பமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களும், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும், தவத்திரு குமரகுருபர அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

தமிழ்நாட்டு அரசின் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் வி. திருவள்ளுவன், முன்னைத் துணைவேந்தர்கள் முனைவர் சி. சுப்பிரமணியம், முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ப. மருதநாயகம், அருள்தந்தை ஜெகத் கஸ்பார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பிக்க உள்ளனர். 

இந்தியாவில் இயங்கும் பல்வேறு தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள், தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் உரையாற்றவும் உள்ளனர். 

தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு, தமிழ்ச்சிறப்பினை அறியலாம்.








ஞாயிறு, 10 நவம்பர், 2024

இணையத்தில் உலவும் எம் தமிழ்!

 


 மேலைச்சிவபுரி வள்ளுவர் மன்றத்தாரின் ஏற்பாட்டில் அமையும் இன்றைய(10.11.2024) இணைய வழி உரையில் இணையத்தில் உலவும் எம் தமிழ் என்ற தலைப்பில் தமிழின் சிறப்பினை நினைவுகூர்கின்றேன். வாய்ப்புடையோர் வந்து மகிழ்வூட்டுங்கள்.

Topic: வள்ளுவர் மன்றம் ,மேலைச்சிவபுரி - மெய்நிகர் நிகழ்வு 43

Time: Nov 10, 2024 05:00 PM India


Join Zoom Meeting

https://us06web.zoom.us/j/84388137592?pwd=RppuCTsO2YbBg4rjXbGeoJnDlbnO91.1


Meeting ID: 843 8813 7592

Passcode: valluvar

இணையத்தில் உலவும் எம் தமிழ்

முனைவர். மு.இளங்கோவன்

தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி

செவ்வாய், 22 அக்டோபர், 2024

பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியனாரின் புகழ் வாழ்வு!

 

முருகு சுப்பிரமணியன்

    பொன்னி என்னும் இலக்கிய இதழைத் தந்த பெருமைக்குரியவர் முருகு. சுப்பிரமணியன் ஆவார். இவரும் இவர்தம் உறவினர் அரு. பெரியண்ணன் ஐயா அவர்களும் இணைந்து இந்த இதழை வெளியிட்டனர்.  திராவிட இயக்க ஏடுகளுள் இந்த இதழுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. 1947 முதல் 1953 வரை இந்த இதழ் வெளிவந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்தும் சென்னையிலிருந்தும் வெளிவந்த இந்த இதழில் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் 48 கவிஞர்கள் அந்நாளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பாவேந்தர் பாரதிதாசனாரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு, வெளிவந்த இதழின் ஆசிரிய உரைகள் புகழ்பெற்றவை. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைக் கொண்டு இந்த இதழ் வெளிவந்துள்ளது. பொன்னி இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் மலர்கள் புகழ்பெற்றவை. 

பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் 1953 இல் மலேசியா நாட்டுக்குச் சென்றார். அங்கு வெளிவந்த தமிழ்நேசன், சிங்கப்பூரில் வெளிவந்த தமிழ் முரசு ஆகிய ஏடுகளில் பணியாற்றியவர். புதிய சமுதாயம் என்ற இதழையும் பின்னாளில் நடத்தியவர். இவர்தம் இதழ்ப்பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை. ஆராயத் தக்கவை. 

முருகு அவர்களின் நூற்றாண்டு விழா 20.10.2024 (ஞாயிறு) மாலை  மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக நான் நேரில் செல்ல நினைத்திருந்தேன். அலுவல் காரணமாக வாய்ப்பு அமையவில்லை, என் வாழ்த்துரையைப் பதிவு செய்து அனுப்பியிருந்தேன். நூற்றாண்டு விழாவில் வெளியிட்டு உதவிய முருகு குடும்பத்தினருக்கும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் நன்றி. 

முருகுவின் குடும்பத்தினரும் அண்ணன் பெ. இராசேந்திரன் அவர்களும் இந்தக் காணொளி உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி.

முருகுவின் தமிழ்ப்பணிகளும் இதழியல் பணிகளும் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவை. கொண்டாடுவோம்.

 காணொளி இணைப்பு

முருகுவின் வாழ்க்கைக் குறிப்பு (என் பழைய பதிவு)


வெள்ளி, 18 அக்டோபர், 2024

தமிழியக்கம் ஏழாம் ஆண்டு விழா!

                            




தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தூணென நின்று துணைசெய்யும் அமைப்பு தமிழியக்கம் ஆகும்.  வேலூர்  வி..டி. பல்கலைக்கழகத்தின்  வேந்தர், கல்விக்கோ முனைவர் கோ. விசுவநாதன் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் தமிழியக்கம் அமைப்பின் ஏழாம் ஆண்டு விழா, புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கத்தில் 20.10.2024(ஞாயிறு) காலை 9.30 மணி முதல் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, பாராட்டு விருதுடன் ஓர்  இலட்சம் உருவா அவருக்குப் பணப்பரிசில் வழங்கப்பட உள்ளது

கால்கோள் அரங்கம், நாடக அரங்கம், இசை அரங்கம், பாங்கறி மண்டபம், விருதரங்கம், நிறைவரங்கம் என்ற தலைப்பில் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

இந்த நிகழ்வில் முனைவர் கோ. விசுவநாதன் தலைமையுரையாற்ற உள்ளார். கல்விச் செம்மல் சீனு. மோகன்தாசு வரவேற்புரையாற்ற உள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து தொடக்கவுரையாற்ற உள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் . அரங்கசாமி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் . இலட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினர்  சு. செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் பி.எம். எல்.  கல்யாணசுந்தரம், தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர்  . தனசேகரன், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் .தரணிக்கரசு, கம்பன் கழகச் செயலாளர் வே. பொ. சிவக்கொழுந்து, கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் வி. கலியபெருமாள், முனைவர் மு. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். 

நிறைவு விழாவில் சூர்யா சேவியர் சிறப்புரையாற்றவும், புதுவை முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வெ.வைத்தியலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுவைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எசு. மோகன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ. அன்பழகன், மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் செயலர் இரா. இராசாங்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்  செயலர் அ.மு.சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலர் தே.வ. பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். 

பேராசிரியர் ஈரோடு தமிழன்பன், புலவர் வே. பதுமனார். பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் கு. வணங்காமுடி, பாவலர் மு.அருள்செல்வம், நாறும்பூநாதன், சிவாலயம் செ.மோகன் முதலானவர்கள் உரையாற்ற உள்ளனர். தமிழ் உணர்வாளர்கள் சந்திக்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.