முனைவர் சி.
இலட்சுமணன்
[ முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். களப்பணியில் பல ஓலைச்சுவடிகளைத் தொகுத்து, தமிழ்ப்
பல்கைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியவர். நூலாசிரியர்; கட்டுரையாசிரியர்; தமிழ் ஆய்வறிஞர்.
தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழினை நடத்திவருபவர். பதிப்புப் பணிகளில் ஆழங்கால்பட்ட அறிவுடையவர்.]
புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாகப் பயின்றபொழுது(1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்யும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது ஆய்வுக்குரிய நூல்களைப் பார்வையிடவும் அறிஞர்களைச் சந்தித்து, தரவுகளைத் தொகுக்கவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வது வழக்கம். இளையோர்களாகிய எங்களுடன் அந்நாளில் உரையாடி, எங்களுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியாகச் செய்தவர் சி. இலட்சுமணன் ஆவார். ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் அவர்கள் பணியாற்றிய காலத்தில் பலமுறை சந்தித்து உரையாடிய நினைவுகள் மேலிடுகின்றன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை படிக்கச் செல்லும்பொழுதெல்லாம் அவரைக் கட்டாயம் கண்டு, உரையாடுவது வழக்கம். பலவாண்டுகளுக்கு முன்னர் இவர் ஆய்வுத்துறையில் உழைத்தமை போன்று இன்றும் தொடர்ந்து உழைத்து வருவதை அறிந்து மகிழ்கின்றேன். நாகர்கோவிலில் வாழ்ந்த அறிஞர் சி. சுப்பிரமணியம் ஐயா அவர்களைப் பற்றி அறிவதற்குத் தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தொடர்புகொண்டு, உரையாடிய சுற்றில் மீண்டும் பலவாண்டுகளுக்குப் பிறகு சி. இலட்சுமணன் அவர்களுடன் உரையாடி, அரிய செய்திகளை அடிக்கடிப் பெற்று வருகின்றேன். அவர்தம் தமிழ் வாழ்வினைத் தமிழுலகின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ன்றேன்.
சி. இலட்சுமணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை
முனைவர் சி. இலட்சுமணன் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள மதுசூதனபுரம் என்னும் ஊரில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் தி. சின்ன நாடார், இல. சுப்பம்மை ஆகும். இவருடன் பிறந்தவர்கள் நால்வர் ஆவர்.
சி. இலட்சுமணன் குளத்துவிளை என்னும் ஊரில் முதல் ஐந்து வகுப்புகள் வரை பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை புத்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ள இலண்டன் மிசனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட(LMPCH) உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். புகுமுக வகுப்பினை நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் (1970-71) பயின்றவர். இளங்கலைப் பட்ட வகுப்பினைப் பொருளாதாரப் பாடத்தினை முதன்மைப் பாடமாக எடுத்து, ஆங்கில வழியில் பயின்றவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை இந்துக் கல்லூரியில் பயிலும்பொழுது பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் இவருக்குத் தொல்காப்பியம் கற்பித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக அஞ்சல் வழியில் இளங்கலைக் கல்வியியல் பயின்றவர்.
சி. இலட்சுமணன் தம் முதுகலைக் கல்வியை முடித்தவுடன் மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். இக்கல்லூரியின் சார்பில் இயங்கிய அச்சகத்தில் பதிப்புப் பணிகளைக் கவனித்து வந்தவர். 1983 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் பணியாற்றியபொழுது, சி. இலட்சுமணன் தொகுப்பூதியத்தில் அங்குப் பணியில் இணைந்தவர். 1994 முதல் தொழில் நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது, திரு புட்பம் கல்லூரியில் இணைந்து பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினைப் “பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி” என்னும் தலைப்பில் செய்து, ஆய்வறிஞரும் பேராசிரியருமான மு. சண்முகம் பிள்ளையின் பன்முகத் தமிழ்ப்பணியினை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்.
தஞ்சையில் வாழ்ந்த இலக்கண அறிஞரும் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியருமான ச.பாலசுந்தரம் அவர்களின் உரைச்சிறப்பினை ஆராயும் முகமாகத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பும் உரைகளும் (பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை) என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர். இவ்வாய்வில் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலிருந்து பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை வேறுபடும் திறத்தினை மதிப்பிடுவது ஆய்வாளரின் நோக்கமாக இருந்தது.
சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் வழியாக ஆய்வுப்புலத்தில் நல்ல பயிற்சிபெற்றார். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் முதலிய பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டவர். எட்டாண்டுகள் இப்பணியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து, அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தொகுத்து, பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியுள்ளார்.
மு. சண்முகம் பிள்ளை, அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்களுடன் சி. இலட்சுமணன் பணியாற்றி, ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சொல்லடைவு தயாரித்தமை, கலியுகப் பெருங்காவியம் என்னும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலுக்குப் பாடவேறுபாடுகளைக் கண்டுணர்ந்து எழுதியவர். சித்த மருத்துவ வாகட நிகண்டு பணியினையும் செய்துமுடித்தவர். அறிஞர் த.கோ.பரமசிவம் அவர்களின் பணிக்காலத்தில் உருவான சுவடி விளக்க அட்டவணை ஐந்தாம் தொகுதியையும் எழுதி, முடித்தவர்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய பல்வேறு சான்றிதழ் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியும் தமிழகத்தின் பல ஊர்களில், பல பொருண்மைகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியும் தம் தமிழ்ப்பணியினைச் செய்தவர்.
சி. இலட்சுமணன் இல்லற வாழ்க்கை
சி. இலட்சுமணன் அவர்கள் 11.12.1981 ஆம் ஆண்டில் சரசுவதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அமுத சுவாமிநாதன், அபிரேகா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சி. இலட்சுமணன் அவர்கள் தம் பிறந்த ஊரில் தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம் என்னும் பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். தமிழ் ஆய்வுலகுக்குப் பெரும் பங்களிப்பு நல்கிய அறிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் வெளியிடுவதை இந்த மையம் சிறப்பாகச் செய்து வருகின்றது. தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து, அந்த இதழினைச் சிறப்பாகவும் நடத்திவருகின்றார்.
முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்நூல் கொடை:
1. சுவடி விளக்க அட்டவணை, ஐந்தாம் தொகுதி(தொகுப்பாசிரியர்),1989
2. வாழ்வியல் சிந்தனை,1995
3. பேரா.மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப்
பணி, 2003
4. தமிழக வரலாற்றறிஞர்கள், 1993
5. காகிதச்சுவடி ஆய்வுகள், 2000
6. பதிப்பு நிறுவனங்கள், 2002
7. சுவடிப் பதிப்பாசிரியர்கள், 2003
8.
பதிப்பியல்
நெறிமுறைகள், 2003
9.
ஆய்வுலகு
போற்றும் தமிழறிஞர்கள்
10.
வாழ்க்கையின்
வெற்றியில் தன்னம்பிக்கை