நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 ஜூன், 2025

பேராசிரியர் சீனிவாச கண்ணன்

 

முனைவர் சீனிவாச கண்ணன்


[பேராசிரியர் சீனிவாச கண்ணன் விருதுநகர் மாவட்டம் விழுப்பனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேராசிரியர்; ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள்: சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். விசாகப்பட்டினம் என்னும் பெயர் தமிழ்க் கல்வெட்டில் குலோத்துங்கசோழப்பட்டணம் என்று அழைக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுச் சான்றுகளின் துணையுடன் எழுதியும் பேசியும் வருபவர்; பன்னூலாசிரியர்] 

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் நூல்களைத் தேடி, சில அயல்நாட்டு நூலகங்களுக்கு அண்மையில் சென்றிருந்தேன். கோடை விடுமுறைக் காலம் இதற்கு வாய்ப்பாக இருந்தது.  பணிநாளில் நாளும் கல்லூரி செல்லும் நான் விடுமுறைக் காலங்களில் வாய்ப்புக்கு ஏற்பவே  அலுவலகம் செல்ல இயலும். மற்ற நேரங்களில் இல்லிருந்து ஆய்வுப்பணிகளில் மூழ்கிக் கிடப்பதும் வழக்கம். 

12.05.2025 நாளிட்டு ஒரு விரைவு அஞ்சல் என் அலுவலக முகவரிக்கு வந்திருந்ததைச் சில நாள் கழித்தே பார்க்க முடிந்தது. பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்கள் சென்னையிலிருந்து எழுதியிருந்தார்கள். மடல் செய்தி கண்ணில்பட்டவுடன் அந்த மடலின் முதன்மை கருதி, உடன் தொலைபேசியில் பேராசிரியர் அவர்களைத் தொடர்புகொண்டு, தங்கள் மடலைப் பார்ப்பதில் காலம் தாழ்ந்தமைக்குப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டேன். இரவு நேரத்தில் ஓய்வில் பேசுவதாகச் சொல்லி இணைப்பிலிருந்து விடுபட்டேன். அந்த அரிய மடலை மீண்டும் மீண்டும் படித்தேன். 

மடலின் உள்ளடக்கம் இதுதான்: 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்கள் தம் அருமைப் புதல்வரைப் பார்க்க, விசாகப்பட்டினம் சென்றதாகவும், அங்குள்ள காட்சியகத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்றைக் கண்டதாகவும், அக்கல்வெட்டுச் செய்தியில் விசாகப்பட்டினம் என்னும் பெயரைக் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகாரத் தொண்டைமான் குலோத்துங்க (குலொத்துங்க) சோழபட்டணம் என்று மாற்றினான் எனவும், இக்கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இச்செய்தி கலிங்கத்துப்பரணியிலும் பிற வரலாற்றுப் பக்கங்களிலும் இடம்பெறவில்லை எனவும் மடலில் எழுதப்பட்டிருந்தது. மேலும் இச்செய்தியைத் தினமணி நாளிதழின் இணைப்பு இதழ்களில் தம்மால் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளதையும் தெரிவித்ததுடன், உரிய கல்வெட்டையும் படமாக எனக்கு அனுப்பியிருந்தார். பேராசிரியர் சீனிவாச கண்ணனின் தமிழ்ப்பற்றையும், ஆய்வு ஆர்வத்தையும் மடலில் கண்டு மகிழ்ந்தேன். 

இச்செய்தியை வேறுவகையில் குறிப்பிட்டு, அறிஞர் கே.பி. கிருட்டினன் என்பார் தமிழ்ப்பொழில் இதழில் 1964, மார்ச்சு, ஏப்பிரல் இதழில் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. அக்கட்டுரையில், 

“பந்தலாயினிக் கொல்லத்தைச் சேர்ந்த கண்டன் சந்திரைய செட்டியார் என்பவர் சக வருஷம் 1172 ஆம் ஆண்டு அதாவது வீர நரசிங்க தேவனின் 15 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி 1250-51) குலோத்துங்க சோழபட்டினம் என்ற மறுபெயர்கொண்ட விசாகப்பட்டினத்தில் கருமாணிக்காழ்வாருக்கு ஒரு சனிவார மண்டபம் கட்டுவித்த செய்தியைத் தமிழில் தெரிவிக்கிறது” (பக்கம் 325, தமிழ்ப்பொழில், 1964, மார்ச்சு, ஏப்பிரல்) 

என்று ஒரு செய்தி பதிவாகியுள்ளது. 

மேற்கண்ட தமிழ்ப்பொழில் செய்திக்கு அரண்சேர்க்கும் வகையில் நம் பேராசிரியர் சீனிவாச கண்ணன் அனுப்பியிருந்த கல்வெட்டுச் செய்திகளும் படங்களும் எனக்குப் புதிய வெளிச்சங்களையும் நம்பகத் தன்மையையும் தந்தன. சீனிவாச கண்ணன் இக்கல்வெட்டுச் செய்தியை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய கட்டுரைகளை எழுதியுள்ளமை இவர்தம் ஆய்வு ஆர்வத்தைக் காட்டியது. 

விசாகப்பட்டினத்தில் உள்ள அக்கல்வெட்டுச் செய்தி இது: 

ஸ்வஸ்திஸ்ரீ ஸகரையண்டு ஆயிரத்

தொருநூற்றெழுபத்திரண்டாவதில் வீரனார

சிங்கதெவற்கி யாண்டு யரு வதில் பந்தலாயிநி

க்கொல்லத்து கண்டந் சந்திரைய செட்டியார் தர்மம்

விஸாகப்பட்டினமாந குலொத்துங்க சோழப்பட்டிணத்தில் கருமா

ணிக்க ஆழ்வாற்கு சநிவாரமண்டபம் கட்டுவிச்சார் சந்திரசெட்டியார்”


 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் எடுத்துக்காட்டும் மேற்கண்ட கல்வெட்டுச் செய்தி முதன்மையானது ஆகும். தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கலிங்கத்துப் பரணி இலக்கிய நயத்தால் நம் உள்ளம் ஈர்க்கும் நூலாகும். அரிய வரலாற்றுக் குறிப்புகளும் அந்த நூலில் உள்ளன. ஆனால் குலோத்துங்கசோழனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் விசாகப்பட்டினத்தைக் குலோத்துங்கசோழபட்டணம் என மாற்றிய குறிப்பு இந்நூலில் இடம்பெறவில்லை என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளமை போற்றத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இச்செய்தியை முனைவர் கண்ணன் பல்வேறு அரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வருவது மகிழ்ச்சிக்கு உரியது. 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம், விழுப்பனூர் என்னும் சிற்றூரில் 10.12.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சீனிவாசன் - இலக்குமி என்பனவாகும். கண்ணன் அவர்கள் தொடக்க, உயர்நிலைப் படிப்புகளை வத்திராயிருப்பு என்னும் ஊரில் பயின்றவர்.  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இளம் அறிவியல் - விலங்கியல் பயின்றவர். மேலும் கல்வியியல் படிப்பும் அக்கல்லூரியில் இவருக்கு வாய்த்தது. பேராசிரியர் கண்ணன் முதுகலைத் தமிழ் இலக்கியத்தைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் முனைவர் பட்ட ஆய்வை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் நெறியாள்கையிலும் செய்தவர். இவரின் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு: ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள்: சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு என்பதாகும். 

1974 ஆம் ஆண்டு முதல் சென்னைத் துரைப்பாக்கம் தன்ராஜ் பெயித் ஜெயின் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 2006 ஆம் ஆண்டு பணிநிறைவு பெற்றவர். 2006 முதல் 2007 வரை மதுரவாயல், தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியும், 2007 முதல் 2017 வரை சுயநிதிக் கல்லூரிகளில் தமிழ்ப்பணியாற்றியும் தமிழ்த்தொண்டு செய்தவர். 

சென்னைத் தொலைக்காட்சியில்(பொதிகை) தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் சென்னை அகில இந்திய வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதிவரும் எழுத்தாளராகவும் விளங்குபவர். 

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நல்ல ஆய்வேடுகள் உருவாவதற்குத் துணைநின்றவர். 

பேராசிரியர் சீ. கண்ணன் அவர்களுக்கு 1977 இல் திருமணம் நடைபெற்றது. இவர்தம் துணைவியார் பெயர் விசயலெட்சுமி என்பதாகும். இல்லறப் பயனாய் இவர்களுக்குக் கவிதா, விஜய் கிருஷ்ணா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

முனைவர் சீ. கண்ணன் எழுதிய வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு), ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம் முதலிய நூல்களின் ஆசிரியாகவும் விளங்குபவர். அகவை முதிர்ந்த நிலையிலும் சென்னையில் இருந்தபடி, வைணவ இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டும், பிற தமிழாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டும் தமிழ்த்தொண்டாற்றி வருகின்றார்.






வெள்ளி, 6 ஜூன், 2025

பன்மொழி அறிஞர் முத்தழகு மெய்யப்பன்

 

முத்தழகு மெய்யப்பன்

 [முத்தழகு மெய்யப்பன் சிங்கப்பூரில் வாழ்பவர். பிறந்த ஊர் காரைக்குடி (செல்வரசன்கோட்டை). சென்னை, புதுதில்லி, கத்தார் முதலிய இடங்களில் பணிபுரிந்தவர். பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவர். கோல்ப் விளையாட்டின் வழியாகச் சப்பானியர்களின் அன்பைப் பெற்றவர். இவரின் சப்பானிய மொழிப் புலமையை அறிந்த சப்பானிய அரசு இவரை அந்நாட்டுக்கு அழைத்துச் சிறப்பித்துள்ளது. ஆத்திசூடியைத் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் அமைத்து, நூலாக்கியவர். பத்துமொழிகளில் அமைந்த உடனடி  ஒலி மொழிபெயர்ப்புச் சாதனத்தில் தமிழ் இடம்பெறுவதற்குக் காரணமாகப் பணியாற்றியவர்] 

சிங்கப்பூரின் ஒவ்வொரு மணிப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். சிங்கப்பூரின் வைகறைப் பொழுதின் வனப்பினைச் சுவைக்கவேண்டும் என்று நண்பர் கவிஞர் வச்சிரவேலனிடம் முன்பே நான் கேட்டுக்கொண்டதால், அதற்குத் தகுந்தவாறு விடியல் நான்கு மணிக்குச் சிங்கப்பூர் எல்லையை அடைந்தோம். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இந்த முறை தரை வழியாக எம் பயணம் இருந்தது. 

சிங்கப்பூர் செல்வதற்கு வாய்ப்பாக மலேசியாவிலிருந்து பேருந்திலும், மகிழுந்திலும் வந்தவர்கள் எல்லைக்கு அருகில் குவிந்தவண்ணம் இருந்தனர். நாங்கள் பேருந்தில் வந்ததால் மற்றவர்களைப் போல் தரையிறங்கிக் குடியேற்றப் பணிகளை முடித்துக்கொண்டு, நகரின் உள்பகுதியை அடைவதற்கு அருகிலிருந்த தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டிக்குக் காத்திருந்தோம். 

முதல் தொடர்வண்டி இயங்க இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் ஒரு வாடகை உந்தினை அமர்த்திக்கொண்டு, கவிஞர் வச்சிரவேலனின் இல்லம் அடைந்தோம். 

அழகான அடுக்குமாடிக் குடியிருப்பில் வச்சிரவேலனாரின் இல்லம் இருந்தது. அங்குக் காலைப்பொழுதில் மூன்று மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன். காலை உணவைக் குடியிருப்புக்கு அருகில் இருந்த அழகிய உணவகத்தில் முடித்தோம். அதன் பிறகு வச்சிரவேலனாரின் அலுவலகம் சென்றுசேர்ந்தோம். ஒருமணி நேரம் அவரின் முதன்மைப் பணிகளை முடித்துக்கொண்டு, எங்கள் மகிழுந்து நகரம் நோக்கி விரைந்தது. 

எங்கள் உரையாடலின் ஊடாக, சிங்கப்பூரில் சந்திக்க வேண்டிய நண்பர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தேன். அந்த நேரத்தில், இன்று முதன்மையான ஒரு அறிஞரைச் சந்திக்க உள்ளோம் என்று வச்சிரவலேனார் தெரிவித்தார். சந்திப்போமே! என்று நானும் ஆர்வமாக  அவர் பேச்சினை வரவேற்றேன். அரை மணி நேரத்தில் நாங்கள் சந்திக்க விரும்பிய அறிஞர் இல்லத்துக்குச் சென்றோம். சாலையின் ஒரத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு மின்தூக்கியில் அவர்தம் இல்லத்தை அடைந்தோம். 

எங்களின் வருகையை முன்பே அறிந்திருந்த பன்மொழி அறிஞர் முத்தழகு மெய்யப்பனார் எங்களை அன்பொழுக வரவேற்றார். அவர்களின் துணைவியார் யசோதா அம்மா அவர்கள் குளிர்க் குடிப்பும், பழமும் நல்கி வரவேற்றார்கள். முத்தழகு மெய்யப்பனாரின் பிறந்த ஊர் காரைக்குடி(செல்வரசன்கோட்டை) என்பதறிந்து மகிழ்ச்சி மேலிட்டது. “காரைக்குடியெல்லாம் கல்விப்பயிர் வளர்த்த” வள்ளல் அழகப்ப செட்டியாரும் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பேராசிரியர் வ. சுப. மாணிக்கனாரும் எங்கள் உரையாடலில் வந்துபோனார்கள். 

முத்தழகு மெய்யப்பன் அன்பும் எளிமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற பெருமகனார் என்பதைச் சற்று நேரத்தில் உணர்ந்தேன். தம் கடுமையான உழைப்பால் பல்துறை அறிவுபெற்று, பல ஊர்களில் – நாடுகளில்- பல நிலைகளில் பணியாற்றி, இப்பொழுது சிங்கப்பூரில் அமைதி வாழ்வு வாழ்ந்து வருவதை அறிந்துகொண்டேன். இவர்தம் வாழ்வு தன்னம்பிக்கை மிகுந்த வாழ்வு; பிறருக்கு உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்ட வாழ்வு; தமிழ்மொழிப் பற்று நிறைந்த வாழ்வு; நட்பைப் போற்றி மதிக்கும் உயரிய வாழ்வு; நன்றி மறவாத வாழ்வு என்பதைச் சிறிது நேர உரையாடலில் உணர்ந்துகொண்டேன். 

முத்தழகு மெய்யப்பனாரின் உரையாடல் வழியாக அவரின் பன்முக ஆற்றலை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு  அமைந்தது. தன்னம்பிக்கை வாழ்வை விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகமாக இவரின் வாழ்க்கைப் பக்கங்கள் உள்ளன. அரைமணி நேரம் எங்களின் உரையாடல் நீண்டது. என் நூல்களை அவர்களுக்கு அளித்து, நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம். அதுபோல் அவரின் நூல்களையும் எனக்கு வழங்கி, வாழ்த்தினார்கள். உணவு நேரம் என்பதால் அருகில் இருந்த உணவகத்துக்குச் சென்றோம். அமைதியான சூழலும், தூய்மையும் அந்த உணவகத்தை மக்கள் நாடி வருவதற்குக் காரணங்களாகும். அங்கு உணவருந்தியபடி முத்தழகு மெய்யப்பனாரின் முழுமையான வாழ்வியலைத் தெரிந்துகொண்டேன். 

முத்தழகு மெய்யப்பனாரின் தன்னம்பிக்கை வாழ்வு 

முத்தழகு மெய்யப்பன் காரைக்குடி (செல்வரசன்கோட்டை)யில் 19.01.1949 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் முத்தழகு, நாச்சம்மை என்பதாகும். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி செஞ்சைப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைக் கல்வியைக் காரைக்குடி அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளியில் நிறைவுசெய்தவர். அழகப்பா கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

வளமான குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், இளம் அகவையிலேயே வேலை தேடிச் சென்னைக்குச் சென்றவர். 1966 ஆம் ஆண்டுகளில் அங்குப் பல்வேறு நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகளைச் செய்து வளம்பெற முனைந்தார். இவர்தம் சென்னை வாழ்வு துயரம் நிறைந்ததாகும். உணவின்றியும் கடும் உழைப்பில் கரைந்தும் உழன்றவர்.  நமக்குக் கண்ணீரை வரச்செய்யும் கதைப்பகுதியாக இவரின் இளமை வாழ்க்கை அமைந்திருந்தது. சென்னை வாழ்வில் தம்மை ஆதரித்தவர்களை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்வது இவரின் நன்றி மறவாப் பண்புக்கு எடுத்துக்காட்டாகும். எம். ஆர். எப். கம்பெனியில் பணியில் இணைந்தபொழுது மலையாளம் கற்றுக்கொண்டதையும், குறைந்த ஊதியத்தில் மூன்று முறைகளில்(ஷிப்டு) பணியாற்றி ஊதியம் பெற்று, தட்டச்சு, சுருக்கெழுத்து முறைகளைக் கற்றுக்கொண்டதையும் இவரின் வாய்மொழியாக அறிந்தபொழுது உழைப்புச் சூழலிலும் கல்வியில் இவருக்கு இருந்த நாட்டத்தை அறிந்துகொள்ளலாம். 

தம் வாழ்வில் உயர்நிலையை எட்ட வேண்டும் என்ற நோக்கில் புதுதில்லிக்கு 1968 ஆம் ஆண்டு சென்று, பல நிறுவனங்களில் பணியாற்றியவர். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பலருக்கும் உதவும் நோக்கிலும் தம் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும் கத்தார் நாட்டுக்கு 1976 ஆம் ஆண்டு சென்றவர், தம் நண்பர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப் பொறுப்பேற்று, அந்த நாட்டிலிருந்து மிகுந்த ஊதியம் பெற்ற நிலையிலும் வெளியேறினார். நண்பர்களைக் காப்பாற்றும் உயர்ந்த நெஞ்சர் என்பதற்குக் கத்தார் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. அடுத்து, அமெரிக்கா செல்லும் நோக்கில் இருந்த முத்தழகு மெய்யப்பன்  தம் நண்பர் ஒருவரின் உதவியால் 1979 முதல் சிங்கப்பூரில் வாழும் சூழல் ஏற்பட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். 

1983 ஆம் ஆண்டு யசோதா அவர்களைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறப் பயனாய் (1) அமுதா மெய்யப்பன் (2) கவிதா மெய்யப்பன் என்னும் மக்கள் செல்வங்களைப் பெற்று, மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றார். ஆத்திரேலியாவுக்குக் குடிபெயர நினைத்தவருக்குத் தம் பிள்ளைகளின் விருப்பத்துக்கு ஏற்ப மீண்டும் சிங்கப்பூரில் வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். 

முத்தழகு மெய்யப்பன் வாய்ப்பு அமைந்தபொழுதெல்லாம் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுபவர். எந்த மொழியைக் கற்றுக் கொண்டாலும் அந்த மொழிபேசும் மக்களுடன் உரையாடி, அவர்களின் அன்பைப் பெறுபவர். அந்த வகையில் இவருக்குத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, சீனம், மலாய், கொரியன், சப்பான், தாய், செர்மனி, இத்தாலி, பர்மீசு, இசுபானிசு, முதலான பதினைந்து மொழிகள் தெரியும். இன்னும் ஆறுமொழிகளைக் கற்க வேண்டும் என்ற இலக்குடன் பயிற்சிபெற்று வருகின்றார். 

சப்பான் மொழியைக் கற்றுக்கொண்டு, சிங்கப்பூர் வானொலியில் தமிழர்களின் மொழிச்சிறப்பு, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலானவற்றை ஓராண்டுக்கும் மேலாகப் பேசி, அனைவரிடத்தும் செல்வாக்குப் பெற்றவர். சப்பான் மொழி சார்ந்த பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு, சப்பானியர்களை விட அதிகப் புள்ளிகள் எடுத்துப் பரிசுகளைப் பெற்றவர். இவர்தம் சப்பானிய மொழிப்புலமையைச் சிங்கப்பூர் ஏடுகளும் சப்பானிய ஏடுகளும் பாராட்டி அந்த நாளில் எழுதியுள்ளன. இவர் மகளும் சப்பான் மொழியில் நல்ல புலமைபெற்றவர். இவர்தம் சப்பான் மொழிப் புலமையை உணர்ந்து, சப்பான் அரசு இவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பெருமை செய்துள்ளது. சப்பானியர்களுக்கு விருப்பமான “கோல்ப்” விளையாட்டில் மிகுதிறம் பெற்று, அதற்கென ஓர் அமைப்பை நிறுவிப் பலராலும் புகழப்படும் நிலைக்கு உயர்ந்தார். “கோல்ப்” பயிற்சியின் வழியாகப் பெரும் பொருள் ஈட்டிப் பொருளாதார வளம் பெற்றதையும் நன்றியுடன் பகிர்ந்துகொண்டார். 

மு.இளங்கோவன், முத்தழகு மெய்யப்பன்

தன் பிறந்த ஊரான காரைக்குடி(செல்வரசன்கோட்டை) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெய்யப்பன் - யசோதா அறக்கட்டளையை நிறுவி, மாணவர்களின் திறனை வளர்க்க நிதியுதவியை ஆண்டுதோறும் செய்துவருகின்றார். 

சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சிமொழி என்பதை நாம் அறிவோம். அவ்வாட்சி மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழி அறிவிப்புப் பலகையில் எங்கேனும் பிழையுடன் எழுதியிருந்தால், உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்று, அத்தவறுகளைச் சரிசெய்வதை வழக்கமாகக் கொண்டவர். அதுபோல் தமிழ் இடம்பெறாத அறிவிப்புப் பலகைகளைக் கண்டால், உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, தமிழை நிலைபெறச் செய்யும் தமிழ்ப்பற்றாளர் நம் மெய்யப்பன் ஆவார். 

மெய்யப்பனார் தமிழ்ப்பணிகளுள் முதன்மையானது உடனடி மொழிபெயர்ப்புச் சாதனத்தில் தமிழை இடம்பெறச் செய்தமை எனலாம்.  

2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 30 ஆம் நாள் சிங்கப்பூரின் Straits Times இதழில் வெளிவந்த, “ஆசிய நாட்டு 9 முக்கிய மொழிகளில் ஒருவரோடு கலந்துரையாட இனிமேல் மொழி ஒரு தடையே இல்லை. உடனடி  ஒலி மொழிபெயர்ப்புச் சாதனம் உருவாக்கப்படவுள்ளது” என்ற செய்தியைக் கண்ணுற்ற மெய்யப்பன் அந்த மொழிகளுள் தமிழ் இல்லாமையை எண்ணி வருந்தினார். உடனடியாக A*STAR  நிறுவனத்தின் பேராசிரியர் லி ஹய்ச்சோ ( Prof LI Haizhou) அவர்களைச் சந்தித்து, அவரின் தாய்மொழியான சீனத்தில் பேசி, தமிழின் சிறப்புகளை எடுத்துரைத்து, உடனடி ஒலி மொழிபெயர்ப்புச் சாதனத்தில் தமிழ் இடம்பெற வழிகண்டார். அதற்காக ஆயிரக்கணக்கான குரல் ஒலிப்பதிவுகளைத் திரட்டி வழங்கி, அன்னைத் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தமை பாராட்டினுக்கு உரிய செயலாகும். 

இந்திய மக்கள் பேசும் மொழிகளிடையே  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆங்கிலம் வழியாக ஐந்து இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வகையில் யுடீயுப் பாடங்களை உருவாக்கி வழங்கியுள்ளமையும் இவரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பாட உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

தூய்மை நிறைந்த சிங்கப்பூரில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் ஏதேனும் குப்பைகள் கிடந்தால் அவற்றைத் திரட்டி, உரிய இடத்தில் சேர்க்கும் தூய்மைத் திட்டத்தையும் முறைப்படி அரசு அனுமதி பெற்றுச் செய்தார். தன்னை வளமாக வாழவைத்த சிங்கப்பூர் நாட்டுக்குத் தாம் செய்யும் நன்றிக் கைம்மாறு இது என்று பெருமையுறச் சொல்லும் மெய்யப்பன் அவர்கள் விளையாட்டு, இலக்கியம், மொழிப்பணி, வானொலி ஒலிபரப்பு, மொழிபெயர்ப்பு என்று பன்முக அறிஞராக விளங்குகின்றார். இவர்தம் பணிகளால் தமிழர்களால் கொண்டாடத் தகுந்த பெருமைக்குரியவர் இவர் என்பது விளங்கும். 



மெய்யப்பனின் வாழ்க்கை வரலாறு “பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்” என்னும் பெயரில் நூலாகியுள்ளது. இவர் ஆத்திசூடியைத் தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் என நான்கு மொழியில் அமைத்துப்  பிற மொழியினர் படித்துப் பயன்படுத்த வழிசெய்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

அழகப்பா முன்னாள் மாணவர் சங்கம், தூய்மை சிங்கப்பூர் இயக்கம், கவிமாலை இலக்கிய அமைப்பு, அரிமா சங்கம், இந்திய – சிங்கப்பூர் கழகம், சிங்கப்பூர் சப்பானிய சங்கம் முதலான பல்வேறு அமைப்புகளின் வழியாக மக்கள் பணிகளைச் செய்துவருகின்றார். 

சிங்கப்பூர்த் தமிழர் முத்தழகு மெய்யப்பனால் தமிழும் தமிழினமும் பெருமையுறட்டும்!. 

நல்ல உள்ளம் கொண்ட தமிழ்ப் பெருமகனைச் சந்தித்த மனநிறைவோடு என் விடுதி அறைக்குத் திரும்பினேன். 

நன்றி:

பாவலர் தெ. வச்சிரவேலன், சிங்கப்பூர்

முனைவர் இரா. அருள்ராசு - பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்