நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜனவரி, 2018

மலேசியக் கவிஞர் சி. வேலுசுவாமி...

 சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008)

     புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மொழி, இலக்கியம், கலை  வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் தமிழிலக்கியப் பணிகளும், பங்களிப்புகளும் தாயகத் தமிழகத்தார் அறியத்தக்க வகையில் தகுதியுடையனவாக உள்ளன. மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபது இலட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய நாட்டின் வளர்ச்சியிலும், அரசியலிலும், தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால் தமிழர்களுக்கு உரிய சிறப்பு மலேசியாவில் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளது.

     தமிழ் மாணவர்கள் கல்விபெறுவதற்குச் சிறப்பான வசதிகளை அந்த நாட்டு அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. மலேசியாவில் 524 தமிழ்ப் பள்ளிகள் மொழியையும், இலக்கியத்தையும் கற்பிக்கும் பணியைச் சிறப்பாக செய்துவருகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்கள் பாட நூல்களையும் பிற துறைசார்ந்த, அரிய நூல்களையும் பலவகையில் எழுதித் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் கவிஞர் சி. வேலுசுவாமி ஆவார்.

    மலேசியப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கடமையாற்றிய சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008) பன்முகத் திறமைகொண்ட படைப்பாளியாக வாழ்ந்துள்ளதை அவரின் படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுனைகளில் செயல்பட்டுள்ள சி. வேலுசுவாமி திருக்குறளுக்கு உரையெழுதிய உரையாசிரியராகவும் விளங்கியுள்ளார். கோலாலம்பூரில் இயங்கிய குறள் இயக்கம் வழியாகத் திருக்குறள் வகுப்புகளை நடத்தித் திருக்குறள் நூல் மலேசிய மண்ணில் பரவுவதற்கு வழியமைத்தவர். திருக்குறள் மணிகள் என்ற நூலையும் வெளியிட்டவர். தமிழ்நேசன் நாளிதழில் திருக்குறளை உரைநடையாக அறத்துப்பால் முழுமைக்கும் எழுதி வெளியிட்டவர். தமிழ்-மலாய்-ஆங்கிலமொழி அகராதி உருவாக்கிய வகையில் மும்மொழி வளர்ச்சிக்கும் பாடுபட்டவராகவும் சி. வேலுசுவாமியின் பணிகள் நீட்சிபெறுகின்றன.

     பண்டித வகுப்பில் மூன்றாண்டுகள் பயின்று தமிழ்ப்புலமை கைவரப்பெற்ற இவர், தமிழாசிரியராகவும், போதனாமுறைப் பயிற்சிக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். மாணவர்களின் உள்ளம் அறிந்து கற்பிக்கும் இவர், சிறந்த பாட நூல்களை எழுதி, நிலைத்த புகழ்பெற்றுள்ளார். தமிழ்ப்பண்ணை நடத்திய சிறுகதைப் போட்டியில், இவர் எழுதிய ’மீனாட்சி’ என்னும் சிறுகதை தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. இந்தக் கதை அக்கரை இலக்கியம் என்னும் பெயரில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நூலில் இடம்பெற்றது. தமிழகத்து ஏடுகளான கலைமகள், தீபம், மஞ்சரி முதலிய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ்முரசு, தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, ஜனோபகாரி, வளர்ச்சி, வெற்றி  போன்ற ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியவர்.

     மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநிலம், ரந்தாவ் (Rantau) என்ற ஊரில் வாழ்ந்த சின்னசுவாமி, அங்கம்மாள் ஆகியோரின் மகனாக, சி.வேலுசுவாமி 02.04.1927 இல் பிறந்தவர். "லிங்கி" எஸ்டேட் தோட்டப்பள்ளியில் படித்தவர். எழாம் வகுப்பு வரை படித்த பிறகு, ஆசிரியர் பயிற்சி பெற்று தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தலைமையாசிரியர் நிலைக்குப் பின்னாளில் உயர்ந்து ஓய்வுபெற்றவர். 1946 இல் இலட்சுமி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு எட்டுக் குழந்தைகள் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.

     மலேசியாவில் தொடக்க நாள்களில் பாட நூல்கள் அச்சிடுவதற்கு வசதிகள் இல்லை. இந்தியாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பாட நூல்கள் வரவழைக்கப்பட்டன.  மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு (1957) பாட நூல்கள் அச்சிடும் பணி தொடங்கியது.

     மலேசியாவில் அச்சகங்களோ, போதிய பதிப்பகங்களோ தொடக்க காலத்தில்  இல்லை. அக்காலத்தில் மனோன்மணி புத்தகசாலை, கிருஷ்ணா புத்தகசாலை, விவேகானந்தா புத்தகசாலை, மயிலோன்(Mylone) புத்தகசாலை உள்ளிட்ட சில பதிப்பகங்களே இருந்தன.  தோட்டப்பள்ளியில் ஆசிரியராக இருந்த சி.வேலுசுவாமி நற்றமிழ்த் துணைவன் (கட்டுரைகள்) என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படித்துப் பயனடையும் வகையில் பயிற்சி நூல்களை உருவாக்கினார். சந்திரன் என்ற புனைபெயரில் இந்த நூலை இவர் எழுதினார். மனோன்மணி பதிப்பகத்தின் வழியாக நற்றமிழ்த் துணைவன் 1963 முதல் 2009 வரை 33 பதிப்புகளைக் கண்டது. மலேசியாவில் அனைவருக்கும் அறிமுகமான நூலாக இந்த நற்றமிழ்த் துணைவன் பயிற்சிநூல் உள்ளது.

     சி. வேலுசுவாமி அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதால் பல்வேறு புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார். சரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன், இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் இவர் பலதுறை சார்ந்து நூல்களை எழுதியுள்ளார்; பதிப்பித்துள்ளார். இவர்தம் நூல்களையும் படைப்புகளையும் முறைப்படுத்தி வெளியிடும்பொழுது மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் நூல்களாக இருக்கும். இவர் மலேசிய மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகள் வெளிவராமல் போனமை தமிழுக்கு இழப்பேயாகும்.

     மலேசிய மொழி படியுங்கள், பழமொழி விளக்கம், இலக்கணச் சுருக்கம், நற்றமிழ்த் துணைவன், கவிஞராகுங்கள் என்பன இவரின் பெருமையுரைக்கும் நூல்களாகும். மலாய்-தமிழ்-ஆங்கில மொழி அகராதிகளை மாணவர்களுக்கும், பெரியவர்களுக்குமாக இவர் வெளியிட்டுள்ளமை மொழி வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இந்த அகராதிகள் பல பதிப்புகளைக் கண்டு, பல்லாயிரம் படிகள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

     ’திருமகள்’ என்ற பெயரில்  மாணவர்களுக்கு உரிய இதழை சி. வேலுசுவாமி 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தியவர். ’பக்தி’ என்ற சமய இதழை 14 ஆண்டுகள் நடத்தியவர். இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஆன்மீக நூல்களைப் பதிப்பித்துள்ளார். மிகச் சிறந்த முருகபக்தரான சி.வேலுசுவாமி மலேசிய இந்து சங்கப் பிரச்சாரக் குழுவைச் சார்ந்தவராக விளங்கியவர். இசையுடன் பாடி விளக்கும் ஆற்றலும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் இவருக்கு இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். திருமகள் அச்சகம், திருமகள் பதிப்பகம், சரவணபவன் பதிப்பகம் என்று பல்வேறு நூல்வெளியீட்டகங்களை நடத்தியவர்.

     சி.வேலுசுவாமி குழந்தைப் பாடல்கள் வரைவதில் பெரும்புலமை பெற்றிருந்தவர். பாட்டுப்பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப் பழகுங்கள், அருள்புரிவாய் என்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட குழந்தைப் பாடல் நூல்கள் மலேசியப் பின்புலத்தில் சிறந்த படைப்புகளாக வெளிவந்துள்ளன.  இவரின் அருள்புரிவாய் நூலுக்குக் கவியரசு கண்ணதாசன் வரைந்துள்ள அணிந்துரைப் பாடல் சி.வேலுசுவாமியின் கவிதைப்பணிக்குச் சூட்டப்பெற்ற மணிமகுடம் எனில் பொருந்தும்.
"............................
சிறுவர்க் காகத் திறத்துடன் வடிக்கும்
வியத்தகு கவிஞர் வேலு சாமி
இந்நூல் தன்னை இயற்றித் தந்துள்ளார்!
அருள்புரிவாய் என ஆரம்ப மாகித்
தொடரும் இஃதோர் சுவையுள்ள நூலே!
கலைமகள் பற்றிக் கார்முகில் பற்றிப்
பலகா ரத்தில் பலவகை பற்றி
ஒலிக்கும் பறவைகள் ஓசைகள் பற்றிப்
பூக்கள் நிறத்துப் புன்னகை பற்றி
வாழை பற்றி, வானொலி பற்றி
நன்றி பற்றி, நால்திசை பற்றிச்
சாலை விதிகள் சாற்றுதல் பற்றி
எறும்பைப் பற்றி எலிகளைப் பற்றி
பாரதி பற்றி பாமதிக் பற்றி
வண்ண வண்ண வார்த்தைக ளாலே
சின்னச் சின்ன சிறுவர்கள் பாட
வேலுச் சாமி விரித்த பாடல்கள்
பிள்ளைகள் அறிவைப் பெரிதும் வளர்க்கும் ...
வேலுச் சாமிஓர் வீட்டின் விளக்கு!
பல்லாண் டிவரைப் பரமன் காக்க! "

என்று கண்ணதாசன் வேலுசுவாமியைப் பற்றி எழுதியுள்ளமை இலக்கிய வரலாற்றில் இவரின் இருப்பை உறுதி செய்யும் கவிதைப் பத்திரமாகும்.

 "கவிதைப்பித்தன் கவிதைகள்" என்ற தலைப்பில் இவரின் கவிதைகள் 1968 இல் நூலாக வெளிவந்தன. தமிழகப் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், மலேயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈ.ச. விசுவநாதன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இந்த நூலில் தனிப்பாடல்களும், இசைப்பாடல்களும், வானொலிக் கவியரங்கப் பாடல்களுமாக 72 கவிதைகள் உள்ளன. வெற்றி, மலைமகள், மாதவி, தமிழ்நேசன், மலைநாடு  உள்ளிட்ட ஏடுகளில் வெளிவந்த படைப்புகளே இவ்வாறு நூலுருவம் பெற்றுள்ளன. வெண்பா, விருத்தம், சிந்து, கொச்சகக் கலிப்பா வடிவங்களில் மரபுநெறி நின்று பாடியுள்ளமை சி.வேலுசாமியின் தமிழ்ப்புலமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. மலேசிய நாட்டுத் தலைவர் துங்கு அவர்களையும், மலேசிய நாட்டு வளத்தையும், கூட்டுறவுச் சிறப்பையும், தமிழர் நிலையையும், தமிழ்ச் சிறப்பையும் பல பாடல்களில் இந்த நூலில் ஆசிரியர் பாடியுள்ளார். 03.05.1964 இல் கோலாலம்பூர் நகர மண்டபத்தில் நடைபெற்ற பாரதிதாசன் மறைவுகுறித்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு,

நின்பாட்டால் உணர்ச்சி எழும், நித்தம் நித்தம் நான்படிப்பேன்.
துன்பத்திலும் நின்கவிதை துயரோட்டும் நன்மருந்தாம்;
என்னின்பத் தமிழ்க் கவிஞா! ஏனய்யா நீமறைந்தாய்?
கண்ணில்லா அந்தகனுன் கனமறியாக் காரணமோ?

என்று பாடியுள்ளமை பாவேந்தர் பாரதிதாசன்மேல் இவருக்கு இருந்த பற்றினைக் காட்டும் பாடல் வரிகாளாகும்.

     மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, பலவாண்டுகள் செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் குறித்த விவரத் திரட்டினை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர். எழுத்தாளர் சங்கம் சார்பில் ஏடு என்ற இதழ் வெளிவருவதற்கு வழிசெய்தவர். மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்திலும் தம் பங்களிப்புகளை வழங்கியவர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மலேசியக் குழுவினருள் ஒருவராகக் கலந்துகொண்டவர்.

     கவிஞர் சி. வேலுசுவாமியின் தேர்ந்தெடுத்த  கவிதைகளை மலேசியத் தேர்வு ஆணையம், உயர்நிலைப்பள்ளி(SPM) மாணவர்களின் பாட நூலில் 2001 ஆம் ஆண்டு முதல் இணைத்துள்ளது. மலேசியத் தமிழ்க் கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் மலேசிய அரசு (PPN) Pingat Pangkuan Negara) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

     ஆசிரியர் பணி, பதிப்புப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்பு நூல்கள், அகராதி நூல்கள், கல்வி நூல்கள் உருவாக்கியதன் வழியாக மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கவிஞர் சி. வேலுசுவாமியின் இதழ்ப்பணிகளும், படைப்புப்பணிகளும் விரிவாக ஆராய்வதற்குரிய களங்களைக் கொண்டுள்ளன.





வேலுசாமியார் திருக்குறள் உரைத்திறன் அறிய இங்கு அழுத்துக.

நன்றி: தி இந்து (தமிழ்) நாளிதழ் 23.01.2018
திரு. சி. வே. கிருஷ்ணன்(மலேசியா)
திரு. வேங்கடரமணி(மலேசியா)

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள்வோர் எடுத்த இடம், கட்டுரையாளன் பெயர் சுட்டுங்கள்.



சனி, 6 ஜனவரி, 2018

மலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்!


நல்லாசிரியர் கி. இராசசேரன்

     அறிஞர் மு. வரதராசனார் படைப்புகளை மூத்த தலைமுறையினர் படித்து, நல்வழியில் நடந்தனர் என்பதை இன்றைய இளைஞர்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிரைச்சல் ஊடகங்களும், புழுதியை  வாரி ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்ளும் படைப்பாளிகளும் மண்டிக் கிடக்கும் இத் தமிழ்ச் சமூகத்தில் மு. வ. வின் படைப்புகள் தமிழ்ப் படிப்பாளிகளைத் தன்வயப்படுத்தி வைத்திருந்ததை நன்றியுடன் இங்கு நினைத்துப் பார்க்கின்றேன். தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசனாரின் சிறப்புகளைப் போற்றி அவர்தம் மாணவர்களால் சற்றொப்ப ஐம்பதுக்கும் மேற்பட்ட நினைவு நூல்கள் வரையப்பட்ட பெருமை நம் மு. வ. அவர்களுக்கே உண்டு. தந்தையின் பாசத்தைத் தெ.பொ.மீ. அவர்களிடமும் தாயின் பாசத்தை மு. வ.  அவர்களிடமும் காணலாம் என அறிஞர் இரா. மோகன் குறிப்பிடுவார். மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரையின் இடத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றின் இடத்தையும் வேறொரு நூல் பெறவில்லை என்பதை நினைக்கும்பொழுது இந்த நூல்களின் சிறப்பு நமக்குப் புலனாகும். சிந்தனையில் தெளிவு கொண்டவர் மு. வ.

     என் பேராசிரியர் நா. ஆறுமுகம் அவர்கள் தம் உயிருக்கு நிகராக மு.வ. அவர்களை நேசித்தவர்.  பொன். சௌரிராசனார், சி.பாலசுப்பிரமணியன், இரா. தண்டாயுதம், இரகுநாயகம், தெ. ஞானசுந்தரம் என மு. வ. அவர்களின் மாணவர் பட்டியல் நீளும். மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் மு.வ. அன்பர்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.

     மு.வ. அவர்களின் மாணவர்கள், மு. வ. வின் படைப்புகளில் மூழ்கித் திளைத்தவர்கள் என மு. வ. வின் தாக்கம்பெற்றவர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளதை அண்மையில் அறிய நேர்ந்தது.

 அண்மையில் மலேசியா சென்றிருந்தபொழுது, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அரசியல் ஈடுபாடு கொண்ட அன்பர் ஒருவர் வருகின்றார் என்று நண்பர் முனியாண்டி ஐயா சொன்னபொழுது ஒரு வகையான தயக்கம் எனக்கு முதலில் ஏற்பட்டது. நிகழ்வுகள் தொடங்கிச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தபொழுது அந்தச் சிறப்பு விருந்தினர் உரையாற்றத் தொடங்கினார். அறிஞர் மு. வ. வின் படைப்புகளில் தாம் மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ளதையும், தம் வாழ்க்கையில் மு. வ. வின் கொள்கைகள் அதிகம் படிந்திருப்பதையும் குறிப்பிட்டுத் தமிழுக்கும் தமக்குமான உறவினை வெளிப்படுத்தினார். அவரின் உரை எனக்குப் பெரும் வியப்பினைத் தந்தது. தனித்து உரையாட நேரம் கேட்டேன். அவரும் நேரம் தந்து, ஓர் உணவு விடுதியில் நண்பர்களுடன் காத்திருந்தார். இணைந்து உண்டபடியே உரையாடினோம். அவர் தமிழ் வாழ்க்கை இதுதான்..

கி. இராசசேரன்...

     மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்துப் பந்திங் வட்டாரத்தில் அனைவருக்கும் அறிமுகமான நல்லாசிரியர் கி.இராசசேரன்தான் மு.வ. படைப்புகளில் மூழ்கித் தம் வாழ்க்கையை நெறிமுறையுடன் அமைத்துக்கொண்டவர். சுங்கை சீடு என்ற ஊரில் 1964 ஆம் ஆண்டு, ஏப்பிரல் 12 ஆம் நாள் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் எழுவர். பள்ளிப்படிப்பை முடித்த இவர் சிறீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 25.06.1984 ஆம் ஆண்டு தம் ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர் 05.01.1998 முதல் கேரித்தீவு கிழக்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.12.1990 முதல் கேரித்தீவு மேற்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.07.1998 முதல் தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியிலும் பணியாற்றியவர். 16.03.2008 இல் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியைத் தொடங்கியவர். 16.06.2010 இல் கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பின் மீண்டும் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக  01.02.2016 முதல் பணியாற்றிவருகின்றார். மாணவர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் உள்ளம்கவர்ந்த ஆசிரியராகக் கடமையாற்றும் இராசசேரன் ஐயா அவர்களை நன்னெறிப்படுத்தியது மு. வ. நூல்கள் என்பதால் மு.வ. இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.

     சுங்கை சீடு தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் செயலாளர், தலைவர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நடத்தியவர். சிறுநீரகம் செயலிழந்திருந்த திரு. நடராசன் என்பவருக்கு உதவும் வகையில் இருபதாயிரம் மலேசிய வெள்ளியைத் திரட்டி வழங்கிய கருணை உள்ளம்கொண்டவர் இவர். பந்திங் பகுதியில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனைவரின் உள்ளமும் நிறைவடையும் வகையில் அறிவிப்பு வழங்கும் இயல்புடையவர். பல்வேறு ஆலயங்களின் அறப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தவர். பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இலக்கியப் பணியாற்றும் இராசசேரன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை அரவணைத்து வாழ வேண்டும், நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும், குறைகூறாமல் இருக்கவேண்டும் என்ற உயரிய நெறிகளுடன் வாழ்ந்துவருகின்றார்.

     1991 ஆம் ஆண்டு  அக்டோபர் 20 இல் திருவாட்டி சாந்தி அம்மையாரை மணந்து, இல்லறப் பயனாக அருணன், அபிராமி என்ற இரண்டு மக்கள்செல்வங்களைப் பெற்றுள்ளார்.

     தம் வாழ்க்கையைத் திருத்தி, நல்வழிப்படுத்தியவை மு. வரதராசனார் நூல்கள் என்று குறிப்பிடும் இராசசேரனைப் போன்ற முன்மாதிரி ஆசிரியர்கள் இன்றைய தமிழுலகுக்கு மிகுதியாகத் தேவைப்படுகின்றார்கள்.


     வாழ்க கி.இராசசேரன் ஐயா!

வியாழன், 2 நவம்பர், 2017

மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கிளை தொடக்க விழா!



  தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன.  இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

  மலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.

 தொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.

   மலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றம்  மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:

தேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங்பந்திங்,  சிலாங்கூர்

தொடர்புக்கு:
ம. முனியாண்டி 016 4442029
சரசுவதி வேலு 012 3189968
ஒருங்கிணைப்பாளர்கள்,
உலகத் தொல்காப்பிய மன்றம் - மலேசியாக் கிளை


வெள்ளி, 1 ஜனவரி, 2016

மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்று நூல் தந்த க. முருகன்


க. முருகன்

   செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் என்னும் இரண்டு நூல்களையும் 2013, சூன் 7 இல் மலேசியாவில் வெளியிடுவதற்குரிய வகையில் அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒளி ஓவியர் ஒருவர் சிறப்பாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அகவை நிரம்பியிருந்த அந்தப் பெருமகனாரிடம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் சொன்னவண்ணம் எனக்குப் படங்களை அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்குத் தொலைபேசி வழியாக என் நன்றியைத் தெரிவித்தேன்.

  பின்பொருமுறை குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியொன்றை மலேசியத் தமிழ்வள்ளல் ஐயா மாரியப்பனார் கிள்ளான் நகரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கும் மேலே குறிப்பிட்ட ஒளி ஓவியர் வந்திருந்து, உரை நிகழ்த்தினார். ஒளி ஓவியர்கள் பெரும்பாலும் தம் தொழிலுடன் நிறுத்திக்கொள்வார்கள். சிலர் சமூக அக்கறையுடன் கூடுதல் பணிகளையும் செய்வதில் ஈடுபடுவார்கள். நம் ஒளி ஓவியர் பன்முகத் திறமையுடையவர். ஒளி ஓவியரைத் தனித்து நிறுத்தி, உரையாடினேன். அவர் ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும், நாடகத்துறையில் ஈடுபாடு உடையவர் என்பதும் பின்புதான் தெரிந்தது. அவரிடம் மலேசியத் தமிழர்கள் குறித்தும், தமிழர்களின் பண்பாடு குறித்தும் அரிய செய்திகள் உள்ளமையை உரையாட்டின் வழியாக ஒருவாறு உணர்ந்துகொண்டேன்.

  மலேசியத் தமிழர்களின் வரலாறு, கலை, பண்பாட்டுக்கூறுகள், தமிழ்க்கல்வி வரலாறு குறித்த விவரங்கள் அண்மையில் எனக்குத் தேவைப்பட்டன. ஒளி ஓவியர் அவர்களின் நினைவுதான் முதலில் வந்தது. உடனடியாக நம் ஒளி ஓவியரைத் தொடர்புகொண்டேன். தமக்குத் தெரிந்த விவரங்களை அழகாகப் பட்டியலிட்டு உதவினார்கள்.

  ஒளி ஓவியராகவும், நாடகக் கலைஞராகவும், நல்லாசிரியராகவும் விளங்கும் அப்பெருமகனாரின் பெயர் க. முருகன் ஆகும். அவர் தம் பணிகளுள் இரண்டினைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். 1. சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் (2012), 2. சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு (நேற்று, இன்று, நாளை) (2015) என்னும் இரண்டு அரிய நூல்களை வழங்கியர். அரிய ஆய்வுத் தரம் கொண்ட நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கிய க. முருகன் அவர்கள் போற்றிப் பாராட்டப்பட வேண்டிய பெருமகனார் ஆவார்.

  மலேசியாவில் வாழும் தமிழர்கள் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றுடையவர்கள். தாயகத்திலிருந்து யார் சென்றாலும் அவர்களை அன்புடன் வரவேற்று விருந்தோம்புவதை ஒவ்வொரு மலேசியத் தமிழர்களும் சிறப்பாகச் செய்வார்கள். இவர்களின் பண்புகளைப் பெறவேண்டியவர்களாக நாமும் உள்ளோம். தாயகத்தாராகிய நாம் மலேசியாவிலும், மற்ற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் படைக்கும் அரிய படைப்புகளைத் தமிழகத்தில் வரவேற்றுப் படிக்க வேண்டும். தக்க நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சிறு முயற்சிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழார்வலர்களை வேண்டுகின்றேன்.


  மலேசியாவைப் பொறுத்தவரை நம் தமிழ் மக்கள் குடியேறியவர்களின் மரபு வழியினராகவே உள்ளனர். தாயகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலைகள், சிறு தெய்வ வழிபாடுகள், தோட்டப்புறப் பாடல்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொகுத்துப் பாதுகாக்கவும், தமிழர்களின் வரலாறு குறித்த ஆவணங்களைத் திரட்டி வழங்கவும் அங்குள்ள தமிழார்வலர்களும், தமிழமைப்புகளும் முன்வரவேண்டும். இம்முயற்சியில் ஈடுபட்டவர்களை ஊக்கப்படுத்துவது நம் கடமையாக இருக்க வேண்டும்.

  திரு. முருகன் அவர்கள் உருவாக்கியுள்ள சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு (நேற்று, இன்று, நாளை) என்னும் நூலில் மலேசியாவில் தமிழ்க்கல்வியின் தோற்றம் பெற்ற வரலாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஆசிரியராகவும், அமைப்பாளராகவும் இருந்து பணிபுரிந்ததால் தமிழ்க்கல்வி குறித்த அரிய வரலாற்றுச் செய்திகளை முழுமைப்படுத்தி, படத்துடன் நமக்கு வழங்கியுள்ளார். இந்த நூலினை நம் கல்வித்துறை, நூலகத்துறை வாங்கி ஆதரிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தேடிப்பிடித்து இந்த நூல்களை வாங்கித் தம் இருப்பில் வைக்க வேண்டும். இந்த நூலாசிரியரைத் தமிழகத் தமிழாசிரியர்களும் கல்வியாளர்களும் அழைத்துப் பாராட்ட வேண்டும்.


  
 திரு. முருகனின்சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள்என்னும் நூல் மலேசியத் தமிழ் நாடகத்துறை வளர்ச்சியை நமக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் பள்ளி மேடைகளின் வழியாகத் தமிழ் நாடகங்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அரிய படங்களுடன் நூலாசிரியர் வழங்கியுள்ளார். ஈடுபாட்டு உணர்வுடன் வெளிவந்துள்ள இந்த நூலும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூலாகும்.

  மலேசியாவில் உள்ள பால்மரக் காட்டில் உழைத்து, முன்னேறிய குடும்பத்தில் திரு. முருகன் அவர்கள் பிறந்தவர். பால்மரத் தொழிலின் அனைத்துப் பணிகளையும் அறிந்தவர். படித்து, பணியில் இணைந்து, தம் எழுத்தாற்றலாலும் தமிழ் ஈடுபாட்டாலும் தமிழர்களின் வாழ்வியல் பகுதிகளை ஆவணப்படுத்திய பெருமைக்குரியவர். தாமே மிகச் சிறந்த நடிகராகவும் விளங்குபவர். தமிழகத்து நாடக நடிகர்கள், திரைக்கலைஞர்களின் நடிப்பாற்றலை உள்வாங்கிக்கொண்டு இவர் மலேசியா மேடைகளில் சிறப்பாகத் தம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துபவர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் உச்சரித்த ஒவ்வொரு வசனங்களையும் இவர் தம் மனத்தில் தேக்கிவைத்துள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும். தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின் சிறுதெய் வழிபாடு, அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களை அறிந்துவைத்துள்ள இவர்தம் வாழ்க்கையினை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

  கமுருகன் அவர்கள் மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் பத்தாங் பெர்ஜுந்தை, சுங்கை திங்கி தோட்டத்தில் 17. 05. 1950  அன்று பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள்  சி. கண்ணன், சின்னகண்ணு ஆவர். முருகனின் தாத்தா திரு. சின்ன முருகன் அவர்கள் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்றவர்.

 . முருகன் அவர்கள் சுங்கை ரம்பைத் தோட்டத் தமிழ்ப் பள்ளியில்  1 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயின்றவர் (1957 – 1962). கம்போங் குவந்தான் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் புகுமுக வகுப்பு முதல் பாரம் 2 வரை (1963 – 1965) பயின்றவர். 1966 சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியிலும் (பாரம் 3),  1967 சுல்தான் அப்துல் அஜீஸ் இ.நி.பள்ளியில் 1968 – 1969 (பாரம் 4 & 5) பயின்றவர்.

 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1972 ஆண்டு வரை ரப்பர் தோட்டத்தில் (குமாஸ்தா) பணிபுரிந்தவர். 1972 அக்டோபர்  முதல் 1975 வரை தற்காலிகத் தமிழாசிரியராகக்  கேரித் தீவில் உள்ள கிழக்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியவர்.

  1975 முதல் 1978   வரை பகுதி நேர ஆசிரியர் பயிற்சி பெற்று, 1978 முதல் 1983 ஆண்டு வரை பயிற்சி பெற்ற ஆசிரியர் என்ற நிலையில் கேரித்தீவு, கிழக்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணிபுரிந்தவர்.  

 1984 – ஜூலை முதல் 1997 வரை சிலாங்கூர் மாநிலம் கோல லங்காட்        மாவட்டம்,  தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.       

1997, ஆகஸ்ட் 16 முதல்  2000 ஜூலை 31 வரை கேரித்தீவு மேற்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். 

 1998 – 1999  - கல்வி தொடர்பான டிப்ளோமா பட்டயம் பெற்று, 1.8.2000 முதல் 16.05.2006    வரை சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் (Selangor State Tamil School Organizer) என்ற நிலையில் பணிபுரிந்தவர். தமிழ்ப் பள்ளிகளுக்கான கணித பாட (1,2,3 ஆம் வகுப்புகளுக்கான) நூல்களை எழுதியவர்.

 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கணித பாட தன்முனைப்பாளராகப் பணியாற்றியவர்.    1996 – 2000 வரை 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் மொழிச் சோதனைத் தாள் திருத்துநர்களுக்குத் தலைமையாளராகப் பணியாற்றியவர்.

பெற்ற விருதுகள்:

அரசு வழி - சிலாங்கூர் மாநில சுல்தான் வழங்கியது – AMS (2002)
                              மலேசிய மாமன்னர் வழங்கியது     - AMN (2004)
கல்வித்துறை வழி      - கோல லங்காட் மாவட்ட நிலையில் ஆசிரியர் மணி விருது  (2009)

கலையுலகப் பணி:

தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கத்தின் தலைவர் (2007 முதல் இன்று வரை)

 மலேசியத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்துத் தமிழ் நாடங்கள் மலேசியாவில் வளர்ச்சி பெறுவதற்கு ஆண்டுதோறும் நாடக நிகழ்வுகளை நடத்தி, பரிசளித்துப் பாராட்டும் இவரின் முயற்சி போற்றத்தக்கது.

 மலேசியத் தமிழர்களின் பண்பாடுகள் குறித்த நூல்களையும் எழுதி உதவும்படி நல்லாசிரியர் க. முருகன் அவர்களை வேண்டுகின்றேன்.

திரு.. முருகன் அவர்கள் நிறைவாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.



செவ்வாய், 9 ஜூன், 2015

மலேசியாவைச் சேர்ந்த நல்லாசிரியர் இரா.சிவநேசன் மறைவு

திரு.இரா.சிவநேசன் அவர்கள்

மலேசியாவின் பேரா மாநிலத்தில் உள்ள உளு கிந்தா, ஆசிரியக் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்த விரிவுரையாளர் திரு. இரா.சிவநேசன் அவர்கள் இன்று (09.06.2015) மாலை 6.30 மணியளவில் மலேசியாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

22.05.2010 முதல் திரு. சிவநேசனார் அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். மலேசியாவில் நடைபெற்ற ஐம்பெருங்காப்பிய மாநாட்டிற்குச் சென்றபொழுது எங்கள் நட்பு உருவானது. அன்று முதல் தொடர்ந்து மலேசியா செல்லும்பொழுதெல்லாம் திரு. சிவநேசனார் அவர்களைச் சந்திப்பது உண்டு. மிகப்பெரிய நூலகம் இவர் இல்லத்தில் உள்ளது. இவர்தம் மாணவர்கள் மலேசியா முழுவதும் நிரம்பியுள்ளனர். இரா. சிவநேசனார் மலேசியத் தமிழ்க்கல்வி குறித்துப் பல ஆய்வுரைகள் வழங்கியுள்ளார். பேராசிரியர் இரா. சிவநேசனாரை இழந்து வருந்தும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும். பேராசிரியர் இரா. சிவநேசனாரின் நினைவைப் போற்றும்வகையில் அவருடன் தொடர்புகொண்டவர்கள் உரிய ஆக்கப்பணிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். வாழ்க இரா. சிவநேசனாரின் புகழ்!



தொடர்புடைய பதிவுகள்





புதன், 3 ஜூன், 2015

மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி


மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கத்தின் சார்பில் இன்று 03.06.2015 அறிவன்(புதன்)கிழமை இரவு எட்டு மணிக்குத் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, புதுச்சேரியிலிருந்து வருகைதரும் முனைவர் மு.இளங்கோவன்  தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரு. அருள்முனைவர், திரு. மாரியப்பனார் உள்ளிட்ட தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

இடம்: கிள்ளான் தாமான் பெர்க்கிலி, பெர்க்கிலி உணவக மண்டபம்

நாளும் நேரமும்: 03.06.2015, இரவு எட்டுமணி

தொடர்புக்கு:

திரு. அருள்முனைவர் 017 – 3315341
திரு. மாரியப்பனார் 012 – 3662286

மு.இளங்கோவன் – 010 - 4356866

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

முருகு. சுப்பிரமணியனார் அவர்களின் திருமகனாருடன் மலேசியாவில் ஒரு சந்திப்பு

மு.இ, சுப. செல்வம், திருவாட்டி சந்திரா செல்வம்

பொன்னி என்னும் இலக்கிய இதழை வெளியிட்டு(1947-53), தமிழகத்திலும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் புகழ் பெற்ற  முருகு சுப்பிரமணியம் அவர்களுடைய மூத்த புதல்வரும், மலேசியாவின் ஆர்டிஎம்-ல் வானொலி தமிழ்ச் செய்திப் பிரிவு தலைவராகவும் ஆர்டிஎம் தொலைக் காட்சிச் செய்திப் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவருமான திரு செல்வம்அவர்களும் அவர்களின் துணைவியார் திருவாட்டி. சந்திராசெல்வம் அவர்களும் மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு நான் வந்துள்ளதை அறிந்து மாநாட்டுக் கூடத்திற்கு வருகை தந்தனர். அவர்களின் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்?. இருபதாண்டுகளுக்கு முன் நான் செய்த முனைவர் பட்ட ஆய்வு குறித்த நினைவுகளை அசைபோட்டோம். குடந்தை. ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கும் ஆவணப்படத்தை அவர்களுக்குக் கையுறையாக அளித்து மகிழ்ந்தேன்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

தம்பி ம. இளவரசன் மறைவு


ம. இளவரசன்

மலேயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியரும், எங்கள் அருமை அண்ணாருமாகிய திரு. ம. மன்னர் மன்னன் அவர்களின் திருமகனார் தம்பி ம. இளவரசன் அவர்கள் இன்று (18.01.2015) டெங்கு என்னும் கொடிய காய்ச்சலால் இயற்கை எய்திய கொடுஞ்செய்தி அறிந்து ஆற்ற ஒண்ணாத் துயரம் அடைந்தேன்.

27. 12. 2014 இல் நான் மலேசியா சென்றபொழுது தந்தையாருடன் தம்பி ம. இளவரசன் என்னை வரவேற்று விருந்தோம்பினார். அவரை ஒரு நிறுவனத்தின் நேர்காணலுக்கு நாங்கள் அழைத்துச் சென்று விட்டுவந்தோம். இசையமைப்பாளர் இராஜ்குமார் அவர்களைக் கோலாலம்பூர் வானூர்தி நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழியனுப்ப, மகிழ்வுந்து ஓட்டி வந்து உதவினார். 

மேலும் காலைப்பொழுதொன்றில் அவருடன் அருகமர்ந்து உணவு உண்டதும், அவர் என்னைப் பேருந்து நிலைக்கு அழைத்து வந்து வழியனுப்பி வைத்ததுமான நினைவுகள் என்னைத் தாக்கி வருத்துகின்றன. தம்பி ம. இளவரசரை இழந்து தவிக்கும் எங்கள் அண்ணன் ம. மன்னர் மன்னன் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் அடிமனத்திலிருந்து பீறிட்டெழும் வருத்தங்களும் ஆறுதல்களும் அமைவதாகுக.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்” என்ற திருக்குறள் நினைவுக்கு வருகின்றது. கண்ணீருடன் கீழ்வரும் வரிகளைத் தம்பி இளவரசருக்குப் படைக்கின்றேன்.)

கண்ணே மணியே இளவரசா!

அண்ணன் அண்ணி அழுதரற்ற,
அன்புச் சுற்றம் மயங்கியழ,
கண்ணே! மணியே! இளவரசே!
கடிதின் நீங்கி மறைந்தனையே!
கண்ணே! மணியே! இளவரசே!
கடிதின் நீங்கி மறைந்தசெய்தி
புண்மேல் அம்பாய் பாய்ந்ததடா!
புலம்பி நாங்கள் கதறுகின்றோம்!

மலையக மண்ணில் உனைக்கண்டேன்!
மார்பு தழுவிப் பழகினையே!
உலையிடை உருகும் மெழுகாக
உண்மை அன்பைக் காட்டினையே!
உலையிடை உருகும் மெழுகாகி
உண்மை அன்பைக் காட்டியதால்
அலைகள் போலுன் நினைவுவந்தே
ஆழத் தாக்கி வீழ்த்துதடா!


படித்துப் பட்டம் நீபெற்றாய்!
பணியில் இணைந்து நீசிறந்தாய்!
வடித்த சிலைபோல் தோற்றம்கொண்டு
வானுற ஓங்கி நின்றனையே!
வடித்த சிலைபோல் நின்றவுனை
வானக் காலன் கவர்ந்ததனால்
துடித்தே அழுது துவலுகின்றோம்!
தூய்மை மகனே போய்வாடா!

ஓய்ச்சல் இன்றித் தமிழுக்கே
உழைக்கும் குடும்பம் உன்னதடா!
பாய்ச்சல் புலிபோல் நீபிறந்து
பாலை நெஞ்சில் வார்த்தனையே!
பாய்ச்சல் புலிபோல் வாழ்ந்தவனே!
பாசம் நெஞ்சில் நிறைந்தவனே!
காய்ச்சல் வந்தே  உனைக்கவ்விக்
கவர்ந்து போன தெப்படியோ?

மணத்தை முடித்து மகிழ்வதற்கே,
மாளிகை ஒன்று மனக்கண்ணில்
குணத்தால் கட்டிக் காத்திருந்தோம்,
குறைந்த அகவை கோமகனே!
குணத்தால் உயர்ந்த கொற்றவனே!
குடும்பம் தவிக்க விட்டபடி,
இணர்போல் கிடக்கும் உனதுடலை
எந்தப் பிறப்பில் காண்பமடா!


ஞாயிறு, 28 டிசம்பர், 2014

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியாவில் வெளியீடு - படங்கள்




குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் டத்தோசிறீ ச.சாமிவேலு அவர்கள், முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்கள். அருகில் உத்தராகண்டு மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் எம். பி, டான்சிறீ சு. குமரன், பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்( நிகழ்வு:மலேசியா)

 மலேசியத் தலைநகரான கோலாலம்பூர் தான்சிறீ சோமா அரங்கில் 28.12.2014 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை  ஆவணப்பட வெளியீட்டு விழா. டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை ஆவணப்பட ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.. மன்னர்மன்னன் வழங்கினார். மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆவணப்படத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் புரவலருமான டத்தோ சூ. பிரகதீஷ்குமார், நைனா முகமது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில்  டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி. ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். டான்ஸ்ரீ சு. குமரன்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முதலில் திரையிட்டுக் காட்டப்பட்டது. தமிழிசைச் சிறப்பைத் தனியொருவராக இருந்து பரப்பிய குடந்தை ப.சுந்தரேசனாரின் வாழ்க்கையை டத்தோசிறீ ச.சாமிவேலு உள்ளிட்டவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ஆவணப்பட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திரு. தருண்விஜய் எம்.பி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருவள்ளுவருக்குச் சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனவும் அதற்கு டத்தோசிறீ ச. சாமிவேலு போன்றவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். திருவள்ளுவர் திருப்பயணத்தைக் கன்னியாகுமரியிலிருந்து பொங்கல் திருநாளையொட்டித் தாம் மேற்கொள்ள உள்ளதையும் அவைக்கு எடுத்துரைத்தார். தாம் இன்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் வழியாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். தாம் இப்பொழுது தமிழ் கற்கத் தொடங்கியிருந்தாலும் தமக்குத் தமிழர்கள் தமிழில் பேசும்போது எந்த வகையான சிக்கலும் இல்லாமல் புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். உத்ராகண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியில் இவருக்குத் திருக்குறள் தூதர் என்ற விருது வழங்கிப் பாராட்டினர்.

 மலேசிய நாட்டின் மூத்த தலைவர் திரு. டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் திரு. தருண்விஜய் எம். பி. அவர்களுக்குத் திருக்குறள் தூதர் விருது வழங்குதல்( இடம்: மலேசியா) அருகில் பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் நிறைவில் ஏற்புரையாற்றினார்.

குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்பட வெளியீட்டு விழா மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம், மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குழு ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.

மலேயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. மன்னர் மன்னன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
 மு.இளங்கோவன், திரு. மன்னர் மன்னன், டத்தோ சிறீ ச. சாமிவேலு, டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி, டான்சிறீ சு. குமரன், திரு. நைனா முகமது