நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வேலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 மார்ச், 2018

வேலூர் கவிஞர் இரா. நக்கீரன்



கவிஞர் இரா. நக்கீரன்(இரா. கிருஷ்ணமூர்த்தி) 

      புதுச்சேரியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் செய்தித் தாள்களை ஆர்வமாகப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு இலக்கியக் குழுவினர் பாவேந்தர் இல்லத்தில் நுழைந்தனர். சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்தும், நினைவுப்பொருள்களைச் சுட்டி விளக்கம் கேட்டும், உரையாடியபடியும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர்.

     அக்குழுவில் இருந்த அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவர், இந்தத் தெருவில் பாவேந்தரைப் பார்ப்பதற்கு முகவரி தெரியாமல் நாங்கள் நடந்தபொழுது, எங்களை அழைத்து, நான்தான் பாரதிதாசன். வாருங்கள்! என்று வரவேற்றார் என்று தம் கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த இடத்தில்தான் பாவேந்தர் அமர்ந்திருந்தார்; எங்களை அருகில் அமர வைத்து அன்பாக விருந்தோம்பினார்; நான் இங்குதான் பாவேந்தர் கால்மாட்டில் அமர்ந்திருந்தேன்” என்று அந்த இடத்தைச் சுட்டிக்காட்டியபொழுது அருகிலிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. கோவேந்தனுடன் வேலூரிலிருந்து வந்து, பாவேந்தரைச் சந்தித்த அந்த நாளை மறக்க முடியாது என்றார் அந்தப் பெரியவர். ஐம்பதாண்டுகளுக்கு முந்திய நிகழ்வை நினைவுகூர்ந்த அந்தப் பெரியவரின் முகத்தில் மகிழ்வும், பெருமிதமும் போட்டியிட்டுத் தெரிந்தன.

     இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த நான் ஐயா, நீங்கள் யார் என்று வினவி, என்னை அறிமுகம் செய்துகொண்டேன். கோவேந்தனைத் தங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன். அவரோ, கோவேந்தன் என் குருநாதர் என்றார். பாரதியார், பாவேந்தர், கோவேந்தன் படங்களைத் தம் இல்லத்தில் வைத்து நாளும் போற்றி மதிப்பதை அவர் உரையாடலின் வழியாகத் தெரிந்துகொண்டேன். பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் நான் முனைவர் பட்ட ஆய்வு செய்ததையும், கோவேந்தனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பையும் சொன்னவுடன் அந்தப் பெரியவருக்கு அடங்காத ஆர்வம். கோவேந்தனின் நண்பர் தங்கப்பா புதுவையில் உள்ளார் என்று அவரே கூறி, அடுக்கடுக்காகப் பேசிக்கொண்டே இருந்தார். பேச்சில் அவர் பிறவி நகைச்சுவையாளர் என்பது தெரிந்தது.

     தங்கப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று உரையாடலை மீண்டும் தொடர்ந்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போரில் பெருஞ்சித்திரனார் ஈடுபட்டு, கைதாகி, வேலூர் சிறையிலிருந்தார். தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவந்தபொழுது, கோவேந்தன், தங்கப்பா ஆகியோருடன் சென்று சிறைவாயிலில் அவரை வரவேற்றேன் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். சிறைவாசலிலிருந்து வெளிவந்த பெருஞ்சித்திரனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரின் கையைத் தங்கப்பா பற்றிக்கொண்டு அழுததைச் சொன்னதும் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றித் தென்மொழி ஏடுகளில் படித்த நினைவுகள் எனக்குத் தோன்றின.

     உடனடியாகத் தங்கப்பாவுடன் தொடர்புகொண்டு வேலூர் அன்பரைப் பற்றிச் சொன்னேன். அவரும் ஆமாம்! ஆமாம்! அவரைத் தெரியும் என்று தம் பழைய நண்பரை நினைவுகூர்ந்தார். இருவரும் தொலைபேசியில் சிறிது நேரம் உரையாட வழியமைத்துத் தந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

     மாதங்கள் உருண்டோடின. தொலைபேசியில் அந்த பெரியவருடன் என் நட்பு வளர்ந்தது. மீண்டும் புதுவைக்கு வரும் சூழலை அந்தப் பெரியவர் சொன்னபொழுது என் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் வருகைக்குக் காத்திருந்தேன்.

அவர்தான் வேலூர் கவிஞர் இரா. நக்கீரன்

     கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர் இரா. நக்கீரன் வேலூர் மாவட்டம் காட்டுப்பாடியை அடுத்த தாராப்படைவீட்டில் 26.06.1938 இல் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன், பட்டம்மாள் ஆவர். தமது பதினாறாவது வயதுமுதல் நாடகத்துறையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். கவியரங்குகள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு கேட்போர் வியக்க உரையாற்றியவர். கவியரங்குகளில் இசையுடன் பாடி அரங்கத்தை ஆச்சரியத்தில் உறைய வைத்தவர். இவரின் கவிதையைக் கேட்டுக் கவியரசு கண்ணதாசன் “இன்னிசைக் கவிஞர்” என்று பாராட்டியுள்ளார். பாடகர், நடிகர், இயக்குநர், சோதிட ஆராய்ச்சியாளர் என்று பன்முகம் கொண்ட இவர் 42 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, பொறியாளராக உயர்ந்து, ஓய்வுபெற்று இப்பொழுது வேலூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். எழுத்தும், பேச்சுமாக உள்ள கவிஞர் நக்கீரனுடன் உரையாடியதிலிருந்து பல விவரங்களைப் பெறமுடிந்தது.

     பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச்சொல்வர் ம.பொ.சி. கவிஞர் சுரதா, சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, ஆரூர் தாஸ், கவிஞர் சுப்பு ஆறுமுகம், கவிஞர் த. கோவேந்தன், நாரண. துரைக்கண்ணன், ஜஸ்டிஸ் மகாராஜன், பாவாணர், கு. மு. அண்ணல் தங்கோ, பெருஞ்சித்திரனார் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட தமிழகத்துக்கு நன்கு அறிமுகமான அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர் இரா. நக்கீரன்.

     திரைத்துறைக் கலைஞர்களான ஜம்பு, ஏடி. கிருஷ்ணசாமி, சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி, சித்ராலயா கோபு, டி.என்.பாலு, நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன், நடிகர் இரவிச்சந்திரன், செந்தாமரை, ஆர். முத்துராமன், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகி, அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.

     கல்பனா நாடக மன்றம், ரெயின்போ கிரியேஷன்ஸ் என்ற நாடக மன்றங்களை நிறுவிப் பல நாடகங்களை அரங்கேற்றியவர். இவரின் நாடகங்கள் வேலூர், கோவை, திருச்சி, சென்னை, இராணிப்பேட்டை முதலிய ஊர்களில் நடிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் புகழ்பெற்ற பல நாடகங்களுக்குப் பாடல்களை எழுதியவர். போர்வாள், சீமான் மகள், கனிமொழி, அபலை, வாழ்வும் வளமும், சாம்ரட் அசோகன், மணிமகுடம், டிரைவர் சின்னசாமி, மனமாற்றம், அன்பின் சிகரம், சத்ரபதி மைந்தன், மீர்ஜாபர், என் கதை, ஜம்புலிங்கம், தனிமரம், சுந்திரபல்லவன், வாழ்க்கைத் திருப்பம், சிக்கல், திருட்டு மாமா, குன்றிமணி, மலர்விழி, சுழல், உதிர்ந்த முத்துகள், வாழ்த்துங்கள், பாக்குவெட்டி, ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, ஐஸ்காரன், இணைகோடுகள், என்னங்க சம்பந்தி, நினைவுகள் அழிவதில்லை உள்ளிட்ட நாடகங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின.

     வானொலிக்கு மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த. இவரது பாடல்களைத் தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். நடிகர் ஆர் முத்துராமனுக்கு “நவரசத் திலகம்” என்ற பட்டத்தையும், எழுத்தாளர் சோ. இராமசாமிக்கு “நகைச்சுவைத் தென்றல்” என்ற பட்டத்தையும் வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

     கவிஞர் நக்கீரன் அபலை, டிரைவர் சின்னசாமி, திருப்பம், சிக்கல், சுழல், புதர், சத்ரபதி மைந்தன், சிலம்புச்செல்வி முதலிய ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார்.

     வேலூரிலிருந்து அக்காலத்தில் வெளிவந்த கவிஞன் என்ற கையெழுத்து ஏட்டுக்கு இணையாசிரியாக இருந்து 16 ஏடுகளை வெளிக்கொண்டு வந்த பெருமையும் இவருக்கு உண்டு. கவிஞன் இதழின் ஆசிரியர் த. கோவேந்தன் ஆவார்.

     கவிஞர் இரா. நக்கீரன் தம் கவிதை, நாடகம், மெல்லிசைப் பணிகளுக்கு இடையிலும் அரசுப்பணியை விடாமல் இருந்து நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி, பலருக்கும் உதவியாக வாழ்ந்தவர். தம் மனைவி விஜயலெட்சுமியின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்ட இவர், தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எளியவர்களுக்கு வழங்கிய ஈகைக்குணம் கொண்டவர். படிக்கும் மாணவர்களுக்கு உதவுவது இவரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தொண்டுணர்வு கொண்ட இப்பெருமகனாருக்கு அகவை எண்பதை நெருங்குகின்றது.

     இசைப்பாடல்கள் இயற்றுவதிலும், நாடகப்பாடல்கள் வரைவதிலும் ஈடுபாடு கொண்ட இந்த இசைக்கலைஞர் பாடுவதிலும் வல்லவர். தமிழிசைப் பாடல்கள்(1956), மேடைப் பாடல்கள்(1957), தென்னவர் மன்னன்(1958), இசையணங்கு(1967), கவிதாஞ்சலி(1968), இசையருவி(1968), பேரறிஞர் அண்ணா (1968 இல் தந்தை பெரியார் வெளியிட்டது), ஏலகிரி(1968), காந்திஜி சரிதம்(1970), கவிஞன் குரல்(1970), உதிர்ந்த முத்துக்கள்(1972), முத்துக் குவியல்(1978), கனவுப்பூக்கள்(1978), ஸ்ரீ சத்ய சாயியின் தத்துவ மொழிகள்(1974), ஸ்ரீ காஞ்சிப் பெரியவரின் அருள் வாக்கு(1978), ஞானக்கடல்(1978), ஜோதிட நுணுக்கங்கள்(2003), காற்றினிலே வரும் கீதம், திருவேங்கடத் திருப்பதிகம், கீத கோவிந்தம் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தம் எழுத்துப்பணியைத் தொய்வின்றிச் செய்து வருபவர்.

 கண்ணதாசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நக்கீரன், கண்ணதாசனின் வெளியுலகிற்குத் தெரியாத உயர் பண்புகள் பலவற்றை உரையாடலில் பகிர்ந்துகொள்பவர். நாடகத்துறையில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய மூத்த கலைஞர்களின் அகப் புற வாழ்க்கைகளை அறிந்து வைத்துள்ள நக்கீரன் ஒவ்வொருவரிடம் இருந்த உயர்ந்த ஆற்றல்களை எடுத்துரைக்கும் தகவல் களஞ்சியமாக விளங்குகிறார். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதிய எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள் குறித்த அரிய தகவல்களைத் தெரிந்துகொண்டு ஒரு நடமாடும் நூலகமாக வாழ்ந்து வருகின்றார்.

     சமூகச் சீர்திருத்தத்திலும், பகுத்தறிவிலும் சமரசம் செய்துகொள்ளாத இந்த முற்போக்குச் சிந்தனையாளர் அரசுக் கோப்புகளை ஆங்கிலத்தில் வரைந்தாலும் தமிழ்ச் சிந்தனையோடு பணியாற்றியவர். எந்த இடத்திலும் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் இருக்கும் இவரின் எழுத்துப்பணியும், கலைப்பணியும் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இவரைப் போன்ற அறிஞர்களைக் காணும்பொழுது, “தொண்டைநாடு சான்றோருடைத்து” என்னும் பழந்தமிழ் வரிகள் உண்மைதான் என்ற முடிவுக்கு வரலாம்.

குறிப்பு: கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.



செவ்வாய், 12 ஜூலை, 2016

எழுத்துச் செம்மல் வேலூர் தெ. சமரசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்



வேலூரில் வாழ்ந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரும் வழக்கறிஞரும் தமிழ்ப்பற்றாளருமாகிய எழுத்துச்செம்மல்  தெ. சமரசம் ஐயா அவர்கள் மறைந்து ஓராண்டாகின்றது. அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில் அவர்தம் குடும்பத்தாரும், நண்பர்களும் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றினை வேலூரில் 17.07.2016 (ஞாயிறு)  அன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


கல்விச்செம்மல் த. வ. சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விசுவநாதன் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவிற்குத் தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். பயண நூல்கள் பலவற்றைத் தந்த பகுத்தறிவுப் பெருமகனாரின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

ஞாயிறு, 13 மார்ச், 2016

வேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு!



 பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள்

  வேலூரில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் 13.03.2016 அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அவர்களுக்கு அகவை 77. இன்று மாலை வேலூரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

  கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் (1982),மொழிபெயர்ப்பு நுட்பங்கள் (1994), ஒற்றுமிகல் மிகாமை விதிகளும் விளக்கமும், தமிழ்வழியில் ஆங்கிலம் கற்பீர்(Learn English Through Tamil) 2008, மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடுமயங்கொலி அகராதி, தமிழ் மொழிப் பயிற்சி ஏடு எனத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பல நூல்களை எழுதி  வெளியிட்டவர். தமிழ் ஆங்கிலம் அறிந்த இருமொழி வல்லுநர்.

  தமிழின் ஒலிப்புமுறைகள், சொல்புணர்ச்சி முறைகள், ஒற்றுப்பிழையால் விளையும் ஊறுகள், மொழிபெயர்ப்பில் நேரும் பொருள் குழப்பங்கள் பற்றி நுட்பமாகக் கவனித்து அவற்றை எடுத்துரைத்து எழுதிய அறிஞர்களுள் பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இவர்களைப் போலும் செம்மல்கள் தமிழர்களாலும், தமிழக அரசாலும் கவனிக்கப்படாமல் போனமை தமிழுக்கு நேர்ந்த போகூழாகவே யான் உணர்கின்றேன்.


. “அருட்பெருஞ்சோதிஎன்று எழுதாமல் அருட்பெருஞ்ஜோதிஎன்று தமிழர்கள் சொற்புணர்ச்சி குறித்த அறிவின்றி எழுதுகின்றனரே என்று வருந்துவார். ஆங்கிலத் தாக்கம் தமிழில் பொருள்மாற்றத்தை எவ்வாறு உருவாக்கிவிட்டது என்று கூறி ஒரு நிமையத்தில் பத்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுவார். மொழியின் இயக்கத்தை இந்த அளவு நுட்பமாகக் கவனித்து வருகின்றாரே என்று வியப்பேன்.

  பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் வேலூர் வள்ளலார் நகர் பகுதியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். பலவாண்டுகளாக மூச்சுநோயிலும், இருமல் நோயிலுமாகத் துன்பப்பட்டபவர். ஆயினும் தமிழாய்விலோ, மொழியாய்விலோ தொய்வில்லாமல் பணியாற்றியவர்.

 பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

  கா. பட்டாபிராமன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஒன்னுபுரம் என்னும் ஊரில் 01.02.1939 இல் பிறந்தவர். பெற்றோர் திரு. காளிங்கராயன் - சுப்புலட்சுமி ஆவர். தமிழில் முதுகலை(1959), பி.டி(1960), எம்.பில்(1980) பட்டங்களைப் பெற்றவர்.

  சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பெருமைக்குரியவர். அப்பொழுதே பல ஏடுகளில் எழுதத் தொடங்கினார்.

 1960-65 இல் சென்னை எழும்பூர் அரசு பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.

 1965-71 இல் சேலம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். 1971-80 இல் கிருட்டிணகிரி கல்லூரியில் பணிபுரிந்தவர். 1981-82 இல் ஆத்தூர் கல்லூரியில் பணிபுரிந்தவர். 1982-1997 இல் திருவண்ணாமலையில் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். 2000-2001 இல் செங்கம் அருண் கிருஷ்ணா கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.

  கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் இவரின் முதல் படைப்பாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மொழித்திறன், அலுவலக மொழிபெயர்ப்பு ஏடுகள், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் முதலியன வெளிவந்தன. மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்ப  மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடு ஆகிய நூல்களையும் வரைந்துள்ளார்.

  2002 இல் வெளிவந்த ஒற்று மிகல்-மிகாமை விதிகளும் விளக்கமும் என்ற நூல் பத்தாண்டுகள் முயன்று உழைத்துப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

  மெய்ப்புத் திருத்தக்கலை, திருக்குறள் மனப்பாடப் பதிப்பு, தமிழ்நடை உள்ளிட்ட நூல்களையும் உருவாக்கியுள்ளார்.

  பலவாண்டுகளுக்கு முன்பே கணினியை இயக்கப் பழகித் தம் நூல்களைப் பிழையின்றித் தட்டச்சிட்டு வெளியிடுவதுடன் பிறர் நூல்கள் வெளியிடவும் துணைநின்றர். மற்ற நண்பர்களுக்காக அவ்வப்பொழுது மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுப் பல நூல்களை மொழிபெயர்த்துத் தந்தர்.

 தமிழன்னையின் திருவடிகளில் புகழ்வடிவில் அடைக்கலம் புகுந்த பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் புகழ் தமிழ் உள்ள அளவும் நின்று நிலவும்.

பேராசிரியர் கா. பட்டாபிராமன்



பேராசிரியர் கா. பட்டாபிராமன்

தமிழ்மொழியின் நுட்பங்களை உணர்ந்தவர்கள் மிகச் சிலராகவே உள்ளனர். தமிழின் ஒலிப்புமுறைகள், சொல்புணர்ச்சி முறைகள், ஒற்றுப்பிழையால் விளையும் ஊறுகள், மொழிபெயர்ப்பில் நேரும் பொருள் குழப்பங்கள் பற்றி நுட்பமாகக் கவனித்து வரும் அறிஞர்களுள் பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இவர்களைப் போலும் செம்மல்கள் தமிழர்களால் கவனிக்கப்படாமல் உள்ளமை தமிழுக்கு நேரும் போகூழாகவே யான் உணர்கின்றேன்.

யான் வேலூர் மாவட்டம் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியபொழுது அவ்வப்பொழுது விரும்பிச் சென்று சந்தித்து உரையாடும் பெருமகனார் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களாவார். வேலூரில் அவர்தம் இல்லம் செல்லும்பொழுதெல்லாம் பேராசிரியர் அவர்கள் அன்புடன் விருந்தோம்பி, மொழி, இலக்கியம் பற்றி நெடுநாழிகை உரையாடுவார்

. “அருட்பெருஞ்சோதி” என்று எழுதாமல் “அருட்பெருஞ்ஜோதி” என்று தமிழர்கள் சொற்புணர்ச்சி குறித்த அறிவின்றி எழுதுகின்றனரே என்று வருந்துவார். ஆங்கிலத் தாக்கம் தமிழில் பொருள் மாற்றத்தை எவ்வாறு உருவாக்கிவிட்டது என்று கூறி ஒரு நிமையத்தில் பத்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுவார். மொழியின் இயக்கத்தை இந்த அளவு நுட்பமாகக் கவனித்து வருகின்றாரே என்று வியப்பேன். இவர்களிடம் ஆங்கில மரபுகளை அறியலாமே என்று ஒவ்வொரு நாளும் நினைப்பேன். இந்த நொடிவரை அது கைகூடாமல் உள்ளது.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் வேலூர் வள்ளலார் நகர் பகுதியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பலவாண்டுகளாக மூச்சு நோயிலும், இருமல் நோயிலுமாகத் துன்பப்படுபவர். ஆயினும் தமிழாய்விலோ, மொழியாய்விலோ தொய்வில்லாமல் பணியாற்றுகின்றார். இவர்களைப் போலும் உண்மையான மொழியறிஞர்களால்தான் தமிழ்மொழி வாழ்ந்துகொண்டுள்ளது. தமிழாய்வுகளும் தொடர்ந்துகொண்டுள்ளன.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களுடன் பலவாண்டுகள் பழகியவன் யான். புதுச்சேரிக்குப் பணிமாற்றம் அமைந்து பிரிந்துவந்த பிறகும் அச்சான்றோருடன் மின்னஞ்சலில் தொலைபேசியில் தொடர்பில் இருந்து நலம் வினவி மகிழ்வேன். என்னைப் போலும் பலர் அவரின் தமிழ், ஆங்கிலப் புலமையை அறிந்துள்ளனர். தத்தம் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டுள்ளனர்.

வட தமிழகத்தின் பலபகுதிகளில் அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறிவதற்கு மீண்டும் நேற்று (02.03.2013) எனக்கு வாய்ப்பு அமைந்தது. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் இலக்கியப் பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கா. பட்டாபிராமன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஒன்னுபுரம் என்னும் ஊரில் 01.02.1939 இல் பிறந்தவர். பெற்றோர் திரு. காளிங்கராயன்- சுப்புலட்சுமி ஆவர். தமிழில் முதுகலை(1959), பி.டி(1960), எம்.பில்(1980) பட்டங்களைப் பெற்றவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பெருமைக்குரியவர். அப்பொழுதே பல ஏடுகளில் எழுதத் தொடங்கினார்.

1960-65 இல் சென்னை எழும்பூர் அரசு பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.

1965-71 இல் சேலம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். 1971-80 இல் கிருட்டிணகிரி கல்லூரியில் பணிபுரிந்தார். 1981-82 இல் ஆத்தூர் கல்லூரியில் பணிபுரிந்தவர். 1982-1997 இல் திருவண்ணாமலையில் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். 2000-2001 இல் செங்கம் அருண்கிருஷ்ணா கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.

கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் இவரின் முதல் படைப்பாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மொழித்திறன், அலுவலக மொழிபெயர்ப்பு ஏடுகள், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் முதலியன வெளிவந்தன. மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்ப  மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடு ஆகிய நூல்களையும் வரைந்துள்ளார்.

2002 இல் வெளிவந்த ஒற்று மிகல்-மிகாமை விதிகளும் விளக்கமும் என்ற நூல் பத்தாண்டுகள் முயன்று உழைத்துப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மெய்ப்புத் திருத்தக் கலை, திருக்குறள் மனப்பாடப் பதிப்பு, தமிழ்நடை உள்ளிட்ட நூல்களை விரைவில் அச்சிடப் பேராசிரியர் அவர்கள் முயன்றுவருகின்றார்.

பலவாண்டுகளுக்கு முன்பே கணினியை இயக்கப் பழகித் தம் நூல்களைப் பிழையின்றித் தட்டச்சிட்டு வெளியிடுவதுடன் பிறர் நூல்கள் வெளியிடவும் துணைநிற்கின்றார். மற்ற நண்பர்களுக்காக அவ்வப்பொழுது மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுப் பல நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

பேராசிரியரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தக்கன:

  1. கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் (1982)
  2. மொழிபெயர்ப்பு நுட்பங்கள் (1994)
  3. ஒற்றுமிகல் மிகாமை விதிகளும் விளக்கமும்
  4. தமிழ்வழியில் ஆங்கிலம் கற்பீர்(Learn English Through Tamil) 2008
  5. மொழிபெயர்ப்புக்கலை 2007

தமிழ் மொழி பயிற்சி ஏடுகள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

பேராசிரியரின் தொடர்புமுகவரி:

பேராசிரியர் கா. பட்டாபிராமன்
ஜி 55, பூங்கா நகர், வள்ளலார்,
வேலூர்- 632 009

சனி, 6 டிசம்பர், 2014

வேலூர் மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மறைவு






  வேலூரில் புகழ்பெற்ற மருத்துவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கிய எங்கள் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்கள் 04.12.2014 காலை 5.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை இப்பொழுது தற்செயலாக அறிய நேர்ந்தது. பலவாண்டுகள் பழகிய அந்தத் தாயைச் சென்ற கிழமை வேலூர் சென்றபொழுதும் காணமுடியாமல் திரும்பியிருந்தேன். மீண்டும் காணவே முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. 

  தமிழ் இதழ்களில் மருத்துவம் குறித்துப் பல கட்டுரைகள் எழுதியவர். நூல்களும் வடித்துள்ளார். பலருக்கு இலவயமாக மருத்துவம் பார்த்த தாயுள்ளத்தினர். அகவை முதிர்ந்த நிலையிலும் ஆர்வமாகத் தமிழ் இணையம் அறிந்தவர்கள்.

  நான் வேலூர் செல்லும்பொழுது தாயாக இருந்து தாங்கிப்பிடித்தவர்கள். அவர்களை இழந்து வருந்தும் வழக்குரைஞர் தெ. சமரசம் ஐயாவுக்கும் உடன் பிறப்பு மருத்துவர் இனியன் ஐயா, மற்றும் குடும்பத்தினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.



நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

புதன், 3 டிசம்பர், 2014

வேலூர் த.கி.மு.(DKM) மகளிர் கல்லூரியில் தன்னாட்சிக் கல்லூரிகளின் தர மேம்பாடு குறித்த தேசிய அளவிலான பயிற்சிவகுப்பு



வேலூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரியான தனபாக்கியம் கிருட்டினசாமி முதலியார் மகளிர் கல்லூரியில், தன்னாட்சிக் கல்லூரிகளின் தர மேம்பாடு குறித்த பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நவம்பர் 29, 30 ஆகிய இருநாள் நடைபெற்றது.

நிறைவுநாளில் நான் கலந்துகொண்டு உயர்கல்வித் தர மேம்பாட்டில் தகவல்தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. இன்றைய உலகத்துக் கல்விமுறைகள் குறித்தும் இந்தியக் கல்வி முறை குறித்தும், தமிழகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களின் கல்விமுறை குறித்தும் பேராசிரியர்களுக்கு என் கருத்துகளை எடுத்துரைத்தேன்.

இணையத்தளங்கள், மின்னூல்கள், மின்னிதழ்கள் கல்வி வளர்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் எந்த எந்த வகையில் துணைநிற்கின்றன என்று என் உரையை அமைத்தேன். தமிழ்த்தகவல்கள் எந்த எந்த இணையத்தளங்களில் உள்ளன என்றும் குறிப்பிட்டேன். பிறதுறை சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் தகவல்கள் எந்த எந்த இணையத்தளங்களில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டேன். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தின் பல கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆந்திர மாநிலம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் முனைவர் இராக. விவேகானந்தகோபால் அவர்கள் சிறப்புப் பார்வையாளராக வருகை தந்திருந்தார். கல்லூரிச் செயலாளர் பொறியாளர் டி. மணிநாதன் அவர்கள் வருகை தந்து என் உரையைக் கேட்டு ஊக்கப்படுத்தினார்கள்.


கல்லூரி முதல்வர் முனைவர் பி. என். சுதா அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முனைவர் பத்மஜா அவர்களும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஞா. சுஜாதா அவர்களும் கல்லூரியின் பல்வேறு துறைப் பேராசிரியர்களும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர். 

இந்தப் பயிற்சி வகுப்பில் என்னிடம் முன்பே கல்லூரிகளில் படித்தவர்கள், பேராசிரியர்களாக உயர்ந்து அமர்ந்திருந்தமை மகிழ்ச்சியளித்தது.






படங்கள் உதவி: ஒளி ஓவியர் இரமேஷ் பாபு, வேலூர்

சனி, 2 மார்ச், 2013

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியின் இணையத் தமிழ் சிறப்புப்பொழிவு





   வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் சிறப்புப்பொழிவு இன்று (02.03.2013) காலை 10 மணிக்குத் தொடங்கியது. கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். 

   தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வளர்மதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் விஜயலெட்சுமி அவர்கள் அறிமுகவுரையாற்றினார். கல்லூரியின் வரலாற்றுத் துறைத்தலைவரும் பொறுப்பு முதல்வருமான பேராசிரியர் மங்கையர்க்கரசி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் சுஜாதா அவர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்களும், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களும் வருகைதந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். 

முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு இணையத் தமிழைச் சற்றொப்ப இரண்டுமணிநேரம் அறிமுகம் செய்தார்.


மு.இளங்கோவன் உரை அருகில் மருத்துவர் பத்மா, வழக்கறிஞர் சமரசம், பேராசிரியர்கள்


பேராசிரியர்  வளர்மதி வரவேற்புரை


பேராசிரியர் மங்கையர்க்கரசி வாழ்த்துரை

முனைவர் விஜயலெட்சுமி அவர்கள் அறிமுகவுரை



தொகுப்புரை முனைவர் சுஜாதா




பங்கேற்ற மாணவிகள்


வழக்கறிஞர் சமரசம், மருத்துவர் பத்மா, பேராசிரியர்கள், மாணவிகள்

படங்கள் உதவி: ஒளி ஓவியர் இரமேஷ் பாபு (வேலூர்)

வியாழன், 28 பிப்ரவரி, 2013

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுகம்



வேலூர் சாயிநாதபுரத்தில் அமைந்துள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது. வள்ளல் ந.கிருஷ்ணசாமி முதலியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்த்துறை நடத்தும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இக் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பணிபுரியும் பேராசிரியர்கள் வேலூர் சார்ந்த மற்ற கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். மேலும் வேலூரில் வாழும் தமிழ்ப்பற்றாளர்களும் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிமுகம்பெற உள்ளனர்.

நாள்: 02.03.2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10 மணிமுதல்
இடம்: டி பிளாக், கருத்தரங்கக் கூடம், டி.கே.எம்.கல்லூரி, வேலூர்

புதன், 28 நவம்பர், 2012

வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களுடன் புதுவையில் சந்திப்பு...



மருத்துவர் பத்மா சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன் 

 வேலூர் என்றவுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கு அங்குள்ள கோட்டை நினைவுக்கு வரும். அரசியல்காரர்களுக்கு அங்குள்ள சிறை நினைவுக்கு வரும். திராவிட இயக்க உணர்வாளர்களுக்குத் தந்தை பெரியார் மறைந்தமை நினைவுக்கு வரும். இலக்கிய ஆர்வலர்களுக்குத் தமிழறிஞர் மு.வ நினைவுக்கு வருவார். அதுபோல் தமிழ்ப் பற்றாளர்களுக்கு வேலூர் என்ற உடன் நினைவுக்கு வரும்பெயர் வழக்கறிஞர் தெ.சமரசம் என்பதாகும்.

 திராவிட இயக்கப் பின்புலத்தில் வளர்ந்த வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு அமைதியாக உதவி வருபவர். முல்லைச்சரம், கண்ணியம், மூவேந்தர் முழக்கம் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவர் இயற்றியப் பயண இலக்கிய நூல்கள் பற்றி முன்பே ஓர் ஆய்வரங்கில் கட்டுரை படித்துள்ளேன். இருபதாம் நூற்றாண்டில் பயண இலக்கிய நூல்களுக்குத் தனிச் சிறப்பை ஏற்படுத்தித் தந்தவர். இவர் இலங்கை, மலேசியா, நியூசிலாந்து, அந்தமான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் செய்தமையைப் படிப்பவர் உள்ளம் மகிழ்ச்சியடையத்தக்க வகையில் தனித்தனி நூல்களாக எழுதியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.

 வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள் கடந்த காரிக்கிழமை(24.11.2012) புதுச்சேரிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். உடன் அவரைப் பார்ப்பதற்குத் திட்டமிட்டேன். பெரும்பாலும் எனக்குக் காரி, ஞாயிறுகளில்தான் அதிக வேலை இருக்கும். ஆய்வுப் பணிகளில் ஈடுபடவும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் விடுமுறை நாள் உதவியாக இருக்கும். ஐயாவின் வருகை எனக்குத் தேனாக இனித்தது. அம்மாவும் உடன் வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். காலை 11 மணிக்கு வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பு.

 பலவாண்டுகளுக்கு முன் வேலூர் சென்று ஐயாவையும் மருத்துவர் அம்மாவையும் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். அம்மாவுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவித்தேன். அவர்கள் தமிழில் தட்டச்சிடவும், செய்திகளைத் தேடிப் படிக்கவும் நான் வழங்கிய குறிப்புகள் உதவியதாக அம்மா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள். எவ்வளவு எடுத்துரைத்தும் ஐயாவுக்கு இணையம் தொடர்புஇல்லாமல் உள்ளதை ஒப்புக்கொண்டார்.

 எங்கள் பேச்சு பயண இலக்கிய நூல்கள் பற்றி நகர்ந்தது. அடுத்து மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான டத்தோ சுப்பிரமணியன் அவர்களைப் பற்றியும் அவர்களின் அருமைத்துணைவியார் டத்தின் தாமரைச்செல்வி அவர்களைப் பற்றியும் உரையாடினோம். இருவரும் கண் அறுவை மருத்துவத்திற்காகத் தமிழகம் வந்துள்ளதாக அறிந்தேன். அடுத்த கிழமை அவர்களைச் சந்திக்கவும் முன்னேற்பாடு செய்தோம்.

 வேலூரில் நடைபெறும் பல்வேறு தமிழ்ப்பணிகளைப் பற்றியும், குடியாத்தம் புலவர் வே. பதுமனார் பற்றியும் வி.ஐ.டி. பல்கலையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவது பற்றியும் உரையாடினோம்.

 அடுத்து எங்கள் பேச்சு தெ.சமரசம் ஐயா அவர்களின் திருமகனார் மருத்துவர் ச. இனியன் அவர்களைப் பற்றி அமைந்தது. மருத்துவர் இனியன் தமிழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து உயர் படிப்பை ஆத்திரேலியாவில் பயின்றவர். முன்பே நூல்கள் வழியாக மருத்துவர் ச. இனியன் பற்றி அறிவேன். இன்று புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு உரையாற்ற வந்துள்ளதாக அறிந்தேன்.

 மருத்துவர் ச.இனியன் அவர்கள் சிறப்புரை முடித்து இரண்டு மணியளவில் அறைக்குத் திரும்பினார். மருத்துவர் இனியன் அவர்கள் இப்பொழுது வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவர் குடல் (முன்குடல்) மருத்துவத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். அவர் கற்ற கல்விக்குப் பல்லாயிரம் டாலர் ஊதியம் பெறலாம். ஆனால் தாயக மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் தமிழகம் வந்துள்ளார் என்று அறிந்து வியந்துபோனேன்.


வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்


மருத்துவர் ச.இனியன் அவர்கள் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும் இயல்பறிந்து வியந்துபோனேன். மருத்துவர் ச. இனியனின் இயல்பறிந்தபோது நான் இதுவரை பார்த்த ஒவ்வொரு மருத்துவரும் என் நினைவில் நிழலாடினர். மருத்துவர் ச.இனியனுடன் சிறிது நேரம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் வேலூரில் ஆறுமணிக்கு இருக்க வேண்டும் என்று புறப்பட்டனர்.

நான் அடுத்த நிகழ்வுக்கு - மணற்கேணி அமைப்பின் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குச் செல்லப் புறப்பட்டேன். வழியில் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிசன்வீதி கடந்து, செட்டித் தெருவில் உள்ள ரெட்டியார் உணவகத்தை நோக்கிச் சென்றேன். இடையில் ஒரு இனிய காட்சி: கடலாய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் ஒரு மரத்தடியில் சிறிய மாநாடு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்


வழக்கறிஞர் தெ.சமரசம்

நான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.

நான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன்.அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.

அதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன்.இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி,அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்கவேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.

தெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.

தொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச்செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

சட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.

தெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.

மகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.

எழுத்துச்செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச்செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி,மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.

மனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

தமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.