நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு!


நூல்வெளியீட்டு விழாவில்
முனைவர் ம.இராசேந்திரன், வேல.இராமமூர்த்தி, மு.இளங்கோவன், ஈரோடு கதிர், பொறியாளர் இரவிச்சந்திரன், மருத்துவர் வி.தனபால் உள்ளிட்டோர்

தஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம் மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட, பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

     நூலாசிரியர்கள் இரவிச்சந்திரன், கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர். சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.     எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.

 நூல்வெளியீட்டு விழா- மேடையில்

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீட்டு விழா




பொறியாளர் சோ. இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு என்ற நூலும் எழுத்தாளர் கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே என்ற நூலும் தஞ்சாவூரில் வெளியிடப்பட உள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்: 18.12. 2016(ஞாயிறு), நேரம்: மாலை 5 மணி

இடம்: ஐசுவர்யா மகால், மருத்துவக் கல்லூரிச் சாலை, இராசப்பா நகர், தஞ்சாவூர்

தலைமை: நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள், நீதிபதி,உயர்நீதி மன்றம், சென்னை

வரவேற்புரை: எழுத்தாளர் எம். எம். அப்துல்லா அவர்கள்

வெட்டிக்காடு நூல் வெளியீடு: எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி அவர்கள்

முதல்படி பெறுதல்:
திருமதி ஜெயம் சோமு அவர்கள்
திரு. அ. அப்பாவு அவர்கள், மேனாள் கூடுதல் வணிகவரி ஆணையர்

கீதா கஃபே நூல் வெளியீடு: முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

முதல்படி பெறுதல்: 
திருமதி பத்மாவதி தனபாலன் அவர்கள்
முனைவர் பழநி. அரங்கசாமி அவர்கள், மேனாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

வெட்டிக்காடு நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

கீதா கஃபே நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள்

ஏற்புரை: பொறியாளர் சோ.இரவிச்சந்திரன் அவர்கள், இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்
கீதா இரவிச்சந்திரன் அவர்கள் எம்.ஏ.; எம். ஃபில்.

நன்றியுரை: மருத்துவர் வி. தனபாலன் அவர்கள்
வினோதகன் மருத்துவமனை, தஞ்சாவூர்


நிகழ்ச்சி நெறியாளர்: திரு. சுரேகா சுந்தர் அவர்கள்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் திருப்புகழ் குறித்த உரை





தஞ்சைக்குச் செல்லும்பொழுதெல்லாம் தவறாமல் கரந்தை செயகுமார் அவர்களைச் சந்திப்பது உண்டு. இந்தமுறையும் தஞ்சைப் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் என் வருகையைக் குறிப்பிட்டுச் செல்பேசியில் பேசினேன். அடுத்த பதினைந்து நிமையத்தில் கரந்தை செயகுமார் வந்துசேர்ந்தார். இருவரும் அருகில் இருந்த கடையில் அமர்ந்து குளம்பி அருந்தினோம். பயண நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்தம் வலைப்பதிவுப் பணிகளை வாயாரப் புகழ்ந்து பாராட்டினேன். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் கவினார்ந்த பணிகளை இருவரும் நினைவுகூர்ந்தோம்.

தஞ்சாவூரின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் இல்லத்திற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்தவர்களிடம் செல்பேசி எண் பெற்று, பேராசிரியர் அவர்களின் துணைவியாரிடம் எங்கள் வருகையைச் சொன்னோம். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன் எனவும் அதுவரை காத்திருக்கும்படியும்  அவர் பணித்தார்; சொன்னபடி சற்று நேரத்தில் வந்துசேர்ந்தார். பேராசிரியர் அவர்களைச் சந்திக்க விரும்புவதைச் சொன்னோம். முன்பே நான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றுள்ளதால் என்னை அம்மா அடையாளம் கண்டு கொண்டார்.

இன்று (06.08.2016) மாலை 7 மணி முதல் 8 மணி வரை தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மண்டபத்தில் பேராசிரியர் செல்வகணபதி திருப்புகழ் தொடர்வகுப்பு நடத்துவதாகவும், 8.30 மணிக்கு இல்லம் திரும்புவார் எனவும் பேராசிரியரின் நிகழ்ச்சி நிரலை அம்மா குறிப்பிட்டார். இல்லத்தில் காத்திருப்பதைவிடக் கோவிலுக்குச் சென்றால் சற்று நேரம் திருப்புகழ்ப் பாடம் கேட்கலாம் என்று நானும் கரந்தையாரும் புறப்பட்டோம்.

தஞ்சைப் பெரிய கோவிலின் மண்டபத்தை நாங்கள் அடைவதற்கும் திருத்தவத்துறை (இலால்குடி) கோயில் இறைவன் மீது அருணகிரியார் பாடிய பாடலைப் பேராசிரியர் விளக்கத் தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது. திருத்தவத்துறையின் சிறப்பினையும், இத்தலம் குறித்தும் சமய அடியார்கள் பாடிய பாடல்கள் குறித்தும் பேராசிரியர் முதலில் விளக்கினார். திருத்தவத்துறைக்கும் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை இனிமையாக விளக்கத் தொடங்கினார். நாங்கள் வந்திருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்து நான் உருவாக்கிய ஆவணப்பட முயற்சி குறித்து எடுத்துரைத்து, அரங்கில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். பார்வையாளர்கள் என்ற வரிசையில் எண்மர் இருப்பர். எங்களையும் சேர்த்தால் பதின்மர் இருப்போம். பெரிய கோவிலுக்கு வந்துசெல்லும் சுற்றுலாக்காரர்கள் உரையரங்கம் நடைபெறும் மண்டப முகப்பில் வந்து நின்று பார்ப்பார்கள்; சற்று நேரத்தில் வந்தவேகத்தில் செல்வார்கள். தமிழ் கற்றவர்களுக்கே திருப்புகழின் சிறப்புகள் தெரியாமல் இருக்கும்பொழுது கல்லாக் கூட்டத்திற்கு எங்கே அதன் சிறப்பு தெரியப்போகின்றது?

நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு மாணவனைப் போல் அமர்ந்து திருப்புகழ்ப் பாடலைப் பாடம் கேட்க அமைந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன். இதுவரை 111 வகுப்புகள் திருப்புகழ் குறித்துத் தஞ்சைப் பெரியகோயில் நடந்துள்ளனவாம். நாங்கள் சென்று கேட்டது 112 ஆம் தொடர் வகுப்பு என்று அறிந்தபொழுது வியப்பு ஏற்பட்டது. திருப்புகழை எவ்வாறு படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை எளிய நிலை அறிவுடையவர்களுக்கும் புரியும்படி பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விளக்கியபொழுது அவர்தம் பாடஞ்சொல்லும் திறமை எனக்கு விளங்கியது.

தாம் நடத்தும் பாடப் பகுதியையும் அதற்குரிய விளக்கத்தையும் கணினியில் தட்டச்சிட்டு, அதன் படியைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் பேராசிரியரின் பாடத் தயாரிப்பு முறையைப் பாராட்டுதல் வேண்டும். மக்களுக்குப் பாடஞ்சொல்லும்பொழுது கேட்போர்க்கு இடர்ப்பாடு இருத்தல்கூடாது என்று ஆயத்தமாகத் திட்டமிட்டு வந்த அவரின் கடமையுணர்ச்சி பளிச்சிட்டது. இவரிடம் கல்லூரியில் பாடம்கேட்ட மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்!. தொல்காப்பியம், நன்னூலைப் பார்க்காத சில அன்பர்கள் பல்கலை- கல்லூரிகளில் பணியாற்றுவதைப் பற்றி ஐயா தமிழண்ணல் சொன்னதை இங்கு நினைத்துக்கொண்டேன்.

திருப்புகழ்(திருத்தவத்துறை, 918)

தானன தந்தன தத்த தத்தன
     தானன தந்தன தத்த தத்தன
          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

காரணி யுங்குழ லைக்கு வித்திடு
     கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
          காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே

காதள வுங்கய லைப்பு ரட்டிம
     னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
          காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்

பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
     சீதள குங்கும மொத்த சித்திர
          பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான

போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
     யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
          பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே

வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
     பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
          வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட

வீசிய பம்பர மொப்பெ னக்களி
     வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
          வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா

சீரணி யுந்திரை தத்து முத்தெறி
     காவிரி யின்கரை மொத்து மெத்திய
          சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே

சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
     மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
          தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.

என்னும் திருப்புகழ்ப் பாடலை விளக்குவதற்கு முன்பாகப் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருப்பெருந்துறை இறைவி மீது பாடிய, “மாமலர் நறுங்குழற் கொண்டலிடை நித்தில மணிப்பிறை நிலாவெறிப்ப” எனும் பாடலைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கினார். மேலும் சேக்கிழாரின் பெரியபுராணத்திலிருந்தும் வரிகளை மேற்கோள்காட்டிப் பேசியமை எம் போலும் தமிழ்ப்பசியுடன் வந்து அமர்ந்தோருக்குப் பெருவிருந்து என்று சொல்லலாம்.

திருப்புகழை எவ்வாறு படிக்கவேண்டும் என்று இன்று சிறப்பாக அறிந்துகொண்டேன். முதலில் சந்தச் சிறப்பை விளக்கினார். சந்தம்தான் திருப்புகழ்க் கோட்டையைத் திறக்கும் திறவுகோல் என்றார். சந்தத்தைப் படித்துக்காட்டி, பாடலைப் பலமுறை படித்தார். பாட்டின் அமைப்பு எங்களின் மனத்தில் பதிந்தது. பிறகு பிற்பகுதியிலிருந்து பொருள்சொல்லத் தொடங்கினார்.

காவிரியின் வளம், முருகபெருமானின் திறல், அருணகிரியாரின் இன்ப விழைவுநிலை என்று பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விளக்கினார். சகானா இராகத்தில் இப்பாடல் உள்ளது என்றார். இந்த இராகம் பாவேந்தருக்குப் பிடித்தது என்று கூறி, பாவேந்தரின் இசையமுதிலிருந்து நினையாரோஎன்ற பாடலைப் பாடிக்காட்டினார். ஒப்புமை கருதி, குறுந்தொகையிலிருந்து 16 ஆம் பாடலை மேற்கோள் காட்டினார். 16 இடங்களில் திருப்புகழில்  தவில் ஓசை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.


பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள், பல்வேறு நுட்பங்கள், பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டித் தம் உரையைச் சிறப்பாக அமைத்தார். பெருநிதியை வாரி வழங்கும் வள்ளல்போல் பேராசிரியர் செல்வகணபதி தாம் நடத்திய திருப்புகழ் வகுப்பில் தமிழ் அமிழ்தமாகச் செய்திகளை வாரி வழங்கினார். இவர்தம் செல்பேசியைத் திறந்துவைத்திருந்ததால், அதன் வழியாகத் திருச்சிராப்பள்ளி அன்பர்கள் அவர்கள் இல்லத்திலிருந்து இந்த உரையைச் செவிமடுத்தமையை அறியமுடிந்த்து. மிகச் சரியாக எட்டுமணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. ஐயாவிடம் வந்த காரணம் சொல்லி, அழைப்புவிடுத்து, விடைபெற்றுக் கொண்டோம். வாரவிடுமுறைநாள் என்பதால் தஞ்சைச் சாலைகளில் சுற்றுலாக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மக்கள் கடலை நீந்தித், தொடர்வண்டி நிலையம் வருவதற்கும் உழவன் விரைவு வண்டி புறப்படுவதற்கும் சரியாக இருந்தது.

புதன், 18 மார்ச், 2015

மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் மருத்துவத்துறைப் பங்களிப்பு





   மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் மருத்துவச் செய்திகளைத் தமிழில் எழுதுவதிலும், தமிழ்வழியில் கற்பிப்பதிலும் முன்னோடி மருத்துவர் ஆவார். தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அறுவை மருத்துவத்தில் முதுநிலைப்பட்டம் (எம்.எஸ்) பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் “கல்லீரல் அமீபா சீழ்க்கட்டியினால் நேரும் இறப்பு விழுக்காடு கட்டுப்பாடுஎன்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். 

  நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்து ஆய்வுமாணவனாக இருந்தபொழுது பேராசிரியர் சி. தங்கமுத்து ஐயா அவர்கள் ( பதிவாளராகவும், துணைவேந்தராகவும் பணியாற்றியவர்) நம் மருத்துவர் அவர்களை அறிமுகம் செய்தார்கள். அன்று முதல் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் மருத்துவப்புலமையை அறிந்து அவர் நூல்களையும் கட்டுரைகளையும் படித்துள்ளேன். அவர்தம் வாழ்வையும் பணிகளையும் பதிந்துவைப்பதில் மகிழ்கின்றேன்.

  மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் புதுக்கோட்டையில் வாழ்ந்த திரு பழ. சுந்தரேசன் அவர்கள், திருவாட்டி சு. பத்மாசினி ஆகியோரின் அருமைப் புதல்வராக 09. 11. 1942 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னையிலும் நிறைவு செய்தவர். தஞ்சையில் மருத்துவப் படிப்பை முடித்தவர். தஞ்சைப் புட்பம் கல்லூரியில் பதிவு செய்துகொண்டு, புதுவை சிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் திரு. பாரிஜா என்னும் நுண்ணுயிரியல் துறை அறிஞரின் மேற்பார்வையில் மருத்துவத்துறையில் முனைவர்பட்ட ஆய்வை முடித்தவர். இவர் தம் பணிகளையும், வாழ்வியலையும் கீழ்வரும் வகையில் பட்டியலிடலாம்.



                மருத்துவப்பணி      :              
·         சிறப்பு நிலைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர்   எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

·         பேராசிரியர், பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரி, திருச்சி

·         பேராசிரியர் - அறுவை சிகிச்சை, தஞ்சை மருத்துவக்கல்லூரி, 1994 - 2000

·         உதவி அறுவை சிகிச்சை பேராசிரியர், தஞ்சை மருத்துவக்கல்லூரி, 1993 - 1997

·         உதவி மருத்துவர், இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, தஞ்சை, 1970 - 1977

                1970 - 2000 வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் மருத்துவக்கல்லூரியில் இவர் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ததுடன் பலநூறு மருத்துவ மாணவர் - செவிலியர்களுக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்துள்ளார்.

நிறைவு செய்யப்பட்ட மருத்துவ ஆய்வுத் திட்டங்கள்:
 1.  தமிழ்நாடு அரசு அறிவியல் ஆய்வுக்குழுவின் உதவியுடன் 1980 - 1990 வரை 8 திட்டங்கள்
  2.   அமீபா கல்லீரல் அழற்சி சார்ந்த ஆய்வு 6
3.  தொழுநோயாளிகளுக்குத் தோன்றும் குடல் நோய்கள், சிறுகுடல் அடைப்பு- 2
               
.        தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பொறி மையத்துடன் இணைந்த திட்டங்கள் - 4
                1.            குடல் அடைப்பு - 1
                2.            இதய தாக்கம் - 2
                3.            அரிய உலோகங்கள் - 1

                தேசிய அளவில் படித்தளிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள்

                1.            இந்திய இரைப்பை குடல்நோய்க் கழகம் - மாநாடு - 9
                2.            இந்திய அறுவை சிகிச்சை கழகம் - மாநாடு - 2
                3.            தமிழ்நாடு கிளை இந்திய அறுவை சிகிச்சைக் கழகம் மாநாடு  - 9
                4.            தமிழ்நாடு கிளை இந்திய மருத்துவக் கழகம் மாநாடு         - 2

                தேசிய மருத்துவ சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் - 6

                இரைப்பை குடல் உள்நோக்கி பயிற்சியில் இந்திய அளவில் கலந்துகொண்டது - 4

மருத்துவச் சொற்பொழிவுகள்              - 130

தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர்
                தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை
                ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, சென்னை
                அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
                சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

.        முனைவர் பட்டத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர்
                தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பெற்ற விருதுகள்
1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டபொது அறுவை மருத்துவம்நூலுக்கு 1996ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது வழங்கப்பெற்றது (முதல் பரிசு).
2.பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டவயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும்நூலுக்கு 1991ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது வழங்கப்பெற்றது (முதல் பரிசு).
3. வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை சிறந்த மருத்துவ இலக்கியப் படைப்பிற்கான பரிசு 1991.
4.  மருத்துவ ஆராய்ச்சி, சமூக நல மேம்பாட்டிற்கான தமிழ்நாடு பிரிவு இந்திய மருத்துவக் கழகச் சிறப்பு விருது 1995.
5. ஏழாவது தமிழக அறிவியல் பேரவை சார்பில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயும் மருத்துவமும் எனும் புத்தகத்திற்குச் சிறப்புப் பரிசு 1998.
6.            ‘பெண்ணே உனக்காகஎனும் புத்தகத்திற்கு இணையாசிரியர் சிறப்புப் பரிசு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழக அரசு 1998.
7.  தஞ்சை அரிமா சங்கம், சிறந்த மருத்துவ ஆய்வறிஞர் பரிசு 1999.
8. தஞ்சை தமிழிசை மன்றம், சிறந்த மருத்துவர் - சமூகநல மேம்பாடு பரிசு 1999.
9.  தஞ்சை மருத்துவக்கல்லூரி, சிறந்த பேராசிரியர் விருது 1999
10.   அண்ணா அறக்கட்டளை, மருத்துவக் களஞ்சியம் முதல் பரிசு ரூ. 5000/-
11. தமிழ்நாடு பிரிவு இந்திய மருத்துவக் கழகம், டாக்டர் பானுமதி முருகநாதன் அறக்கட்டளை, தமிழ் மேம்பாட்டிற்கான விருது, ஈரோடு, 2002.
12.  இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 34ஆம் ஆண்டு அறிவியல் தமிழ் பரப்பும் நோக்கத்திற்கான விருது, தஞ்சாவூர், 2003.
13.   ஜேசிஸ், தஞ்சாவூர், சிறந்த மூத்த குடிமகன், 2003.
14.அகில இந்திய திராவிட மொழியியல் 32வது மாநாட்டில் என்.டி.ஆர். அறக்கட்டளை, ‘புதிய மருத்துவ முன்னேற்றமும் கண்டுபிடிப்புகளும்என்ற நூலுக்கான விருது, வாரங்கல், ஆந்திரா, 2004.
15.  தஞ்சை காவேரி கலைமன்றம், ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’, 2004.
16. சிறந்த மருத்துவர் விருது, பி.சி.ராய் நாள் விருது, இந்திய மருத்துவக் கழகம், திருச்சி, 2005.
17. மருத்துவத் தமிழ் மேம்பாட்டிற்கான விருது, அகில உலக மருத்துவத் தமிழ் ஆய்வு மாநாடு, பழநி, 2005.
18. உலகத்தமிழ் எழுத்தாளர் மன்றம், கவிமாமணி டாக்டர் ரெ. முத்துகணேசனார் பவள விழா தமிழ் அறக்கட்டளை, சிறந்த நூலுக்கான பொற்கிழி பரிசு, 2006.
19.   தூய வளனார் தன்னாட்சி கல்லூரி, அறிவியல் தமிழ் கணினி பயன்பாடு தேசியக் கருத்தரங்கம், அறிவியல் தமிழறிஞர் விருது, 2006.
20.  திருச்சி, இந்திய மருத்துவக் கழகம், மரு. பழனியாண்டி அறக்கட்டளை, சிறந்த தமிழறிஞர் விருது, திருச்சி, 2010.
21. விடுதலை 75ஆம் ஆண்டு அறிவியல் தமிழ் அறிஞர்க்கான பாராட்டு, தஞ்சை, 2000.
22. ‘கலைமாமணி’ 2010ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது - தமிழக முதல்வர் மாண்புமிகு மு. கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது.
23.     தமிழ் மக்கள் கலைவிழா, கபிஸ்தலம், ‘ஆற்றலாளர் விருது’, 2011.
24.   உலக செஞ்சிலுவை சங்க நாள் விழா, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், சிறந்த சமூக மருத்துவ சேவைக்கான விருது, 2011

 நூல் ஆசிரியர் - மருத்துவப் பாடத்திற்கான நூல்கள்

1. பொது அறுவை மருத்துவம் (முதல் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. பொது அறுவை மருத்துவம் (இரைப்பை குடல்) (இரண்டாம் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
3.  பொது அறுவை மருத்துவம் (நரம்பு மண்டலம்) (மூன்றாம் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (அச்சில்)
4. விபத்து, நச்சு இயல் (ஆங்கில நூல் (மூன்று தொகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

 பொதுமக்களுக்கான மருத்துவ நூல்கள்

1.   குடற்புண்ணைக் குணப்படுத்தலாம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2.    நோயை வெல்வோம், என்.சி.பி.எச்., சென்னை.
3.    15 வியாதிகளும் அவற்றின் வைத்தியமும், ஸ்டார் பிரசுரம், சென்னை.
4. பெருங்குடல் வாய் திறப்பு, ஆஸ்டமி அசோசியேஷன் ஆப் இந்தியா, மும்பை
5.   உங்களுக்கு தலைவலியா?, பூம்புகார் பிரசுரம், சென்னை.
6.     மார்பக நோய்கள், பிரியா பதிப்பகம், தஞ்சாவூர்.
7.வயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும், பூம்புகார் பிரசுரம், சென்னை.
8. நீரிழிவு நோயும் அவற்றின் மருத்துவமும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
9.   புற்றுநோயும் மருத்துவமும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
10.  இதய நோயும் மருத்துவமும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
11.  பெண்ணே உனக்காக, பூம்புகார் பிரசுரம், சென்னை.
12. நலவாழ்வு நம் கையில், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
13.புதிய மருத்துவ முன்னேற்றமும் கண்டுபிடிப்புகளும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
14. சிறுநீரக நோயும் மருத்துவமும், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
15.  மஞ்சட்காமாலை, கற்பகம் புத்தகாலயம், சென்னை.
16.  குழந்தை அறுவை மருத்துவம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
17.கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
18. நோயின்றி வாழ உணவே மருந்து, கற்பகம் புத்தகாலயம், சென்னை.
19.நீரிழிவு நோய் முதல் புற்றுநோய்வரை உணவு மருத்துவம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
20.இதயநோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
21.உடல், திசு உறுப்புக்கொடை, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
22. உடல், திசு, உறுப்பு இரத்ததானம், கற்பகம் புத்தகாலயம், சென்னை.
23. கிறித்துவமும், அறிவியலும் (அச்சில்)

களஞ்சியம்

1.            மருத்துவக் களஞ்சியம், புற்றுநோய் (8ஆம் தொகுதி), தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை.
2.            மருத்துவக் களஞ்சியம், சிறுநீரகம் இனவள உறுப்பு (10ஆம் தொகுதி), தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை.

ஆய்வு நூல்கள்
1. தமிழில் மருத்துவ இதழ்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
2. தமிழ்வழிக்கல்வி ஒரு கானல் நீரா?, கற்பகம் புத்தகாலயம், சென்னை.
3. அறிவியல் தமிழ் (மருத்துவத் தமிழ் வரலாறும் வளர்ச்சியும்), பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.

நூல் தொகுப்பாசிரியர்

1. புகழ்பெற்ற டாக்டர்களின் மருத்துவ ஆலோசனைகள், வாசன் பதிப்பகம், சென்னை.
2. வளர்தமிழ் அறிவியல், தமிழக அறிவியல் பேரவை, காரைக்குடி.
3. மருத்துவ மலர், மக்கள் இயக்கம், கரந்தை, தஞ்சாவூர்.
4. வளர்தமிழ், அகில இந்திய அறிவியல் கழகம், தஞ்சாவூர்.

பிற நூல்களில் வெளிவந்த மருத்துவக் கட்டுரைகள்

1. அறிவியல் களஞ்சியம் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) - 25 கட்டுரைகள்
2. ஓய்வு பெற்ற தென்னக இரயில்வே ஊழியர்கள் மாநாடு மலர் - 1985
3. இரத்ததான நாள், நூல், தஞ்சை மருத்துவக்கல்லூரி, 1985
4. தமிழ்க்கலை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1, 1984.
5. நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் (அமெரிக்கா) ஆண்டு மலர் - 1997.
6. தினமணி ஆண்டு மலர், மருத்துவம், 2000.
7. பன்னாட்டு தமிழுறவும் கழகம், 4வது உலக மாநாடு, 2000.
8. கரந்தை, உமாமகேஸ்வர மேனிலைப்பள்ளி, பொன்விழா மலர், 2002.
9. நிலா, காலாண்டிதழ், 2003.
10. புரோபஸ் கிளப், தஞ்சாவூர், 1990
11. தமிழியல் ஆய்வுகள், டாக்டர் இராம. சுந்தரம் ஆய்வு மலர், 1999.
12. மொழி முகங்கள், பேராசிரியர் அரங்கன் மணிவிழா மலர், 2003.
13. Medical Heritage of Tamilnadu, Periyar College of Pharmacy, Trichy, 2008
               
நுண்ணாய்வு செய்த நூல்கள்
1. துணை செவிலியர் கையேடு, தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை, 1985
2. தென்னிந்திய மருத்துவ வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.

 இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்
நாளிதழ்கள்
1.            தமிழ்முரசு, சிங்கப்பூர்       -              30
2.            தினமணி       -              5
3.            மாலைமுரசு              -              1
4.            தினகரன்        -              7
5.            தினத்தந்தி   -              11

வார இதழ்
1.            ராணி -              5

மாத இதழ்கள்
1.            உண்மை        -              4
2.            மருத்துவ அறிவியல் மலர்         -              2
3.            உங்கள் நலம்             -              1
4.            உங்கள் ஆரோக்கியம்       -              1
5.            ஆரோக்கியா              -              1
6.            ஹெல்த் - பியூட்டி -              9
7.            அறிக அறிவியல்   -              64
8.            நல்வழி           -              140
9.            கலைக்கதிர்                -              20
10.          சிந்தனையாளன்    -              10
11.          பெரியார் இயக்கம் -              2
12.          தாமரை           -              3
13.          விஞ்ஞானச்சுடர்    -              21
14.          மருத்துவ மலர்       -              5
15.          கோகுலம் கதிர்        -              1
16.          பேமிலி ஹெல்த்    -              1
17.          அறிவியல் ஒளி      -              17
18.          இமைகள்      -              3
19.          இனிப்பு மலர்             -              1
20.          எங்களுக்கு மகிழ்ச்சி          -              1

காலாண்டிதழ்
1.            களஞ்சியம்  -              7

ஆண்டுமலர்
1.            தினமணி ஆண்டு மருத்துவ மலர்        -              1
               
பிற
1.            திருக்குறள் பேரவை மாநாட்டு மலர்  -              1

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
1.            ஏசுதாசன் அறக்கட்டளை, அறிவியல் தமிழ், தமிழ்ப் பல்கலைக்கழகம், 2002.
2.            டாக்டர் சிவந்தி ஆதித்தன் அறக்கட்டளை, தமிழில் மருத்துவ இதழ்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
3.            முனைவர் சாமிமுத்து அறக்கட்டளை, மருத்துவத் தமிழ் வளர்ச்சியும், வரலாறும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2004.
4.            அன்னபூரணி இராமநாதன் அறக்கட்டளை, மருத்துவத் தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008.

ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் உரைகள்
1.            தேசிய அளவிலும் மாநில அளவிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பொது அறுவை மற்றும் இரைப்பை குடல் நோய் தொடர்பாக 32 கட்டுரைகள் படித்தளிக்கப் பட்டுள்ளன.
2.            அறிவியல் தமிழ் தொடர்பாக 20 கட்டுரைகள் படித்தளிக்கப்பட்டுள்ளன.
3.      அகில இந்திய வானொலி மற்றும் வெரித்தாஸ் (மணிலா) ஒலிபரப்புகளில் 40 உரைகள் மற்றும் பேட்டிகள்
4.   ஆறாவது உலகத்தமிழ் மாநாடு, மொழியியல் கட்டுரை - 1
5.  எட்டாவது உலகத்தமிழ் மாநாடு, மொழியியல் கட்டுரை - 1

                தொலைக்காட்சிப் பேட்டி
                                சன், ராஜ், தூர்தர்ஷன் தொலைக்காட்சிப் பேட்டி

                தினமணி, தினகரன், தினத்தந்தி, மாலைமுரசு மற்றும் தமிழ்முரசு (சிங்கப்பூர்) ஆகிய நாளிதழ்களிலும், கலைக்கதிர், நல்வழி, அறிக அறிவியல், களஞ்சியம், தாமரை, விஞ்ஞானச்சுடர், ராணி, அறிவியல் ஒளி ஆகிய இதழ்களிலும் வெளியான மருத்துவக் கட்டுரைகள் - 375.




சிறப்புப் பொறுப்பாளர்
1. திட்டக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000 - 2003.
  2. கட்டிடக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000 - 2004.
3. சிறப்பு ஆய்வாளர், கலைக்களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,   1990 - 1995.
      4. ஆசிரியர் குழு உறுப்பினர், நல்வழி மாத இதழ், 1992 - 1995.
      5. கௌரவ ஆசிரியர், ஹெல்த் பியூட்டி மருத்துவ இதழ், சென்னை.
      6. பாடத்திட்டக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
       1. அறிவியல் தமிழ், 1989 - 1992
       2. பண்டைய அறிவியல், 1989 - 1995
       3. சித்த மருத்துவம், 1996 - 1999
      7. அகில இந்திய அறிவியல் கழகப் பொருளாளர், தஞ்சாவூர்.
      8. நகைச்சுவை மாமன்றம், தலைவர், தஞ்சாவூர்.
      9.  தமிழய்யா கல்விக்கழகம், மதிப்பியல் தலைவர், திருவையாறு
    10.  ஸ்டெல்லாமேரி பள்ளி, இயக்குநர், அம்மாபேட்டை
  11.  தஞ்சை மாவட்ட மனிதவள மேம்பாட்டுக் கழகம், தலைவர், தஞ்சாவூர்.
12.  தமிழ்மன்றம் மாணவர் ஆலோசகர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி1995 - 2000.
 13. அகில இந்திய அறுவை மருத்துவர் கழகம், தமிழகப் பொருளாளர், 1983 - 1985.
   14.  இந்திய பொது நிர்வாகவியல் கழகம், வாழ்நாள் உறுப்பினர், தஞ்சாவூர்.
   15.  செஞ்சிலுவைச் சங்கம், வாழ்நாள் உறுப்பினர், தஞ்சாவூர்..

குறிக்கத்தக்க பணி
                1.    இலவச மருத்துவ முகாம்கள் நோயாளிகளை சோதனை செய்து, மருத்துவ விளக்கச் சொற்பொழிவுகள் - 13
                2.    மனிதவள மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவராக இருந்து தொடர்ந்து தன்னம்பிக்கை, சுய முன்னேற்றத்திற்கான கூட்டங்கள் - 30
   3. 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கட்கிழமை மாலை பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவுகளைத் தமிழில் நடத்தியது.



ஆர்வமுள்ள பணி மற்றும் குறிக்கோள்

              1. எளிய தமிழில் அறிவியல் கருத்துக்களைப் பரப்பல்
             2. பாமர மக்களுக்கு எளிய தமிழ் வழி அறிவியல் அறிவைத் தூண்டுவது, வளர்ப்பது மற்றும் மக்கள் நலம்.

பட்டங்கள்
          1. குறள்நெறிச் செல்வர், உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர். 29.01.1989
    2.     தமிழ்ப்பணிச் செம்மல், ஐந்தாவது உலக மாநாடு, பன்னாட்டு தமிழுறவுக் கழகம், மதுரை, 05.05.2002
   3. மருத்துவத் தமிழ்ச் செம்மல், அகில உலக மருத்துவத்தமிழ் மாநாடு, பழனி, 2005.
           4.  மருத்துவச் சாதனைச்சுடர், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, 2006.
        5.   மனிதநேய செந்தமிழ்ச் சுடர், உலகத்தமிழ்க்கவிஞர் பேரவை, தஞ்சாவூர், 2011.


மருத்துவரின் முகவரி   :               623, கீழராஜவீதி, தஞ்சாவூர் - 613 001.