நெல்லை இரா. சண்முகம் ஐயாவின் பெயரைக் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர்த் (செப்டம்பர் 2024) தற்செயலாகப் பார்த்தது முதல் அவரின் தொல்காப்பியப் பணிகளையும் படைப்புப் பணிகளையும்
அறியும் வேட்கையில் பல்லாயிரம் பக்கங்களைப் படித்துக் குறிப்பெடுத்தமையும், பல நூறு
அறிஞர்களுடன் கலந்துரையாடி விவரங்கள் பெற்றமையும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன.
தொல்காப்பியம் குறித்து மூன்று
நூல்களையும் பிற வகையில் நான்கு நூல்களையும் வெளியிட்ட பெருமைக்குரியவர் அறிஞர் நெல்லை இரா. சண்முகம்.
இவர் நெல்லைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, கோலாலம்பூரில் நாற்பதாண்டுகள் தொழில் நிமித்தம்
தங்கியிருந்து, பணி செய்தாலும் அவரின் உள்ளத்தில் தமிழ்ப்பற்றும், பொதுத்தொண்டும் சுடர்விட்டு
நின்றமையை அவரின் வரலாற்றை அறிந்தபொழுது தெரியவந்தது.
“தேனீ” என்னும் இலக்கிய ஏட்டை
மலேசியாவில் நடத்தி, ஒரு இதழாசிரியராகவும் இப்பெருமகனார் விளங்கியுள்ளார். சிங்கப்பூர், தமிழவேள்
கோ. சாரங்கபாணியாரின் தொடர்பு, பினாங்கு அப்பாவு பண்டிதரின் தொடர்பு முதலியன இவரின்
தமிழ்ப்பற்றுக்கு அரணாக இருந்துள்ளன. தமிழ்த்தென்றல் திரு. வி. க. வின் நூல்களில் தோய்ந்து
படித்த, இவர்தம் புலமைநலம் இவரின் நூல்கள்தோறும் பளிச்சிடுகின்றன. நெல்லை இரா. சண்முகனார்
மறைமலையடிகளார், பாவாணர், திரு.வி.க, நாவலர்
சோமசுந்தரபாரதியார் முதலான தமிழறிஞர்களின் நூல்களைக் கற்றுப் பெற்றிருந்த தமிழ்ப்பற்றை
இவரின் நூல்கள் வழியாக ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது.
நெல்லை இரா. சண்முகம் குறித்த
விவரங்களைத் தமிழகத்து நூலகங்கள் பலவற்றில் தேடிப் பெற்றேன். அவர்தம் ஊரான அங்கமங்கலம்
சென்று உறவினர்களிடத்திருந்தும் சிலவற்றைப் பெற்றேன். மும்பை சென்று அவரின் உறவினர் பொறியாளர் க. இளங்கோவன் அவர்களைக்
கண்டு உரையாடிப் பல படங்களையும் விவரங்களையும் பெற்றேன், சண்முகனார் தம் வாழ்நாளின்
பெரும்பகுதியை வாழ்ந்து கழித்த மலேசியா, சிங்கப்பூர் சென்று அவரின் நூல்கள் – விவரங்களைத் திரட்டினேன் பல நூறு
மின்னஞ்சல்கள் என்னிடமிருந்து பறந்து
சென்று, இவர் பற்றிய விவரங்களைக் கொண்டுவந்தன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு
நெல்லை இரா. சண்முகம் குறித்த நூலொன்றினை எழுதி, அண்மையில் அணியப்படுத்தினேன். செய்திகளும்,
படங்களும் நூலுக்கு அணிசேர்த்தாலும் இன்னும் செய்திகள் விடுபட்டிருக்குமோ
என்று நெஞ்சம் அலைப்புற்றது.
அவ்வகையில் சண்முகம் அவர்களின்
மகனார் மறைந்த மருத்துவர் தமிழப்பன் குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்குமோ?, சண்முகம்
அவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் குறித்த விவரங்கள் கிடைக்குமோ? நேதாஜியின் போராட்டத்தில்
பங்கேற்ற இவர்தம் தியாக வாழ்வு குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்குமோ? சண்முகம் அவர்களின்
இல்லற வாழ்க்கை குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைக்குமோ? இரா. சண்முகம் நடத்திய "தேனீ" இதழினை, இதழ் வடிவில் கண்டுவிடலாமோ? என்று பலவாறு சிந்தித்து, நாளும் நாளும் உழைத்துக்கொண்டிருந்தேன்.
அதனால் எஞ்சிய விவரங்கள் – விடுபட்ட விவரங்கள் ஏதேனும் இன்னும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
மீண்டும் நெல்லை இரா. சண்முகனாரின் அங்கமங்கலம் என்ற ஊருக்கு இரண்டாம் முறையாக ஒரு
பயணத்தை மேற்கொண்டேன்(19.07.2025).
புதுச்சேரியிலிருந்து தனியார்ப்
பேருந்து ஒன்றில் 18.07.2025 இரவு 7.45 மணியளவில் புறப்பட்டேன். பேருந்தில் படுக்கை
வசதி என்றாலும் காற்று இல்லாமல் புழுக்கத்தில்தான் பயணம் தொடர்ந்தது. நான் சென்ற பேருந்து
தூத்துக்குடி வழியாகத் திருச்செந்தூர் சென்றது. காலை 7.30 மணியளவில் திருச்செந்தூரை
அடைந்தேன். அங்கிருந்து நெல்லை செல்லும் பேருந்தில் ஏறி, குறும்பூரை அடைந்தேன். முன்பே
என் வருகையை நெல்லை இரா. சண்முகம் அவர்களின் மகள் வயிற்றுப் பெயரன் திரு. கல்யாணராமன்
அவர்களிடம் தெரிவித்திருந்ததால் என்னை எதிர்கொண்டு வரவேற்று, அருகில் இருந்த அங்கமங்கலத்தில்
அவரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். திரு. கல்யாணராமன் மின்சாதனப் பொருட்களைப்
பழுதுபார்க்கும் கடையைக் குறும்பூரில் நடத்தி வருகின்றார். அவருக்கு இரண்டு பெண் மக்கள்; பள்ளியில் படிக்கின்றனர்.
குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் என்னை வரவேற்றனர். அவர்களின் இல்லத்தில் குளித்து முடித்து,
சிற்றுண்டி உண்டேன்.
இரா. சண்முகம் அவர்களின் குடும்ப
உறவினர்கள் சிலர் என் வருகையை அறிந்து வந்து, உரையாடிச் சென்றனர். இரா. சண்முகம் அவர்களின்
பிறந்த நாள், இறந்த நாள் குறித்த குறிப்புகள் கிடைத்தால் தந்து உதவுங்கள் என்று அவர்களிடம்
வேண்டுகோள் வைத்தேன்.

காலை 10 மணியளவில் கல்யாணராமன் இல்லத்தை
ஒட்டியிருக்கும். திரு. தமிழரசன் அவர்களைச் சந்தித்து உரையாடும் சூழல் அமைந்தது. தமிழரசன்
அவர்கள் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் தம்பி வேலு அவர்களின் மகனாவார். தம் பெரியப்பா
குறித்த பல செய்திகளைத் தமிழரசன் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் அப்பா வேலு
அவர்களும் பெரியப்பா சண்முகம் அவர்களும் ஒன்றாக மலேசியாவில் கடை வைத்துத் தொழில் நடத்தியமையையும்,
அங்கு 1969 அளவில் ஏற்பட்ட கலவரத்தின்பொழுது அங்கிருந்து தப்பி வந்தனர் என்பதையும்
தெரிவித்தார். மேலும் சண்முகம் அவர்களின் மகன் மருத்துவர் ச. தமிழப்பன் அவர்களின் மறைவு
குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும் தங்கள் வீட்டில் இருந்த சில புகைப்படங்களையும்
என்னிடம் காட்டினார். தேவைப்படும் படங்களைப் படியெடுத்துக்கொண்டேன். தம் தந்தையார்
மலேசியாவிலிருந்து கொணர்ந்த சில பொருட்களையும் என்னிடம் காட்டி, நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
எனக்குத் தேவைப்படும் பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனமாராத் தெரிவித்து, ஊக்கப்படுத்தினார்.
அவற்றைப் படமாக்கிக்கொண்டேன். அன்பர் தமிழரசனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

தம்பி வேலுவின் திருமணத்தை முன்னின்று நடத்திய சண்முகம் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ள திருமண அழைப்பிதழ்(1937)
முன்பே திட்டமிட்டவாறு திரு.
கல்யாணராமன் தம் தாத்தா இரா. சண்முகம் குறித்த நூல்கள், அறிக்கைகள், படங்கள் சிலவற்றை
என் பார்வைக்கு முறைப்பட வைத்தார். ஒவ்வொன்றாகப் படித்துப்பார்த்து, படமாக்கிக்கொண்டேன்.
அவ்வகையில் இதுவரைத் தேடிக் கிடைக்காத சில புகைப்படங்கள், நாட்குறிப்புகள், நினைவுப்பொருள்கள்,
நூல்கள் சிலவற்றைப் பார்க்கவும் படியெடுக்கவுமாகச் சூழல் இருந்தது. தேவையானவற்றைப்
படியெடுத்துக்கொண்டு, அனைத்தையும் அவர்களிடம் பாதுகாக்குமாறு சொல்லி, அங்கிருந்து அனைவரிடமும்
விடைபெற்றுப் புறப்பட்டேன்..
நெல்லை - பாளையங்கோட்டையில் வாழ்ந்துவரும்
பேராசிரியர் கட்டளை கைலாசம் என் வருகைக்காகப் பகல்பொழுதில் காத்திருந்தார். நெல்லை.
இரா. சண்முகம் குறித்து, சில விவரங்களைப் பெறுவதற்குக் கட்டளை கைலாசம் அவர்களுடன் தொடர்பில்
இருந்து உரையாடியபொழுது பல வியப்புக்குரிய நிகழ்வுகள் நடந்தேறின. வண்ணாராப்பேட்டையில்
வாழ்ந்த திருவாளர் இராசானந்தம் பற்றிய விவரங்களை அவர் வழியாகப் பெற முயன்றேன். பேராசிரியர்
கட்டளை கைலாசம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுதுதான் நெல்லை இரா. கணபதி முதலியார் என்ற ம.தி.தா.இந்துக்
கல்லூரிப் பேராசிரியர் குறித்து அறிய முடிந்தது. அவரின் படத்தைப் பெற முடிந்தது. மேலும்
நெல்லை சைவ சபையில் தலைவராக இருந்த தா. பொன்னம்பலம் பிள்ளை பற்றிய விவரங்களையும் அறியமுடிந்தது.
இவர்களைக் குறித்த மேலாய்வுகளைத் தொடர்வதற்குப் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களைச்
சந்திப்பது முதன்மை என்று கருதி, அவர்களுக்கு முன்பே என் பயணத்திட்டத்தைத் தெரிவித்திருந்தேன்.
என்னை எதிர்கொண்டு அழைத்த பேராசிரியர்
கட்டளை கைலாசம் அவர்கள் முதலில் பகலுணவு உண்டவாறு உரையாடுவோம் என்று "மதுரம்" என்னும் பெயரிலான சைவ உணவகத்துக்கு
அழைத்துச் சென்று விருந்தோம்பினார். உரையாடல் சற்றொப்ப ஒரு மணி நேரம் தொடர்ந்தது. பின்னர்
அங்கிருந்து புறப்பட்டு, பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் மகாராசாநகர் இல்லம்
சென்றோம். அவரின் அறிவார்ந்த ஆராய்ச்சிப் பணிகளைக் கண்ணுறும் வாய்ப்பும், அவர்தம் இலக்கிய
வாழ்க்கை குறித்து அறியும் வாய்ப்புகளும் எனக்கு அமைந்தன.
பேராசிரியர் கட்டளை கைலாசம்
பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின்
இல்லத்தில் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் முறைப்படி பாதுகாக்கப்படுவதைக்
கண்ணாரக் கண்டுகளித்தேன். திருக்குறள் ஓரடியில் எழுதப்பெற்ற மூலச்சுவடியும், திருக்குறளுக்கு
உரை எழுதப்பட்ட பிறிதொரு மூல ஓலைச்சுவடியும் அங்கு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். எழுத்துக்
கூட்டி ஓலைகளைப் படித்துப்பார்த்தேன். முன்பே மனப்பாடமாக இருந்த திருக்குறள்களை ஓலையில்
படிப்பது எளிதாக இருந்தது. பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகளையும்
பேராசிரியர் கட்டளை பாதுகாக்கின்றார். சில சுவடிகளை நூலாக்கம் செய்தும், தமிழுலகுக்கு
வழங்கியுள்ளார். செப்பேடுகள் சிலவற்றையும் நம் கட்டளை அவர்கள் பாதுகாக்கின்றார்கள்.
திருக்குறள் சுவடி
திருவாசகம் சுவடி
மூன்று மணி நேரம் எங்கள் உரையாடல்
நீண்டது. பின்னர் நூற்றாண்டுப் பழைமையுடைய பாளையங்கோட்டை சைவ சபைக்குச் செல்லும் நோக்கில்
மகிழுந்தில் புறப்பட்டோம். இடையில் சபையின்
செயலர் திரு. கிருட்டினன் எங்களுடன் இணைந்துகொண்டார். மூவரும் வழியில் இருந்த "அருவி" என்னும் புகழ்பெற்ற கடையில்
தேநீர் அருந்தினோம்.
சைவ சபை இப்பொழுது தூய்மை செய்யப்பட்டு,
வெள்ளையடிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. சைவ சபையின் நூல்களைப் பார்ப்பதும் அங்குள்ள
பொன்னம்பலம் பிள்ளையின் படத்தைப் பார்த்துப் படி எடுப்பதும், அவர்தம் வரலாற்றை அறிந்துவருவதும்
என் நோக்கமாக இருந்தது. அடுத்த முறைதான் பார்க்க முடியும் - அறியமுடியும் என்ற வகையில்
தொழிலாளர்கள் வெள்ளையடிப்பதில் தீவிரமாக இருந்தனர்.
சைவ சபையின் முகப்பில் மு.இளங்கோவன்
மேம்போக்காகச் சைவ சபையை ஒரு
பார்வையிட்டவாறு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின்
இல்லத்துக்கு மீண்டும் வந்தோம். பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களிடம் ஓலைசுவடித்
தொகுக்கும் அவரின் ஆர்வம் குறித்து, அரைமணிநேரம் ஒரு நேர்காணலைக் காணொலியாகப் பதிவு
செய்தோம். நெல்லைப் பயணத்தை நிலைப்படுத்தும் ஆவணமாக இப்பதிவு இருந்தது.
நெல்லையிலிருந்து விடைபெறுவதற்கு
உரிய நேரமும் நெருங்கியது. பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் துணைவியார் செய்திருந்த
சிற்றுண்டியை இரவு உணவாகச் சுவைத்து உண்டோம். பேருந்து நிலையம் வரை உரையாடிக்கொண்டே
பேராசிரியர் கட்டளை கைலாசம் மகிழுந்தை ஓட்டியபடி என்னை வழியனுப்ப வந்தார். அவர்தம்
மகிழுந்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விவரங்களைத் திரட்டியமை புதுப் பட்டறிவாக
இருந்தது. தமிழுலகம் போற்றத்தகுந்த ஆய்வுப்பணிகளில் கட்டளை கைலாசம் அவர்கள் தொடர்ந்து
ஈடுபட்டுவருகின்றார்.
பேருந்தேறி, நெல்லைச் சந்திப்பை
அடைந்ததும் அடுத்த தமிழ்ப்பணிக்கு வாய்ப்பாகச் சீர்காழிக்கு என்னைச் சுமந்துசெல்ல திருச்செந்தூர்
விரைவு இரயில் காத்திருந்தது… நெல்லைச் செலவு அடுத்த பல ஆய்வுகளுக்கு வழியேற்படுத்தியது
என்றுதான் சொல்லவேண்டும்..