நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 மார்ச், 2021

பேராசிரியர் வே. சங்கர் மறைவு!

     

                                                   பேராசிரியர் வே. சங்கர்

  புதுச்சேரியில் அமைந்துள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவரும் எங்களின் குடும்ப நண்பருமான பேராசிரியர் வே. சங்கர் அவர்கள் இன்று (30.03.2021) இயற்கை எய்திய செய்தியறிந்து பெருங்கவலையுறுகின்றேன். அன்னாரை இழந்துவருந்தும் அவர்தம் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேராசிரியர் வே. சங்கர் அவர்கள் சற்றொப்ப முப்பதாண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சமற்கிருதத்தில் பெரும்புலமையுடையவர். தொழில்நுட்ப அறிவு நிரம்பப்பெற்றவர். தமிழ் இலக்கணத்திலும் பக்தி இலக்கியத்திலும் பெரும்புலமை கொண்டவர். சோதிட அறிவில் இவருக்கு நிகர் இல்லை என்னும் அளவில் பெரும்புலமை பெற்றவர். அத்துறை சார்ந்து பல நூல்களை எழுதிப், பெரும்புகழ் பெற்றவர். ஆய்வுக் கட்டுரைகள் வரைவதிலும் ஆர்வம்கொண்டவர். நண்பர்களைப் போற்றுவதில் தலைசிறந்தவர். பழகுதற்கு இனிய பண்பாளரான வே.சங்கர் போலும் பேராசிரியர்கள் நம் வாழ்வில் ஓரிருவரே நட்பாகக் கிடைப்பார்கள். இவருடன் இணைந்து பணியாற்றிய இனிய பொழுதுகள் என் நினைவில் தோன்றித் துன்பத்தைப் பன்மடங்காக்குகின்றன. உடன் பணியாற்றும் ஆசிரியர்களிடத்தும், பழகும் நண்பர்களிடத்தும் அன்புடன் பழகியவர்.  விருந்தோம்பலில் தலைசிறந்தவர். பாடம் நடத்துவதிலும், நேரம் போற்றுவதிலும் முன்மாதிரியானவர். மாணவர்களின் உள்ளம்கவர்ந்த பேராசிரியர். இவரின் மறைவு தமிழ் இலக்கியப் பேருலகுக்குப் பெரும் இழப்பாகும்.

 தமிழ் இலக்கண இலக்கிய உலகிற்குப் பேராசிரியர் வே. சங்கர் வழங்கிய கொடைகளுள் சில:

1.   இயல் தமிழ் இலக்கணம்

2.   மொழித்திறனும் மொழிப் பயிற்சியும்

3.   தமிழ் இலக்கண அகராதி

4.   மொழித்திறன்

5.   உயிர்ப் பயணம்

6.   சித்தாந்த போதம்

7.   வாழும் நெறிகள்

8.   அருள் கவிச் சோலை

9.   இன்பப் பூங்கா

10. நல்வழிச் சாரல்

11. தமிழை நன்றாக எழுதுவோம்

12. ஆறடிக் கதம்பம்

13. அழகுமணி ஐந்நூறு

14. மதிச்சுடர் மாலை

15. ஆத்ம ஞானம்

16. ஜோதிஷ் ஞானம்

17. ஜோதிஷ் பலன்

18. வாஸ்து ஞானம்

19. தினக்கிரக சாரம்

   20. VOYAGE OF THE SOUL (2010) 

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். பேராசிரியர் வே.சங்கர் அவர்களின் புகழைப் போற்றுவோம்.


 

ஞாயிறு, 28 மார்ச், 2021

புலவர் நா. தியாகராசன் மறைவு!

 


புலவர் நா. தியாகராசன் மறைவு!

மயிலாடுதுறையை அடுத்துள்ள பூம்புகார்மேலப்பள்ளம் ஊரில் வாழ்ந்துவந்த புலவர் நா. தியாகராசன் அவர்கள் 27.03.2021 இரவு இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்னாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சிலப்பதிகாரத்தை எழுத்தெண்ணிக் கற்றதுடன் சிலப்பதிகாரத்துக் கதை நிகழ்வுகள் பூம்புகாரில் எந்த எந்த இடங்களில் நிகழ்வுற்றன என்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் ஆராய்ச்சி அறிவு நிரம்பப்பெற்றவர் நம் புலவர் பெருமகனார். இவர்தம் உதவியால்தான் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்த . சுந்தரேசனார் ஆவணப்படத்தை உயிரோட்டமாக எங்களால் எடுக்க முடிந்தது



புலவர் அவர்களின் தமிழ்ப்பணிகளையும், சிலப்பதிகாரத்து நுட்பங்களையும் அவர் வாய்மொழியாகவே சிலவாண்டுகளுக்கு முன்பு காணொலியாகப் பதிவுசெய்து வைத்துள்ளேன். சில காணொலிப் பதிவுகள் இணையத்திலும் உலவுமாறும் செய்து புலவர் நா. தியாகராசனாரின் வாழ்த்தினைப் பெற்றுள்ளேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்று அன்புசெலுத்திய அவர்தம் பேருள்ளத்தைப் போற்றி வணங்குகின்றேன். புலவர் அவர்களின் பெருமையைப் போற்றுவதும் சிலப்பதிகாரத்து ஆராய்ச்சியை முன்னெடுப்பதும் அவர்களுக்குச் செய்யும் நன்றிப் படையலாக இருக்கும்.

புலவர் நா. தியாகராசனாரின் பெருமை மிகு வாழ்வினை மீள்பதிவு செய்கின்றேன்.

புலவர் நா. தியாகராசன் நினைவுகளும் வாழ்க்கைக் குறிப்புகளும்

தமிழர்களின் கலைக்கருவூலமான சிலப்பதிகாரத்தின் சிறப்புகள், அதில் இடம்பெற்றுள்ள ஊர்ப்பெயர்கள், கதைமாந்தர்களின் பெயர்கள், சிலப்பதிகாரப் பதிப்புகள், சிலப்பதிகார ஆய்வறிஞர்கள், சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றும் பொழிஞர்கள், பூம்புகார் குறித்த வரலாற்று ஆய்வுகள் என ஒரு நூற்றாண்டுக்குரிய செய்திகள் அனைத்தையும் தம் உள்ளத்தில் தேக்கிவைத்துள்ள, நடமாடும்சிலப்பதிகார ஆய்வடங்கல்என்று புலவர் நா. தியாகராசனைக் குறிப்பிட்டால் சாலப் பொருத்தமாக இருக்கும்.

புலவர் நா. தியாகராசனைப் பலவாண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக நினைவு. அதன் பிறகு குடந்தைக் கல்லூரியில் மீண்டும் சந்திப்பு; பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்த பொதிகை தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிபரப்பின் படப்பிடிப்புக்குப் பூம்புகாருக்குச் சென்றபொழுது மீண்டும் சந்திப்பு; பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழாவுக்குப் புதுவைக்கு வந்தபொழுது சந்திப்பு எனப் புலவருடன் அமைந்த தொடர்பு வளர்பிறைபோல் வளர்ந்துகொண்டே இருந்தது. இடையில் செல்பேசி உரையாடலுக்கும் குறைவில்லை.

அண்மையில் ஒருநாள் புலவரின் செல்பேசி அழைத்தது. மறுமுனையில் அமைந்த அவரின் குரலில் விளரிப்பண் போல் விம்மல் தெரிந்தது. உடல்நலம் பாதிப்புற்றுள்ளதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். புலவருக்கு ஏதோ நடந்துள்ளது என்று மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கிழமையாக மயிலாடுதுறையில் மருத்துவம் பார்த்துக்கொண்டு, இப்பொழுது மேலப்பெரும்பள்ளம் வீட்டில் ஓய்வில் இருப்பதாக உரைத்தார். நானும் அவருக்கு ஆறுதலாக வரும் காரிக்கிழமையில் இல்லம் வந்து சந்திப்பதாக உரைத்து, உடலைப் போற்றுங்கள் என்று குறிப்பிட்டு, செல்பேசியை நிறுத்தினேன். புலவரின் அறிவாற்றல், பணிகள் மீண்டும் மீண்டும் என் நினைவில் தோன்றி வருத்தியது. எனக்கு அமைந்த அனைத்துப் பணிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்தக் காரிக்கிழமை(02.07.2016) பூம்புகார் செல்லத் திட்டமிட்டேன்.

புலவர் நா. தியாகராசனாரைப் பார்த்து, ஆறுதல் சொல்லிவிட்டு வருவது அனைவராலும்  இயலும். அவ்வகையில் எளிய பயணமாக நான் என் பயணத்தை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. புலவரின் அறிவாற்றலை எதிர்வரும் காலத்திற்குப் பதிந்துவைக்க எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே என்று என் உள்மனம் நடுங்கியது. புலவரின் உடல்நலனுக்கு ஏதேனும் நடந்தால் பல அரிய செய்திகளை இழந்துவிடுவோமே என்று கவலையுற்று ஒளிப்பதிவுக் கருவிகளுடன் பூம்புகாருக்குப் புறப்பட்டோம்.

காலை பதினொரு மணிக்கு நாங்கள் புலவரின் இல்லத்தை அடைந்தோம். எங்களைக் கண்டதும் புலவருக்குப் புத்துணர்ச்சி வந்தது. அன்பொழுக வரவேற்றார்; வீட்டின் உள்ளே அழைத்துச்சென்று அவரின் சிறந்த சேமிப்பான யாழ்நூலின் முதல்பதிப்பை என் கையில் தந்துவிட்டு நான் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டு, அவர் மகிழ்ந்தார். அருகில் இருந்த அரிய நூல்களின் தொகுதிகளை ஆர்வமாக அறிமுகம் செய்தார். அப்பொழுது புலவரின் மகனார் தயக்கத்துடன் அருகில் வந்து, அண்மையில் அப்பாவுக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்தது. அமைதியாக உரையாடுங்கள் என்று அன்புடன் குறிப்பிட்டார். இப்பொழுது எனக்குப் புலவரின் உடல்நிலையும் அவரின் பகுத்தறிவு உள்ளமும் புரிந்தது. மெதுவாக உடல்நலம் வினவினேன். நலமாக இருப்பதாகவும், இரண்டு நாளாகப் புத்துணர்வுடன் இருப்பதாகவும் கூறினார்.

அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று, அருகில் இருந்த ஒரு திருக்கோயிலுக்குப் புறப்பட்டோம். இக்கோயில் அருளாளர்களால் பாடல் பெற்றது என்ற குறிப்பைப் புலவரின் வாய்மொழியால் அறிந்தோம். திருக்கோயில் ஒட்டிய ஒரு தோப்பில் அமர்ந்து புலவரின் சிலப்பதிகாரச் சிறப்புரையைப் பதிவு செய்தோம். அரிய செய்திகளைப் புலவர் சொல்ல நினைத்தாலும் அடிக்கடி நாக்கு வறண்டு, பேச்சைத் தடைப்படுத்தியது. இடையிடையே நீரைப் பருகியவாறு புலவர் தம் பேச்சை வழங்கினார். சிலப்பதிகார உரையும், பூம்புகார் வரலாறும் ஒளிக்காட்சியாகப் பதிவாயின. ‘நயாகராஅருவிபோலப் பொங்கிவர வேண்டிய பேச்சு இப்பொழுது, சிற்றூர் ஓடைபோலச் சிறுத்து அமைந்ததைப் புலவரே ஒத்துக்கொண்டார். இந்த அளவாவது கிடைத்ததே என்று நான் ஆறுதல் பெற்றேன்.

புலவர் நா. தியாகராசன் பூம்புகாருக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ள மேலப்பெரும்பள்ளம் ஊரைச் சார்ந்த பெருநிலக்கிழார் மரபினர். மேலப்பெரும்பள்ளம் என்னும் இவ்வூர் திருவலம்புரம் என்னும் பெயரில் சமயவாணர்கள் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. அருளாளர்களால் பாடல்பெற்ற பெருமைக்குரியது இவ்வூர். புலவர் நா. தியாகராசனுக்கு அமைந்த மரபுவழிச்செல்வ வளத்தால் ஊரில் உள்ள அனைவரின் மதிப்புக்கும் உரியவராக விளங்குபவர். இளமைக்காலம் முதல் சிலப்பதிகாரத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் கொண்டவராக விளங்கி, சிலப்பதிகார அறிஞர்களை அழைத்துப், பூம்புகாரில் சிலப்பதிகாரத் திருவிழாக்கள், ஆய்வரங்குகள், பொழிவுகள் நடைபெற வழிவகுத்தவர். என்.டி. என்று அனைத்து மக்களாலும் அழைத்துப் போற்றப்படும் புலவர் அவர்கள் பேராயக் கட்சியில் ஈடுபாடுகொண்டவர். மூன்று முறை ஊராட்சிமன்றத் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றியவர்(1963 முதல் 1973 வரை; மீண்டும் 1983 முதல் 1988 வரை). செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்தவர்.

 

பூம்புகாரின் சிறப்பினை உலகம் அறிவதற்கு ஆய்வறிஞர்களைத் தொடர்ந்து அழைத்துவந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், வசதிகளையும் செய்து தந்து, பூம்புகார் வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர் நம் புலவர். தூண்டல் இல்லையேல் துலக்கம் இல்லை! இலக்கிய விழாக்களுக்குத் துணை நின்றமை போன்று, பூம்புகாரின் அகழாய்வுப்பணிக்கும், கடலாய்வுப்பணிக்கும் பெருந்துணை செய்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தம் செல்வமாகப் பாதுகாத்து வைத்துள்ளார். புலவரின் தந்தையார் நாகமுத்து படையாட்சி  தம்முடைய இருபதாம் அகவையில்  தென்னாப்பிரிக்கா சென்று பெரும் பொருள் திரட்டியவர்(தென்னாப்பிரிக்கப் போரில் முதல் உயிர்க்கொடை தந்த நாகமுத்து படையாட்சியாரிலும் இவர் வேறானவர்).

நாகமுத்து படையாட்சி தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது காந்தியாரின் போராட்டம் வலுப்பெற்று நடந்துள்ளது. சோகன்சுபர்க்கு, கிம்பர்லி போன்ற இடங்களில் கடைகள் வைத்து நாகமுத்து படையாட்சி பெரும் பொருளீட்டி,1930 ஆம் ஆண்டு அளவில் இந்தியா திரும்பினார். மேலப்பெரும்பள்ளத்தில் மிகுதியான நிலங்களை வாங்கி வேளாண்மையில் ஈடுபட்டிருந்தார். நாகமுத்து படையாட்சி மேலப்பெரும்பள்ளத்தை அடுத்துள்ள திருவெண்காட்டில் பிறந்த உதயம் அம்மையாரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர்களுக்கு ஒன்பது மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதலில் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தனர். நான்காவது குழந்தையாகப் புலவர் தியாகராசன் 16.12.1928 இல் பிறந்தவர். அடுத்து மூன்று பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளுமாகப் பிறந்தனர்.

நா. தியாகராசன் மேலப்பெரும்பள்ளத்தில் தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் பயின்றவர். அதனை அடுத்து மேலையூரில் வாழ்ந்த வாஞ்சிநாத ஐயரிடம் மூன்று ஆண்டு பயின்றவர். இப்பள்ளிப் பருவத்தில் சாரணர் படையில் இணைந்து தொண்டாற்றியவர். பள்ளி ஆண்டுவிழாவில் நந்தனார் வேடமிட்டு நடித்தவர். கலையுள்ளமும், உறுதியான உடலும் இவருக்குப் பள்ளி வாழ்க்கையில் கிடைத்தன. யோகப் பயிற்சியிலும் வல்லவராக விளங்கியவர்.

நா. தியாகராசன் மயிலாடுதுறையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். பள்ளிப்பருவத்தில் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நினைவுத் தங்கப்பதக்கம், சுழற்கோப்பைகளைப் பள்ளியில் பெற்றவர். தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று, பொதுத்தொண்டிலும், சமூக சேவையிலும் மாணவப்பருவத்தில் ஈடுபட்டவர். பள்ளியில் மாணவர் தலைவராகப் பணியாற்றியவர். இப்பொறுப்புகள் இவருக்குப் பின்னாளில் மக்கள் தொண்டு செய்யும் வாய்ப்பினைத் தந்தன. பள்ளியின் பொன்விழாவுக்குத் திருவனந்தபுரத்தில் திவானாகப் பணியாற்றிய சி.பி.இராமசாமி ஐயரை அழைத்துப் பேசச்செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

மயிலாடுதுறையில் வாழ்ந்த செயபாரதியை நா. தியாகராசன் 27.08.1953 இல் திருமணம்செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டவர். இவர்களுக்கு எழில், பாரி, பார்த்திபன், இராமன் என்ற நான்கு மகன்களும் வாசுகி என்ற ஒரு மகளும் இல்லறச் செல்வங்களாக வாய்த்தனர்.

1957 இல் மாதவி மன்றம் என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழறிஞர்களை அழைத்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியமையால் புலவர்களின் தொடர்பு இவருக்கு அமைந்தது. இதனால் தமிழை முறையாகப் பயின்று பட்டம்பெற விரும்பினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966 முதல் 1968 வரை பயின்று புலவர் பட்டம் பெற்றவர்.

புலவர் நா.தியாகராசன் காந்தியக் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அதனால் இன்றுவரை பேராயக் கட்சியில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றிவருபவர். வேளாண்மைச் சங்க ஈடுபாடுகொண்ட இவர் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு உழவர்களின் உரிமை மீட்க சிறைசென்றவர். திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர். புலவர் நா.தியாகராசன் புகைப்படக் கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அரிய படங்கள் சிலவற்றை எடுத்துப் பாதுகாத்து வருகின்றார். இவரின் படங்களை அக்காலத்து ஏடுகள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளன. கலைக்கதிர் இதழினைத் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர்.

புலவர் நா. தியாகராசன் மேலப்பெரும்பள்ளத்தின் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபொழுது ஊருக்கு முதன்முதல் மின்சார வசதி ஏற்படுத்தித் தந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வருதற்குக் காரணமாக இருந்தார். மேலப்பெரும்பள்ளம், சாய்க்காடு பல்லவனீச்சரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கோயில்களின் அறங்காவல் குழுத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கோயில்கள் இவரால் திருக்குடமுழுக்குக் கண்டன. பல்வேறு ஊர்களில் அமைந்த நூலகங்களுக்கு இவர் உறுப்பினராகவும், புரவலராகவும் விளங்கித் தொண்டுசெய்துள்ளார்.

புலவர் நா.தியாகராசன் திரு. சொக்கலிங்கம் பிள்ளையுடன் இணைந்து மேலையூர் தாசில்பண்ணை கௌரி அம்மாளிடம் பேசி, ஐந்து ஏக்கர் நிலம்பெற்று மேலையூரில் கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்தவர், கீழ்த்திசைப் பண்பாட்டுக் கல்லூரி என்ற பெயரில் 14 மாணவர்களின் சேர்க்கையுடன் 02.05.1964 இல் தொடங்கப்பட்ட கல்லூரியில் பின்னாளில் ஆண்டுக்கு இருநூறுபேர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அன்றைய நாளில் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்பட்டு, பயிற்சிக் கட்டணம் இல்லாமல் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. பூம்புகார்க் கல்லூரியாக மிளிர்ந்துள்ள இக்கல்லூரியில் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இக்கல்லூரி இன்று தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நிருவாகம் செய்யப்படுகின்றது.

புலவர் நா.தியாகராசன் தொடங்கிய மாதவி மன்றத்திற்குத் தமிழறிஞர்கள் மு. வரதராசனார், ..ஞானசம்பந்தன், .பொ.சிவஞானம், மர்ரே எஸ்.இராஜம், எஸ்.சிவபாதசுந்தரம், .தண்டபாணி தேசிகர், குன்றக்குடி அடிகளார், கி..பெ. விசுவநாதம், தீபம் நா. பார்த்தசாரதி, புலவர் கீரன், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை .சுந்தரேசனார், சி.கோவிந்தராசனார், கோ.வி.மணிசேகரன், உள்ளிட்ட இலக்கியவாணர்கள் வருகை தந்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர்களான கே.வி.இராமன், சதாசிவ பண்டாரத்தார். முனைவர் மா.இராசமாணிக்கனார், முனைவர் நாகசாமி, முனைவர் நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

புலவர் தியாகராசன் பல்வேறு இதழ்களுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரைந்ததுடன் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். அவ்வகையில் பூம்புகார் வரலாற்று ஆய்வு(1990), கொற்கையும் அயல்நாட்டுறவும்(1993),  பூம்புகாரின் தொன்மை (1967), கணிகையர் (1976), சங்க இலக்கியம் காட்டும் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டினம்(2010), கொலைக்களக் காதை, துன்பமாலை, வழக்குரைகாதை (2014), இன்றைய நிலையில் பூம்புகார் - ஒரு வரலாற்றுப் பின்னணி(2014), நாகை மாவட்டத் தொல்லியல் தடயங்கள்(2013) உள்ளிட்ட இவரின் ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

புலவர் நா. தியாகராசன் மூன்று நூல்களை வழங்கியுள்ளார்.

1.பூம்புகார்க் கல்லூரியைத் தொடங்கிவைக்க வந்த மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையார் அவர்களுக்கு மே 1964 இல் வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட The Glori of Kaveripoompattinam

2. பூம்புகார்த் தொழில் மாநாட்டிற்கு வருகைதந்த மத்திய அமைச்சர் மன்மோகன்சிங் அவர்களுக்கு 07.03.1993 இல் வழங்கிய நூல் Historical  Vestiges at Pumpuhar.

3. பூம்புகாரில் வரலாற்று எச்சங்கள்.

பூம்புகாரின் சிறப்புரைக்கும் டிஸ்கவரிசேனல் ஒளிபரப்பிலும், பொதிகை தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், தந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும் புலவர் நா. தியாகராசன் கலந்துகொண்டு பூம்புகார் குறித்த தொன்மையைப் பதிவுசெய்துள்ளார்.

புலவர் நா.தியாகராசன் பூம்புகாரை மீட்டுரைக்க வந்த ஓர் ஆய்வறிஞர் என்று துணிந்து கூறலாம்.

 

நன்றி: கு. சக்திவேல் எழுதிய புலவர் நா. தியாகராசன் நூல்.

 

காணொலி: பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் பார்க்கவும்.