நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

திருக்குறள் தொண்டர், கவிஞானி மு. ஞானமூர்த்தி

 

திருக்குறள் தொண்டர் மு. ஞானமூர்த்தி 

    [மு. ஞானமூர்த்தி அரியலூர் மாவட்டம், கோட்டைக்காட்டில்  19. 11. 1961 இல் பிறந்தவர். திருக்குறள் கூட்டமைப்பின் தலைவராக விளங்குபவர். திருக்குறள் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர். பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை வாழ்வு வாழ்ந்தவர். அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர். மாணவர்களுக்குத் திருக்குறள் மனப்பாடப் போட்டிகள் நடத்திப் பரிசு நல்குபவர். கம்போடியா, பிரான்சு, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தவர்]

விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டுக்குச் சென்றபொழுது (02. 08. 2026)  திருக்குறள் அறிஞர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. திருக்குறள் தூதர் பா. வளன் அரசு ஐயா, மணற்பாறைப் புலவர் நாவை. சிவம் ஐயா, வை. மு. கும்பலிங்கனார், ஆ. நெடுஞ்சேரலாதன், முனைவர் க. பசும்பொன், சு. குமணராசன் (மும்பை), நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன் உள்ளிட்ட மூத்த அறிஞர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தமை எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது. 

எங்களூரின் திருக்குறள் தொண்டர் சி. பன்னீர்செல்வம் ஐயாவின் வீறுநிறைந்த உரையையும் அந்தத் திருக்குறள் மாநாட்டில் செவிமடுத்து மகிழ்ந்தேன். திருக்குறளைப் பரப்பவும் பயிலவும் இவர்கள் மேற்கொண்டுவரும் பெரும் முயற்சிகளும் திட்டங்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. அகவை முதிர்ந்த நிலையிலும் பலரும் திருக்குறளைப் பயின்று, நன்னோக்கில் உலகுக்கு முன்மொழியும் செயலைத் தொடர்ந்து செய்து வருவதை அறிந்து, இப்பெருமக்களை அற்றைநாளில்  நெஞ்சாரப் போற்றி மகிழ்ந்து கொண்டிருந்தேன். 

திருக்குறள் சார்ந்து புதுவை மாநிலத்தில் நடைபெற்றுவரும் செயல்பாடுகளைச் சிறிது நேரம் அறிஞர்களுடன் மேடையில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. அப்பொழுது மேடையில் வீற்றிருந்து, திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டை வழிநடத்திக்கொண்டிருந்த திருக்குறள் தொண்டர் மு. ஞானமூர்த்தி அவர்களின் வினைப்பாடுகளை உற்றுநோக்கியவாறு இருந்தேன். அனைவரையும் மேடையில் அறிமுகப்படுத்தி உரையாற்றும் அவர்தம் பாங்கும், விரல்நுனியில் தாம் சார்ந்துள்ள அமைப்பின் விவரங்களையும், தம்முடன் இணைந்து பணியாற்றும் பெருமக்களின் தகுதிப்பாடுகளையும் அறிந்துவைத்துள்ளள பெருந்திறமையும் கண்டு மலைப்புற்றேன். 

மு. ஞானமூர்த்தியாரிடம் உரையாடியபொழுது அவர்களின் திருக்குறள் ஈடுபாடு புலப்பட்டது. திருக்குறளுக்காகத் தாம் நண்பர்களுடன் இணைந்து செய்துவரும் திருகுறள் கூட்டமைப்புப் பணிகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். திருவாளர் மு. ஞானமூர்த்தி போலும் உலகம் முழுவதும் திருக்குறளுக்கு உழைக்கும் தொண்டர்கள் பலர் இருப்பினும் இவர்கள் ஆற்றிவரும் பெரும்பணிகள் பெருந்திரள் மக்களுக்குத் தெரியாமல் உள்ளமை வருத்தமளிக்கும் செய்தியாகும். இவர்களைப் போலும் உண்மைத் தமிழ்த்தொண்டர்களைக் காணும்பொழுது அவர்களை ஊக்கப்படுத்திப் போற்றுவது, இத் தமிழ்ச்சமூகத்துக்கு ஆக்கமாக அமையும். எனவே, கவிஞானி மு. ஞானமூர்த்தி அவர்களின் தமிழ் வாழ்வையும் அரும்பணிகளையும், திருக்குறள் ஈடுபாட்டினையும் உலகத் தமிழர்களுக்கு நினைவூட்டுவதில் மகிழ்கின்றேன். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் வாலசௌந்திரசோழபுரம் என்னும் கோட்டைக்காட்டில்  19. 11. 1961 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் இர. முருகேசன் – மு. ஞானாம்பாள் ஆவர். மு. ஞானமூர்த்தி அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆலத்தியூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முதுகுளம் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பெண்ணாகடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று பட்டம்பெற்றவர். தம் இளமைக்காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து, மக்கள் பணியாற்றியவர். தம் பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபொழுது நெய்வேலி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விருத்தாசலம் முதலிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தவர். தமிழகத்தின் புகழ்பெற்ற சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக்கியவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் 21. 06. 1987 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரின் வாழ்க்கைத் துணைவியார் பெயர் ஞா. பொற்கொடி என்பதாகும் இவர்களுக்கு மூன்று பெண்கள் மக்கள் செல்வங்களாக வாய்த்துள்ளனர். அனைவரும் நன்கு கற்று உயர்நிலையில் உள்ளனர். 

. ஞானமூர்த்தி அவர்கள் போக்குவரத்துத் தொழிலில் (Transport) ஈடுபட்டு, பல குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்துவருபவர். 

மு. ஞானமூர்த்தி இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், ஆய்வு, மேடைப் பேச்சு, கருத்தரங்கம், கருத்துக்களம் (YouTube) நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவர். 

தொடர்புடைய தமிழ் அமைப்புகள் 

                •             உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

                •             பகுத்தறிவு இயக்கம்

                •             உலகத் தமிழ் இலக்கியச் சிறகம் — அமெரிக்கா

                •             அந்தமான் தமிழர் சங்கம் — அந்தமான்

                •             ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் — மலேசியா

                •             கம்போடியா தமிழ்ச் சங்கம் — கம்போடியா

                •             இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் 

முதலான அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்ப்பணியாற்றி வருபவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள்  2015 ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பரப்புகைப் பணியில் ஆர்வமுடன் உழைத்து வருபவர். தம் தந்தையார் நினைவாக ஆண்டுதோறும் தம் பகுதியில் உள்ள மாணவர்கள் நூறு திருக்குறளை மனப்பாடமாகச் சொன்னால் அவர்களுக்கு ஆயிரம் உருவா பரிசு தருவதை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் நாளில் செய்வருகின்றார்.  ஆண்டுதோறும் பல மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்புவித்துப் பரிசுபெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை மூன்று மாவட்டங்களை ஒன்றாக இணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசு நல்கி ஊக்குவிப்பதையும் அதுபோல் 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்குப் பரிசும் சிறப்பும் நல்குவதையும் நோக்கமாக கொண்டு தம் தோழர்களுடன் செயல்பட்டு வருபவர். 

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருக்குறள் கூட்டமைப்பில் இணைந்து, அதன் தலைவராகத் தற்பொழுது இருந்து திருக்குறள் பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார். அரிமா சங்க அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு, பொதுத்தொண்டில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் தம் இலக்கியப் பங்களிப்பைப் பிரான்சு, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், சீனா முதலிய அயல்நாடுகளிலும் வழங்கியவர். அந்தமானில் இவர் ஆற்றிய உரை  அந்தமான் தமிழர்களால் விரும்பிக் கேட்கப்பட்டது. 

1.       தமிழ் மொழி மற்றும் திருக்குறள் தொடர்பான கோரிக்கைகள் 

“தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்; திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 30-08-2024 அன்று புது தில்லியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர். 

12-12-2024 அன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் பேரணிகள் நடத்தப்பட்டன. 

08-02-2025 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று உரையாற்றியவர்.

உலகத் திருக்குறள் கூட்டமைப்பில் பணி: 

“மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள்; மக்களுக்குத் தொண்டு செய்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு, சனவரி முதல் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்து வருபவர். 

திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது, மாணவர்களிடையே திருக்குறள் ஆர்வத்தை வளர்ப்பது, பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது, தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். 

சமூகப்பணி 

மு. ஞானமூர்த்தி பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவராக இருந்தபோது, 6,500 பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை நடத்தி, பார்வைக் குறைபாடு கொண்ட 150 மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கியவர். 

திருக்குறள் வகுப்புகள் 

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடி, புவனகிரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களிலும், சென்னை வில்லிவாக்கம், கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் இலவசத் திருக்குறள் வகுப்புகளை நடத்தி வருபவர். 

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் மார்ச்சு மாதம் 8 ஆம் நாள் மகளிர் நாளினை முன்னிட்டு மகளிர் பட்டிமன்றம், மகளிர் கவியரங்கம் ஆகியவற்றை நடத்திச், சிறப்பாகப் பங்கேற்பவர்களுக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருபவர். 

மு. ஞானமூர்த்தி அவர்கள் 10 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார்.

 தற்போது வகிக்கும் பதவிகள் 

                1.  தலைவர் — உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

                2.   தலைவர் — பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்  சங்கக் கூட்டமைப்பு

3.     மாவட்டத் தலைவர் — பன்னாட்டு அரிமா சங்கம், 3241G மாவட்டம்

                4.    தலைவர் — பெண்ணாகடம் SPD இறகுப்பந்து விளையாட்டுக் கழகம் 

மு. ஞானமூர்த்தி அவர்கள் தொடர்ந்து திருக்குறள் தொண்டாற்றித் தமிழுலகத்தின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். 

பார்க்க: உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் இணையத் தளம்


செவ்வாய், 22 செப்டம்பர், 2026

நீதியரசர் சேது. முருகபூபதி

 

நீதியரசர்  சேது. முருகபூபதி

 [சேது. முருகபூபதி அவர்கள் புதுச்சேரியில் தலைமை நீதியரசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இராமநாதlபுரத்தில் பிறந்த இவர் திருப்புகழ்ப் பாடல்களில் ஆழ்ந்த புலமையுடையவர். திருப்புகழ்ப் பாடல்கள் குறித்தும் அருணகிரிநாதரின் அருள் வாழ்வு குறித்தும் சொற்பொழிவாற்றுவதில் ஆற்றல் பெற்றவர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் விளங்கியவர். சட்டத்துறை சார்ந்த பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டு, உழைத்து வருபவர்] 

புதுச்சேரியில் சமயத் தமிழை நினைவுகூரும் அமைப்புகளுள் அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக இத் திருப்புகழ் மன்றம் அளப்பரும் பணிகளை ஆற்றி வருகின்றது. திருப்புகழ் மன்றம் நடத்தும் ஆண்டு விழாக்களில் புகழ்பெற்ற அறிஞர்களை அழைத்துத் திருப்புகழ்ப் பாடல்கள் குறித்துப் பொழிவாற்றச் செய்வதும் அருணகிரிநாதரின் இசைத்தமிழ்ப் பணிகளை நினைவுகூர்வதும் இவ்வமைப்பினரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். அவ்வகையில் தவத்திரு கிருபானந்தவாரியார், டி. எம். சௌந்தரராஜன் முதலான பெருமக்கள் இத்திருப்புகழ் மன்றத்தின் மேடைகளை அணிசெய்த பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழகத்தின் பல்வேறு ஆதீனங்களின் குருபீடங்களும் இம்மன்றத்தின் விழாக்களில் கலந்துகொண்டு, திருப்புகழின் திறத்தினை எடுத்துரைத்துள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் தோற்றுநராகவும், புரவலராகவும் நீதியரசர் சேது. முருகபூபதி பணிபுரிபவர். 

நீதியரசர் சேது. முருகபூபதி அவர்கள் 15.10.1941 இல் இராமநாதபுரத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் திரு. சேதுராமநாத பிள்ளை – பொன்னுத்தாய் ஆவர். இவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்கள் ஆவர். 

சேது. முருகபூபதி அவர்கள் இராமநாதபுரம் சபா நடேச ஐயர் தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், இராஜா உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் திருச்சி, தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பினையும் பயின்ற பிறகு மதுரைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பினை நிறைவுசெய்தவர். சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்த முருகபூபதி 1969 முதல் 1974 வரை இராமநாதபுரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர்ப் போட்டித் தேர்வின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1974 முதல் 1999 வரை புதுவை மாநிலத்தில் தலைமை நீதியரசராகப் பணியாற்றி, மிக முதன்மையான வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிப் புகழ்பெற்றவர். 

இளமையிலேயே பக்தி ஈடுபாடு இருந்தபொழுதும், இவர் மாகே என்னும் ஊரில் நீதியரசராகப் பணியாற்றச் சென்றபொழுது நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய திருப்புகழ் நூல் இவர் வாழ்க்கையை மாற்றி அமைத்தது எனலாம். நாளும் ஒரு திருப்புகழைத் தொடர்ந்து படித்து, மனத்துள் இருத்திய முருகபூபதி அவர்கள் இதுவரை இவ்வாறு பன்னிரண்டு முறை தொடர்ந்து திருப்புகழைப் படித்து முடித்துள்ளதாகப் பகிர்ந்துகொள்கின்றார். 

திருப்புகழின் சிறப்புணர்ந்து, அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் என்னும் அமைப்பினை நண்பர்களின் ஒத்துழைப்புடன் நிறுவிப் புதுவையில் திருப்புகழ் பரப்பும் பணியினைத் தொடர்ந்து செய்துவருகின்றார். வாழ்வில் பல்வேறு இடர்ப்பாடுகள், இன்னல்கள், இழப்புகள் ஏற்பட்டாலும் திருப்புகழ்க் கல்வி இவருக்குத் துணையாக இருந்து, தாங்கிப் பிடித்துள்ளது. தங்கள் அறிவுச் செல்வங்கள் பக்திப் பனுவல்களில் பொதிந்து கிடைப்பதை தமிழ் மக்கள் அறிந்து அவற்றைக் கற்றுத் தெளிய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து திருப்புகழ்த் தொண்டாற்றிவரும் சேது. முருபூபதி அவர்கள் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் திருப்புகழ் குறித்த அரிய பொழிவுகளை ஆற்றியுள்ளார். இலங்கை, மலேசியா, பிரான்சு முதலான நாடுகளுக்குச் சென்று திருப்புகழ்ச் சுவையை மக்கள் மனத்துள் பதியவைத்த பெருமை இவருக்கு உண்டு. 

திருவண்ணாமலை அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை முதலிய அமைப்புகளில் இணைந்து திருப்புகழ் மணம் பரவ, உழைத்துவரும் நீதியரசர் முருகபூபதி அவர்களின் தமிழ் இலக்கியப் பணி தொடரட்டும்!. 

சேது. முருகபூபதி பெற்ற விருதுகளும் சிறப்புகளும்: 

1.   திருப்புகழ்ச் செம்மணி, சிறுவாபுரி முருகன் அபிசேகக் குழு, சென்னை

2.   குருவருட் செல்வர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு விழாக் குழு, சாத்தூர்

3.   வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது, இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம்

4.   அருணகிரிச் செல்வர், தெய்வச் சேக்கிழார் மன்றம், புதுச்சேரி

5.   சைவச் செம்மல், பன்னிரு திருமுறை பன்னாட்டு ஆய்வு மாநாடு

6.   சன்மார்க்க அறநெறி ஆய்வறிஞர், சன்மார்க்கத் திருத்தொண்டத் தொகை சான்றோர் விருது

7.   அருள்மிகு அருணகிரிநாதர் விருது, சத்துவாச்சாரி, தெய்வச் சேக்கிழார் மன்றம்

8.    திருப்புகழ் அருட்செல்வர் விருது, திருப்புகழ்ச் சபை, மதுரை. 

 

### நன்றி: மு. அருள்செல்வம், புதுச்சேரி