நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழ்ச்சொல்லாக்க அறிஞர் முனைவர் சி. இரா. இளங்கோவன் மறைவு!

முனைவர் சி.இரா.இளங்கோவன்


 தமிழ்ப்பற்றாளரும்,  திராவிட இயக்க உணர்வாளரும், தாவரவியல் அறிஞரும் தமிழ்ச்சொல்லாக்கத்தில் தம் ஆய்வுப்பணியை அமைத்துக்கொண்டவருமான முனைவர் சி.இரா. இளங்கோவன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று (25.04.2021) இரவு பதினொரு மணியளவில் சிதம்பரத்தில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியைத் துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன். பத்தாண்டுகளாக நல்ல நட்புடன் பழகினோம். பண்ணுருட்டி அறிஞர் இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்கள் வழியாக நம் சி. இரா. இளங்கோவனார் எனக்கு அறிமுகம் ஆனார்கள். நம் இல்லத்திற்கு வந்துசெல்லும் அளவுக்குத் தொடர்பு வாய்த்தது. சிதம்பரம் சென்றால் கண்டு உரையாடும் வாய்ப்பினைப் பெறுவோம். கணினி நிரல் உருவாக்கித், தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கி வைத்துள்ள இவர்தம் ஆய்வு முயற்சி வெளியுலகுக்குப் பயன்பட வேண்டும் என்பது என் வேட்கை. தமிழி எழுத்துகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். இத் தமிழ்த்தொண்டரின் மறைவு தமிழுக்கு அமைந்த பேரிழப்பாக அமைந்துவிட்டது.
 
 கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் முனைவர் சி.இரா. இளங்கோவன். 20.03.1961 இல் பிறந்த இவரின் பெற்றோர் இராஜாபிள்ளை, அரங்கநாயகி ஆவர்.  சிதம்பரம் அண்ணாமலை நகரில் பிறந்த இவரின் முன்னோர் வாழ்விடம் அரியலூர் மாவட்டம் தென்னூர் (வரதராசன் பேட்டை) ஆகும்.

 தந்தையார் அரசு பணியில் இருந்ததால் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உள்ளிட்ட ஊர்களில் கல்வி கற்க நேர்ந்தது. புகுமுக வகுப்பைப் பொறையாறு த.பு.மா.லுத்ரன் கல்லூரியில் பயின்றவர். இளம் அறிவியல், முதுநிலை அறிவியல், இளம் முனைவர்ப் பட்டம், முனைவர்ப் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

 இளம் முனைவர்ப் பட்ட ஆய்வில் “சதுப்புநிலக் காட்டுத் தாவரங்களில் உள்ளமைப்பியல்” என்ற தலைப்பிலும், முனைவர்ப் பட்ட ஆய்வுக்குப் “பிச்சாவரம் காடுகளில் சுற்றுச்சூழல்” என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்து  பட்டம் பெற்றவர் (1992).

 1990 இல் அரசுப் பள்ளியில் பணியில் இணைந்த இவர் 1996 முதல் புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். இவர் தாம் பணியாற்றும் பள்ளியில் 200 மூலிகைகள் கொண்ட மூலிகைத்தோட்டம் ஒன்றை நிறுவிப் பாதுகாத்தார். இவர்தம் உறவினர் திரு. சண்முகசுந்தரம் (IFS) ஐயா அவர்கள் வனத்துறையில் அதிகாரியாக இருந்தவர். வனத்துறை அறிவுடன் தமிழ்ப்பற்றும் நிறைந்தவர். எனவே தமிழில் ஈடுபாடுகொண்டவராக சி.இரா. இளங்கோவனும் இருந்தார். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

 தமிழில் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தமிழ்ச் சொல்லாக்கம் குறித்த தலைப்பினைத் தேர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்விற்கு இணைந்தவர்.

 தமிழில் உள்ள சொற்களை ஆராய்ந்து தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் பலவாண்டுகளாகச் சிந்தித்து வந்தவர். தமிழில் கூறப்பட்ட இலக்கணங்களைக் கொண்டு, கூறப்படாத இலக்கணங்களை நுண்ணிதின் அறிந்து சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டவர். இதனால் கணினியில் நிரல் எழுதித் தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்று பட்டியலிட்டு வைத்துள்ளார்.

 தமிழ்ச் சொற்களில் இந்த எழுத்தை அடுத்து இந்த எழுத்தைக் கொண்டுதான் சொற்கள் வரும் என்று கூறி, அதற்கு மீறி வந்தால் அவை தமிழ்ச்சொல் இல்லை, பிறமொழிச்சொல் என்று அறிவியல் அடிப்படையில் நிறுவ இவர் முயற்சி உதவும்.

 மொழி முதலாகும் எழுத்துகள், மொழிக்கு இறுதியாகும் எழுத்துகளைக் கொண்டும் எந்த எந்த எழுத்துகளை அடுத்து எந்த எழுத்துகள் வரும், எந்த எந்த எழுத்துகள் வராது என்றும் துல்லியமாகக் கணித்தவர்.

 பண்டைய இலக்கண நூல் வல்லார் வகுத்த இலக்கண உண்மைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் கணினி அடிப்படையில் இவர் ஆய்வு உள்ளது. அதுபோல் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை உள்ள நூல்களில் இடம்பெற்றுள்ள சொற்களை அகரவரிசைப்படுத்தவும், சொல் பயன்பாடுகள் எத்தனை இடம்பெற்றுள்ளன என்று அறியவும் இவரின் தமிழாய்வுப்பணிகள் உதவும்.

கணினி நிரல் கொண்டு சற்றொப்ப பத்து இலட்சம் சொற்களை உருவாக்கி அடைவுப்படுத்தி வைத்துள்ளார். இவரின் நிரலில் மரபு இலக்கணத்திற்கு உட்பட்டுக் கணினி உருவாக்கி வைத்துள்ள புதிய சொற்களைக் கலைச்சொல் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

 கலைச்சொல் உருவாக்கத்தில் இனி சிந்தித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. கணினி உருவாக்கித் தந்துள்ள மரபுக்கு உட்பட்ட, பயன்பாட்டில் இல்லாத சொற்களை நாம் பயன்படுத்த தாவரவியல் அறிஞர் சி.இரா. இளங்கோவனின் பணி பயன்படும்.
 
 கல்வெட்டுத் துறையில் ஈடுபாடுகொண்ட சி.இரா. இளங்கோவன் அவர்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளைக் கொண்டு நண்பர்களுக்கு மடல் எழுதுவது, நாட்குறிப்பேடு எழுதுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கராத்தே என்று அழைக்கப்படும் கைச்சண்டையில் கறுப்புப் பட்டை வாங்கியவர். இசைக்குக் குறிப்பு வரைவதுபோல் ஒருவரின் உடலசைவுக்குக் குறிப்பு வரையும் பேராற்றல் பெற்றவர். முனைவர் சி.இரா. இளங்கோவனின் புகழ் நின்று நிலவட்டும்!

(என் பழைய கட்டுரையின் சுருக்க வடிவம்)

கருத்துகள் இல்லை: