நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
குடந்தை ப. சுந்தரேசனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடந்தை ப. சுந்தரேசனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூன், 2015

பண்ணாய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா, குடந்தை கதிர். தமிழ்வாணன் நினைவு விருது வழங்கும் விழா


குடந்தை (கும்பகோணம்) காந்திப் பூங்கா எதிரில் அமைந்துள்ள சுழற்கழகப் பண்பாட்டு நடுவத்தில் (ரோட்டரி அரங்கம்) 20.06.2015 காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை பண்ணாய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவும் குடந்தை கதிர். தமிழ்வாணன் நினைவு விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன.

இறைநெறி இமயவன் தலைமையில் நடைபெறும் நிகழ்வின் தொடக்கத்தில் கூகூர் இரா. கத்தூரிரங்கன், க. பூவராகவன், குடந்தை ச.சரவணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறும். பேராசிரியர் இரா. சிவக்குமரன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரின் நினைவுப்பதிவு என்னும் தலைப்பில் மு.இளங்கோவன் கருத்துரையாற்ற உள்ளார். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இராச.கலைவாணி அவர்கள் தொன்மைத் தமிழிசை எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.

இரண்டாம் அமர்வு பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி 4.30 மணிக்கு நிறைவுறும்.

புலவர் கதிர் முத்தையன் அவர்கள் தலைமையில் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற உள்ளது. சி. பா. தமிழ்ச்சோலை அவர்கள் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வில் மு.இளங்கோவன், தி. சீ. வேங்கடசுப்பன், கி. வேங்கடரமணி, சு. இளஞ்சேட்சென்னி, பாவலர் பூவையார், புலவர் சு.காமராசு, வை. மு. கும்பலிங்கன், நெல்லை வே.கணபதி புலவர்  கூத்தங்குடி அரங்கராசன், மு. பராங்குசன் உள்ளிட்டவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தனித்தமிழறிஞர் குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. நிறைவில் இரா. திருமாலன்பன் நன்றியுரை வழங்குவார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் குடந்தை உலகத் தமிழ்க்கழகத்தினர் செய்துள்ளனர்.


தொடர்புக்கு:

பேராசிரியர் இரா. சிவக்குமரன் 9443332332

புலவர் கதிர். முத்தையன் 9944478763

சனி, 16 மே, 2015

பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனார் உலகத் தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய இசைமேதை! கடலூரில் முனைவர் வி. முத்து உரை!


 முனைவர் வி. முத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. மாரிமுத்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி. அருகில் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள்.

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம் சார்பில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியிடப்பட்டுத் தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் முன்னிலையில் இன்று மாலை (16.05.2015) திரையிடப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புத் தலைவருமாகிய முனைவர் வி. முத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.  

பேராசிரியர் இரா.. குழந்தைவேலனார் அறிமுகவுரையாற்றினார். அரங்க. இரகு, புலவர் மு. நாகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு இந்த ஆவணப்படத்தின் தேவையையும், இந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் கூடுதல்படிகளை வாங்கி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

புதுச்சேரி, கடலூர் வாழும் தமிழார்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆவணப்படம் குறித்து ஊடகங்களுக்குத் திரு.முத்து அவர்களின் செவ்வி.

திரு. மாரிமுத்து அவர்களின் உரை

பேராசிரியர் இரா..ச.குழந்தைவேலனார் ஊடகங்களுக்குச் செவ்வியளித்தல்

பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2015

பெரியார் திடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்



இயக்குநர் வ.கௌதமன் உரை


இசையறிஞர் திருபுவனம் ஆத்மநாதன் உரை


சென்னை, பெரியார்திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் 28.02.2015 மாலை 6.30 மணிமுதல் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு தமிழார்வலர்கள், இசையார்வலர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, திரையிடலின் நோக்கம் குறித்துப் பிரின்சு என்னாரெஸ் பெரியார் பேசினார்.

“சந்தனக்காடு” இயக்குநர் வ.கௌதமன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் சிறப்புகளையும், கலை நேர்த்தியையும், ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவனின் முயற்சியையும் பாராட்டிப் பேசினார். இந்தப் படத்தில் குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆன்மாவைப் பார்ப்பதாகவும், மனித நேயம் மிக்க மிகப்பெரிய மனிதராக குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்ந்துள்ளதை இந்த ஆவணப்படம் சிறப்பாக எடுத்துரைப்பதையும் தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டார். மேலும் காவிரியைக் காட்சிப்படுத்தியுள்ள திறம், கழிமுகப்பகுதியில் நாட்டியம் இணைத்துள்ள திறம் யாவும் நம்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுசெல்கின்றன என்று பாராட்டினார்.

நிழல் இதழின் ஆசிரியரும், குறும்படம் ஆவணப்படம் குறித்துத் தமிழகத்தில் நிறையப் பயிலரங்குகளை நடத்தி வருபவருமான ப. திருநாவுக்கரசு அவர்கள் தமக்கும் குடந்தை ப. சுந்தரேசனாருக்கும் அமைந்த தொடர்பை எடுத்துரைத்து, அவரின் சிறப்புகளை விளக்கினார். இந்த ஆவணப்படத்தின் சிறப்புகளை விளக்கி, ஊர்தோறும் இது திரையிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

எழுத்தாளர் கோவி. இலெனின் அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்து அண்மைக்காலத்தில்தான் அறிவேன் என்றும், தமிழிசை வரலாற்றில் குடந்தை ப.சுந்தரேசனாருக்கு உள்ள இடம் குறித்தும் அவையினருக்கு நினைவூட்டி, இந்த ஆவணப்பட உருவாக்க முயற்சியைப் பாராட்டினார்.

தமிழிசை அறிஞர் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரல்வளத்தையும், அவர்தம் பாடுமுறைகளையும் வியந்து பேசினார். சிலப்பதிகாரத்தைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியுள்ள திறத்தைப் போற்றினார். தமிழிசை அறிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர் இதுபோல் தமிழிசைக்குப் பாடுபட்ட அனைத்து அறிஞர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தி வழங்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். தமிழிசை உள்ள வரை இந்த ஆவணப்படம் பேசப்படும் என்று தம் பாராட்டைத் தெரிவித்தார்.

ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவன் ஆவணப்படம் உருவான வரலாற்றையும், அதில் தமக்கு ஏற்பட்ட பட்டறிவுகளையும் அவையினரிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் தமிழிசைக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து ஆவணப்படுத்த உள்ளமையை அவையினருக்குத் தெரிவித்தார். அந்த வரிசையில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வாழ்க்கையும், பணிகளும் ஆவணப்படுத்தப்பட உள்ளமையை எடுத்துரைத்தார்.


நிறைவில் ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நிழல் ப. திருநாவுக்கரசு உரை

எழுத்தாளர் கோவி. இலெனின் உரை

மேடையில்...



சனி, 28 பிப்ரவரி, 2015

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்


  
  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் இன்று சென்னையில் திரையிடப்பட உள்ளது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தமிழிசை ஆர்வலர்கள், பண்ணாராய்ச்சி வித்தகர்மேல் பற்றுடைய அன்பர்கள் வந்து மகிழ்வூட்டலாம்.

நாள்: 28.02.2015 (சனிக்கிழமை) மாலை 6:30மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

கருத்துரை:

"இன்னிசை ஏந்தல்" திருபுவனம் கு.ஆத்மநாதன்

திரு. கோவி.லெனின்

"நிழல்" திரு. திருநாவுக்கரசு

ஏற்புரை:  முனைவர் மு.இளங்கோவன் 


ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

புதன், 18 பிப்ரவரி, 2015

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்து வானொலி, பொதிகைத் தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் பி.யு அய்யூப் அவர்களின் மதிப்பீடு





அன்புள்ள டாக்டர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, நலம். நலமறிய ஆவல். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் ஆவணப்படம் தொடர்பாக நம்மிடையே இணக்கம் நேர்ந்து இருப்பதை இனிய அனுபவமாய்க் கருதுகிறேன். தாங்கள் அனுப்பிய ஒளிவட்டுக் கிடைத்தவுடன் அதற்கு இரண்டு படிகள் எடுத்து ஒன்றினைத் திருச்சி அறிவாளர் பேரவைக்கும், இன்னொன்றைத் திருச்சி ரசிக ரஞ்சன சபாவுக்கும் அனுப்பி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியும் உள்ளேன். அவர்களின் முகவரியும் தொலைபேசி எண்ணும் கீழே குறிப்பிட்டு உள்ளேன். தாங்கள் தேவைக்கு ஏற்பத் தொடர்புகொள்ளவும். ….

செண்பகத் தமிழ் அரங்கோடும் முயன்றேன். அந்த நண்பர் இளங்கோவன் உங்கள் தொடர்பை வியந்து கூறினார். இவர்கள் எல்லோரும் காண்பதற்கு முன்னால் ஒளிவட்டை நான் காண நேர்ந்தது இறைவன் அருளேயன்றி வேறில்லை அன்றோ?  இனி ஒளிவட்டைப் பற்றி சில வார்த்தைகள்.


எடுத்த எடுப்பிலேயே என் இனிய சகோதரர் ரஹ்மத் பதிப்பக உரிமையாளர் ஹாஜி முஸ்தபா அவர்களைப் பற்றிய குறிப்பைப் பார்த்ததும் குளிர்ந்தது என் மனம்.

ஒளிவட்டின் ஒவ்வொரு அம்சமும் மிக நேர்த்தியாக வந்துள்ளன. சிறந்த ஒலி, ஒளி அமைப்பு, இசைக்கூட்டு, தேர்ச்சி பெற்ற நடனக் கலைஞர் தேர்வு, இயற்கைக் காட்சிகள், காவேரியின் பாய்ச்சல் இவை எல்லாமே உங்களுடைய திறமைக்கும், தகுதிக்கும் சான்று கூறுபவையாக அமைந்து உள்ளன.

ஆவணப்படம்  நெடுகிலும் கனீர் என்ற குரலில் பாடியிருக்கும்  பண்ணாராய்ச்சி வித்தகரின் பாடல்கள் மனதைக் கவர்கின்றன. சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்தில் தொடங்கிக் கானல்வரி, ஆய்ச்சியர் குரவை முதலிய பாடல் பகுதிகளும், திருவாசகம், மற்றும் இன்ன பிற பகுதிகளும் மிகச் சிறப்பாகப் பதிவாகி உள்ளன.

அறிஞர்கள் நட்புமிகு அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், இலட்சுமிநாராயணன் இன்னும் பல அறிஞர்கள் கருத்துக்கோர்வைகள் கற்கண்டாய் இனித்தன. மொத்தத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் பற்றிய ஒளிவட்டு குடந்தையாரின் தமிழ்ப்பணிக்கு ஒரு மணிமுடி. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

அருமை நண்பர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் விவரங்கள் கூறுங்கள்.

பிற பின் என்றும் தங்கள்
அன்பில் இன்புறும்

பி. யூ. அய்யூப்


14.02.2015 நாளிட்டு எழுதிய மடல்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியாவில் வெளியீடு - படங்கள்




குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் டத்தோசிறீ ச.சாமிவேலு அவர்கள், முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்கள். அருகில் உத்தராகண்டு மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் எம். பி, டான்சிறீ சு. குமரன், பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்( நிகழ்வு:மலேசியா)

 மலேசியத் தலைநகரான கோலாலம்பூர் தான்சிறீ சோமா அரங்கில் 28.12.2014 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை  ஆவணப்பட வெளியீட்டு விழா. டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை ஆவணப்பட ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.. மன்னர்மன்னன் வழங்கினார். மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆவணப்படத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் புரவலருமான டத்தோ சூ. பிரகதீஷ்குமார், நைனா முகமது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில்  டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி. ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். டான்ஸ்ரீ சு. குமரன்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முதலில் திரையிட்டுக் காட்டப்பட்டது. தமிழிசைச் சிறப்பைத் தனியொருவராக இருந்து பரப்பிய குடந்தை ப.சுந்தரேசனாரின் வாழ்க்கையை டத்தோசிறீ ச.சாமிவேலு உள்ளிட்டவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ஆவணப்பட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திரு. தருண்விஜய் எம்.பி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருவள்ளுவருக்குச் சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனவும் அதற்கு டத்தோசிறீ ச. சாமிவேலு போன்றவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். திருவள்ளுவர் திருப்பயணத்தைக் கன்னியாகுமரியிலிருந்து பொங்கல் திருநாளையொட்டித் தாம் மேற்கொள்ள உள்ளதையும் அவைக்கு எடுத்துரைத்தார். தாம் இன்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் வழியாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். தாம் இப்பொழுது தமிழ் கற்கத் தொடங்கியிருந்தாலும் தமக்குத் தமிழர்கள் தமிழில் பேசும்போது எந்த வகையான சிக்கலும் இல்லாமல் புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். உத்ராகண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியில் இவருக்குத் திருக்குறள் தூதர் என்ற விருது வழங்கிப் பாராட்டினர்.

 மலேசிய நாட்டின் மூத்த தலைவர் திரு. டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் திரு. தருண்விஜய் எம். பி. அவர்களுக்குத் திருக்குறள் தூதர் விருது வழங்குதல்( இடம்: மலேசியா) அருகில் பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் நிறைவில் ஏற்புரையாற்றினார்.

குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்பட வெளியீட்டு விழா மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம், மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குழு ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.

மலேயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. மன்னர் மன்னன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
 மு.இளங்கோவன், திரு. மன்னர் மன்னன், டத்தோ சிறீ ச. சாமிவேலு, டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி, டான்சிறீ சு. குமரன், திரு. நைனா முகமது


வியாழன், 27 நவம்பர், 2014

திருவரங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா




திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், காந்திசாலையில் அமைந்துள்ள இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா 29.11.2014 மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.

புரவலர் க. தமிழழகன் அவர்கள் வரவேற்புரை நல்க, திரு. இராம. சுப்பிரமணியன், திரு. குமர. நமசிவாயமூர்த்தி முன்னிலையில் இந்தப் பெருவிழா நடைபெற உள்ளது.

இராச. இளங்கோவன் அவர்கள் அறிமுகவுரையாற்றவும், புலவர் புவியரசு அவர்கள் தலைமை தாங்கவும் இந்த விழா நடைபெறுகின்றது. திருமழபாடி புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றவும், பெரும்பாண நம்பி முனைவர் த. கனகசபை அவர்கள் (பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்) விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். 

பண்ணாய்வான் ப. சு அவர்களின் படத்தினைத் திறந்து வைக்க திரு. தங்க. கலியமூர்த்தி அவர்கள் இசைந்துள்ளார்கள். அருள்மனச் சான்றோர் எம். ஆர். எஸ். கேசவன் அவர்களின் திருக்கையினால் முனைவர் மு. இளங்கோவனுக்குப் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்னும் உயரிய விருதளித்துப் பாராட்ட உள்ளனர். தமிழ்மாமணி முனைவர் ப. சுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுறும். தமிழார்வலர்களை இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கத்தினர்  அன்புடன் வரவேற்கின்றனர்.


திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கண்ணகித் திருநாள், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா - பூம்புகார்



பூம்புகாரில் அமைந்துள்ள பத்தினிக்கோட்டத்தில் 2014 ஆகத்து 5, 6 நாள்களில் கண்ணகித் திருநாள் நடைபெறுகின்றது. 05. 08. 2014 காலை 10 மணிக்குக் கல்லூரி மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் இசைப்போட்டித் தேர்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு மேனாள் வானொலி நிலைய இயக்குநர் காத்த. துரைசாமி அவர்கள் தலைமை தாங்குகின்றார். பேராசிரியர் மா.வயித்தியலிங்கம், திரு. மா. கோடிலிங்கம், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்த நினைவுரையாற்ற உள்ளனர்.

 மறுநாள் (06.08.2014) பத்தினிக்கோட்ட அறநிலையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரு. அரு.சோமசுந்தரம், திருமதி பெ. வனிதா, செந்தமிழ்ப் புரவலர்  இரா. இராஜசேகரன், பேராசிரியர் தி.இராசகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

 தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலால்குடி சென்ற வரலாறு…


இலால்குடியில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

28. 05. 2014 அறிவன்(புதன்) வைகறை 4 மணிக்கு விழித்தேன். முன்பே திட்டமிட்டபடி 4. 45 மணிக்கு முன்றிலில் மகிழ்வுந்து வந்து நின்றது. கைப்பை, கணினி, புகைப்படக் கருவி உள்ளிட்ட முதன்மைப் பொருள்களுடன் புறப்பட்டேன். நண்பர் சிவக்குமார் தன் உதவியாளருடன் அவர் இல்லத்தில் படப்பிடிப்புக் கருவிகளுடன் காத்திருந்தார். அவர்களை ஏற்றிக்கொண்டு அடுத்து ஐயா அமரநாதனை அழைக்க அவர் அலுவலகம் சென்றோம். ஒரிரு மணிக் காத்திருப்புக்குப் பிறகு ஐயாவும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

புதுவையிலிருந்து வழி நெடுக இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்தவண்ணம் கடலூரைக் கடந்தோம். குள்ளஞ்சாவடிக்கு அருகில் இருந்த வயல்காட்சிகள் சிலவற்றைப் படமாக்கினோம். அடுத்து வடலூர்- சேத்தியாத்த்தோப்பு வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் சென்றோம். அங்கு எங்கள் நண்பர் சீத்தாபதி காத்திருந்தார். அங்கும் சில காட்சிகளைப் படமாக்கினோம். அடுத்து இடைக்கட்டில் உள்ள நம் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. காலை உணவுக்காகச் செயங்கொண்டத்தில் நண்பர் இரா. இரவி காத்திருந்தார். அவருடன் இணைந்து காலைச் சிற்றுண்டியை அனைவரும் முடித்தோம்.

எங்கள் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால் உடையார்பாளையம் அரண்மனையில் அரச குடும்பத்தைச் சார்ந்த திரு. பெ. சிவக்குமார் அவர்களும் அவர்களின் உடன்பிறந்தாரும் காத்திருந்து எங்களை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கும் சில மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் அரண்மனையிலிருந்து தேநீர் வந்தது. அதனை அருந்தி அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுப் புறப்படும் முன் அழகிய புறாக்கள் பறத்தல் காட்சி கண்ணில் தென்பட்டது. அதனையும் காட்சிப்படுத்திக்கொண்டு அரியலூரை நோக்கிப் புறப்பட்டோம்.
 உடையார்பாளையம் அரண்மனையின் முகப்பில்

அரியலூரில் புலவர் சுவை. மருதவாணனார் எங்களுக்காகக் காத்திருந்தார். இவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகிய பெருமகனார். அவரை நேர்காணல் செய்துகொண்டு, அவர் வழங்கிய சில அரிய நூல்களைப் பெற்றுக்கொண்டு அவரையும் உடனழைத்துக்கொண்டு கீழைப்பழுவூர் திருக்கோயிலை அடைந்தோம். அங்கு நம் ப. சு. அவர்கள் தொடர்ப்பொழிவு செய்த இடத்தைப் படமாக்கிக்கொண்டு அடுத்து எங்கள் மகிழ்வுந்தில் திருமானூர் வழியாகத் திருமழபாடி சென்றோம்.

திருமழபாடியில் உள்ள திருக்கோயில் இறைவன் “மழபாடி மாணிக்கமே” என்று அருளாளர்களால் பாடப்பெற்ற  பெருமைக்குரியது. குடந்தை ப.சுந்தரேசனாரின் முயற்சியால் அக்கோயில் இறைவன்மீது பாடப்பெற்ற திருமுறைப்பாடல்கள் கல்வெட்டாக வெட்டிப் பாதுகாக்கப்படுகின்றன. புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் இக்கல்வெட்டு அமைக்க நிதி நல்கி ஆதரவுகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டும் வேண்டிய அளவு படமாக்கிக்கொண்டும் இருந்தபொழுது மழை பெய்யத் தொடங்கியது.மழைச்சூழலில் புலவர் திருநாவுக்கரசரின் நினைவுரைகள் படமாயின.

கொள்ளிடக் கரையில் இயற்கை எழில்சூழ அமைந்த அக்கோயிலின் அழகை நாள்முழுவதும் கண்டு மகிழலாம். இயற்கை விரும்பிகளுக்கு அந்த ஊர் நல்ல ஊர். கொள்ளிடத்தின் மணல்காட்சிகளையும் படமாக்கிக்கொண்டோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் நீர் நிறைந்து புனல்பெருக்காக இருக்க வேண்டிய ஆறு மணல்பெருக்காக இருந்தது.

பகலுணவுக்கு நாங்கள் தயாரானோம். புலவர் திருநாவுக்கரசு ஐயா எங்களுக்கு அங்குள்ள சூழல்களை விளக்கியதுடன் உணவு உண்ண ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்கள். சிற்றூர்ப் புறச்சூழலில் இனிமையாக அந்தக் கடைக்காரர் விருந்தோம்பினார். மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்தால் அந்தக் கடையில் உண்ண வர வேண்டும் என்ற விருப்பத்துடன் பேராசிரியர் முனைவர் அ. ஆறுமுகம் ஐயா இல்லம் சென்றோம் ஐயா ஆறுமுகம் அவர்கள் திருமழபாடித் தமிழ்ச்சங்கம் கண்டவர். ப. சு. அவர்களை அழைத்துச் சிறப்புச் செய்தவர். நம் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் ப. சு. அவர்களின் திருத்தொண்டர் எனில் பொருந்தும் இருவரிடமும் நேர்காணலை முடித்துக்கொண்டு இலால்குடி நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைந்தது. ஏனெனில் இலால்குடியில் ப. சு. நூற்றாண்டு விழாவில் நான் தொடக்கவுரையாற்ற வேண்டும் என்று இலால்குடி அன்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். காலையில் பேச வேண்டிய நான் மாலை வரை படப்பிடிப்பில் இருந்த்தால் இரவுக்குள் சென்று பேசிவிடுவோம் என்று வேகமாக விரைந்தோம்.



புள்ளம்பாடியை நெருங்கியபொழுது ஒரு செம்மறியாட்டுக்கூட்டம் தொகையாகச் சாலையைக் கடக்க முனைந்தது. எங்கள் மகிழ்வுந்தை ஓரமாக நிறுத்தி அந்த ஆட்டுக்கூட்டத்தை மறித்து மறித்துப் படமாக்கினோம். அந்த ஆடுகளைப் பராமரிக்கும் இராமநாதபுரத்துத் தம்பி நன்கு ஒத்துழைப்பு நல்கினார். கடியலூர் உருத்திருங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையில் வரும் “கூழார் இடையன்”  என்னும் பொருள்பொதிந்த வரிக்கு இந்தக் காட்சிப்படுத்தல் தேவையாக இருந்தது.

மாலைப்பொழுது மங்குவதற்குள் பூவாளூர் சென்று அங்கிருந்த ப.சு.வின் தொண்டர் பூவாளூர் சண்முக வேலாயுதம் அவர்களை நேர்காணல் செய்தோம். அரிய படங்கள் சில அவர் இல்லத்தில் இருந்தன. பூவாளூர் செழுமையான ஊர். ஊர் மட்டுமன்று அந்த ஊர் அன்பர்களின் மனமும் செழுமையாகும். அவர்களின் அன்பில் நீந்தியபடியே இலால்குடி வந்து சேர்ந்தோம்.

திரு. சண்முகவேலாயுதம் இல்லத்தில் படப்பிடிப்பு


இலால்குடியில் வாழ்ந்த திரு சிவா அவர்கள் ப.சு. அவர்களின் மகனாக இருந்து பணிவிடை செய்த பெருமைக்குரியவர். ஐயாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தவர். ஐயாவின் சிறப்பை இராசகோபுரத்தில் ஏற்றி அழகுபார்த்தவர், குடந்தை ப.சு. அவர்கள் இசையறிஞர் என்று மட்டும் நாம் அறிவோம். அவர் மிகச் சிறந்த இறைத்தொண்டர். சிவனிய, மாலிய நூல்களில் பேரறிவு பெற்றவர். பெரியபுராணத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர். இலால்குடி கோயிலில் பெருந்திருப்பிராட்டி பிள்ளைத் தமிழ் நூலினைக் கல்வெட்டாகப் பதிக்கச் செய்தவர். இலால்குடி அன்பர்கள் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழு என்ற பெயரில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணி செய்துவருகின்றனர். தமிழிசைக்கு இவர்களைப் போன்ற பெருமக்கள்தான் தொண்டுசெய்து வருகின்றனரே அல்லால் அரசோ, மேடை முழக்கிகளோ சிறு துரும்பு அளவும் செய்வதில்லை என்பதை இங்குக் குறித்தாதல் வேண்டும். 

ப.சு.நாடுகாண் குழு செய்துள்ள பணிகளை முற்றாக ஒருவர் ஆய்வு செய்யலாம். இலால்குடி கோயிலில் ப. சு. அவர்களின் நூற்றாண்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன, தேவையான செய்திகளைப் படமாக்கிக்கொண்டோம். திரு. சிவா அவர்களின் தம்பியும் அவரின் மகளாரும் மற்றும் குடும்பத்தாரும் பேருவகையுடன் எங்களுக்கு வேண்டிய பல உதவிகளைச் செய்தமையை நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லி, அனைவரிடமும் வாழ்த்துப்பெற்று நாங்கள் புதுவை வந்துசேரும்பொழுது நள்ளிரவு இரண்டுமணியாகும்.

செவ்வாய், 27 மே, 2014

குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை ஆவணப்படமாகின்றது...



பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ப. சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)

  தமிழுக்கு உண்மையாக உழைத்த பெருமக்களை இத்தமிழுலகம் உரிய காலங்களில் போற்றுவதில்லை.  அவர்களின் பேரறிவை மதிப்பதும் இல்லை. அவர்களை வறுமையில் வாடாமல் காத்ததும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அத்தகு பெரியோர்களிடத்திருந்து இன்னும் பல்வேறு ஆக்கங்கள் இம்மொழிக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்கும். அவ்வகையில் திரு. வி. க, மயிலை சீனி. வேங்கடசாமியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெருமக்கள் பல்வேறு இன்னல்களை ஏற்று வாழ்ந்துள்ளனர். எனினும் தங்களால் இயன்ற வகையில் இவர்கள் தமிழுக்குப் பாடுபட்டுள்ளனர்.

  அந்த வகையில் தமிழிசை மீட்சிக்கு உழைத்த குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் வறுமை வாழ்க்கையில் தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர். அன்பர்கள் சிலர் அவரின் கடைசிக்காலத்தில் உதவியுள்ளனர் எனினும் அவரின் துறைசார் அறிவுக்கு ஈடான பொருள்வளத்தையோ, புகழ்நிலையையோ அவர்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழிசைத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, பெருமைக்குரிய குடந்தை ப. சுந்தரேசனாரை வாழும்காலத்தில் போற்றாத மக்கள், மறைந்த பிறகா போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள்?

  இக்குறையை ஓரளவு போக்கும் வகையில் தமிழ்ப்பற்றாளர்கள் அன்னாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழகத்திலும் அயலகத்திலும் கொண்டாட முன்வந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூற்றாண்டு விழாவைப் புதுச்சேரியில் கொண்டாடிய இந்நிலையில் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் உள்ளோம்.

  எத்தகு பொருள் உதவியோ, ஆள் வலிமையோ இல்லாமல் மலையுடைக்கும் முயற்சிக்கு நிகரான படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்த எனக்குப் பேராசிரியர் மு. இளமுருகன், புலவர் சூலூர் கௌதமன் உள்ளிட்டோர் ஊக்கமொழிகளைப் பகர்ந்ததோடு, என் பயணத்தில் உடன் வந்தும் மகிழ்வித்தனர். ஆம். புதுச்சேரியில் படப்பிடிப்பு என்று சொன்னவுடன் தம் பொருட்செலவில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு முழு ஒதுழ்ழைப்பு நல்கினர். பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அம்மா அவர்களும் எங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

  பூம்புகார் மாதவி மன்றத்தின் தலைவர் திரு. நா. தியாகராசன் ஐயா அவர்கள் தம் தள்ளாத அகவையிலும் தனித்து, பூம்புகாரிலிருந்து புதுவைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபோல் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்(சென்னை), பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் ஆகியோர் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுகளைப் பெருந்தன்மையுடன் பதிவு செய்துள்ளனர்.


 திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேல், தவத்திரு ஊரன் அடிகளார், மலேயா பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. குமரன், ஆ. பிழைபொறுத்தான் ஆகியோர் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளனர். அடுத்த படப்பிடிப்பு அரியலூர், திருமழபாடி, புள்ளம்பாடி, பூவாளூர், திருத்தவத்துறை (இலால்குடி), திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது.
புலவர் சூலூர் கௌதமன் ப.சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)


தவத்திரு ஊரன் அடிகளார் நினைவுரை( படப்பிடிப்பு)



திரு. நா. தியாகராசன்(பூம்புகார் மாதவி மன்றம்) ( படப்பிடிப்பு)


முனைவர் இ. அங்கயற்கண்ணி  நினைவுரை( படப்பிடிப்பு)

முனைவர் மு.இளமுருகன் நினைவுரை( படப்பிடிப்பு)


படப்பிடிப்புக்குப் பிறகு ஓரிடத்தில் உரையாடியபொழுது