நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 2 மே, 2018

மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு நாள் விழா!



 கண்ணகி கோவில்(1)
கண்ணகி கோவில்(2)
கண்ணகி கோவில்(3)



  சிலப்பதிகாரத்தைப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் அதில் புதைந்துகிடக்கும் இசைநுட்பங்களையும் காப்பியக் கட்டமைப்பினையும் வரலாற்றுக் குறிப்புகளையும் எண்ணி எண்ணி வியப்பது உண்டு. என் ஆசிரியர் பெருமான், இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்கள், "பத்தாண்டுகள் படித்தேன் சிலப்பதிகாரம் ஓரளவு விளங்கிற்று எனவும், அறுபது ஆண்டுகளாகப் படிக்கின்றேன்; இன்னும் பல பகுதிகள் விளங்கவில்லை" எனவும் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அந்த அளவிற்குச் சிலப்பதிகாரம் நுட்பமான காப்பியம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

  சிலப்பதிகாரத்தின் கதைக்களமாக விளங்கிய பூம்புகாருக்குப் பலமுறை சென்றுள்ளேன் (இன்றைய பூம்புகாருக்கு ஐந்துகல் தொலைவில் பழைய பூம்புகார் உள்ளது என்பது அறிஞர் கருத்து). அதுபோல் மதுரைக்கும் பலமுறை சென்றுள்ளேன். ஆனால் காப்பியத் தலைவி கண்ணகி வானுலகம் புக்க இடமான வேங்கை மரங்களடர்ந்த "செங்கோட்டு உயர்வரைச் சேண் உயர் சிலம்புக்கு"ச் செல்லும் வாய்ப்பு இதுநாள் வரை அமையாமல் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் தமிழகம் - கேரளம் எல்லைப் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலுக்குச் செல்லும் விருப்பம் எனக்கு எழுவதும், அடங்குவதுமாக இருந்தது. இந்தச் சித்திரை முழுநிலவு நாளில் (30.04.2018) என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது.

  நான்கு நாட்களுக்கு முன்பாக என் அருமை நண்பர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் தொலைபேசியில் அழைத்து, சித்திரை முழுநிலவு நாளில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், நான் உரிய நாளில் வந்துசேருமாறும் அன்புடன் வேண்டுகோள் வைத்தார்கள். நண்பரின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, எனக்கிருந்த பல்வேறு பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, முதல்நாளே, தேனி நகரத்திற்குச் சென்று அவர் மனையில் தங்கினேன் (29.04.2018).

  30.04.2018 காலை 7.30 மணிக்கு எங்கள் உந்துவண்டி புறப்பட்டது. சின்னமனூர் வழியாகக் கம்பம் சென்றோம். சின்னமனூர் பெயர்ப்பலகையைப் பார்த்ததும் சின்னமனூர்ச் செப்பேட்டின் சிறப்பை நண்பர்களுக்கு நினைவூட்டினேன். கம்பம் பயணியர் மாளிகையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர்  திரு. மு. இராசேந்திரன் இ. ஆ. ப. அவர்கள் தங்கியிருக்கும் விவரம் அறிந்து, அவர்களைச் சந்திக்க எண்ணினோம். எங்கள் வருகையை முன்பே அறிந்திருந்த திரு. மு. இராசேந்திரன் எங்களை அன்பொழுக வரவேற்றார்கள். இதுநாள்வரை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செய்துவரும் பணிகளையும், எதிர்காலத்தில் செய்ய விரும்பும் செயல்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். காலைச் சிற்றுண்டியை அனைவரும் உண்டபடியே பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டோம். என் நெடுநாளைய நண்பர் முனைவர் மனோகரன் (தேவாரம் - வேளாண்மை அதிகாரி) அவர்களையும் எதிர்பாராமல் இங்குச் சந்தித்தமை மகிழ்ச்சி தந்தது. இரண்டு உந்து வண்டிகளில் கம்பத்திலிருந்து அனைவரும் புறப்பட்டோம்.

  உந்துவண்டியில் செல்லும்பொழுது முல்லைப் பேரியாற்றில் அணைகட்டிய பென்னிகுய்க்கு அவர்களின் சிறப்புகளையும் அவரின் பொறியியல் அறிவு, விடாமுயற்சியின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தபடியே சென்றோம். மலையேறுவதற்கு வசதியாக, கூடலூரில் நாங்கள் வேறு வண்டிக்கு மாறி, ஏறிக்கொண்டோம். கேரள எல்லையான குமுளியை 11 மணிக்கு அடைந்தோம். முன்பே திட்டமிட்டவாறு உந்துவண்டிக்கும், செல்லும் நபர்களின் எண்ணிக்கைக்குமாக இரண்டு அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டோம்.

  தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு வனத்துறை, கேரள காவல்துறை, கேரள வனத்துறையினர் இணைந்து, மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு மக்கள் சென்று வழிபடுவதற்குரிய ஏற்பாடுகளை ஆண்டுதோறும் செய்வது வழக்கம்.  தமிழகத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் மக்கள் வழிபாட்டுக்கு ஆர்வமுடன் வருகின்றனர். வழிபாட்டுக்கு வரும் மக்களுக்குக் கேரளத்துக் காவல்துறையினரும், வனத்துறையினரும் பல்வேறு இன்னல்கள் தருவதாக ஆண்டுதோறும் பக்தர்கள் குற்றம்சாற்றுவது உண்டு. இந்தப் பயணத்தில் நானும் உணர்ந்தேன்.

  கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் எல்லை வகுக்கப்படாமல் பல கல் தொலைவு பகுதி உள்ளது. அதில் கண்ணகி கோவில் மலைப்பகுதியும் அடங்கும். கண்ணகி கோவில் தமிழகத்தின் எல்லையில் இருப்பதை அண்மைக்காலம் வரை தமிழகத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய சான்றுகளால் அறியமுடிகின்றது. இதுகுறித்த வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருட்டினன் எழுதிய கட்டுரை ஒன்று அரிய செய்திகளைக் கொண்டது (தினமணி 25-04-2008).

பூம்புகார் புலவர் நா. தியாகராசனுடன் உரையாடியபொழுது அவர் பத்தாண்டுகளுக்கும் மேல் கண்ணகி கோவிலுக்குச் சென்று வந்ததாகவும் பேராசிரியர் கோவிந்தராசனார், புலவர் செ.இராசு, முனைவர் துளசி இராமசாமி, வலம்புரி ஜான், சோமசுந்தரம் உள்ளிட்டோர் இதுகுறித்து அரிய நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

     தமிழகத்து மக்கள் மூன்றுநாள் பயணமாக ஆட்டுக்குட்டி முதலியவற்றைக் கொண்டுபோய் வெட்டி, பொங்கலிட்டுப் படையல் இட்டு, கண்ணகி அம்மனை வழிபாடு செய்துள்ளனர் என்பதை அங்கு வந்த மூத்தோர்வாய் கேட்டுணர்ந்தேன்.  கண்ணகி வழிபாடு குறித்து, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பல்வேறு குறிப்புகள் உள்ளன.

"செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலைநிரம்பிய
அணி கயம் பல உளஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும்கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனைஅதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்;"  (சிலப்பதிகாரம், வஞ்சி, வரம்தரு காதை 54-60)

எனவும்

"முலைமுகம் திருகிய மூவா மேனி
பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி,
பூவும்புகையும்மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி"
                      (சிலப்பதிகாரம், வஞ்சி, வரம்தரு காதை 150-155)

எனவும் குறிப்புகள் உண்டு.

  தமிழ் மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கண்ணகி கோவிலை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பளியன்குடியிலிருந்து மலையேறி, கண்ணகி கோவிலை அடையலாம். அந்தப் பாதை வழியாகவும் தமிழகத்து மக்கள் ஆறு கல் தொலைவு நடந்து வந்து, ஆண்டுதோறும் வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு செல்லும் பாதையைத் தமிழக அரசு செப்பனிட்டுப், பாதுகாப்பை உருவாக்கினால் கேரள அரசின் தயவு நமக்குத் தேவையில்லை. நம் மக்கள் விடுதலையாகக் கண்ணகிக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம். 1959 ஆம் ஆண்டு  வரை கண்ணகி கோவிலைக்  கண்டுகொள்ளாமல் இருந்த கேரள அரசு, படிப்படியாகச் சூழ்ச்சி செய்து, 1976  முதல் தம் வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியது. தேக்கடியிலிருந்து அவசர அவசரமாக 14 கி.மீ. சாலையைத் தம் மலைப்பகுதியில் அமைத்து, கண்ணகி கோவிலுக்கு உரிமைகோரும் வேலையைத் தொடங்கியது. காட்டுவிலங்குகளைக் காரணம் காட்டி, மக்கள் சென்று வழிபடத் தடை ஏற்படுத்தியது. கோவிலில் இருந்த சிலைகள், கல்வெட்டுகள், கோபுரப் பகுதிகள் யாவும் சிதைக்கப்பட்டுக், கோவில் அடையாளம் காணமுடியாதபடி யாராலோ பாழ்படுத்தப்பட்டுவிட்டது. கண்ணகி கோவிலில் மூன்று கோவில் பகுதிகள் காணப்படுகின்றன. பழைய சிலைகள் நீக்கப்பெற்று இன்று புதிய சிலைகளை வைத்துள்ளனர். யாண்டும் கண்ணகியின் உருவினைக் காண இயலவில்லை. கண்ணகி அமர்ந்த கோலத்தில் இருந்த அடிப்பகுதி மட்டும் இருப்பதாகவும், தலைப்பகுதி உடைக்கப்பட்டு, வேறு இடத்தில் கிடந்தது எனவும் தஞ்சைப் பேராசிரியர் கோவிந்தராசனார் அதனைப் படமாக வரைந்து கொண்டுவந்ததாகவும், தலைப்பகுதி சிலையைக் கொண்டு வந்தததாகவும் செய்திகள் ஆய்வுலகில் உள்ளன.


  மங்கலதேவி கண்ணகி கோவிலுக்குக் கேரள மாநிலம் இடுக்கி வட்டத்தில் இருக்கும் குமுளியிலிருந்து சித்திரை முழுநிலவுநாளில் மட்டும் செல்ல இயலும். அதுபோல் இந்த நாளில் தமிழகத்தின் கூடலூர்ப் பகுதியில் உள்ள பளியன்குடியிலிருந்து ஆறு கல் தொலைவு நடந்து கண்ணகி கோவிலை அடையலாம்.

  நடந்து செல்ல இயலாதவர்கள் குமுளி சென்று, பேருந்து நிலையத்தில் தற்காலிகமாகச் செயல்படும் அலுவலகத்தில் வண்டிகளுக்கான நுழைவுச்சீட்டு, ஆள்களுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்று, அதற்கென உள்ள உந்து வண்டிகளில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு 14 கி.மீ. பயணம் செய்து கோவிலை அடையலாம்.

  கண்ணகி கோவிலுக்குச் செல்லும் மக்களைக் கேரளக் காவல்துறையினர் சோதித்து அனுப்புகின்றனர். ஞெகிழிப் பைகள், உணவுப்பொட்டலங்களை எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ளனர். 5 லிட்டர் அளவுள்ள கேன்களில் தண்ணீர் கொண்டுசெல்லலாம். நடந்தும், வண்டிகளிலும் மக்கள் ஆர்வமாகச் செல்கின்றனர். கரடு முரடான பாதை. மேடு பள்ளங்கள் நிறைந்துள்ளது. காலை ஐந்துமணி முதல் வழிபாடு தொடங்குகின்றது. பிற்பகல் 3 மணிக்குள் வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும். மாலை 4 மணிக்கு அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் செல்ல அனுமதி என்பதால் அனைவரும் கோவிலுக்குச் சென்று வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழர்களும், கேரள மக்களும் பயபக்தியுடன் சென்று வழிபாடு நிகழ்த்துகின்றனர். போகும் வழியில் வண்டியை நிறுத்தி நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டேன்.

  கோவிலுக்கு முன்பாகவே நூறு அடி தூரத்தில் கோவிலின் சிதைந்த பகுதித் தூண்கள் கிடந்தன. கோவில் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் உரிமை கோருவார்கள் என்று திட்டமிட்டே, இக்கோவிலைச் சிதைத்துள்ளனர் போலும்!. முழுமையான சுற்றுச்சுவர்களுடன் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தோரண வாயில்களைக் கொண்டு கோவில் விளங்கியிருக்க வேண்டும். மதுரையை நோக்கியவாறு கோவிலின் முகப்பு வாயில் உள்ளது. கல்வெட்டுகள் சில காணப்படுகின்றன. கோவில்களில் இருந்த பழைய சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அண்மைக்கால வழிபாட்டுக்குரிய பகவதி சிலை, இலிங்கம் உள்ளிட்டவை உள்ளன.

  இராசஇராச சோழன் காலத்தில் இக்கோவிலுக்குத் திருப்பணி நடைபெற்றதை இலங்கை வரலாற்று நூலான சூள வம்சம் தெரிவிக்கின்றது. பாண்டிய மன்னர்களான குலசேகர பாண்டியன், கனக வீர தொண்டைமான் ஆகியோர் இக்கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகளின் துணையுடன் வழக்கறிஞர் இராதாகிருட்டினன் எழுதியுள்ளார்.  நாயக்க மன்னர்கள் காலத்தில், புன்செய் ஆற்றுத் தம்பிரான்கள் வழிவந்தவர்கள் மானியங்களும், திருப்பணிகளும் இக்கோவிலுக்குச் செய்துள்ளனர் என்பதையும் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காலப் பழைமையாலும், பரமாரிப்பு இல்லாமையாலும், திட்டமிட்ட அடையாள அழிப்புகளாலும் கண்ணகி கோவில் சிதைந்துள்ளதை நேரில் கண்டறிந்தேன்.

  கண்ணகி கோவில் அறக்கட்டளையின் நிறுவுநர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப. அவர்கள் கண்ணகி கோவிலின் அமைப்பு, வரலாற்றுச் சிறப்பு, தமிழகத்து மக்களின் வழிபாட்டு உணர்வு, இக்கோவிலை மீட்டு, தமிழகத்து மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் ஆண்டின் அனைத்து நாள்களிலும் சென்று வழிபட்டு வருவதற்குக் கேரள நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மு.இராசேந்திரன் இ.ஆ.ப., கோவில்மலை அரசர் இராம் நாயக், மு.இளங்கோவன், சிவ.முத்துக்குமாரசாமி



  கோவில்மலை அரசர் இராமன் நாயக் இராசமன்னார் (மன்னாடியார் என்ற பழங்குடி இனத்தின் தலைவர்) இன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தமை எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது. ஆணையர் மு.இராசேந்திரன் ஐயா அரசருக்கு என்னை அறிமுகம் செய்தார். கண்ணகி இந்த மலைப்பகுதிக்கு வந்தபொழுது, இந்த இராமன் நாயக்கின் முன்னோர்கள் சந்தித்ததாகவும், கண்ணகி குறித்த செய்திகள், நம்பிக்கைகள், பாடல்கள், சடங்குகள் இவர்களிடம் இருப்பதாகவும் அரசர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அடுத்த முறை தனித்து வந்து அரசரையும் அவர்களைச் சார்ந்த மக்களையும் சந்திப்பதாகத் தெரிவித்து அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். ஆணையர் மு.இராசேந்திரன் ஐயாவின் பரிந்துரையால் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டோம். கோவிலின் உள் பகுதிகளுக்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம் சிலரை நேர்காணல் செய்து பதிவுசெய்துகொண்டோம். இறைவழிபாட்டுக்கு வரும் மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இங்குச் செய்யப்பட்டிருந்தன.

 முழுநிலவு நாளில் மழைபொழிவது வழக்கமாம். அவ்வாறு மழை பெய்தால் மக்கள் நனையாமல் இருப்பதற்குத் தற்காலிகக் கூடாரங்களை அமைப்பது பேருதவியாக இருக்கும்.

  தேனி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து மக்கள் கண்ணகி வழிபாட்டுக்குச் சென்றுவர வசதி செய்துள்ளது. போதிய பேருந்து வசதிகளும் உள்ளன.

  கண்ணகி கோவில் வழிபாடு என்பது தேனி மாவட்டத்து மக்களுக்கும், கேரளாவின் குறிப்பிட்ட சில மாவட்டத்து மக்களுக்கு மட்டும் உரியதாக நினைத்தல் கூடாது. கண்ணகி தெய்வம் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு உரிமையுடையது. இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு அதிகமாக உள்ளது. அடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் சித்திரை முழுநிலவு நாளில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் வந்து குடும்பத்துடன் வழிபட்டுச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வதுபோல் தங்களின் முன்னோர் காலத்திலிருந்து வழிபாட்டில் உள்ள கண்ணகி கோவிலுக்கு வருவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நமக்குள்ள வழிபாட்டு  உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழ் மக்கள் தமிழக மலைப்பகுதியில் சாலை அமைத்துப் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திப், பண்பாடு காப்பதற்கு முன்வர வேண்டும்.

  பிற்பகல் 2.30 மணியிலிருந்து கண்ணகி கோவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு மக்கள் மலையிறங்கத் தொடங்கினர். அந்த நேத்தில் சிறிதளவு மழைபொழிந்தது. வண்டிகளின் வேகத்தில் பறந்த புழுதியை அந்த மென்மழை அடக்கியது. சிலப்பதிகார நினைவுகளுடனும், கண்ணகி கோவில் நினைவுகளுடனும் நாங்கள் குமுளியை நெருங்கியபொழுது, மக்களை ஏற்றிவருவதற்கு வெறும் ஜீப்பு வண்டிகள் மலையில் ஏறிக்கொண்டிருந்தன.




கண்ணகியை வழிபடுவதற்குக் காத்திருக்கும் மக்கள்

கண்ணகி கோவில் கல்வெட்டு




1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

பார்க்கவேண்டிய இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. நேரில் சென்றால்கூட இந்த அளவு பார்த்திருக்கமுடியுமா என்பது ஐயமே. ஐய்யப்பன் கோயிலுக்குச் செல்வதுபோல....என்றவாறு நீங்கள் கூறுவது இங்கு பொருந்திவருமோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.