நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 ஆகஸ்ட், 2021

மு.கலைவாணனின் “கதை சொல்வதே பெரிய கலை” நூலுக்கு வரைந்த அணிந்துரை!

 

 

(குறிப்பு: பன்முகத் திறமையாளர் மு. கலைவாணன் அண்மையில் கதை சொல்வதே பெரிய கலை எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை, அணிந்துரைக்கு விடுத்திருந்தார். நூலைப் படித்து மகிழ்ச்சியுடன் அணிந்துரை எழுதினேன். இந்த நூல் 30.08.2021 மாலை சென்னையில் வெளியீடு காண உள்ளது. உருவா 150 விலையுடைய இந்த நூல் 144 பக்கங்களில் அமைந்துள்ளது. குழந்தை இலக்கிய உலகிற்கு இந்த நூல் நல்வரவாக அமைந்துள்ளது. பள்ளிக் கல்வியில் ஆர்வமுடையவர்கள் இந்த நூலினை வாங்கி, நூலாசிரியரைப் போற்றலாம். தொடர்புக்கு: மு.கலைவாணன், சென்னை.: 0091 94441 47373)

        கதை சொல்பவர்களே பிறர் உள்ளத்தை வெல்ல முடியும்!

    மு. கலைவாணன் அவர்களை 1995 ஆம் ஆண்டளவில்  சென்னை, தியாகராயர் நகர் மாணவர் நகலகத்தின் அலுவலகத்தில் சந்தித்த நாள் முதல் இவரிடம் செழித்துக் கிடந்த கலையுணர்வை ஆர்வமாகச் சுவைத்து வருகின்றேன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா. அருணாசலம் அவர்கள் நடத்திய பல்வேறு தமிழ் நிகழ்வுகளின் மேடை வடிவமைப்பு முதல், நிகழ்ச்சி வடிவமைப்பு வரை அனைத்தையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றும் செயல் மறவராக இவர் என் உள்ளத்தில் பதிந்திருந்தார்.

    மு. கலைவாணனின் பொம்மலாட்டக் கலைநிகழ்வுகள் சிலவற்றைத் தொலைக்காட்சியிலும் நேரிலும் காணும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. இவர்தம் நினைவாற்றலும், பல குரலில் பேசிக், காட்சியைக் கண்முன் விருந்துவைக்கும் பேராற்றலும் நினைந்து, நினைந்து மகிழ்வேன். இவரின் பெருமையை உலகத் தமிழர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்தது. அதற்குரிய வாய்ப்பாகச் சிலவாண்டுகளுக்கு முன் சப்பான் தமிழ்ச்சங்கத்து அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவுக்கு நானும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களும் டோக்கியா மாநகருக்குச் சென்று திரும்பினோம். அங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் இவர் ஆற்றிய உரையும், நிகழ்த்திக்காட்டிய பொம்மலாட்ட நிகழ்வும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டன.

சென்னையில் விமானம் ஏறியது முதல் சென்னைக்கு மீண்டும் வந்து சேர்வது வரை மு. கலைவாணன் அவர்கள், தம் வாழ்வின் படிநிலை வளர்ச்சியை எனக்குச் சொன்னதுடன் பல்வேறு கதைகளையும், நிகழ்வுகளையும், கவிதைகளையும் சொல்லி, பயணத்தை இனிமையுடையதாக மாற்றியமை என் நெஞ்சில் இன்றும் நிழலாடுகின்றது. அந்தப் பயணம்தான் மு. கலைவாணனை நான் முழுமையாகப் புரிந்துகொள்ள வழிசெய்தது. நாங்கள் இலங்கை வழியாகச் சப்பான் பயணத்தை அமைத்திருந்தோம். சப்பானிலிருந்து தமிழகம் திரும்பும்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவிற்கு நாங்கள் பயணம் செய்த விமானம் காலம் தாழ்ந்து வந்தது. இதனால் அங்கிருந்து தமிழகம் வருவதற்கு உரிய விமானத்தைத் தவறவிட்டோம். மாற்று விமானம் ஏறித் தமிழகத்துக்கு வருவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்டது. நள்ளிரவு முழுவதும் கொழும்பு விமான நிலையத்தில் ஓர் ஓரமாக அமர்ந்தோம். பின்னர் அவர் கால்மீது நான் தலைசாய்த்து, அவர் சொன்ன கதைகளை விடியும்வரை கேட்டபடி இருந்தமை இப்பொழுதும் என் நினைவில் உள்ளது. கதை சொல்வதில் அவருக்கு இருந்த அளப்பரிய திறமையும், அவரின் எழுத்தாற்றலும், சிறுவர்களின் மன உணர்வறிந்து அவர்களைக் கதைகள் வழியே - உரைகள் வழியே தம் பக்கம் இழுத்து நன்னெறி புகட்டும் ஆற்றலும் கண்டு மகிழ்கின்றேன்.

                மு. கலைவாணனின் தந்தையார் கலைமாமணி நா. மா. முத்துக்கூத்தன் அவர்கள் மிகச்சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்; கவிஞர்; வில்லுப்பாட்டுக் கலைஞர்; நடிகர். தந்தையாரிடம் இளமை முதல் ஒரு நண்பரைப் போல் பழகித் தமிழுணர்வையும், கவிதை புனையும் ஆற்றலையும், நடிப்பாற்றலையும், புதியது புனையும் திறனையும் பெற்றுக்கொண்ட மு. கலைவாணன் தந்தையார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் நடையிடும் முன்மாதிரிக் கலைஞர் ஆவார். வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பந்தி வைக்கும் இயல்பினர். தந்தை பெரியார். அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் கருத்துகளை உள்வாங்கி, தம் படைப்புகளில் வெளிப்படுத்தும் “இரசவாதக்” கலைஞர் இவர். மு. கலைவாணனுடன் பழகுவது இனிமை தருவது. இவர் படைப்புகளைப் படிப்பது புதிய சிந்தனை வீச்சுகளைத் தரும். இதுவரை இவர் எழுதியுள்ள அனைத்து நூல்களையும் கற்று மகிழ்ந்துள்ளேன். அதன் மதிப்புரைகளை ஆய்வுரையாக வரைந்து அறிஞர்கள் அவையில் அரங்கேற்றியுள்ளேன். என் வலைப்பதிவிலும் வரைந்து வைத்துள்ளேன். சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயக் கருத்துகளைக் கொண்ட இவரின் படைப்புகள் யாவும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யப்படவேண்டிய அரிய படைப்புகளாகும்.

    அந்த வகையில் மு. கலைவாணன் அவர்கள் எழுதியுள்ள  கதை சொல்வதே பெரிய கலைஎனும் நூலைக் கற்று மகிழும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. இந்த நூலில் 33 கட்டுரைகள் கதை சொல்வது பெரிய கலை என்ற பொருண்மையில் அமைந்து கற்பவர்க்கு ஏராளமான செய்திகளைத் தருகின்றன. தாம் கற்ற நூல்களிலிருந்தும், தாம் கேட்ட உரைகளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக்காட்டியும், புதியது புனைந்தும் கதைக் கலைக்கு வாதாடியுள்ள கலைவாணன் அவர்களின் துறையீடுபாடு பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும்.

    கதைக்கான இலக்கணம் சொல்லி, கதைக்களங்களை அடையாளம் காட்டி, கதையைக் கண்டறியும் வழிகளையும் சொல்லியுள்ளார். கதை சொல்லி வெற்றிபெற்றவர்கள் இந்த நூலில் வந்துபோகின்றனர். ”முதலில் கதையைக் கேட்க, காதுகளைத் திறந்து வையுங்கள். ஓரிடத்தில் அடைந்து கிடக்காமல் மக்கள் நிறைந்த இடங்களில் பயணம் செய்யுங்கள்” என்று கதைச் சுவையறிவதற்கு வழிவகை சொல்கின்றார். நமக்குக் கதையார்வம் வருவதற்குக் கிருபானந்த வாரியார், என்.எஸ்.கே. (கலைவாணர்) தென்கச்சி கோ. சுவாமிநாதன், திருக்குறள் முனுசாமி, சுகி சிவம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்வியல் சிறப்புகளை இந்த நூலில் நினைவூட்டுகின்றார். சமகால எழுத்தாளர்களான தமிழ்ச்செல்வன், எஸ். இராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்ட கதையாசிரியர்களின் சிறப்புகளையும், எழுத்தாற்றலையும், பெருமைகளையும் நன்றியுடன் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கதை சொல்லும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு மு. கலைவாணன் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

    குழந்தைகள் விரும்பும் கதைகளைப் பெரியவர்கள்  சொல்லி, குழந்தைகளைக் குழந்தைப் பருவத்தை அனுபவிக்குமாறு சிறப்பான வழிகாட்டல்களை மு. கலைவாணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். இன்றைய அறிவியல், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பிள்ளைகள் தொலைக்காட்சி, செல்பேசிகள், கணினிகளில் மூழ்கிக் கிடக்கும் கொடுமையான நிலையினை எடுத்துக்காட்டி, அவர்களின் உள்ளங்களில் நஞ்சு விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கொடுமையை நினைவூட்டி, மாந்த சமூகத்தை நல்வழிப்படுத்தும் பணியையும் இந்த நூலில் மு.கலைவாணன் செய்துள்ளார்.

    “அனைத்து மதங்களும் கதைகளை நம்பியே கட்டமைக்கப்படுகின்றது” என்று மு.கலைவாணன் கூறுவதிலிருந்து மதங்களைச் சார்ந்து புனையப்பட்டிருக்கும் பல்லாயிரம் கதைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதப்பெருமையை நிலைப்படுத்த பல்வேறு கதைகளையும், புராணங்களையும் எழுதி வைத்து, அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் சென்றுள்ளமை கதைகளின் செல்வாக்கைக் காட்டும் சிறந்த சான்றாகும்.  “கதைகளைக் கேட்டு, மதம் மாறியவர்களும் உண்டு; கதைகளைக் கேட்டு, குறிப்பிட்ட மதத்தினைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களும் உண்டு. கதைகளைக் கேட்டு, பிற மதத்தினைத் தாக்கி அழித்தவர்களும் உண்டு.  குறிப்பிட்ட மதத்தின் கதைகள் இழிவாக உள்ளனவே என்று தம் மதத்தை வெறுத்தவர்களும் உண்டு” என்று மு.கலைவாணன் எழுதியுள்ள வரிகள் கதைகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அறிவதற்குப் பெரிதும் துணைசெய்கின்றன.

    கதைகள் ஏழைகளைப் பணக்காரனாக்கும் எனவும், கோழைகளை வீரனாக்கும் எனவும் கொள்கையற்றவனைக் கொள்கையுடையவனாக மாற்றும் எனவும் குறிப்பிடும் கலைவாணன் லியோ டால்ஸ்டாய் பற்றியும் வால்ட் டிஸ்னி, ரௌலிங்(ஹாரிபாட்டர்), மா சே.துங் பற்றியும்  குறிப்பிட்டு, கதைகள் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

    படிக்கும் பருவத்தினரை நல்வழிப்படுத்துவதிலும், பழகும் நண்பர்களை மேன்மைப்படுத்துவதிலும் கதைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைச் சமூக நடப்புகளிலிருந்தும், படித்த நூல்களிலிருந்தும் உணர்ந்த மு. கலைவாணன் நல்ல சமூகம் உருவாவதற்குக் கதைகள் முக்கியப் பங்காற்றுவதால் அதனை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதியுள்ளார். தெளிந்த நடையிலும், புதுமையான எடுத்துரைப்பு நிலையிலும் இந்த நூல் உள்ளது.

    எழுதுவது சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கும். பேசுவது சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கும். தாம் கண்டதையோ, தாம் கேட்டதையோ, தாம் உணர்ந்ததையோ பிறரின் உள்ளத்தை ஈர்க்குமாறு கதைபோல் எடுத்துரைப்பது சிலருக்கே இயன்ற ஒன்றாகும். கதைகளின் வழியே நீதியை, மனிதநேயத்தை, அன்பை, இயற்கை ஈடுபாட்டை, பகுத்தறிவை, உலகம் உய்வதற்கு உரிய உயர்ந்த கருத்தை எடுத்துரைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மு. கலைவாணனின் கதை சொல்வது பெரிய கலை என்ற இந்த நூல் உலகத் தமிழர்களின் உள்ளங்களை ஈர்க்கட்டும். அவர்களின் பிள்ளைகள் பயிலும் கல்விக் கூடத்து வகுப்பறைகளை இந்த நூலும், நூல் கருத்துகளும் சென்று சேரட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். பாராட்டி உவக்கின்றேன்.

மு.இளங்கோவன் 

15.08.2021

 

கருத்துகள் இல்லை: