நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஐரோப்பியர்களின் அருந்தமிழ்ப் பணிகள்!

ஐரோப்பியர்கள் நாடுபிடிக்கவும், வணிகத்திற்கும், மதம் பரப்பவும் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று ஒருவரியில் அவர்களின் வருகை வரலாற்றை நிறுத்திக்கொள்வோம். அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகளையும் இன்றும் செய்துவரும் தொண்டுகளையும் நினைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடன்பட்டுள்ளோம்.

தமிழ் நூல்களை அச்சேற்றவும், தமிழுக்கு அகராதிகளை உருவாக்கவும், தமிழ் இலக்கணத்தைப் பிறமொழிகளில் எழுதவும், தமிழ்மொழி அமைப்பையும், பெருமைகளையும் ஒன்றுதிரட்டிக் காட்டவும், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தவும் அவர்கள் செய்துள்ள பணிகள் நமக்கு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகின்றன.

எத்தனையோ அகரமுதலிகளை அவர்கள் படைத்திருந்தாலும், எத்தனையோ தமிழுக்கு ஆக்கமான நூல்களை அவர்கள் படைத்திருந்தாலும் அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒருகுடைக்கீழ் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும், பயன்படுத்தவும் இன்றைக்குத் தமிழகத்தில் ஆட்கள் அருகிவிட்டனர். ஓரிருவரே இத்தகைய அமைதிப்பணிகளைச் செய்துவருகின்றனர். இது நிற்க.

அண்மையில் 1876 இல் அச்சான ஓர் அகரமுதலியைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதனை இயற்றியவர் ஓர் ஆங்கிலேயர். அவர் தமிழில் ஒரு துறைசார்ந்த சொற்களைத் திரட்டித் தம்மையொத்த ஆங்கிலேயருக்கு, ஆங்கிலத்தில் விளக்கம் எழுதி வழிகாட்டி உதவியுள்ள பாங்கு பாராட்டும் வகையில் இருந்தது.

அந்த அகரமுதலியில் இடம்பெற்றுள்ள சொற்களின் வழியாக அக்காலத்துச் சமூக அமைப்பை என்னால் ஒருவகையில் புரிந்துகொள்ள முடிந்தது. எடுத்துக்காட்டாகப் பாதையைக் குறிக்கும் வகையில் தமிழில் அமைந்துள்ள பல சொற்களை அறிமுகம் செய்துள்ளதைக் குறிப்பிடலாம். இச்சொற்களின் பட்டியல் அக்காலத்தில் கரடு முரடான நிலத்தை, அடையாளம் கண்டு, அவற்றைத் திருத்திச் சீர்மைப்படுத்திய தமிழ் மக்களின் உழைப்பின் வலியை எனக்குக் காட்டியது.

தமிழகத்திலிருந்து இலங்கை மலையகத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்களையும், அவர்களின் பரிதாப வாழ்க்கையையும் அவர்களை அழைத்துச் செல்வதற்குக் காரணமாக அமைந்த கங்காணிகளையும், அவர்களை வேலை வாங்கிய அதிகாரியையும், அவர்கள் அந்தக் காபித் தோட்டங்களில் எதிர்கொண்ட நோய்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அந்த அகரமுதலியில் பதிவுசெய்யப்பட்ட சொற்களே எனக்குச் சித்திரமாகக் காட்சிப்படுத்தின.


இதனையொத்த நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் இணையதளங்களில் பொதுப் பார்வைக்கு உள்ளன. தமிழ்த் தொடர்பான நூல்களை ஐரோப்பியர்கள் இணையத்தில் பொதுப்பார்வைக்குத் தரமுடன் வைத்துள்ளமைபோல் தமிழகத்து நூலகங்களில் தேங்கிக் கிடக்கும், புழுதி படிந்து போற்றுவார் இல்லாமல் உள்ள பல்லாயிரம் அரிய நூல்களைப் பொதுப்பார்வைக்கு வைக்க யாரேனும் முன்வருவார்களா? என்ற ஏக்கப் பெருமூச்சே எனக்கு இப்பொழுது எழுகின்றது!

ஞாயிறு, 29 நவம்பர், 2015

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடம் பெற்ற பரிசில்!


முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்  அவர்களிடம் பரிசு பெறல்(1991) அருகில் முனைவர் எழில்முதல்வன், முனைவர் அரு. மருததுரை

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபொழுது படிப்பது முதல்பணி; பாட்டு எழுதுவது இரண்டாவது பணி. மரபு வகைகளில் பாட்டு எழுதுவதை என் பேராசிரியர் ம.வே.பசுபதி ஊக்கப்படுத்துவார்கள். கட்டளைக் கலித்துறையில் போகிற போக்கில் எழுதும் பயிற்சி இருந்தது. ஆசிரியம் அவல் தின்பது போல் இனிமையானது. வெண்பா திருமண நாளில் பட்டுவேட்டி உடுத்துவது போல் அரிதாக இருக்கும். வெண்கலிப்பா, கலிவெண்பா யாவும் கைவந்த வடிவங்கள்.

பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு(1991) விழாவையொட்டி மரபுப்பாடல் எழுதும் போட்டியைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்தது. பாவேந்தர் இன்றிருந்தால்… என்ற தலைப்பில் பாடல் புனைந்து அனுப்பியிருந்தேன் (1991). தமிழகத்தின் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். என் பாட்டினை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்துப், பரிசில் 500 உருவா தருவதாக அறிவித்திருந்தனர்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு வழி வினவிக்கொண்டு ஒரு சிற்றூர் மாணவனாக,. விழா நடைபெறும் நேரத்திற்குச் சென்று சேர்ந்தேன். பல்கலைக்கழகத்தின் குளிர்மை அரங்கில் நுழைந்தபொழுது ‘குடைகண்டு மிரளும் கோடாங்கிக் காளையாக’ இருந்தேன். பின்னாளில் அப் பல்கலைக்கழகம் என்னை வரவேற்று ஆய்வாளனாக மாற்றும் என்று அப்பொழுது நினைக்கவில்லை.


என் பேராசிரியர் முனைவர் எழில்முதல்வன் அவர்கள் என் பெயரை ஒலித்தபொழுது, அரங்கம் மெதுவாகக் கையொலி எழுப்பி வாழ்த்துரைத்தது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் திருக்கையால் பரிசிலையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டேன். பழைய நினைவுகளை மேலே உள்ள படம் அசைபோட வைத்தது. பாவேந்தரின் திருமகனார் தமிழ்மாமணி மன்னர் மன்னன் ஐயா அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அவர்தம் திருவுருவம் பாவேந்தரை ஒத்திருப்பது கண்டு, அவையினரும் நானும் வியந்து பார்த்த பொழுதுகள் இப்பொழுதும் நினைவில் உள்ளன.