நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 நவம்பர், 2010

பாவலர் முத்துராமனின் பா முயற்சி...


பாவலர் முத்துராமன்

அண்மையில் எனக்குத் தனித்தூதில் மூன்று நூல்கள் வந்தன.பிரித்துப் பார்த்தேன்.உரையும் பாட்டுமான நூல்கள்.

முதல் நூல் முகவரி இல்லாத பூக்கள்.
புதுப்பா முறையில் கற்பனை கலந்து இருந்தது. இதன் பாடுபொருள் சமூக நடப்புகள் ஆகும். பாடல்புனையும் அறிமுக நிலையில் இருக்கும் படைப்பாளிகளைப் போன்று சில பாடல்கள் இருப்பினும் வளர்வதற்குரிய வாய்ப்பு இருப்பதைப் பல பாடல்கள் காட்டுகின்றன.

இரண்டாம் நூல் வசந்தத்தை நாடும் இலைகள்.
இன்னிசை, நேரிசை, பஃறொடை வெண்பாக்களால் அமைந்த நூல். வெண்பாவின் ஓசை பாவலருக்குப் பிடிபட்டுள்ளது. தொடர்ந்து முத்தொள்ளாயிரம், நளவெண்பா, கொடைவிளக்கு(வ.சுப.மாணிக்கம்), பெருஞ்சித்திரனார், தங்கப்பா நூல்களைப் படித்துவர இவரால் மிகசிறந்த பாவலராக மிளிரமுடியும்.

சுவைத்திடத் தூண்டும் கனிகள் என்னும் தலைப்பிலான மூன்றாம் நூல் குறள்வெண்பாவால் எழுதப்பட்டுள்ளது. பாடுபொருள் பழைமையும் புதுமையும்
கலந்து இருக்கின்றது.


பணிவெனும் பண்பைப் படித்திட நீவீர்
அணியலாம் வெற்றி அறி (621)

திருடும் தொழிலைத் தினமும் புரிவர்
இருளை அடைதல் இயல்பு (701)

அரளியில் அல்லி; அதிசயம் என்றே
புரளி பரப்பல் பிழை (1751)

பொறியியல் தன்னைப் புறக்கணிக்க வேண்டாம்
அறிய உரைத்தேன் அறிந்து (1800)

போராடப் போராடப் பூக்கும் அறிவுடைமை
போராடிக் காண்பாய்ப் புகழ் (1840)

வீண்பேச்சால் வாயும் வலித்தே சமயத்தில்
காண்பரே சண்டைக் களம் ( 1855)

என்று குறள்வெண்பா பாடிய பாவலர் முத்துராமனின் இயற்பெயர் ஆ.மு.செயராமன். நாகர்கோயில் அருகில் உள்ள கீழராமன்புதூரில் பிறந்தவர்.

பெற்றோர் திருவாளர்கள் ஆதிலிங்கம், முத்துலட்சுமி ஆவர்

முத்துராமன் நாகர்கோயில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் - இயந்திரவியல் கல்வியில் பட்டயம் பெற்றவர். இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலையில் முதுகலைப் பொது நிர்வாகம் பயில்கின்றார்.

வளரும் பாவலருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.










தொடர்பு முகவரி:

பாவலர் முத்துராமன்
கவிமேகலா பதிப்பகம்
1,முருகன்கோயில் அருகில்,
தட்டான்விளைச் சாலை,
கீழராமன்புதூர், நாகர்கோயில்- 629 002
செல்பேசி - + 91 99432 82788
மின்னஞ்சல்: kavignar.muthuraman@gmail.com

கருத்துகள் இல்லை: