நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
திருவரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 நவம்பர், 2014

திருவரங்கத்தில் எனக்குக் கிடைத்த பெருமை…




பண்ணாய்வான் ப.சு. சீர்பரவுவார் விருதுபெறல்
(இடம்: இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு, திருவரங்கம்)

திருவரங்கத்தில் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு என்னும் அமைப்பு தமிழுக்கு ஆக்கப்பணிகள் செய்யும் அறிஞர்களை அழைத்துப் பலவாண்டுகளாகப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது. இதுவரை 1200 கூட்டங்களை இவ்வமைப்பினர் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு காரிக்கிழமையும் இங்கு மூத்த தமிழறிஞர்கள் கூடி, தமிழ் குறித்துச் சிந்திப்பார்கள். எந்த விளம்பர வெளிச்சமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் இங்குத் தமிழ் குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் அறிஞர்கள் சிந்திக்கின்றனர். இங்கு அறிஞர்கள் பாராட்டப்பட்டால் அவர்கள் தமிழுக்கு ஏதேனும் ஒருவகையில் தொண்டுபுரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

என் பேராசிரியர் எழில்முதல்வன், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர், திரு. எம். எஸ். நாடார் உள்ளிட்ட எத்தனையோ அறிஞர்கள் இந்த அரங்கில் உரை நிகழ்த்தியுள்ளனர். இவமைப்பினர் நல்கிய பட்டங்களையும், விருதுகளையும் மேன்மையாகக் கருதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று மாலை ஆறு மணிக்குத் திருவரங்கம், செண்பகத் தமிழ் அரங்கில் நடைபெற்றது. தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர்கள், புலவர் பெருமக்கள் அழைக்கப்பட்டு உரையாற்றும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு  செய்திருந்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் த. கனகசபை ஐயா கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார். அன்னாரின் உரை இசைத்தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பதாகவும், ப.சு. அவர்களின் பன்முக ஆற்றலை விளக்குவதாகவும் இருந்தது.  

புலவர் பெருமான், சிற்றிலக்கியவேந்தர் திருமழபாடி மா. திருநாவுக்கரசு அவர்கள் கலந்துகொண்டு ஒரு மணிநேரம் பண்ணாராய்ச்சி வித்தகருடன் தமக்கிருந்த தொடர்பை அவையோர் வியக்க எடுத்துரைத்தார். மணல்மேடு திரு. குருநாதன் ஐயா கலந்துகொண்டு, தாம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சு. அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டமையை நினைவுகூர்ந்தார்.

மணல்பாறையிலிருந்து புலவர் நாவை சிவம் ஐயா கலந்துகொண்டு தம் நினைவுகளை நினைவுகூர்ந்தார். திரு. தமிழழகன் ஐயா தலைமையில் இந்த விழா நடைபெற்றது. ஒவ்வொருவரும் குடந்தை ப. சுந்தரேசனாரை எந்த அளவு நேசித்துள்ளனர் என்பதை அவர்களின் உரையால் அறிந்து உவந்தேன். பண்ணாராய்ச்சியாளர் வாழ்வும் பணியும் குறித்து யான் இயக்கிய ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைத் திரையிட்டுப் பார்த்தோம். அனைவரின் கண்களிலும் கண்ணீர் பனித்தது. “ஆர்வலர் புன்கணீர் பூசல்தரும்” என்ற திருவள்ளுவப் பெருமானின் வரிகளை நினைந்து  நானும் கலகினேன்.

      குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகியவர்கள் முன்னிலையில் அவரை நேரில் பார்த்தறியாத யான் எடுத்த படம் முன்னோட்டமாகக் காட்டப்பட்டமை என் வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். என்னுடைய முயற்சியை அனைவரும் பாராட்டி உள்ளம் உவகையுற்றனர். என் தொடர்பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்ற உயரிய விருதை அண்ணன் திரு. கேசவன் அவர்களின் கையால் வழங்க, அனைவரும் வாழ்த்தொலி முழக்கினர்.

மாலையணிவித்தும், ஆடை அணிவித்தும். அன்பளிப்புகள் வழங்கியும் தம் நன்றிப்பெருக்கை அனைவரும் வெளிப்படுத்தினர். இலால்குடி சிவா ஐயா அவர்களின் குடும்பத்தின் சார்பிலும் எனக்குச் சிறப்புச் செய்யப்பட்டது. அவரின் உடன் பிறந்தார் திரு. சுப்பிரமணியன் ஐயா எனக்குச் சிறப்புச்செய்தார். 

அங்கிருந்த அறிஞர்கள் ஒவ்வொருவரும் தமிழுக்கு முதன்மையான பணிகள் செய்தவர்கள். பன்னூலாசிரியர்கள். பாவலர்கள், கொள்கையாளர்கள். எந்த விளம்பர வெளிச்சத்துக்கும்  அவர்கள் வராதவர்கள். கற்ற தமிழை மற்ற தமிழர்களுக்கு விரித்துரைத்தவர்கள். பல்வேறு தமிழ்க்கல்லூரிகளில் பயின்ற அவர்கள் ஒவ்வொருவரும் பண்ணாராய்ச்சி வித்தகருடன் கொண்டிருந்த தொடர்பை நினைவலைகளாக வழங்கினர். இவர்கள் ப.சுந்தரேசனார் ஐயாவை அழைத்து, பெரியபுராணம் கேட்டுள்ளனர். சிலம்பை ஒலிக்கச் செய்துள்ளனர். பொருட்கொடை வழங்கி அப்பெருமகனாரின் துன்பம் விரட்டியுள்ளனர். பட்டாடை வாங்கியளித்தவர்களும், அணிமணிகள் வாங்கித் தந்து அழகுபார்த்தவர்களும் அங்கு வந்திருந்தனர். பண்ணாராய்ச்சியாளரின் தன்மானம் அறிந்தவர்கள் வந்திருந்தனர்.

அங்கு வந்திருந்த திரு. மணல்மேடு குருநாதன் ஐயா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடத்து மிகுந்த அன்புகொண்டவர். பாவேந்தரைத் தம் இல்லத்துக்கு அழைத்து விருந்தோம்பியவர். குயில் இதழில் தொடர்ந்து எழுதியவர். பன்னூலாசிரியர். பாவலர் சுரதாவிடத்து அன்புகொண்டவர். அவர் தம் கையுறையாகச் சில அன்பளிப்புகளை நினைவுக்காக எனக்கு வழங்கிச் சிறப்பித்தார். தந்தையார் நிலையில் இருந்து அவர் மொழிந்த இன்மொழிகள் என் உயிரைச் சில்லிடச் செய்தது.


இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் அமைப்பாளராக இருந்து, தந்தையாரின் பணியைத் தொடர்ந்து செய்துவரும் உடன்பிறப்பு இராச. இளங்கோவன் அவர்களின் பெருமுயற்சியில் இந்த விழா அமைந்தது. அவருக்கும் இராசவேலர் செண்பகத் அரங்குக்கும் என்றும் நன்றியன். அங்கிருந்த அறிஞர்களின் அன்பில் மிதந்தபடி நள்ளிரவு புறப்பட்டு, வேலூருக்குச் செலவுநயப்பு மேற்கொண்டேன்.

செம்பியர்குடியிலிருந்து வந்திருந்தவர்கள் ஆடை அணிவித்து மகிழல்.
மணல்மேடு குருநாதன் ஐயா சிறப்பிக்கப்படுதல். அருகில் தனித்தமிழாசிரியர் திருக்குறள், மணல்பாறை சிவம் ஐயா


இசையறிஞர் பேராசிரியர் த.கனகசபை ஐயாவின் விழாப்பேருரை

சான்றோர் பெருமக்கள்

திருமழபாடியில் வாழும்
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் உரை

மு.இளங்கோவன் உரை

வியாழன், 27 நவம்பர், 2014

திருவரங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா




திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், காந்திசாலையில் அமைந்துள்ள இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டுப் பெருவிழா 29.11.2014 மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.

புரவலர் க. தமிழழகன் அவர்கள் வரவேற்புரை நல்க, திரு. இராம. சுப்பிரமணியன், திரு. குமர. நமசிவாயமூர்த்தி முன்னிலையில் இந்தப் பெருவிழா நடைபெற உள்ளது.

இராச. இளங்கோவன் அவர்கள் அறிமுகவுரையாற்றவும், புலவர் புவியரசு அவர்கள் தலைமை தாங்கவும் இந்த விழா நடைபெறுகின்றது. திருமழபாடி புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றவும், பெரும்பாண நம்பி முனைவர் த. கனகசபை அவர்கள் (பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்) விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். 

பண்ணாய்வான் ப. சு அவர்களின் படத்தினைத் திறந்து வைக்க திரு. தங்க. கலியமூர்த்தி அவர்கள் இசைந்துள்ளார்கள். அருள்மனச் சான்றோர் எம். ஆர். எஸ். கேசவன் அவர்களின் திருக்கையினால் முனைவர் மு. இளங்கோவனுக்குப் பண்ணாய்வான் ப.சு. சீர் பரவுவார் என்னும் உயரிய விருதளித்துப் பாராட்ட உள்ளனர். தமிழ்மாமணி முனைவர் ப. சுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுறும். தமிழார்வலர்களை இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கத்தினர்  அன்புடன் வரவேற்கின்றனர்.


திங்கள், 30 செப்டம்பர், 2013

வழக்கறிஞர் க.இராசவேலு செண்பகவல்லி அவர்களின் தமிழ் வாழ்க்கை



வழக்கறிஞர் க.இராசவேலு செண்பகவல்லி அவர்கள்


திருச்சிராப்பள்ளியில் தமிழ்த்தொண்டாற்றிய அறிஞர்களுள் வழக்கறிஞர் க .இராசவேலு அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது(1993 - 97) தமிழ்த்துறையில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளுக்குத் தவறாமல் வருகை தரும் பெருமகனார் நம் இராசவேலு ஐயா அவர்கள் ஆவார். என் பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களிடத்து மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர். இருவருக்கும் இடையில் மிகச்சிறந்த நட்பு இருந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் எங்கள் பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் வழக்கறிஞர் க. இராசவேலு அவர்களின் சிறப்பினை நினைவுகூர்வார்கள். பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் செண்பகத் தமிழ் அரங்கில் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றியதாகவும் எனக்கு நினைவு உள்ளது.

தொலைபேசியிலும் மடலிலுமாக வழக்கறிஞர் க. இராசவேலு அவர்களிடம் நான் நீண்ட  நட்புகொண்டிருந்தேன். தமிழறிஞர்களை அழைத்துப் பேசச்செய்து அவர்களின் பேச்சை முறையாக ஒலிவடிவில் பதிந்துவைத்துள்ள வழக்கறிஞர் க. இராசவேலு ஐயா அவர்களின் பாங்கு தமிழர்களால் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். வழக்கறிஞர் க.இராசவேலு அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைப்பதில் பெருமைகொள்கின்றேன்.

                1936 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 20 ஆம் நாள், கந்தசாமி சின்னம்மாள் என்னும் பெற்றோர்க்கு ஐந்தாம் மகவாகத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் வழக்கறிஞர் க.இராசவேலு பிறந்தவர். பள்ளிக் கல்வியைத் திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லுரிக் கல்வியைத் திருச்சிராப்பள்ளித் தேசியக் கல்லூரி, தூய வளனார் கல்லூரி ஆகியவற்றிலும் கற்று, பொருளாதாரத்தில் பி.ஏ.ஆனர்சு  பட்டம் பெற்றர். சட்டப்படிப்பைச் சென்னை அரசு  சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்று, வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டர்.

                பள்ளியில் படிக்கும் போதே தமிழ்ப் பாடத்தில் மிகுந்த விருப்பம் காட்டிய இவர் தமிழில் எப்போதும் முதல் மதிப்பெண்களே பெற்று வந்தார். பள்ளியில் இவருக்குத் தமிழ்ப்பாடம் கற்பித்தவர் தமிழ்மாமணிபுலவர் அ.சேதுமாணிக்கனார் ஆவார். பள்ளியில் படிக்கும்போதே இவரும், இவர் நண்பர் நா. இராமசாமி என்பவரும் சேர்ந்து மதிஎன்னும் கையேட்டிதழை வெளியிட்டு வந்தனர். அந்த மதிஎன்னும் கையோட்டிதழில் இவர் பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.

                பள்ளியில் படிக்கும் போதே தொல்காப்பியர் கலைக்குழுஎன்னும் ஒரு நாடகக் குழுவினை உருவாக்கி, அக்குழுவின் மூலம் முதன் முதலாக வீரபாண்டியக் கட்டபொம்மன்வரலாற்றை நாடகமாக எழுதி அரங்கேற்றினார். அதில் முக்கிய பாத்திரமான வீரபாண்டிய கட்டபொம்மன் பாத்திரத்தையும் தாமே ஏற்று நடித்தார்.

நாடக ஆர்வம் இவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள நண்பர் கண்ட கனவு,  இருவிழிகள்,  ஒரேநீதி,  இளங்கோ துறவு முதலிய பல நாடங்களை இவர் எழுதி, அவற்றில் முக்கிய வேடங்களையும் ஏற்று நடித்துள்ளார். இவருடைய நண்பர் கண்ட கனவுநாடகத்தைக் கண்ணுற்ற நாடகக்காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்கள் மிகவும் புகழ்ந்து பாராட்டினார். அதேபோல் இவருடைய இளங்கோ துறவுநாடகத்தைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்கள் பார்த்துப் பாராட்டுரை வழங்கினார்.

1962 நவம்பர் 7ஆம் நாள் இவர் செண்பகவல்லி என்னும் நங்கையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இவருக்கு வான்மதி என்ற பெண்ணும், மணிவண்ணன், மதிவாணன், இளங்கோவன், ஆனந்த்பாபு என்னும் ஆண்மக்கள் நால்வரும் உள்ளனர்.

க. இராசவேலு அவர்கள் இளமையிலேயே மேடையில் பேசிப் பழகிப்பயிற்சி பெற்றுத்  தாம் சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கூட்டங்கள் பலவற்றில் பேசியுள்ளார்.

                தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும் போது இவருடைய தமிழறிவுக்கும், தமிழ்க்கல்விக்கும், தமிழ் ஆர்வத்திற்கும் உரமூட்டியவர், இவருக்குத் தமிழ்ப்பாடம் போதித்த அமரர் பேராசிரியர் இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் ஆவார்.

க. இராசவேலு அவர்கள் 1969 ஆம் ஆண்டு நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு நகரமன்ற உறுப்பினர் ஆனார். பின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு வேறுபாட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

க. இராசவேலு அவர்கள் திருவரங்கம் அருள்திரு அரங்கநாதர் திருக்கோயிலின் அறங்காவலராகப் பொறுப்பேற்றுப் பின்னர் அத்திருக்கோயிலின் அறங்காவலர் குழுத்தலைவராகவும் ஆறாண்டு காலம் பணியாற்றியுள்ளார். இவர் இப்பொறுப்பில் இருந்த போது திருவரங்கத்தில் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய அம்மண்டபத்திலேயே கம்பனுக்கு விழா எடுத்தது இவருடைய தனிச் சிறப்பாகும்.

இளமையிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தந்தை பெரியார் அவர்களை ஒரு முறை தம் இல்லத்திற்கு அழைத்து மிகப் பெரிய விருத்தினை வழங்கி மகிழ்ச்சி கொண்டார்.       அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற சமயப் பெரியார்களுடனும், கலைஞர், நாவலர், சிலம்புச் செல்வர் போன்ற அரசியல், தமிழ் அறிஞர்களுடனும் நல்ல நட்பும், தொடர்பும் கொண்டிருந்தார்.

                1989 ஆம் ஆண்டு இவருடைய துணைவியார் செண்பகவல்லி அம்மையார் மறைந்தார். கவிதையிலே அதிக நாட்டமில்லாதிருந்த இவர், மனைவியின் மறைவிற்குப்பின் தம்  துணைவியாரைப்பற்றி ஐம்பதாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியதுடன் அவரைப் பற்றி சிறுசிறு கவிதை நூல்கள் பதினாறு வெளியிட்டுள்ளார்.

மறைந்த தன் துணைவியாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில் அவர் பெயரிலேயே செண்பகத் தமிழ் அரங்குஎன்னும் ஓர் அமைப்பினை  1992 ஆம் ஆண்டு சனவரி 18ஆம் நாள் நிறுவி,  21  ஆண்டுகாலமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இலக்கிய, ஆன்மிக, பகுத்தறிவு, அறிவியல் கூட்டங்களை நடத்தி வந்தார். இவ்வமைப்பு ஏற்கனவே இவரால் நடத்தப்பட்டு வந்த தமிழ் அரங்குஎன்ற அமைப்பின் புத்துயிர் ஆக்கமேயாகும். அன்றைய தினம் இவர் நடத்திய தமிழ் அரங்கில், சிலம்புச் செல்வர், ம.பொ.சி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் கு.திருமேனி, புலவர் கீரன், கி.வ.ஜ.போன்ற பெருமக்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தமது துணைவியாரைப்பற்றி இவர் எழுதிய கவிதைகளோடு திருமழபாடி இரட்டை மணிமாலை, திருமேனி வெண்பா அந்தாதி, துலுக்க நாச்சியார் நாட்டிய நாடகம், பேராசியர், எம்.எஸ்.நாடார் பற்றிய திருப்பித்தருவாயா? முதலிய பல்வேறு கவிதை நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். காவியம் படைக்க வேண்டும் என்னும் பெரு நோக்கில் இவர் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை பெரும் காப்பியமாக உருவாக்கியுள்ளார்.

குமரிமுனையில் 133அடி வள்ளுவர் உருப்பெற்றது போல் இவர் உள்ளத்திலும் ஓர் எண்ணம் உருப்பெற்றது திருக்குறள் 1330 ஐயும் 1330 இசைப்பாடல்களாக வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் திருக்குறள் பாயிரம் நாற்பது குறளை இவர் இசைப்பாடல்களாக வடித்துள்ளார்.

செண்பகத் தமிழ் அரங்கு -  ஓர் அறிமுகம்

தன் துணைவியர் செண்பகவல்லயின் நினைவிப் போற்றவும், தன் தமிழார்வத்திற்கு ஒரு வடிகால் தேடவும், வழக்கறிஞர் க.இராசவேலு உருவாக்கிய அமைப்புத்தான், திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு ஆகும். திருவள்ளுவராண்டு 2023 தைத்திங்கள்4-ஆம் நாள் (18-01-1992) அன்று புலவர் அ.கே.கேதுமாணிக்கனார் அவர்களது திருக்கரத்தால் தொடங்கப்பெற்ற செண்பகத் தமிழ் அரங்கு சனிக்கிழமைதோறும் கூட்டங்களைத் தொய்வின்றி நடத்தி, இன்று 900-ஆவது கூட்டத்தைக் காண்கின்றது.

        ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு, வழக்கறிஞரின் சிறிய தந்தையார் திரு.சு.தங்கையன் அவர்களின் இளையமகன் அமரர் த.கருணாநிதி நினைவாக, ‘தமிழ்மாமணிஎன்னும் விருது வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

முனைவர் மு.சி.கேசவன், முனைவர் கு.திருமேனி, புலவர் அ.கே.சேதுமாணிக்கனார், கவிஞர் சக்திசரணன், பெரும்புலவர் ப.அரங்கசாமி, முனைவர் அ.ஆறுமுகம், குறளன்பன் ஆ.வே.இராமசாமி, முனைவர் எழில் முதல்வன், நாவலர் சி.அரசப்பனார், முனைவர் சு.அரங்கசாமி, ஸ்ரீவைணவச் செம்மல் கி.பத்மநாப ரெட்டியார், தமிழ்க்கடல் தி.வே.கோபாலய்யர், முனைவர் ச.சாமிமுத்து, முனைவர் கு.சுந்தரமூர்த்தி, இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார், தவத்திரு ஊரன் அடிகளார் முனைவர் ப.வளன்அரசு, மெஹர்ப.யூ.அய்ய+ப், பொறிஞர் இரா.பாலகங்காதரனார், முனைவர் ப.சுப்பிரமணியன், முனைவர் கு.திருமாறன் ஆகியோர் கடந்த பதினாறு ஆண்டுகளில் அரங்கினால் தமிழ் மாமணி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்.

தக்க சான்றோர்களைக் கொண்டு, ஆண்டு தோறும் தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப் பெற்று வருகின்றன.

சைவசித்தாந்தம், பெரியபுராணம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம், வள்ளலார் வாழ்வும் வாக்கும், சேக்சுபியர் நாடகங்கள், பாவேந்தர் படைப்புகள், பெர்னாட்சா நாடகங்கள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கந்தர்அனுபூதி, பைபிள் கதைகள், உலக அறிஞர்கள் வரிசை, தொல்காப்பியம், கம்பராமாயணம், திருக்கோவையார், திருக்குரான் சிந்தனைகள், திராவிடப் பேரியக்க வரலாறு, மணிமேகலை சமயம் வளர்த்த அருளாளர்கள், விடுதலை வேள்வியில் தமிழகம், ஐஞ்சிறுகாப்பியங்கள், ஆகியவை நடத்தப் பெற்ற தொடர் சொற் பொழிவுகளாகும். தமிழியக்கங்கள், இராவணகாவியம் ஆகிய இவ்விரண்டும் தொடர்ப் பொழிவுகளாக நடைபெற்று வருகின்றன. இவையன்றி நூற்றாண்டு கண்ட தமிழறிஞர்கள் பலரின் நூற்றாண்டையும் செண்பகத் தமிழ் அரங்கு கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றது.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முக்கூடற்பள்ளு, முத்தொள்ளாயிரம், நளவெண்பா, வளையாபதி, குண்டலகேசி போன்ற தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பொழிவாக்கி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பிறமொழி இலக்கியங்களான கோமரின் ஆடிசி - இலியட், கதேயின் பாஸ்ட், இந்திய மொழிகளான வங்காளி,  மராத்தி,  இந்தி,  சாமி, ஒரியா, சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றின் இலக்கிய வரலாறுகள், இவைகளன்றி அறிவியல், ஆன்மீகம், திரைக்கலை, புவியியல், விண்ணியல், வரலாறு உளவியல் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு பொதுத் தலைப்புகளைச் சார்ந்த சொற்பொழிவுகளையும் இவ்வரங்கு நடத்திப் பெருமையும், மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறது. முத்தமிழின் கூறுகளான இயல், இசை, நாடகத்தோடு கவியரங்கங்களும், படைப்பாளிகள் பலரது நூல் வெளியீட்டு விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வரங்கினைத் தொடக்கி வைத்து, அரங்கினால் தமிழ்மாமணி விருதளித்துப் பாராட்டுச் செய்யப்பெற்ற புலவர் அ.கே.சேதுமாணிக்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், ‘தொல்காப்பியர் விருதுவழங்கப்படுகிறது. இவ்விருது சென்னை முதுபெரும்புலவர் ச.சீனிவாசன் முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் தமிழண்ணல், முனைவர்  சண்முக.செல்வகணபதி, முனைவர் இ.சூசை ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

                அரங்கு தொடங்கிய நாள்தொட்டு, தொடர்ந்து எல்லா நிகழ்வுகளும் ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.  தற்போது அந்த ஒலி நாடாக்கள் குறுந்தகடுகளாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது சிறப்பான செய்தி. அவ்வாறு குறுந்தகடுகளாக மாற்றப்பட்ட முதற் பெருமையினைத் திராவிடப் பேரியக்க வரலாற்றுத் தொடர் பெற்று பெருமைகொண்டது.

புலவர் ப.இராமதாசு அவர்களின் மகனார் இரா.இளங்கோ அவர்கள் அரங்கின் பணிகளை ஆய்வு செய்து, தன் ஆய்வு நிறைஞர் (எம்.பில்) பட்டத்திற்கான ஆய்வேட்டினை அளித்துள்ளார்.

         பாரதியின் 125-ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடங்கி, ஓராண்டு காலம் பாரதியின் பாடல்களை உரையும் பாட்டுமாக வழங்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்உரைகள் விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது. நிறுவனரின் பெற்றோர் கந்தசாமி சின்னம்மாள் பெயரில் நூலகம் அரங்கின் சார்பாக நிறுவப்பட்டுள்ளது. செண்பகத்தமிழ் அரங்கு தனது 500-ஆவது கூட்டப் பெருவிழாவினைக் கண்டோர் வியக்கும் வண்ணம் 2001-ஆம் ஆண்டு மூன்று நாள்கள் தமிழ்ப் பெருவிழாவாக நடத்தியதை யாரும் மறக்க முடியாது.

இவ்வினிய செண்பகத்தமிழ் அரங்கினை நிறுவி, நாளும் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய தன்னலம் கருதாப் பெருந்தகையாக விளங்கிய செண்பக ஆசுகவிச்செம்மல்வழக்கறிஞர் க.இராசவேலுசெண்பகவல்லி அவர்கள் கடந்த 02.07.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நிறுவனரின் தமிழ்ப்பணியினைத் தொடர்ந்து தொய்வின்றி கொண்டுசெல்லும் பொருட்டு. 2013ஆகத்துத் திங்களிலிருந்து காரிக்கிழமைகள்தோறும் கூட்டங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. நிறுவுநரின் கைம்மாறு கருதாத் தமிழ்ப்பணியால் செண்பகத்தாயின் பெயர் உலகமெலாம் பரவியதுபோல், நிறுவுநரின்பெயரும் நீடித்து நிலைபெற வேண்டும்.  எனும் நோக்கில் செண்பகத்தமிழ் அரங்கு எனும் இவ்வமைப்பு, ‘செண்பகவல்லி - இராசவேலர் தமிழ் அரங்கு, எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2013 ஆகத்துத் திங்கள் வரை 1135 தமிழ்க்கூட்டங்களை நிறைவு செய்துள்ளது.

வழக்கறிஞர் க.இராசவேலு அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் திருமகனார் இராச.இளங்கோவன் அவர்கள் செண்பகத் தமிழ் அரங்குப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகின்றார்.

தொடர்புக்கு:

இராச.இளங்கோவன் அவர்கள்,
செண்பகவல்லி –இராசவேலர் தமிழ் அரங்கு,
18/102, காந்திசாலை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி -620 006.
அலைபேசி : + 99446 16123                                                                                
தொலைபேசி : 0431 -2432476