நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...

கலைமாமணி  ந. மா. முத்துக்கூத்தனார்  (25.05.1925 - 01.05.2005) 

     பலவாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிகழ்வுகளிலும், தமிழ்ச் சான்றோர் பேரவை விழாக்களிலும் கலைமாமணி . மா. முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு வணங்கிய நிமையங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மெல்லிய உருவமும், தாடி தவழும் முகமும், கருப்புநிறத் துண்டும், வெள்ளைச் சட்டையும்(ஜிப்பா) அணிந்து, மெதுவாக நடந்து வரும் அவரின் பெருமையை நான் அப்பொழுது முற்றாக அறியாமல் இருந்தேன். ஊட்டியின் இயற்கை அழகைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் இவர் இயற்றிய,

"நீலமா மலைத்தொடரில்
கோலமே மிகுந்த குளிர்
சோலைகள் நிறைந்திருக்குது.- அதனைக் கண்டு..
ஞாலமே வியந்து நிற்குது

காணவரும் மாந்தருக்குக்
கண்ணிறைந்த காட்சிபல
வேணமட்டும் தானிருக்குது - கோடை வெயில்
வேட்கையையும் தான்தணிக்குது

வானைமுட்டும் மாமரங்கள்
தானுயர்ந்து நிற்குமதில்
தேனடைகள் தொங்கி நிற்குது - நினைக்கும்போதே
தின்றதுபோல் நாவினிக்குது

மானிடர்கள் கைப்படாத
ஓவியங்க ளாக இங்கே
வண்ணமலர் பூத்திருக்குது - இளமைகொஞ்சும்
பெண்சிரித்தால் போலிருக்குது!   ----  (நீலமா)

நாணி நிற்கும் பெண்ணொருத்தி
போலிருக்கும் பூவிதழின்
மேனிதொட்டு வண்டிசைக்குது - அதனாலது
கோணிக்கொண்டு தானிருக்குது

தேனிலவுக் காக இங்கே
தேடி வரும் காதலர்கள்
வானிலவில் தான் மிதக்கிறார் - பறந்தே இந்த
வையத்தைத் தான் மறக்கிறார்.

தொட்டுப் பழகாத புது
காதலர்கள் இங்கே வந்தால்
ஒட்டிக்கொள்ள செய்யும் ஊட்டிதான் - வயதானாலும்
கட்டிக்கொள்வார் பாட்டன் பாட்டிதான் ..."

என்னும் பாடலை அண்ணன் புட்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் கேட்டபிறகு ஐயாவின் கவிதைச் செழுமையுள்ளம் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. அந்தப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டு இன்புற்றிருப்பேன். சிந்திசையில் நம் முத்துக்கூத்தருக்கு இருந்த பயிற்சியும், தமிழ்ச் சொற்களை இடமறிந்து பயன்படுத்தும் பெரும்புலமையும் அறிந்து வியப்புற்றேன். ந.மா. முத்துக்கூத்தனாரைக் கண்டு அவர்தம் தமிழ் வாழ்க்கையை, அவரின் வாய்மொழியாக அறிந்து, பதிவுசெய்ய ஆசையுற்றேன் எனினும் அவர்தம் இறுதிக்காலம் வரை என் விருப்பம் நிறைவேறாமல் போனது. ஆயிடை, அவர்தம் நூல்களைக் கற்பதும், அவர்தம் பாடல்களைக் கேட்பதும் தடையின்றி நடைபெற்றன. அவர்தம் கலைத்துறைப் பணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடி, தந்தையாரின் பெருமைகளை அவ்வப்பொழுது கேட்டின்புறுவது உண்டு. தமிழ் உணர்வுடனும், மான உணர்வுடனும், கலையுணர்வுடனும் செயல்பட்ட ஒரு மீமிசை மாந்தரின் தமிழ் வாழ்க்கையைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

     ந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 25.05.1925 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் நமச்சிவாயம், மாரியம்மாள் என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் இவர் தம் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் "கிருட்டினன் நாடக சபா", எசு.எசு. இராசேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.

     1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதியபூமி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர். திரைப்படப் பாடல்களையும் இக்கால கட்டத்தில் எழுதியவர்.

     1953 இல் அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  பாடல், உரையாடல் எழுதிய பட்டறிவும் இவருக்கு உண்டு.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராசன் பாடிய,

"செந்தமிழே வணக்கம் ...
ஆதி திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்"

என்னும் பாடலும்,

திரைப்பட நடிகை பானுமதி அவர்கள் பாடிய,

"சம்மதமா.. நான் உங்க கூடவர சம்மதமா?" பாடலும்,

அரசகட்டளை படத்தில்,

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே
ஆடிவா" என்ற பாடலும்

"எத்தனை காலம் கனவு கண்டேன்
காண்பதற்கு - உன்னைக் -
காண்பதற்கு" என்ற பாடலும் இவர் இயற்றியவையாகும்.

தமிழ்த்திரையுலகில் இவரின் இத்தகு பாடல்கள் என்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியன.

     கலைத்துறையில் புகழுடன் விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் 24.10.1954 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் அவர்களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்.  ஒரு மகனும் ஐந்து மகள்களும் மக்கள் செல்வங்களாக இவர்களுக்கு வாய்த்தனர். தம்மால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என்.எசு. கிருட்டினன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார். மற்ற பிள்ளைகளுக்கும், பெயரப்பிள்ளைகளுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு, தாமொரு தமிழனென்று அனைவருக்கும் அடையாளம் காட்டியவர்.

ந. மா. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டுக் கலையில் தேர்ந்த கலைஞராக விளங்கியவர். கலைவாணர் என் எசு. கிருட்டினன் அவர்கள் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ.. மதுரம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக்கூத்தன் அவர்களுக்கு உண்டு. கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 31.08.1958 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.

     கலைவாணரின் வரலாறு வில்லுப்பாட்டில் பாடப்பட்ட பிறகு தமிழ் வரலாறு, அறிஞர் அண்ணா வரலாறு, "பெரியாருள் பெரியார்" என்னும் தலைப்பில் அமைந்த தந்தை பெரியாரின் வரலாறு ஆகியவற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கினார். அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் வில்லுப்பாட்டு வடிவில்  மக்களுக்கு வழங்கித் தமிழகத்தில் இக் கலையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்க உழைத்தவர் ந. மா. முத்துக்கூத்தன் என்று குறிப்பிடலாம். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இவர்தம் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்தம் கலைச்சிறப்பு உணர்ந்து, புதுதில்லியில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.

     ந. மா. முத்துக்கூத்தன் தம் மகன் மு. கலைவாணனுடன் இணைந்து கையுறைப் பொம்மலாட்டக் கலைவடிவில் நிகழ்ச்சிகளை நடத்தி, சிறந்து விளங்கியவர். மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு, "என்ன செய்யப் போறீங்க?" என்னும் தலைப்பிலும், பெண்கள் முன்னேற்றத்திற்குப் "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பிலும், தடய அறிவியலுக்கு "ஊமை சாட்சிகள்" என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் தூய்மைக்கு "எமன் ஏமாந்து போனான்" என்ற தலைப்பிலும், மக்கள் நல வாழ்வுக்கு, "நூறாண்டு வாழலாம் வாங்க" என்ற தலைப்பிலும் இவர் வழங்கிய பொம்மலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தின் கலை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

     பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ந. மா. முத்துக்கூத்தன் பாவேந்தரின் "புரட்சிக்கவி" நாடகத்தைப் பொம்மலாட்ட வடிவில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்" நாடகத்தையும் பொம்மலாட்டக் கலைவடிவில் இவர் நடித்துக்காட்டியவர். தமிழ், தமிழரின் சிறப்புரைக்கும் "கொடை வள்ளல் குமணன்" என்ற பொம்மலாட்டத்தை மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய முத்துக்கூத்தனாரின் கலைப்பணியைப் பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தியவர் ந. மா. முத்துக்கூத்தன். இவர்தம் கலைச்சேவையைப் போற்றும் முகமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் "கலைமாமணி" என்ற உயரிய விருதினை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளது(1972).

     1987 இல் சென்னைப் பகுத்தறிவாளர் கழகம்  "பாரதிதாசன் விருதினையும்", தந்தை பெரியார் தமிழிசை மன்றம் "நற்றமிழ்க் கூத்தர் விருதினையும்" (1998), இலக்கிய வீதி அமைப்பு "தாராபாரதி விருதினையும்" (2002), ஆழ்வார்கள் ஆய்வு மையம் "தமிழ்ச்செம்மல் விருதினையும்" (2003) வழங்கிப் பெருமைசேர்த்தன.

     தமிழ்க்கலையுலகில் போற்றப்படும் கலைஞராக விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் அவர்கள் 01.05.2005 இல் இயற்கை எய்தினார். ந. மா. முத்துக்கூத்தன் இயற்றிய திரைப்பாடல்களும், பிற கவிதைகளும், பொம்மலாட்டக் கலையும், வில்லுப்பாட்டு வடிவும் என்றும் இவரை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். இராதா, எசு. எசு.இராசேந்திரன் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த ந.மா. முத்துக்கூத்தன் கொள்கைவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். தன்மானத்தை உயிராகப் போற்றியவர். வறுமையில் வாட நேர்ந்தபொழுதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வழுவியதே இல்லை. அதனால்தான் சமகாலக் கவிஞரான மலர்மகன்  நம் முத்துக்கூத்தரைச், "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று" என்று குறிப்பிடுவார். மக்கள் விழிப்புணர்வுக்குத் தம் கலைத்திறனைப் பயன்படுத்திய இப்பெருமகனாரைத் தமிழ்க்கலையுலகம் - தமிழிசையுலகம் என்றும் நினைவுகூரும்.

ந.மா. முத்துக்கூத்தனின் தமிழ்க்கொடை:

1.   பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)
2.   தமிழிசைப் பாடல்கள்(தொகுப்பு)
3.   பகை வென்ற சோழன்(நாடகம்)
4.   இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல்(குறும் புதினம்)
5.   மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)
6.   துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)
7.   எல்லாரும் நல்லா இருக்கணும்
8.   நெல்லம்மா (கதை-விதை-கவிதை)

குறிப்பு: இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.





சனி, 13 பிப்ரவரி, 2016

இசை ஆய்வாளர் முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்…


முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டுக்குச் சென்றிருந்த நேரம் (28.12.2012). அந்த நாளில் மக்கள் அரங்கில் தமிழ் இணையத்தை எளிமையாக மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது வந்த அம்மையார் ஒருவர் இணையம் குறித்து சில ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுக்கொண்டிருந்தார். தம்மை ஓர் இசை ஆய்வாளர் எனவும், தம் கணவர் முனைவர் கிரீஷ்குமார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் புல்லாங்குழல் பயிற்றுவிக்கும்  உதவிப் பேராசிரியர் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். என் முயற்சிகளை அவ்வப்பொழுது செய்தி ஏடுகளிலும் பொதிகைத் தொலைகாட்சியிலும் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். அன்றுமுதல் ஏற்பட்ட நட்பு இன்றுவரை வளர்பிறையாக வளர்ந்து வருகின்றது.

முனைவர் சிவகௌரி அவர்கள் இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். இவர்தம் குடும்பம் இசைக்குடும்பமாகும். பெற்றோர் திருவாளர்கள் சோமாஸ் கந்த சர்மா, சாரதாம்பிகையாவர். இளம் அகவை முதல் இசையில் ஈடுபாட்டுடன் விளங்கிய முனைவர் சிவகௌரி அவர்கள் தொடக்கத்தில் தம் அத்தை சி. சந்திராதேவி அவர்களிடம் தொடக்கநிலை இசையறிவு பெற்றவர். முறைப்படி இசைபயில, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்து,  மூன்றாண்டுகள் இளங்கலை - இசை பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இசை பயின்றவர். அவ்வேளையில் கலைமாமணி சுகுணா புருஷோத்தமன் அவர்களிடம் மேல்நிலை இசைநுணுக்கங்களை அறிந்தவர். மேலும் முனைவர் ந. இராமநாதன், முனைவர் ஆர். எஸ். ஜெயலட்சுமி உள்ளிட்ட இசையறிஞர்களிடமும் இசைநுட்பங்களை அறிந்தவர். இளம் முனைவர், முனைவர் பட்டங்களைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்.

  திருமுறைகளைப் பாடுவதற்குக் குமாரவயலூர் திரு. பாலச்சந்திர ஓதுவார் அவர்களிடம் தனிப்பயிற்சி பெற்றவர்.

மகாவித்துவான் திரு. வா. சு. கோமதி சங்கர ஐயரின் தமிழிசைப்பணி என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து கோமதி சங்கர ஐயரின் வாழ்வியலையும், தமிழிசைப் பணிகளையும் ஆய்வுலகுக்கு வழங்கியவர். இந்த ஆய்வேடு  கோமதி சங்கர ஐயரின் வாழ்க்கை வரலாறு, கோமதி சங்கர ஐயரின் தமிழிசை ஆய்வுகள், கோமதி சங்கர ஐயர் இயற்றிய இசைத்தமிழ் இலக்கண விளக்கம், கோமதி சங்கர ஐயர் இயற்றிய தமிழிசைப் பாடல்கள், கோமதி சங்கர ஐயர் பிறருடைய பாடல்களை இசையமைத்த முறைகள், கோமதி சங்கர ஐயரின் இசை கற்பிக்கும் முறைகள் என்னும் தலைப்பில் அமைந்து, அரிய செய்திகளின் களஞ்சியமாக விளங்குகின்றது. ஆய்வேட்டின் பின்னிணைப்பில் கோமதி சங்கர ஐயரின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய படங்கள், அவர் இயற்றிய பாடல்கள், அவர் நூல்களில் உள்ள இசைவடிவங்கள், அவரின் வெளிவராத பாடல்கள், அவரின் இசை இலக்கண ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி, இசையாய்வு உலகிற்குப் பெருங்கொடையாக உள்ளது. கோமதி சங்கர ஐயரின் பாடல்கள் ஆய்வாளரால் பாடப்பட்டுக் குறுவட்டாக இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முனைவர் சிவகௌரி அவர்கள் பாடுதுறை வல்லுநர் ஆவார். திருமுறைகளையும் திருப்புகழ்ப் பாடல்களையும் தமிழிசை நுட்பம் வெளிப்படும் வகையில் பாடக்கூடியவர். “இனிமை மிகு இலங்கைத் திருப்பதிகங்கள்” என்ற தலைப்பில் இவர் பாடி வெளியிட்டுள்ள குறுவட்டு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது (2014).

சிதம்பரத்தில் வாழ்ந்துவரும் முனைவர் சிவகௌரி அவர்கள் திருமுறைகளைப் பயிற்றுவிப்பதையும், தமிழிசையைப் பயிற்றுவிப்பதையும் ஆர்வமாகச் செய்துவருகின்றார். அயல்நாட்டு மாணவர்கள் பலர் இணையம் வழியாக இவரிடம் இசையையும், திருமுறைகளையும் பயின்று வருகின்றனர்.

தமிழிசை ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாடுதுறை வல்லுநர் முனைவர் சிவகௌரி அவர்களைத் தமிழிசை மேடைகளில் பாடச் செய்து, அவர்தம் தமிழிசை ஆய்வுத்திறத்தைப் போற்றலாம்.

 முனைவர் சிவகௌரி அவர்களின் மின்னஞ்சல்: gsivagowri@gmail.com 

சனி, 27 ஜூன், 2015

தமிழிசை மீட்சி குறித்த ஆவணம்…





  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தமிழிசை வளர்ச்சிக்கு ஓர் இலக்கிய நிகழ்வு 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் மாலை ஆறுமணிக்கு நடைபெற்றுள்ளது. அக்காலத்தில் தமிழ் உணர்வு தழைத்த உணர்வாளர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.  தஞ்சை மாவட்ட உலகத் தமிழ்க் கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. சு.அறிவுறுவோன் அவர்களும், பெரம்பூர் ப. கண்ணையன் அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டமையை அறியமுடிகின்றது. பாவலர் தரங்கை. பன்னீர்ச்செல்வனார். பேராசிரியர் இரா. இளவரசு, புலவர் எண்கண் மணி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். எம் ஆவணப்படத்தில் இணைக்கத் தகுந்த இந்த அழைப்பிதழ் ஆவணம் நேற்றுதான் கிடைத்தது (26.06.2015). திருவாரூரில் புலவர் எண்கண் மணி ஐயா இல்லிலிருந்து நன்றியுடன் பெற்றுவந்தேன். 

வெள்ளி, 20 ஜூன், 2014

தமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி


முனைவர் சண்முக. செல்வகணபதி 

  தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்கள் இன்றும் இலக்கியக்கூட்டங்களின் வழியாகவும், சமயச் சொற்பொழிவுகள் வழியாகவும் மக்களிடம் தம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளார். குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் மரபு வழியாகப் பெரும் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். திருவீழிமிழலை என்னும் பாடல்பெற்ற ஊரில் 15. 01. 1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் கி. சண்முகம், குப்பம்மாள் ஆவர். தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையில் பயின்றும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியில் பயின்றும் பி.ஓ.எல், முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றும் தமிழ்ப்புலமையை வளர்த்துக்கொண்டவர்.

டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

05.12.1974 இல் திருச்சிராப்பள்ளி - திருவெறும்பூர்  நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 29 ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி, திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்றுப் பணி நிறைவு பெற்றவர்.

 தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள்( 2007-2009) பணியாற்றித் தமிழ் நாட்டிய ஆசிரியர்களின் இந்தியப் பண்பாட்டுப் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வேடு வழங்கிய பெருமைக்குரியவர். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் இயலிசை நாடக மன்றத் திட்டத்தின் சார்பில் பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள் என்ற ஆய்வேட்டை உருவாக்கி வழங்கியவர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைஞராக இருந்து, சிலப்பதிகாரம் வழி அறியலாகும் ஆடல் அரங்கேற்ற நுட்பங்கள் என்ற தலைப்பில் ஆய்வேட்டை ஒப்படைத்துள்ளார(2011, நவம்பர்).

பேராசிரியர். சண்முக. செல்வகணபதி அவர்கள் பல்வேறு கல்விநிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ள்ளார். உலக அளவிலான கருத்தரங்குகள் பதினைந்திலும், தேசியக் கருத்தரங்குகள் இருபத்தெட்டிலும், இதரக் கருத்தரங்குகள் எழுபத்தியிரண்டிலுமாகக் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். இதுவரை 85 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்  நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார்(2009 சூன் முதல் 2009 ஆகத்து முடிய). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளார்.

 திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருப்புகழ்ப் பொழிவுகளும்(90 பொழிவுகள்), திருவீழிமிழலை ஆலயத்தில் திருமுறைப்பொழிவுகளும்(110) திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்புகழ் இசைவிளக்கமும்(64 பொழிவுகள்), திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும் நிகழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில்(38) பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்ப்பணியையும் இசைப்பணியையும் போற்றிய பல்வேறு இலக்கிய அமைப்புகள் செந்தமிழ் அரசு, விரிவுரை வித்தகச் செம்மல், முத்தமிழ் நிறைஞர், தமிழிசைச்செம்மல், செந்தமிழ் ஞாயிறு, திருப்புகழ்த் தமிழாகரர், உயர்கல்விச்செம்மல், இயலிசை நாட்டிய முத்தமிழ் வித்தகர்,  செந்தமிழ்ச்செம்மல், தமிழ்ச்சுடர், தமிழ்மாமணி, முத்தமிழ்ச்செம்மல், குறள்நெறிச் செம்மல், பண்ணாய்வுப்பெட்டகம், தொல்காப்பியர் விருது, பெரும்பாண நம்பி( பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு தமிழிசை விழாக்குழு) உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன.

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்க்கொடை:

·         ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்
·         மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
·         கல்வி உளவியல் மனநலமும் மனநலவியலும்
·         தனியாள் ஆய்வு
·         வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
·         தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு
·         தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்
·         தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
·         மொழிபெயர்ப்பியல்
·         பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு
·         ஒப்பிலக்கிய வரம்பும் செயல்பாடும்
·         திருவீழிமிழலை திருத்தலம்
·         நன்னூல் தெளிவுரை
·         சீர்காழி மூவர்
·         தமிழ்க்கலைகள், இசைக்கலை நுட்பங்கள்(ஆறு பாடங்கள்)
·         தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
·         அருணகிரியாரின் அருந்தமிழ் ஆளுமைகள்
·         இடைநிலைக் கல்வி நூல் தமிழ்ப்பாடம்
·         சித்தர் கருவூரார் வரலாறும் பாடல்களும்
·   பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வும் வாக்கும்.
·         மேனிலைக் கல்விநூல் தமிழ் ( 3 பாடங்கள்)
·         இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி 1
·         இராவ் சாகிப் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்
·         தஞ்சை தந்த ஆடற்கலை
·         தொல்காப்பியம் செய்யுளியல்
·         அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தலப் பெருமை
·         கட்டளைகள் ஒதுவார் பட்டயப் படிப்பு பாட நூல்(அச்சில்)
·         தமிழிசை மூவர்- ஓதுவார் பட்டயப் படிப்பு பாடநூல்
·         திருமங்கலமும் ஆனாய நாயனாரும்(அச்சில்)

தொடர்பு முகவரி:

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி,
2802, நாணயக்கார செட்டித்தெரு,
தஞ்சாவூர்-613 001
செல்பேசி: 94427 68459


குறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், நூல் எழுதுவோர் இக்குறிப்புகளை, படத்தை எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டுக.

ஞாயிறு, 18 மே, 2014

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையை மக்களிடம் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் - புதுச்சேரி நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் பேச்சு



தவத்திரு ஊரன் அடிகள் நூலை வெளியிட பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா பெற்றுக்கொள்ளுதல். அருகில் பாரிசு பாலகிருட்டினன்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து இன்று 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணிவரை புதுச்சேரி செயராம் ஓட்டலில் நடத்தின.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவுக்கு வடலூர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். முனைவர் அரிமளம் பத்மநாபன் விழா குறித்த நோக்கவுரையாற்றினார். மலேசிய இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் விக்டர் சுப்பையா, இரா. மதிவாணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் புதுச்சேரி பிரிவு கமாண்டன்டு நா. சோமசுந்தரம் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் புலவர் முருகையன் எழுதிய உலகத்தின் ஒளிவிளக்கு பெற்றோரும் பிள்ளைகளும் என்ற நூலினை தவத்திரு ஊரன் அடிகள் வெளியிட, முதற்படியினைப் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளை பாரிசிலிருந்து வருகை தந்த திரு. பாலகிருட்டிணன், புதுவை திரு. அமரநாதன் பெற்றுக்கொண்டனர்.

குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுரைகளைச் சூலூர் பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த செந்தலை கௌதமன், தமிழியக்கத் தலைவர் முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. அங்கயற்கண்ணி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறைத் தலைவர் முனைவர் சு. குமரன், புதுவைத் திருவள்ளுவர் மன்றத்தின் நிறுவுநர் சுந்தர. இலட்சுமிநாராயணன், ஆ பிழைபொறுத்தான் ஆகியோர் வழங்கினர்.


குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் சுந்தரேசனாரின் சிறப்புகளை எடுத்துரைத்து, சுந்தரேசனார் பாடிய பாடல்களை அரங்கிலிருந்தவர்களுக்குப் பாடிக்காட்டிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மு. பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.

நூற்றாண்டு விழா - காட்சிகள்

மு.இளங்கோவன் வரவேற்புரை

தவத்திரு ஊரன்அடிகள் தலைமையுரை

முனைவர் அரிமளம் பத்மநாபன் சிறப்பிக்கப்படுதல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியப் பேராசிரியர் குமரன், டாக்டர் விக்டர் சுப்பையா சிறப்பிக்கப்படுதல்

புலவர் சூலூர் கௌதமன் நினைவுரையாற்றுதல்

சுந்தர இலட்சுமிநாராயணன் நினைவுரை


முனைவர் மு.இளமுருகன் எழுச்சியுரை

டாக்டர் விக்டர் சுப்பையா(மலேசியா) வாழ்த்துரை

பொறியாளர் பாலா நன்றியுரை

வெள்ளி, 2 மே, 2014

தமிழிசைத் தேடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் எனக்கு அறிமுகமான வரலாறு…


பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை படிக்கும்பொழுது(1987-90) சிலப்பதிகாரம் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிலப்பதிகாரத்தை இசைநுட்பம் அறிந்தவர்கள் வாயிலாகப் படிக்க வேண்டும் என்று அப்பொழுது பேராசிரியர்கள் குறிப்பிடுவார்கள். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அரங்கேற்று காதையை நடத்தும் பேராசிரியர் அதில் உள்ள இசை, நாட்டியம் குறித்த பகுதிகளை விளக்கும்பொழுது முழுவதும் விளக்க இயலாமல் இடர்ப்பட்டதை உணர்ந்தேன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இசை நுட்பங்களையும் மரபுகளையும் உணரமுடியாமல் ஓர் இடைவெளி இருந்ததால் அத்தகைய தடுமாற்றம் மிகப்பெரும் சான்றோர்களுக்கே இருந்தது. அதனால்தான் என் இசைப்பேராசான் முனைவர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார். ”சிலப்பதிகாரத்தைப் பத்தாண்டுகள் தொடர்ச்சியாகப் படித்த பிறகுதான் ஓரளவு விளங்கிற்று. அறுபதாண்டுகளாகத் தொடர்ச்சியாகப் படித்த பின்பும் இன்னும் பல இடங்கள் விளக்கம்பெற வேண்டியுள்ளது” என்பார்கள்.

சிலப்பதிகாரத்தின் பழைய உரை, அடியார்க்குநல்லார் உரை இவற்றைப் படித்தபொழுது சிலப்பதிகாரத்தின் இசைநுட்பமும் அதன் சிறப்பும் எனக்கு ஓரளவு தெரியத் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்கு அடியார்க்கு நல்லார் வரைந்துள்ள உரைக்குறிப்புகள் இசைவரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதை முழுவதும்(175 அடிகள்) அப்பொழுது எனக்கு மனப்பாடம்.

அப்பொழுதுதான் குடந்தை ப.சுந்தரேசனார் என்ற பெயர் எனக்கு அறிமுகம் ஆனது. ஆனால் குடந்தை பசுந்தரேசனார் அப்பொழுது உயிருடன் இல்லை. சிலப்பதிகாரத்தைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியும், நடித்தும் காட்டி விளக்குவார் என்று அவருடன் பழகியவர்கள் குறிப்பிட்டனர். அதனால் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுடன் பழகியவர்களைக் கண்டு உரையாடும் வேட்கையுடன் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பலருடன் பழகியுள்ளேன். அவர்கள் வாயிலாகக் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் இசைப்புலமையை ஓரளவு புரிந்துகொண்டேன்.

நாகைத் தமிழ்ச்சங்கத்தில் சுந்தரேசனார் சிலப்பதிகார உரை நிகழ்த்தியபொழுது அவரிடம் பாடம் கேட்ட ஆ. பிழைபொறுத்தான் வழியாகச் சுந்தரேசனாரின் இசைப்புலமை எனக்கு அறிமுகமாகத் தொடங்கியது. அந்த நாகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் ஐயா அவர்களை அவர்களின் தஞ்சை இல்லத்தில் சென்று கண்டேன்(1992). குடந்தை சுந்தரேசனாரின் ஒலிவட்டுகள் இருக்கும் என்று நினைத்துச் சென்றேன். ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் கோவை இளஞ்சேரனார் சிலம்பின்மேல் மேலும் ஆர்வம் உண்டாகும்படி உரையாடினார்.

குடந்தையில் வாழ்ந்த கதிர். தமிழ்வாணன் வழியாகவும் சுந்தரேசனார் அவர்களின் இசைப்புலமையை உள்வாங்க முடிந்தது. கதிர் ஐயா வழியாகவும் அக்குறிப்புகளைப் பதிந்துவைக்கமுடியாமல் போனது. அடுத்து நெய்வேலியில் இருந்த பாவாணர் தமிழ்க்குடும்ப அன்பர்கள் வழியாகவும் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களைப் பற்றி அறிந்தேன். பொறியாளர் அறவாழி அவர்கள் பல குறிப்புகளைச் சொன்னார்கள். திரு. அன்புவாணன் வெற்றிச்செல்வி அவர்கள் சுந்தரேசனாரின் சில ஒலிப்பேழைகள், நூல்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். மதுரையில் வாழும் மூத்த தமிழறிஞர் ஐயா தமிழண்ணல் அவர்களிடம் இருந்தும் சில ஒலிநாடாக்களை வாங்கிவந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசையைப் பருகினேன். திருத்தவத்துறை அன்பர்கள் வெளியிட்ட ஒலிவட்டுகளை ஐயா ஆ. பிழைபொறுத்தான் கொண்டுவந்து தந்து உதவினார்கள். நண்பர் ப. திருநாவுக்கரசு அவர்களும் எனக்குப் ப. சு. ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் உதவியாளனாக நான் இருந்து தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் நான்காம் தொகுதியை எழுதிக்கொண்டிருந்தபோது வீ.ப.கா.சுந்தரனார் நம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சு. ஐயா அவர்களைப் பற்றி நிரம்பச் சொல்வார்கள். அவர்களின் பாடுதுறை ஆற்றலை விளக்குவார்கள்.

என் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் வழியாகவும் குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழிசைச் சிறப்பை உரையாடல்களில் கேட்டு மகிழ்ந்ததுண்டு. தஞ்சைப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் ஐயாவைச் சந்திக்கும்பொழுதெல்லாம் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களை அழைத்துச் சென்று அவரின் பிறந்த ஊரான வடுவூரில் (தஞ்சை மாவட்டம்) உரை நிகழ்த்தச் செய்தமையைக் கூறி ஐயாவின் மேல் உயர்ந்த மதிப்பு ஏற்படும்படி செய்தார்கள்.

சூலூர் பாவேந்தர் தமிழ்ப்பேரவையின் நிறுவுநர் புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் தம்மிடம் இருந்த சுந்தரேசனாரின் ஒலிவட்டுகளைக் கிடைக்கும்படி செய்தார்கள். கோவை கு.வெ.கி. ஆசான் அவர்களின் திருமகனார் திரு. கு.வெ.கி. செந்தில் அவர்களும் ஒருமணிநேரம் ஒடும் ஓர் ஒலிவட்டைத் தந்தார்கள்.

ஆடுதுறை துணிவணிகர் திரு வி. வயித்தியலிங்கம் அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன்பே கண்டு பழகியுள்ளேன். அதன் பிறகு அண்மையில் சிதம்பரத்தில் கண்டு உரையாடி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அழைத்துச்சென்று பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களின் தமிழ்த்துறை அலுவலகத்தில் ஒருமணி நேரம் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும்படிச் செய்து காணொளியில் பதிவுசெய்துள்ளேன்.

திருமழபாடி, அரியலூர் பகுதிகளில் சுந்தரேசனார் தொடர்ப்பொழிவுகள் செய்த வரலாற்றை அறிந்து திருமழபாடி புலவர் திருநாவுக்கரசு, முனைவர் அ. ஆறுமுகம், அரியலூர் சுவை. மருதவாணன் உள்ளிட்ட புலவர்களைச் சந்தித்து ப.சு. ஐயா பற்றிய குறிப்புகளைத் திரட்டினேன். அதுபோல் திருத்தவத்துறை திரு. சிவப்பிரகாசம் அவர்களை நான் முனைவர் பட்டம் படித்தபொழுது கண்டு உரையாடியும் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துள்ளேன். அண்மைக்காலமாகவும் திருத்தவத்துறை அன்பர்கள் வழியாகச் செய்திகளை அறிந்து வருகின்றேன். திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு இராச. இளங்கோவன் அவர்களும் பல நிலைகளில் எனக்குத் துணைநின்று ப.சு. அவர்களைப் பற்றி அறிய உதவி வருகின்றார்.

சேலம் புலவர் வேள்நம்பி அவர்கள் வழியாகவும், சிலம்பொலி செல்லப்பன் ஐயா வழியாகவும், பேராசிரியர் வயித்தியலிங்கன் வழியாகவும் பல செய்திகளை அறிந்த நான் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு வருவதை அறிந்து அவர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் குடந்தைக்குச் சென்று சிலநாள் தங்கிக் களப்பணி செய்தேன். பொறியாளர் இராச. கோமகன் அவர்களும் குடந்தைப் பேராசிரியர் சிவக்குமார் அவர்களும் குடந்தைக் களப்பணியில் உடனிருந்து உதவினர். நாகையில் சென்று தங்கிக் களப்பணி செய்தேன்.

வடலூர் தவத்திரு. ஊரன் அடிகளார் புலவர் சுந்தரேசனாருடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர்களை அருட்செல்வரிடத்து ஆற்றுப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களும் பல செய்திகளை எனக்குத் தந்து உதவினார்கள். என் நண்பர் திரு. சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களிடத்து மிகுந்த மதிப்புடையவர்கள். . சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் பலநிலைகளில் துணைநின்றார்

என் தமிழ் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த நண்பர் திரு. தமிழ்நாடன் அவர்கள் (குவைத்) குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்திக் காட்டும் முயற்சிக்கு உரமிட்டு, ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகின்றார்கள். அவர்களின் நெறிப்படுத்தலில் பல தமிழ்ப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

முதலில் எனக்குக் கிடைத்த ப சுந்தரேசனார் நூல்களையும் பேச்சுகளையும், படங்களையும், குறிப்புகளையும் மின்வடிவில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கத் தொடங்கினேன். கிடைத்த ஒலிநாடாக்களையெல்லாம் எம் பி 3 கோப்புகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் பிறகு தக்காரிடம் இப்பாடல்களைக் காட்டி இதன் தரத்தைக் கூட்டவும், மறு ஒலிப்பதிவு செய்யவுமான என் முயற்சிகளுக்கு உதவும்படி பலரை வேண்டினேன். ஆனால் போதிய ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி அமையவில்லை

ஆனால் அமெரிக்காவில் வாழும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருமைக்குரிய தோழர்கள் என் வேண்டுகோளை ஏற்றுக் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் நூற்றாண்டுவிழா கொண்டாட முன்வந்தமை எதிர்காலத் தமிழிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க ஒன்றாகும். அவர்கள் இவ்வாறு தந்த ஊக்கம் துவண்டிருந்த என் நெஞ்சுக்குத் துணிவைத் தந்தது. அதேபொழுது சென்னையில் வாழும் மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி ஐயாவிடம் நாமும் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டவுடன் புதுச்சேரியில் நடத்துவதற்கு இசைவு தந்தார்கள். தம்மாலான உதவிகளை ஐயா இரா. மதிவாணன் அவர்கள் வழியாகச் செய்ய முன்வந்தார்கள். 

புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நூற்றாண்டு விழாக்குழு அமைத்தோம். முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் வழிகாட்டலில் மாநாட்டில் உரையாற்றும் அறிஞர்களின் பட்டியல் அணியமானது. நூற்றாண்டு விழாப்பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகின்றன. இதனிடையை  ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் எங்கள் முயற்சியைத் திரைத்துறை சார்ந்த நண்பர்களிடமும், தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் பகிர்ந்துகொண்டபொழுது பலரும் உதவ முன்வந்துள்ளனர். இயக்குநர் குணவதிமைந்தன் உள்ளிட்டவர்களின் நெறிகாட்டலைப் பெற்று குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆவணப்பட முயற்சி தொடங்க உள்ளது. முதற்கட்ட படப்பதிவு விரைவில்….


ஞாயிறு, 2 டிசம்பர், 2012

சென்னையில் திருவருட்பா இசைவிழா- தமிழிசை விழா




திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள்

“இன்னிசை ஏந்தல்” திருபுவனம்  கு. ஆத்மநாதன் அவர்களின் பெருமுயற்சியில் சென்னையில் திருவருட்பா இசைவிழா, தமிழிசை விழா மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் : பசும்பொன் தேவர் மண்டபம், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை- 600017

நாள்: 21.12.2012 முதல் 25.12.2012 வரை

நேரம் : மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முதல்நாள் நிகழ்வில் இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களின் அருட்பா இசை நடைபெறும். மேலும் சின்னமனூர் சித்ரா குழுவினரின் அருட்பா நாட்டியமும் இடம்பெறும்.

இரண்டாம் நாள் நிகழ்வில் கிஷோர்குமார் குழுவினர் வழங்கும் வள்ளலார் வாழ்வியல் வில்லுப்பாட்டு, “அருட்பா அமுது” அன்னபூரனி அவர்களின் அருட்பா இசை, நடனமாமணி புஷ்பகலா இரமேஷ் அவர்களின் அருட்பா நாட்டியம் நடைபெறும்.

மூன்றாம் நாள் நிகழ்வில் அருளாளர் பழனி, தீபிகா வழங்கும் அருட்பா இசை, சுவாமிநாதன் அவர்களின் அருட்பா நாட்டியம் நடைபெறும்.

24.12.2012 மடிப்பாக்கம் உமாசங்கர், யுவன்பாலா வாய்ப்பாட்டும், கலைமாமணி இந்திரா ராசன் குழுவினர் வழங்கும் திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகமும் நடைபெறும்.

நிறைவுநாள் நிகழ்வில் கலைமாமணி சிவக்குமார் அவர்களின் வாய்ப்பாட்டும், கலைமாமணி கேமமாலினி இராசுவின் பாரதியாரின் பன்முகங்கள் நாட்டியமும் நடைபெறும்.

தொடர்புக்கு:

இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள்,
என் 6, என் தெரு, கீழ்ப்பாக்கம் கார்டன்,
சென்னை – 600 010

தொலைபேசி(இல்லம்) : 00 91 44 6545 5989
செல்பேசி: 00 91 93801 25989