நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 மே, 2007

பூத்துக் குலுங்கும் பாப்பா!

பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப்
பொழிலின் நடுவில் கிடப்பதுபோல்
பார்த்துச் சிரித்துக் கிடக்கின்ற
பவள மல்லி! ஏனழுதாய்?

கோத்த முத்துச் சரம்நழுவிக்
குலைந்து தரையில் உருள்வதுபோல்
தாத்தா தாத்தா என்றழுதே
தாவித் தாவிச் செல்வதெங்கே?

அம்மா என்றே அழைக்கின்றாய்!
அப்பா என்றே விளிக்கின்றாய்!
அத்தை அத்தை எனக்கூட
அழைக்க எங்குக் கற்றாயோ?

எழுதச் சுவடி கொண்டுவந்தே
இருக்கை மிசையில் வைத்திடுவேன்!
அழுத படியே நீஅழைப்பாய்
ஆட்டம் காட்டச் சொல்வாயே!

உண்ணும் பொழுது நகர்ந்தபடி
ஓ..ஆ.. என்று விரைந்தாடி
கண்ணை இமைக்கும் பொழுதினிலே
கவிழ்ப்பாய் குழம்பைச் சோறதனை!

இத்தனை நாளாய் வாழ்க்கையிலே
இப்படி ஒன்றும் கண்டதில்லை!
பத்தரை மாற்றுத் தங்கம்உனைப்
பதுக்கி எங்கே வைப்பதடி?

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி

கருத்துகள் இல்லை: