நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 பிப்ரவரி, 2025

முனைவர் சி. இலட்சுமணன்

 

முனைவர் சி. இலட்சுமணன் 

முனைவர் சிஇலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். களப்பணியில் பல ஓலைச்சுவடிகளைத் தொகுத்து, தமிழ்ப் பல்கைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியவர். நூலாசிரியர்; கட்டுரையாசிரியர்; தமிழ் ஆய்வறிஞர். தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழினை நடத்திவருபவர். பதிப்புப் பணிகளில் ஆழங்கால்பட்ட அறிவுடையவர்.] 

    புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாகப் பயின்றபொழுது(1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்யும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது ஆய்வுக்குரிய நூல்களைப் பார்வையிடவும் அறிஞர்களைச் சந்தித்து, தரவுகளைத் தொகுக்கவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வது வழக்கம். இளையோர்களாகிய எங்களுடன்  அந்நாளில் உரையாடி, எங்களுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியாகச் செய்தவர் சி. இலட்சுமணன் ஆவார். ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் அவர்கள் பணியாற்றிய காலத்தில் பலமுறை சந்தித்து உரையாடிய நினைவுகள் மேலிடுகின்றன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை படிக்கச் செல்லும்பொழுதெல்லாம் அவரைக் கட்டாயம் கண்டு, உரையாடுவது வழக்கம். பலவாண்டுகளுக்கு முன்னர் இவர் ஆய்வுத்துறையில் உழைத்தமை போன்று இன்றும் தொடர்ந்து உழைத்து வருவதை அறிந்து மகிழ்கின்றேன். நாகர்கோவிலில் வாழ்ந்த அறிஞர் சி. சுப்பிரமணியம் ஐயா அவர்களைப் பற்றி அறிவதற்குத் தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தொடர்புகொண்டு, உரையாடிய சுற்றில் மீண்டும் பலவாண்டுகளுக்குப் பிறகு சி. இலட்சுமணன் அவர்களுடன் உரையாடி, அரிய செய்திகளை அடிக்கடிப் பெற்று வருகின்றேன். அவர்தம் தமிழ் வாழ்வினைத் தமிழுலகின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ன்றேன். 

சி. இலட்சுமணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

முனைவர் சி. இலட்சுமணன் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள மதுசூதனபுரம் என்னும் ஊரில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் தி. சின்ன நாடார், இல. சுப்பம்மை ஆகும். இவருடன் பிறந்தவர்கள் நால்வர் ஆவர். 

சி. இலட்சுமணன் குளத்துவிளை என்னும் ஊரில் முதல் ஐந்து வகுப்புகள் வரை பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை புத்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ள இலண்டன் மிசனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட(LMPCH) உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். புகுமுக வகுப்பினை நாகர்கோவில்  இந்துக் கல்லூரியில் (1970-71) பயின்றவர். இளங்கலைப் பட்ட வகுப்பினைப் பொருளாதாரப் பாடத்தினை முதன்மைப் பாடமாக எடுத்து, ஆங்கில வழியில் பயின்றவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை இந்துக் கல்லூரியில் பயிலும்பொழுது பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் இவருக்குத் தொல்காப்பியம் கற்பித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக அஞ்சல் வழியில் இளங்கலைக் கல்வியியல் பயின்றவர். 

சி. இலட்சுமணன் தம் முதுகலைக் கல்வியை முடித்தவுடன் மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். இக்கல்லூரியின் சார்பில் இயங்கிய அச்சகத்தில் பதிப்புப் பணிகளைக் கவனித்து வந்தவர். 1983 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் பணியாற்றியபொழுது, சி. இலட்சுமணன் தொகுப்பூதியத்தில் அங்குப் பணியில் இணைந்தவர். 1994 முதல் தொழில் நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தவர். 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது, திரு புட்பம் கல்லூரியில் இணைந்து பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினைப் “பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி” என்னும் தலைப்பில் செய்து, ஆய்வறிஞரும் பேராசிரியருமான மு. சண்முகம் பிள்ளையின் பன்முகத் தமிழ்ப்பணியினை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். 

தஞ்சையில் வாழ்ந்த இலக்கண அறிஞரும் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியருமான ச.பாலசுந்தரம் அவர்களின்  உரைச்சிறப்பினை ஆராயும் முகமாகத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பும் உரைகளும் (பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை) என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர். இவ்வாய்வில் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலிருந்து பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை வேறுபடும் திறத்தினை மதிப்பிடுவது ஆய்வாளரின் நோக்கமாக இருந்தது. 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் வழியாக ஆய்வுப்புலத்தில் நல்ல பயிற்சிபெற்றார். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் முதலிய பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டவர். எட்டாண்டுகள் இப்பணியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து, அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தொகுத்து, பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியுள்ளார். 

மு. சண்முகம் பிள்ளை, அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்களுடன் சி. இலட்சுமணன் பணியாற்றி, ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சொல்லடைவு தயாரித்தமை, கலியுகப் பெருங்காவியம் என்னும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலுக்குப் பாடவேறுபாடுகளைக் கண்டுணர்ந்து எழுதியவர். சித்த மருத்துவ வாகட நிகண்டு பணியினையும் செய்துமுடித்தவர். அறிஞர் த.கோ.பரமசிவம் அவர்களின் பணிக்காலத்தில் உருவான சுவடி விளக்க அட்டவணை ஐந்தாம் தொகுதியையும் எழுதி, முடித்தவர். 

தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய பல்வேறு சான்றிதழ் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியும் தமிழகத்தின் பல ஊர்களில், பல பொருண்மைகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியும் தம் தமிழ்ப்பணியினைச் செய்தவர். 

சி. இலட்சுமணன் இல்லற வாழ்க்கை 

சி. இலட்சுமணன் அவர்கள் 11.12.1981 ஆம் ஆண்டில் சரசுவதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அமுத சுவாமிநாதன், அபிரேகா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சி. இலட்சுமணன் அவர்கள் தம் பிறந்த ஊரில் தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம் என்னும் பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். தமிழ் ஆய்வுலகுக்குப் பெரும் பங்களிப்பு நல்கிய அறிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் வெளியிடுவதை இந்த மையம் சிறப்பாகச் செய்து வருகின்றது. தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து, அந்த இதழினைச் சிறப்பாகவும் நடத்திவருகின்றார். 

முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்நூல் கொடை: 

1.   சுவடி விளக்க அட்டவணை, ஐந்தாம் தொகுதி(தொகுப்பாசிரியர்),1989

2.   வாழ்வியல் சிந்தனை,1995

3.   பேரா.மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி, 2003

4.   தமிழக வரலாற்றறிஞர்கள், 1993

5.   காகிதச்சுவடி ஆய்வுகள், 2000

6.   பதிப்பு நிறுவனங்கள், 2002

7.   சுவடிப் பதிப்பாசிரியர்கள், 2003

8.       பதிப்பியல் நெறிமுறைகள், 2003

9.       ஆய்வுலகு போற்றும் தமிழறிஞர்கள்

10.   வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை

 

 

புதன், 26 பிப்ரவரி, 2025

மொழியியல் பேராசிரியர் மோ. இசரயேல்

 


பேராசிரியர்  மோ. இசரயேல்
(24.12.1932 - 18.09.2022) 

    [மோ. இசரயேல் மொழியியல் பேராசிரியர் ஆவார். ஒடிசாவின் பழங்குடி மக்களின் மொழியான குவி மொழி குறித்து ஆய்வு செய்து, நூல் எழுதியவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் முதுமுனைவர் பட்ட ஆய்வு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர்] 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள செம்பொன்விளை என்னும் சிற்றூரில் 24.12.1932 பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் மோட்சக்கண் என்பதாகும். மோ. இசரயேல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் முறைப்படி பயின்றவர். தம் முயற்சியின் துணைக்கொண்டு தமிழ் வித்துவான் தேர்வெழுதித் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். தம் முனைவர் பட்ட ஆய்வினைப் பேராசிரியர் மு. வரதராசன் அவர்களின் நெறிப்படுத்தலில் 1965 இல் செய்தவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு “Treatment of Morphology in Tolkappiyam” என்பதாகும். 

நாகர்கோவில் இந்துக்கல்லூரி, இசுகாட் கிறித்தவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 1968 இல் பணியில் இணைந்தவர். பின்னர் அப்பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராக உயர்ந்தவர். இங்கிலாந்து, அமெரிக்கா, செர்மனி, உருசியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்குச் சென்று மொழியியல் சார்ந்த பேரறிவினைப் பெற்றவர். இவர்  இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டி. பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் தம் முதுமுனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியவர்(1973-74). அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் நெறிப்படுத்தலில் 31 பேர் முனைவர் பட்ட ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர். ஆறு நூல்களையும் 175 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஒடிசாவின் பழங்குடி மக்கள் பேசும் குவி(Kuvi) என்னும் மொழியை ஆராய்ச்சி செய்து, அம் மொழிக்கு இலக்கணமும் அகராதியும் உருவாக்கியவர். இது இவர்தம் மிகச் சிறந்த அறிவுத்துறைப் பங்களிப்பாகும். இந்த ஆய்வு பின்னாளில் நூல் வடிவம் பெற்றது(1979). இந்த நூலுக்கு இசரயேல் அவர்கள் வரைந்துள்ள முன்னுரையும், பேராசிரியர் டி.பர்ரோ எழுதியுள்ள ஆய்வுரையும் குறிப்பிடத்தக்கன. இந்த நூலைத் தம் நெறியாளரும், பேராசிரியருமாகிய மு.வ. அவர்களுக்குப் படையல் செய்துள்ளமை மோ. இசரயேல் அவர்களின் நன்றியுணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் தம் பல்கலைக்கழகப் பணியோய்வுக்குப் பிறகு தொடர்ந்து மொழியாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரிப் பாடத்திட்டக் குழுக்களிலும் இணைந்து பங்களிப்பு நல்கியவர். திராவிட மொழியியல் கழகத்திலும் பொறுப்பு ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். என்சைக்கிளோபீடியா ஆப் பிரிட்டானிக்காவிலும் இவர்தம் திராவிட மொழிகள் குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனத்திலும் இவர் ஆட்சிக்குழுவில் இருந்துள்ளார். 

பேராசிரியரும் அவர்தம் துணைவியாரும்(இளமைத் தோற்றம்)

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கெலன் எமரால்டு அவர்களை 1962 இல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அருள் அரசு, அருள் அறம் என்னும் இருவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் இருவரும் பேராசிரியர்களாக உயர்ந்துள்ளனர். 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் தமிழ்க்கொடைகளுள் சில: 

1.   இலக்கண ஆய்வு- பெயர்ச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976

2.   இலக்கண ஆய்வு- வினைச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976

3.       இடையும் உரியும், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, (1977)

4.   A Grammar of THE KUVI LANGUAGE (1979)

 





நன்றி: பேராசிரியர் வி. இரேணுகாதேவி, மதுரை

 

திங்கள், 24 பிப்ரவரி, 2025

"தொல்காப்பிய விருதாளர்" மும்பை கு. இரெ. சீனிவாசன்

 

மும்பை கு.  இரெ. சீனிவாசன் 

[கு.  இரெ. சீனிவாசன் மும்பையில் வாழும் தமிழ் எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தவர். மும்பையில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியில் இணைந்து, பின்னர் வங்கித் தேர்வெழுதி, எழுத்தராக - மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து ‘‘கனிந்த கனவுகள்என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்]. 

மும்பை மாநகரம் தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த வாழ்விடமாக உள்ளதை அண்மையில் மும்பை சென்றிருந்தபொழுது அறிய முடிந்தது. மும்பையில் தமிழர்கள் பன்னெடுங்காலமாகத் தங்கி, பணியாற்றியும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தமிழமைப்புகள், பள்ளிகள் பலவற்றை உருவாக்கியும் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். எனினும் தாயகமாம் தமிழகத்துடன் தொடர்பில் இருந்து, நல்லுறவைப்பேணி வருகின்றனர். தமிழறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரைத் தமிழகத்திலிருந்து அழைத்துத் தங்கள் தமிழ்ப்பற்றைப் புதுப்பித்தவண்ணம் உள்ளனர். அத்தகு மும்பைத் தமிழ் அன்பர்களுள் கு.ரெ.சீனிவாசன் குறிப்பிடத்தகுந்தவர். கே. ஆர். சீனிவாசன் என்ற பெயரில் நன்கு அறிமுகமான இப்பெருமகனார் பன்மொழி அறிஞராகவும் எழுத்தாளராகவும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். இவரின் தமிழ்ப்பற்றையும், எழுத்துத் திறனையும் எழுத்தாளர் சு. குமணராசனார் வழியாக அறிந்து அவர்தம் வாழ்வியலைப் பதிந்துவைக்க முனைகின்றேன். 

கு. இரெ. சீனிவாசன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

கு. இரெ. சீனிவாசன் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஊரினர். இவர்தம் பெற்றோர்  கு. இரா. இரெங்கநாயலு, இராதா ருக்மணி அம்மையார் ஆவர். பட்டு நெசவுத் தொழிலில் புகழ்பெற்ற குடும்பமாக இவரின் குடும்பத்தினர் விளங்கினர். 26.10.1948 இல் பிறந்த இவர் தம் பிறந்த ஊரான அய்யம்பேட்டைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அவ்வூர்க் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையிலான கல்வியையும் பெற்று, தஞ்சாவூர் பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர். 

1969 இல் மும்பை சென்று, அங்கு வாழ்ந்த காந்திய நெறியாளரான இரெ. முருகையா அவர்கள் நடத்திய “சேவக்” அச்சகத்தில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் வங்கிப் பணிக்குரிய தேர்வெழுதி, எழுத்தராகப் பணியில் இணைந்து, மேலாளராகப் பணியுயர்வு பெற்றவர். அவ்வகையில் மும்பைத் தேனா வங்கியில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். விளம்பரத் துறையிலும் ஈடுபட்டு உழைத்தவர். 

கு. இரெ. சீனிவாசன் 10.06.1981 இல் ஞானாம்பாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். ஞானாம்பாள் அவர்கள் வள்ளலாரின்  நன்னெறிக் கருத்துகளில் பேரீடுபாடு கொண்டவர். இவர்களுக்குக் கார்த்திக் என்னும் பெயருடைய மகன் உள்ளார். இவர் சென்னையில் பணியாற்றி வருகின்றார். 

எழுத்துப் பணி 

கு. இரெ. சீனிவாசன் வங்கி மேலாளராகப் பணியாற்றினாலும் தமிழின் மீதான ஈடுபாட்டுடன் விளங்கியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, சௌராட்டிரம் ஆகிய மொழிகளை அறிந்தவர். இவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மும்பை மற்றும் தமிழகத்து ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்து இதழ்களான கல்கி, கலைமகள், அமுதசுரபி, சௌராட்டிர மணி, மொதிரெத்து,   மும்பை இதழ்களான தமிழ் இலெமுரியா, தென்னரசு, மும்பை துடிப்பு, மராத்திய முரசு, போல்டு இந்தியா முதலான இதழ்களில் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

    முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரு. ஸ்ரீநிவாஸ் லட்சுமன் அவர்களால் (திரு. ஆர். கே.  லட்சுமன் அவர்களின் புதல்வர்) ஆங்கிலத்தில் Dreams to Reality என்ற தலைப்பில் எழுதப்பட்ட. நூலினைத் தமிழில் ‘‘கனிந்த கனவுகள் என்ற பெயரில் கு. இரெ. சீனிவாசன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் சிறுவர் படைப்புகளை வெளியிடுவதில் புகழ்பெற்ற  நவநீத் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்துள்ளது. 

தமிழ்ப் பணிகள் 

மும்பையின் கோரேகான் தமிழ்ச் சங்கம் 1976 முதல் புத்துயிர் பெற்று, இயங்கி வருகின்றது. சற்றொப்ப 30 ஆண்டுகள் இத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து கு. இரெ. சீனிவாசன் பணியாற்றியவர். தற்போது துணைத் தலைவராகவும் இவரின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

    7000 மாணவர்களைக் கொண்டுள்ள விவேக் வித்யாலயா, மற்றும் கல்லூரியை நடத்துகின்ற விவேக் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர்.    சிறிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் இயன்ற அளவில் சமூகத் தொண்டினையும் செய்துவருபவர். 

கு. இரெ. சீனிவாசனின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 25.01.2025 இல் மும்பையில் நடைபெற்ற தமிழ் இலெமுரியா அறக்கட்டளை விழாவில் இவருக்குத் “தொல்காப்பியர் விருது - 2024” வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.


 கு. இரெ. சீனிவாசன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு வாழ்த்தி மகிழ்கின்றேன்.

மு.இளங்கோவன், கு. இரெ. சீனிவாசன்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன்

 

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் 

[துரை. முத்துக்கிருட்டினன் கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பெரும்புலமையுடையவர். பன்னூலாசிரியர். குடந்தையில் பிறந்த இவர் சிங்கப்பூரிலும் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.] 

சிங்கப்பூரில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சிலவாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வாய்த்தது. அப்பொழுது அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றித் தம் நிறைபுலமையால் அவையினரை "மகுடிக்கு அடங்கும் பாம்புபோல்" அடக்கினார். அவர் உரையைத் தொடர்ந்து யான் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. சிலப்பதிகாரத்தில் ஈடுபாடுகொண்ட மாணவனாகிய எனக்கு இக்காலத்தில் இதுபோலும் சிலம்பினைக் குறித்து உரையாற்றும் பெருமக்கள் உள்ளனரே என்று வியப்புற்றேன். என் மகிழ்வை அவையில் வெளிப்படுத்திப் பேசினேன். நிகழ்ச்சியின் நிறைவில் துரை. முத்துக்கிருட்டினனாரின் உரைக்குப் பாராட்டுத் தெரிவித்து, விடைபெற்றுத் தமிழகம் திரும்பினேன். அதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தன. 

தொல்காப்பிய மன்றத்தைச் சிங்கப்பூரில் கட்டியெழுப்புவதற்கு அருமை நண்பர் திரு. காமராசனாரின் பெருந்துணையுடன் ஓர் இலக்கியச் சந்திப்பைச் சிலவாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினோம். சிங்கப்பூர் அறிஞர் பெருமக்கள் பலரும் எங்கள் முயற்சிக்குப் பேருவகையுடன் ஆதரவு நல்கினர். அப்பொழுது மீண்டும் துரை. முத்துக்கிருட்டினனாரைச் சந்திக்கும் வாய்ப்பு கனிந்தது. அதுபொழுது அவர் கையுறையாக வழங்கிய அரும்பெரும் இலக்கண ஆய்வு நூலாகியஒருதலைக் காமம்” (கைக்கிளைதொல்காப்பியம்) என்னும் நூலின் படியைப் பெற்றுக், கொண்டுவந்தேன். வந்தவுடன் அந்த நூலின் ஆய்வுப்போக்கையும், நோக்கையும் படித்து மகிழ்ச்சியுற்றேன்

தொல்காப்பியரின் கைக்கிளை குறித்த கருத்தினைப் பிற்கால உரையாசிரியர்கள் எவ்வாறு பிழைபட உணர்ந்து, பொருளுரைத்துள்ளனர் என்பதையும் அந்தப் பிழைப்பட்ட பொருளைப் பிற்காலத்து அறிஞர்கள் தலைமுறைதோறும் தொடர்ந்து கடத்திவந்துள்ளனர் என்பதையும் அறிஞர் துரை. முத்துக்கிருட்டினனார் அந்த நூலில் சிறப்பாக விளக்கியிருப்பார்கள். இந்த நூல் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்குரிய இடுநூலாகும். அறுநூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைக் காட்டி, மிகச் சிறந்த ஆய்வு நூலாக இதனைப் படைத்திருப்பார். இந்த ஆய்வினை நெறிப்படுத்திய அறிஞர் பெருந்தகை பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் ஆவார்கள்

ஒருதலைக் காமம் (கைக்கிளைதொல்காப்பியம்) நூலின் அமைப்பு 1. நுழைவாயில், 2. மண்ணின் மணமும் பெண்ணின் குணமும், 3. கைக்கிளை இலக்கணம் உரைத்தவரும்- உரைத்தவறும், 4. கைக்கிளை ஒழிபும் பிழிவும், 5. மகளிர் மனத்தின் உறுதியும் மணத்தில் உறுதியும் 6. முடிவுரை என்றவாறு இயல் பிரிப்பினைக்கொண்டு, அமைந்துள்ளது. கைக்கிளை குறித்து, இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும், பிற்காலத் தொல்காப்பிய ஆய்வாளர்களும் கொண்டிருந்த கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும், தாம் கண்ட ஆய்வு உண்மைகளை நிறுவ இவர் எடுத்துள்ள முயற்சியும் சான்றுகளும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. ஆய்வின் இயல் பிரிப்பினை மேலோட்டமாகப் பார்ப்பவர்க்குக் கூட, இந்த ஆய்வின் பெருமை தெற்றென விளங்கும். நூலினைப்  படித்த கையோடு, முத்துக்கிருட்டினரின்  நினைவு என் நெஞ்சில் நிலைத்துப் படிந்தது

தொடர்ந்த என் தொல்காப்பியத் தேடலில் முத்துக்கிருட்டினர் அவர்களை மீண்டும் நினைவுகூரும் வாய்ப்பு கனடாவில் நடைபெற்ற கனடா தொல்காப்பிய மன்றத்தின் ஆராய்ச்சி மாநாட்டின்பொழுது மீண்டும் துளிர்விட்டது. தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சிக்கு அவரின் படத்தை மீண்டும் தேடத் தொடங்கியபொழுது,  இப்பெருமகனாரின் வாழ்வியலும் பணிகளும் தமிழுலகின் கவனத்திற்கு வரவில்லையே என்று கவலைகொண்டிருந்தேன். அண்மையில் என் நண்பர் முனைவர் இரா. அருள்ராசு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது  துரை. முத்துக்கிருட்டினனாரின்  பெருமையை இருவரும் அசைபோட்டோம். இவர்தம் ஆற்றலையும் பெரும்புலமையையும்  தமிழுலகுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்திற்கு ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் என்றும் கருதி,  எழுதி, அறிமுகப்படுத்துவதில் மகிழ்கின்றேன்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொருக்கை என்னும் ஊரில் வாழ்ந்த உழவர் குடியைச் சார்ந்த துரைசாமி பிள்ளை, இலக்குமி அம்மாள் ஆகியோரின் மகனாக 01.06.1947 இல் துரை. முத்துக்கிருட்டினன் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரில் பயின்றவர்.  ஆறு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கும்பகோணத்தில் அமைந்துள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். தம் கல்லூரிப் படிப்பைத் தஞ்சை- கரந்தையில் அமைந்துள்ள புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்றவர் (1966-1970). கண்டிப்புக்கும் புலமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் அப்பொழுது கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர்

கரந்தைக் கல்லூரியில் அப்பொழுது ஒவ்வொரு வகுப்பிலும் நூறு மாணவர்கள் படிப்பது வழக்கம். நான்கு ஆண்டு புலவர் படிப்பில் மொத்தம் நானூறு மாணவர்கள் தமிழ் படித்தனர். இணை வகுப்புகள் அமையும்பொழுது இருநூறு மாணவர்களை அமரச்செய்து ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது வழக்கமாம். பேராசிரியர்கள் கு.சிவமணி, .பாலசுந்தரம் அடிகளாசிரியர், சி.கோவிந்தராசனார், சிவப்பிரகாச சேதுவராயர் முதலான பெரும்புலமைச் சான்றோரிடம் தமிழ் கற்ற துரை. முத்துக்கிருட்டினன் படிப்பிலும் விளையாட்டிலும் பெருந்திறன் பெற்றவராக விளங்கியவர்

துரை. முத்துக்கிருட்டினன் கரந்தையில் கல்வி பயிலும்பொழுது கடவூர் மணிமாறன்(முத்துசாமி), பிரபஞ்சன்(வைத்தியலிங்கம்) உள்ளிட்டவர்கள் உடன் பயின்றவர்கள். சைதாப்பேட்டை அசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபொழுது இவருடன் செந்தலைப் புலவர் கௌதமன் அவர்கள் உடன் பயின்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பாபநாசத்தில் இருந்த பாவேந்தர் தமிழ்க் கல்லூரியில் 1970 முதல் 1972 வரை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பொழுது(1972 இல்) அங்கு வந்திருந்த தந்தை பெரியாரைக் கண்டு உரையாடியவர். அவரிடம், தஞ்சையில் முன்பொருபொழுது உரையாற்றிய தந்தை பெரியார் “தமிழைக்  காட்டுமிராண்டி மொழி” என்றமைக்காகத் தம் மறுப்பைத் தெரிவித்து உரையாடினார். தந்தை பெரியார் அவ்வாறு சொன்னமைக்கான காரணத்தை முத்துக்கிருட்டினனுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கியமையை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்பவர்

காலத் தேவையறிந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகியோர் அவரவர் காலத்தில் நூல் இயற்றியமை போல் இக்காலத்தில் காலத் தேவையறிந்து மக்களுக்கு உதவும் நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் எழுதாமையால் தாம் அவ்வாறு கூற நேர்ந்தமையைத் தந்தை பெரியார் விளக்கியபொழுது நம் துரை. முத்துக்கிருட்டினன் அமைதியடைந்தார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் 1972 முதல் 1980 வரை அரசியல் ஆர்வம்கொண்டு, பணிக்குச் செல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு முயன்றும் அப்பணி தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. 1982 இல் சென்னை முத்தியாலுபேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு வரை அப்பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். 

பள்ளியில் பணியாற்றியபடியே தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள பி. லிட்., முதுகலை(M.A) கல்வியியல் இளையர் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முதலிய  பட்டங்களைப் படித்துப் பெற்றவர். தம் ஆய்வியல் நிறைஞர் படிப்புக்காகக்  கைக்கிளைதொல்காப்பியம்” என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி அப்பட்டத்தைப் பெற்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் இல்லற வாழ்க்கை: 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களுக்கு 1970 இல் வசந்தகுமாரி அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சிதம்பர பாரதி, சர்மிளா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சிதம்பர பாரதி தொழில்நுட்பம் பயின்று, தற்பொழுது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு, அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அரசியல் செல்வாக்கோ, அறிவைப் போற்றும் ஆளுமைகளோ இவருக்கு அமையாததால் இவர் பணிகள் குடத்துக்குள் ஏற்றிய விளக்காக உள்ளன

துரை. முத்துக்கிருட்டினன் தமிழ்க்கொடைகள்

1. ஒருதலைக் காமம் (கைக்கிளை -- தொல்காப்பியம்)     ஆய்வு நூல்

2. திருக்குறள் உரை

3. தமிழ் இலக்கணம்

4. மதுரையைக் கண்ணகி    எரிக்கவில்லை  (சிலப்பதிகார ஆய்வேடு)

5. நந்திக் கலம்பகம்   (நாடகம்)

6. அகல் விளக்கு    (கவிதை)

7. இரட்டை நவமணி மாலை   (கட்டுரைகள்




வெளியீடு காண இருப்பவை: 

8.  குறளறனும் மனுமுரணும்

 (1. "திருக்குறள் -- மனுதர்மத்திற்கு  எதிரானது;   2. பரிமேலழகர், தம் உரை          மூலம் வருணாச்சிரமத்    தர்மக் கோட்பாடுகளைத் திணிக்கிறர்;  3. பரிமேலழகரின் உரை      முரண்பாடுகள்;  என்பன பற்றிய விளக்கமும்  மற்றும்   4. திருக்குறட்குப் -- புத்துரையும்         அடங்கியது.)

9. சிலம்பிய சிலம்பும்     புலம்பிய சதங்கையும்

      (சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்    கட்டுரைகள் -- விரைவில்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழாய்வு முயற்சிகளையும், எழுத்துப்பணிகளையும் போற்றி இவருக்கு உரிய சிறப்புகளையும் பெருமைகளையும் அளிப்பது தமிழர் கடமையாகும்.