நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மக்கள் தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 அக்டோபர், 2017

மக்கள் தொலைக்காட்சியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு!



விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் ஆற்றிய உரையின் முதன்மைப்பகுதிகளும், ஆவணப்படத்தின் முதன்மைக் காட்சிகளும் 14.10.2017 சனிக்கிழமை (இந்திய நேரம்) காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்க்க இயலும். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவித்துப் பார்க்கச் செய்யுங்கள்.

முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகளை நம் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டுவோம்!

இணையமுகவரி:


சனி, 21 பிப்ரவரி, 2009

மக்கள் தொலைக்காட்சியில் மானம்பாடிகள் நிகழ்ச்சியில் வை.கோ.பேச்சு

மக்கள் தொலைக்காட்சியில் இன்று 21.02.2009காரி(சனிக்)கிழமை இரவு ஒன்பதுமணி முதல் பத்துமணி வரை "மானம்பாடிகள்" என்ற தலைப்பில் திரு.வை.கோ.அவர்கள் அரியதொரு சொற்போர் நிகழ்த்தினார்.

காலம்,இடம்,நேரம் உணர்ந்து பேசப்பட்ட அரிய பேச்சு.திரு.வை.கோ.அவர்கள் தமிழ் இலக்கியங்களில் நல்ல பயற்சியுடையவர் என்பதை அவரின் அரசியல் எதிரிகள்கூட ஒத்துக் கொள்வார்கள்.அதுபோல் உலக அரசியல்,இலக்கியங்களில் தோய்ந்த அறிவுடையவர் என்பதும் அவரின் அறிவாற்றல் உணர்ந்தவர்களுக்கு விளங்கும்.

இன்றைய பேச்சில் மான உணர்வுக்கு முதன்மையளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சங்க இலக்கியத்தின் புறநானூறு(சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடல்), சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,திருக்குறள், இவற்றை மேற்கோள் காட்டிப் பேசியது எம்மை வியப்பில் ஆழ்த்தியது.தமிழ்ப்பேராசிரியர்கள் செய்யவேண்டிய வேலையை வை.கோ அவர்கள் செய்தமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்.தமிழர்களின் மான உணர்வை நினைவூட்டி,தமிழர்கள் மான உணர்வுக்கு முதன்மையளிப்பவர்கள் என்றும் பழிச்சொல்லுக்கு இடம்தராதவர்கள் என்றும் அரிய மேற்கோள்களைக் காட்டிப் பேசினார்.

இந்திய விடுதலைக்கு உழைத்த சந்திரசேகர ஆசாத்,பகத்சிங்,சுகதேவ்,இராசகுரு, நேதாசி, வீரபாண்டிய கட்டப்பொம்மன்,பூலித்தேவன்,மருதுசகோதரர்கள் செய்த ஈகங்களை நினைவூட்டிப் பேசியமை மகிழ்ச்சி தந்தது.

இலியட் முதலான மேனாட்டுக் காப்பியங்கையும் பொருத்தமுற மேற்கோள் காட்டினார்.

கியூபா விடுதலைக்கு உழைத்த மாவீரன் சேகுவேரா பற்றியும் அரிய தகவல்கள் தந்தார். நிறைவாகக் கம்பராமாயணத்தை எடுத்து அதில் இடம்பெறும் இராமன் இராவணப் போர்க்காட்சிகளை விளக்கும்பொழுது அவரின் கம்பராமாயண அறிவு புலப்பட்டது.

இன்றைய நாட்டு நடப்புகளை நயம்படக்காட்ட வீடணன்,கும்பகர்ணன்,இராவணன் பாத்திரங்களை மிகச்சரியாக எடுத்துரைத்துப் பேசினார்.அரிய இலக்கியப் பாடம் படித்த பட்டறிவு எனக்கு உண்டானது.இப்பேச்சைப் படியெடுத்து மக்களுக்கு வழங்கினால் நல்ல இலக்கிய உணர்வுபெறுவர்.

நேரத்தைக் கொல்லும் பட்டிமன்ற அரட்டைகளிலும்,மாமியார் மருமகள் அழுகைகளிலும் மானாக மயிலாக ஆடும் வாலைக்குமரிகளின் பாலியல் குத்தாட்டங்களிலும் சிக்கிச் சிதறும் தமிழினத்திற்கு இந்த உரை ஓர் அருமருந்து.

சனி, 10 ஜனவரி, 2009

மக்கள் தொலைக்காட்சியின் மக்கள் விருது 2008 சிறந்த தமிழ் சாதனையாளர்களுக்கு ஒரு மணிமுடி...


மக்கள் தொலைக்காட்சி அழைப்பிதழ்

மறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார்,வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்ட தனித்தமிழறிஞர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் கண்ட கனவு இன்று
நனவாகி வருகின்றமைக்கு மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்.ஆம்.தமிழும் தமிழர்களின் பண்பாடும் மீட்கப்படவேண்டும் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளப்படுத்தி வாழ்ந்து காட்டியவர்கள் அப்பெருமக்கள்.அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சி என்னும் தகவல் தொழில்நுட்ப ஊடகம் பல்வேறு தமிழ் மீட்பு முயற்சிகளைச் செய்து வருகின்றமையைத் தமிழ் உணர்வாளர்கள் வாயாரப் புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துகின்றனர்.

கடல்கடந்த தமிழர்கள் ஆர்வத்துடன் பேசும் பொருளாக மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதை அயலகத் தமிழறிஞர்களை யான் சந்திக்கும் பொழுதிலும் இணையம் வழி உரையாடும்பொழுதும் அறிகிறேன்.

தமிழகத்தின் வேர்மூலம் தேடி மீட்கும் பண்பாட்டு மீட்சியை ஈழத் தமிழர்களும் சிங்கை, மலையகம் உள்ளிட்ட அயலகத் தமிழர்களும் அடிக்கடி குறிப்பிடுகின்றனர். சந்தனக்காடு, ஈழம்,தமிழ்ப்பண்ணை,சொல்விளையாட்டு,மண்மணம்,பட்டாம்பூச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.செய்திகளும் சார்பற்றுத் தரமுடன் தரப்படுகின்றன.பொங்கல் உள்ளிட்ட தமிழர் திருவிழாக்கள் சிறப்புடன் அடையாளப்படுத்தப்படுகின்றன.

அறியப்படாமல் இருந்த தமிழகத்தை நிகழ்ச்சிகளால் வெளிச்சமிட்டுக் காட்டிய மக்கள் தொலைக்காட்சி அண்மையில் ஓர் அறிவிப்பைச் செய்தது.மக்கள்விருது 2008 என்னும் பெயரில் தமிழகத்தில் தமிழ்ப்பணி செய்த 31 துறை சார்ந்த அறிஞர் பெருமக்களை இனங்கண்டு விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளமையே அந்த அறிவிப்புச் செய்தி.

அவ்வகையில் நாளிதழ்,வார இதழ்,சிற்றிதழ்,எழுத்தாளர்,தமிழ்ப்பணி,தமிழரல்லா தமிழ்ப் பணியாளர்,கல்வியாளர்,பள்ளி,கல்லூரி,இசை அறிஞர், நாடகம்,நாடகவியலாளர், திரைப்படம்,குறும்படம்,ஆவணப்படம்,ஓவியர்,சிற்பி,பதிப்பகம்,விவசாயி,அறிவியலாளர்,
இளம் விஞ்ஞானி,வணிகவியலாளர்,மருத்துவர்,சுற்றுச்சூழலியாளர்,சுய உதவிக்குழு, முன்மாதிரி கிராமம்,விளையாட்டு வீரர்,மாற்றுத்திறனாளர்,மழலை மேதை,மக்கள்
பணியாளர்,சிறந்த குடிமகன் என்னும் தலைப்புகளில் விருதுக்குரியவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வாழும் காலத்தில் இதுபோல் சாதனையாளர்களைப் பாராட்டவேண்டியது சமூக முன்னேற்றத்தில் அக்கறையுடையவர்களின் கடமையாகும் அச்சமூகக் கடமையைச்
செய்யும் மக்கள் தொலைக்காட்சியைப் பாராட்டி மகிழவேண்டும்.

விருது வழங்கும் நிகழ்ச்சி நிரல்.

நாள் : 12.01.2009,நேரம் மாலை 6 மணி
இடம் : செட்டிநாடு வித்தியாசரமம் பள்ளி அரங்கம்,இராசா அண்ணாமலைபுரம்,சென்னை

மாலை 6 மணி கலைநிகழ்ச்சிகள்

6.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்து

6.35 வரவேற்பு: திரு.கோமல் அன்பரசன்(முதன்மைச் செய்தி ஆசிரியர்-மக்கள் தொலைக்காட்சி)

6.40.மக்கள் விருது ஏன்? மருத்துவர் அய்யா - படக்காட்சி

6.45 விருது வழங்கிச் சிறப்பித்தல்: மருத்துவர் அன்புமணி இராமதாசு(நடுவண் அமைச்சர்)

இரவு 8.35 சிறப்புரை: மருத்துவர் ச.இராமதாசு(நிறுவுநர்,மக்கள் தொலைக்காட்சி)

8.55.நன்றியுரை: திரு.கார்மல்(மக்கள் தொலைக்காட்சி)

வியாழன், 17 ஜூலை, 2008

சந்தனக்காடு வெற்றிவிழாப் படங்கள்...

 சந்தனக்காடு என்னும் பெயரில் வீரப்பன் வாழ்க்கையும் அதிரடிப்படையினரின் செயல்பாடுகளும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகத் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இத்தொடர் 171 நாள் வெற்றியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் வெற்றிவிழா சென்னை இராயப்பேட்டை மியூசிக் அகாதெமியில் 16.07.2008 மாலை தொடங்கியது.

 திருமானூர் குமார் குழுவினரின் தப்பாட்டத்துடன் விழா தொடங்கியது. அடுத்து சந்தனக்காடு தொடரில் இடம்பெறும் பாடலைத் தாய்த்தமிழ்ப் பள்ளி மழலையர்கள் பாடி மகிழ்ச்சியூட்டினர்.

 மக்கள் தொலைக்காட்சியைச் சார்ந்த திரு.கார்மல் அனைவரையும் வரவேற்றார்.

 சந்தனக்காடு உருவான கதை திரையிடப்பட்டது. இயக்குநர் மகேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். திரைத்துறையைச் சேர்ந்த கலைப்புலி தாணு, சீமான், பாலு மகேந்திரா, திருச்செல்வம், சமுத்திரக்கனி, பாலாசி சக்திவேல், ஓவியர் வீரசந்தனம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், காசி ஆனந்தன், கண்மணி குணசேகரன், இராசேந்திர சோழன், புட்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி நிறைவுப் பேருரையாற்றினார். தயாரிப்பாளர் உலகரட்சகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 கவிஞர் செயபாசுகரன், முனைவர் திருப்பூர் கிருட்டிணன், கி.த.பச்சையப்பன், திரு. கிருட்டிணசாமி, அனிதா குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.



மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் நிறைவுரை


தாய்த் தமிழ்ப்பள்ளி மழலைகள் பாடலிசைத்தல்


பறையாட்டம்


புட்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி


கராத்தே இராசா பரிசுபெறல்


சீமான் உரை


திருச்செல்வம் உரை


பாலு மகேந்திரா உரை


பாலாசி சக்திவேல் உரை


நடிகை தீபிகாவுக்குப் பாராட்டு


இயக்குநர் வ.கெளதமன் சிறப்பிக்கப்படுதல்


இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்குப் பரிசளிப்பு


முனைவர் திருப்பூர் கிருட்டிணன், செயபாசுகரன், வீரசந்தனம்