நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
வழக்கறிஞர் தெ.சமரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்கறிஞர் தெ.சமரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 நவம்பர், 2012

வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களுடன் புதுவையில் சந்திப்பு...



மருத்துவர் பத்மா சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன் 

 வேலூர் என்றவுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கு அங்குள்ள கோட்டை நினைவுக்கு வரும். அரசியல்காரர்களுக்கு அங்குள்ள சிறை நினைவுக்கு வரும். திராவிட இயக்க உணர்வாளர்களுக்குத் தந்தை பெரியார் மறைந்தமை நினைவுக்கு வரும். இலக்கிய ஆர்வலர்களுக்குத் தமிழறிஞர் மு.வ நினைவுக்கு வருவார். அதுபோல் தமிழ்ப் பற்றாளர்களுக்கு வேலூர் என்ற உடன் நினைவுக்கு வரும்பெயர் வழக்கறிஞர் தெ.சமரசம் என்பதாகும்.

 திராவிட இயக்கப் பின்புலத்தில் வளர்ந்த வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு அமைதியாக உதவி வருபவர். முல்லைச்சரம், கண்ணியம், மூவேந்தர் முழக்கம் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவர் இயற்றியப் பயண இலக்கிய நூல்கள் பற்றி முன்பே ஓர் ஆய்வரங்கில் கட்டுரை படித்துள்ளேன். இருபதாம் நூற்றாண்டில் பயண இலக்கிய நூல்களுக்குத் தனிச் சிறப்பை ஏற்படுத்தித் தந்தவர். இவர் இலங்கை, மலேசியா, நியூசிலாந்து, அந்தமான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் செய்தமையைப் படிப்பவர் உள்ளம் மகிழ்ச்சியடையத்தக்க வகையில் தனித்தனி நூல்களாக எழுதியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.

 வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள் கடந்த காரிக்கிழமை(24.11.2012) புதுச்சேரிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். உடன் அவரைப் பார்ப்பதற்குத் திட்டமிட்டேன். பெரும்பாலும் எனக்குக் காரி, ஞாயிறுகளில்தான் அதிக வேலை இருக்கும். ஆய்வுப் பணிகளில் ஈடுபடவும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் விடுமுறை நாள் உதவியாக இருக்கும். ஐயாவின் வருகை எனக்குத் தேனாக இனித்தது. அம்மாவும் உடன் வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். காலை 11 மணிக்கு வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பு.

 பலவாண்டுகளுக்கு முன் வேலூர் சென்று ஐயாவையும் மருத்துவர் அம்மாவையும் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். அம்மாவுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவித்தேன். அவர்கள் தமிழில் தட்டச்சிடவும், செய்திகளைத் தேடிப் படிக்கவும் நான் வழங்கிய குறிப்புகள் உதவியதாக அம்மா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள். எவ்வளவு எடுத்துரைத்தும் ஐயாவுக்கு இணையம் தொடர்புஇல்லாமல் உள்ளதை ஒப்புக்கொண்டார்.

 எங்கள் பேச்சு பயண இலக்கிய நூல்கள் பற்றி நகர்ந்தது. அடுத்து மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான டத்தோ சுப்பிரமணியன் அவர்களைப் பற்றியும் அவர்களின் அருமைத்துணைவியார் டத்தின் தாமரைச்செல்வி அவர்களைப் பற்றியும் உரையாடினோம். இருவரும் கண் அறுவை மருத்துவத்திற்காகத் தமிழகம் வந்துள்ளதாக அறிந்தேன். அடுத்த கிழமை அவர்களைச் சந்திக்கவும் முன்னேற்பாடு செய்தோம்.

 வேலூரில் நடைபெறும் பல்வேறு தமிழ்ப்பணிகளைப் பற்றியும், குடியாத்தம் புலவர் வே. பதுமனார் பற்றியும் வி.ஐ.டி. பல்கலையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவது பற்றியும் உரையாடினோம்.

 அடுத்து எங்கள் பேச்சு தெ.சமரசம் ஐயா அவர்களின் திருமகனார் மருத்துவர் ச. இனியன் அவர்களைப் பற்றி அமைந்தது. மருத்துவர் இனியன் தமிழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து உயர் படிப்பை ஆத்திரேலியாவில் பயின்றவர். முன்பே நூல்கள் வழியாக மருத்துவர் ச. இனியன் பற்றி அறிவேன். இன்று புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு உரையாற்ற வந்துள்ளதாக அறிந்தேன்.

 மருத்துவர் ச.இனியன் அவர்கள் சிறப்புரை முடித்து இரண்டு மணியளவில் அறைக்குத் திரும்பினார். மருத்துவர் இனியன் அவர்கள் இப்பொழுது வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவர் குடல் (முன்குடல்) மருத்துவத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். அவர் கற்ற கல்விக்குப் பல்லாயிரம் டாலர் ஊதியம் பெறலாம். ஆனால் தாயக மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் தமிழகம் வந்துள்ளார் என்று அறிந்து வியந்துபோனேன்.


வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்


மருத்துவர் ச.இனியன் அவர்கள் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும் இயல்பறிந்து வியந்துபோனேன். மருத்துவர் ச. இனியனின் இயல்பறிந்தபோது நான் இதுவரை பார்த்த ஒவ்வொரு மருத்துவரும் என் நினைவில் நிழலாடினர். மருத்துவர் ச.இனியனுடன் சிறிது நேரம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் வேலூரில் ஆறுமணிக்கு இருக்க வேண்டும் என்று புறப்பட்டனர்.

நான் அடுத்த நிகழ்வுக்கு - மணற்கேணி அமைப்பின் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குச் செல்லப் புறப்பட்டேன். வழியில் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிசன்வீதி கடந்து, செட்டித் தெருவில் உள்ள ரெட்டியார் உணவகத்தை நோக்கிச் சென்றேன். இடையில் ஒரு இனிய காட்சி: கடலாய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் ஒரு மரத்தடியில் சிறிய மாநாடு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்


வழக்கறிஞர் தெ.சமரசம்

நான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.

நான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன்.அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.

அதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன்.இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி,அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்கவேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.

தெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.

தொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச்செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

சட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.

தெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.

மகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.

எழுத்துச்செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச்செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி,மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.

மனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

தமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.