நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 நவம்பர், 2019

தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் சிறப்புரை!


பேராசிரியர் பா. வளன் அரசு 

தமிழகத்தின் மூன்று பேராசிரியர்களை நான் அடிக்கடி நினைவுகூர்வது உண்டு. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் பா. வளன் அரசு ஆகியோர் அவர்கள். தூய தமிழ் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமக்கள். முன்னிருவர் இயற்கை எய்தினர். மூன்றாமவர் இன்றும் நெல்லைப் பகுதியில் தனித்தமிழ் பரப்பும் பல்வேறு பணிகளைச் செய்வதுடன் தமிழகத்திலும், கடல் கடந்தும் சொற்பெருக்காற்றித் தமிழ் வளர்த்து வருகின்றார். பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களைத் தொல்காப்பிய நூலினை அறிமுகம் செய்து, உரையாற்றுமாறு வேண்டினோம். குற்றால அருவிபோலும் அவர்தம் பொழிவு அமைந்தது. கடல்மடை திறந்தாற்போல் பல்வேறு செய்திகளைக் கொட்டி முழக்கினார்கள். இத்தகு பெருமைக்குரிய உரையைத் தமிழார்வலர்கள் கேட்பதுடன் கல்லூரி, பல்கலைக்கழகத்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் நெல்லை, பாளையங்கோட்டையில் வாழ்ந்து வருபவர். தூய சேவியர் கல்லூரி, தூய யோவான் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவர். வீரமாமுனிவரின் தேம்பாவணி குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர்களின் உள்ளத்துள் பதியும் வண்ணம் வகுப்புகளை நடத்துவதில் கைதேர்ந்தவர். திருக்குறள் ஈடுபாடும் தனித்தமிழ் ஈடுபாடும் நிறைந்த பெருமகனாரைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்து, உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைக்கின்றோம்.

தமிழ்த்தாயின் திருவடிகளுக்கு ஓர் எளிய மாணவன் சூட்டும் அணிகலன் இக்காணொளி ஆகும். ஆவணமாக்குவதில் துணைநின்ற அனைவருக்கும் நன்றியுடையோம். எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தும் தங்களுக்குத் தமிழ்த்தாயின் திருவருள் உரியதாகுக!

பேராசிரியர் பா. வளன் அரசு உரை கேட்க / பார்க்க இங்கு அழுத்துக!

ஞாயிறு, 24 நவம்பர், 2019

தொல்காப்பிய அறிஞர் வீ. செந்தில்நாயகம்


புலவர் வீ. செந்தில்நாயகம்

நான்காண்டுகளுக்கு முன்னர் நெல்லை, பாளையங்கோட்டையில் மாநிலத் தமிழ்ச் சங்க அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடச் சென்றிருந்தேன். அப்பொழுது நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயா கலந்துகொண்டு, உரையாற்றினார். தொல்காப்பியத்தில் அவருக்கு இருந்த புலமையைப் பேராசிரியர் பா. வளன் அரசு அதுபொழுது விதந்து பேசினார். அப்பொழுதே புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயாவின் பேச்சினைப் பதிந்து பாதுகாக்க நினைத்தேன். நான்காண்டுகள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் என் எண்ணம் ஈடேறாமல் இருந்தது. அண்மையில் அமைந்த நெல்லைப் பயணத்தில் தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்றுமாறு புலவரை வேண்டினோம். புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயாவும் அன்புடன் இசைந்தார்கள் (தொல்காப்பியம் குறித்த இவரின் காணொளி உரை விரைந்து இணையத்தில் வெளிவரும்).

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களை ஒத்த பெரும் புலமையாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் நிலையில்தான் இன்று உள்ளது. கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்களில் இத்தகையோரைக் காண்பது அரிது. தொல்காப்பியரைத் தொடர்வோம் என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக இவர் உருவாக்கியுள்ள தொல்காப்பியச் செய்திகளை உரைநடையில் வழங்கும் நூலைப் பேராசிரியர் பா. வளன் ஐயா அளித்து, இந்தச் சந்திப்பில் என் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்கள்.

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களுடன் அமைந்த உரையாடலில் அவர்தம் கல்வியார்வம், தமிழ்ப் புலமை நலம், குடும்பநிலை, பணிநிலை யாவும் அறிந்து மகிழ்ந்தேன். இத்தகு மூத்த அறிஞர் பெருமக்களின் வாழ்வியலை எழுதி, இணையத்தில் பரவலாக்கும் இத் தமிழ்ப்பிறவி எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்.

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

  வீ. செந்தில்நாயகம் அவர்கள் நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரத்தில் வாழ்ந்த நா. சு. வீரபாகு பிள்ளை, சண்முக வேலம்மாள் ஆகியோரின் மகனாக 18.02.1942 இல் பிறந்தவர்.  நெல்லை அரசு மாதிரிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றவர் பிறகு விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளர் நல உரிமைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர். 1960 முதல் 1964 வரை  திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் திருபனந்தாளில் பயிலுங்காலத்தில் பேராசிரியர்கள் கா. ம. வேங்கடராமையா, தா.மா. வெள்ளைவாரணம், மு. சுந்தரேசம் பிள்ளை, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் பேராசிரியர்களாக விளங்கினர். இவர் பயிலுங்காலத்தில்  கடையத்தில் வேலை பார்த்த முத்தரசன், குலசேகரப்பட்டினம் சார்ந்த இலக்குவனார், ஆண்டிப்பட்டி சீனிவாசன்  உள்ளிட்ட நண்பர்கள் தம் படிப்புக்கு உதவினர் என்று செந்தில்நாயகம் தம் நன்றியுடைமையைப் புலப்படுத்துவது உண்டு. நம் புலவர் அவர்கள் பயிலுங்காலத்தில் பகலுணவும், இரவுணவும் திருமடத்தில் இலவசமாக வழங்கப்பட்டன என்பது வரலாறு. பின்னர் நம் புலவர் அவர்கள்  பி.லிட், முதுகலைத் தமிழ், இளங்கல்வியியல் பட்டம் உள்ளிட்டவற்றைப் பெற்றவர். திரு. இருதய நடுநிலைப்பள்ளியில், தமிழாசிரியராகவும் (1964), புதுக்கோட்டையில் தமிழாசிரியர் பயிற்சி பெற்ற பிறகு 1967 இல் பத்தமடை இராமசேசன் உயர்நிலைப்பள்ளியில்  முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றி 1999 இல் ஓய்வுபெற்றவர்.

வீ. செந்தில்நாயகம் அவர்களின் பெரும்புலமையை அறிந்த இவர்தம் பள்ளித் தலைமையாசிரியர் இவரின் வகுப்பில் கடைசி இருக்கையில் அமர்ந்து பாடம் கேட்பது உண்டு. இவர் பணிபுரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வடமொழி அறிந்தவர் என்பதால் வடமொழி இலக்கியங்களை இவருக்கு அறிமுகம் செய்தமையும் உண்டு. பத்தமடையில் பணிபுரிந்தபொழுது, சிவானந்த மகராசி அவர்கள் இவரின் கம்பராமாயணப் பொழிவு நடைபெற உதவி, இரண்டரை ஆண்டுகள் தொடர்பொழிவு நடைபெறுவதற்குத் துணைநின்றார். அம்பாசமுத்திரம் “சைவத் தமிழ் அண்ணல்” நடராச முதலியார் அவர்கள் நம் செந்தில்நாயகம் அவர்களின் கம்பராமாயணப் பொழிவு விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற வழி செய்து, பொழிவின் நிறைவுநாளில் நம் புலவரை யானை மீது அமர்த்தி, ஊர்வலம் வரச் செய்து பெருமைப்படுத்தினார்கள். பெரியபுராணம் குறித்த தொடர்பொழிவு ஏரல் என்னும் ஊரில் நம் புலவரால் நடத்தப்பட்டுள்ளது.

தம் பணியோய்வுக்குப் பிறகு நெல்லை, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், காந்தி கதை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைத் தொடர்பொழிவுகளின் வழியாக இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்துவருகின்றார் நம் செந்தில் நாயகம் ஐயா!

   தமிழ்த்தொண்டில் நிலைபெற்று நிற்கும் வகையில் பல நூல்களை எழுதித் தம் புலமைநலம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க, இத்தமிழ்த் தொண்டர் ஆவன செய்துள்ளார். இவ்வகையில் சற்றொப்ப இருபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

வீ. செந்தில்நாயகம் அவர்கள் 1967 இல் திருவாட்டி கோமதி அவர்களைத் திருமணம் செய்து, மணவினைப் பயனாக மூன்று மக்கட் செல்வங்களைப் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றார்.

வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, அருவிப் பொழிஞர், சொல்லின் செல்வர், பெரியபுராணப் பேராழி, கம்பராமாயணக் கடல், சைவ சித்தாந்தப் பேராசான், தென்பாண்டித் தமிழாசான், திருக்குறள் செம்மல், திறனாய்வுத் தென்றல் உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கிய அமைப்புகள் வழங்கியுள்ளன.




புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ்க்கொடை:

1.   தோள் கண்டார் (1989)
2.   வள்ளுவம் (1992)
3.   திருக்குறள் அதிகாரமுறை நாடகங்கள் (அறம்) ( 2001)
4.   திருக்குறள் அதிகாரமுறை நாடகங்கள் ( இன்பத்துப்பால்) (2001)
5.   கனிமொழி காதலன் (2001)
6.   புதிய எளிய பதிற்றுப்பத்து (2002)
7.   அம்மா ஆத்திசூடி (2002)
8.   வாலியும் வாளியும் வாழியர் (2003)
9.   கீதாந்தம் (2005)
10. திருவாசகம் - எளிய உரைநூல் (2009)
11. காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் (2009)
12. செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி அந்தாதி (2009)
13. தண்ணீர்தேசம் பன்னீர்பூக்கள் (2009)
14. திருக்குறளும் சைவமும்( 2013)
15. தொல்காப்பியத் தொடர் சிந்தனைகள் (2015)
16. இராமாநுஜரின் காந்தி காவியம் (2016)
17. திருக்குறள் காமத்துப்பால் எளிமை இனிமை (2016)
18. சிலப்பதிகாரம் சுருக்கம் (2018)
19. தொல்காப்பியரைத் தொடர்வோம் (இருதொகுதிகள்) (2019)

தொல்காப்பியம் குறித்த புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் காணொளி கேட்க இங்கே அழுத்துக!

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகள், படங்களை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.