நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
விபுலாநந்த அடிகளார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபுலாநந்த அடிகளார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

சிட்னியில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலைத் திறப்பு…

  

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி (29.03.2024)
குணரத்தினம் ஐயா, மனோ அம்மா, பேராசிரியர் பாலசுந்தரம், சந்திரிகா சுப்பிரமணியம், அனகன் பாபு, மன்னர் மன்னன், மு.இளங்கோவன்

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி

  ஆத்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டும் என்று அங்கு வாழும் உதயசூரியன் இதழாசிரியர் திரு. குணரத்தினம் அவர்கள் பலவாண்டுகளாக முயற்சி செய்துவந்தார்கள். 2019 ஏப்ரல் திங்களில் நான் முதல் முறையாக ஆத்திரேலியா சென்றபொழுதும் என்னிடம் நேரில் நினைவூட்டினார்கள். அன்று முதல்  ஒற்றை மாந்தராகக் கடுமையாக உழைத்து, ஒரு சிலையை நிறுவுவதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து, நிறைவாகச் சிலையைத் திறப்பதற்கு நாளும், நேரமும் குறித்தார்கள். சிலைத்திறப்பின் பொழுது அடிகளாரின் பெருமைகளை நினைவுகூரும் கட்டுரைகள், வாழ்த்துச் செய்திகளைத் திரட்டி, நினைவு மலர் ஒன்று வெளியிடவும் முனைந்தார்கள். 

விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு நிகழ்வில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டும் என்ற வகையில் பலரையும் மகிழ்ச்சியுடன் விழாக்குழுவினர் அழைத்தார்கள். அவ்வகையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை உருவாக்கி, அடிகளாரின் பெருமைகளை உலக அரங்கில் அனைவரும் மீண்டும் நினைவுகூர்வதற்கு வழியேற்படுத்திய நானும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி, திருவாளர் குணரத்தினம் ஐயா  அவர்களும் அவர்களின் துணைவியார் மனோ அம்மா அவர்களும் எனக்கும் அன்பு அழைப்பு விடுத்தார்கள்.  கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும் பணிச்சுமையும், முன்பே ஏற்றுக்கொண்ட சில பணிகளும், குடும்பப் பொறுப்புகளும் மனத்துக்குள் தயக்கத்தை ஏற்படுத்தின. இருப்பினும் திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் அன்பும் அம்மா அவர்கள் என் மீது காட்டும் பாசமும் ஆத்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை எனக்குத் தந்தன. 

அந்த நாட்டிற்குச் செல்வதற்கு நுழைவுச் சீட்டு எடுக்கும் பணியில் முனைந்தபொழுது என் கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் நலம் என்று பயண முகவர் குறிப்பிட்டார். உடன் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். இரண்டு கிழமையில் கடவுச்சீட்டின் புதுப்பித்தல் பணி முடிந்தது. பின்னர் நுழைவுச்சீட்டினைப் (விசா) பெறுவதற்குரிய ஆவணங்களைத் திரட்டி, அதனையும் குறிப்பிட்ட நாளுக்குள் பெற்றேன். இவை யாவும் முடிவதற்குள் விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. இறுதி நேரத்தில் பயணத்தை உறுதிப்படுத்தியதால் வானூர்திச் சீட்டு விலை அதிகமாக இருந்தது. எனினும் ஆத்திரேலியா நாட்டிற்குச் செல்வதையும் அடிகளார் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதையும் மகிழ்ச்சியான தமிழ்க் கடமையாக ஏற்றுக்கொண்டு, புறப்பட்டேன். 

ஆயிடை, 

சிட்னியில் 29.03.2024 இல் நடைபெறும் விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு விழாவில் கனடா நாட்டிலிருந்து பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களும், அவர்களின் துணைவியாரும், மலேசியாவிலிருந்து ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும், இலங்கையிலிருந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்துப் பொறுப்பாளர்களும், மெல்பர்ன் நகரத்திலிருந்து எழுத்தாளர் செயராம சர்மா, பொறியாளர் நடேசன் சுந்தரேசன், வழக்கறிஞர் “பாடும்மீன்” சிறீ கந்தராசா உள்ளிட்ட தமிழ் அன்பர்களும் கலந்துகொள்ள உள்ளதை அறிய முடிந்தது. அனைவரும் முதல் நாளே சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். 

29.03.2024 மாலை 5 மணிக்கு, சிட்னி, துர்க்கையம்மன் கோவிலின் அரங்கத்தில் விழாவில் கலந்துகொள்ளும் நோக்கில் விபுலாநந்த அடிகளார் மீது அன்புகொண்டிருந்த தமிழன்பர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். எழுத்தாளர் மாத்தளை சோமு ஐயா, வழக்கறிஞர்  மாறன் நந்தன் சிதம்பரம், வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன், தொழிலதிபர் அனகன் பாபு, “இன்பத் தமிழ் ஒலி” பிரபாகரன் பாலசிங்கம், “தாயகம் ஒலிபரப்புச் சேவை” பாலா விக்னேஸ்வரன், ஒளி ஓவியர் இலாவண்யன், கண்ணன் உள்ளிட்ட நண்பர்களை அரங்கில் கண்டு உரையாடியமை மகிழ்ச்சியளித்தது. அரங்கத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விபுலாநந்த அடிகளாரின் சிலை, அறிஞர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மலர்தூவி அனைவரும் அடிகளார் படிமத்தை வணங்கினோம். பின்னர் அரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்வில் அடிகளாரின் பெருமைகளை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களாகிய நாங்கள் அரங்கில் இருந்த ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தோம். விழா மலரும், நினைவு விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டன. 

இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ் நூல் உருவாக்கியமையாலும், சிவாநந்த வித்தியாலயம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைத் தோற்றுவித்ததாலும், இராமகிருஷ்ண மடத்தின் துறவியாக இருந்து, சமயப்பணிகள் பல ஆற்றியதாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, அளப்பரிய தமிழ்த்தொண்டாற்றியதாலும் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைபெற்று வாழ்வார். அடிகளாரின் சிலையைச் சிட்னியில் நிலைபெறச் செய்தமையால் திரு. குணரத்தினம் அவர்களும் நீடுபுகழ் பெற்று, நெடுவாழ்வு வாழ்வார் என்பதில் ஐயமில்லை.


குணரத்தினம்  அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்


விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி


மாத்தளை சோமு, ந. சுந்தரேசன், மு.இளங்கோவன், இலாவண்யன்








ஒளி ஓவியர் கண்ணன், மு.இளங்கோவன்



 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!


துணைவேந்தர் வே. முருகேசன்(நடுவில்), பதிவாளர் என் கிருஷ்ணமோகன், புலமுதன்மையர் க.முத்துராமன், மு.இளங்கோவன்,  நா. கிரிஷ்குமார்

ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் புலமுதன்மையர் க. முத்துராமன், அருகில் பேராசிரியர்கள் தி. பாலச்சந்திரன், நா.கிரிஷ்குமார், ஆர்.கே.குமார், தி. அருட்செல்வி

          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை சார்பில் யாழ் நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும், தமிழிசைப் பணியையும் விளக்கும் ஆவணப்படம், லிப்ரா அரங்கில்  12.09.2019 அன்று வெளியிடப்பட்டது.


     அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் வே. முருகேசன்     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, பதிவாளர் முனைவர் என். கிருஷ்ணமோகன் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமேயேற்ற துணைவேந்தர் வே. முருகேசன் பின்வருமாறு உரைநிகழ்த்தினார். அண்ணாமலை அரசரின் அழைப்பின்பேரில் 1931 முதல் 1933 வரை விபுலாநந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இசைத்துறைப் பேராசிரியர்களுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது விவேகானந்தரின் ஞானதீபம், கர்மயோகம், இராசயோகம், பதஞ்சலி யோகசூத்திரம் முதலான நூல்களை மொழி பெயர்த்தவர். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர். பாரதியாரின் கவிதையாற்றலை முதன்முதல் அடையாளம் கண்டு போற்றியவர் விபுலாநந்த அடிகளார். நேர்மையும், கடமையுணர்வும் நிறைந்த விபுலாநந்த அடிகளார் மாலைநேரத்தில் அருகில் உள்ள திருவேட்களம் பகுதியில் சமூகப்பணி புரிந்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது என்று விபுலாநந்தரின் அண்ணாமலை நகர் வாழ்க்கையை அறிமுகம் செய்தார்.

     நுண்கலைப்புல  முதன்மையர் முனைவர் . முத்துராமன் வாழ்த்துரை வழங்கினார்.

  நிகழ்வில் பேராசிரியர் நா. கிரிஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.கே. குமார் முன்னிலையுரை வழங்கினார். பேராசிரியர் தி. அருட்செல்வி அறிமுகவுரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநரும் புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியருமான முனைவர். மு.இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கிய  தம்  அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பேராசிரியர் தி. பாலச்சந்தர் நன்றியுரை வழங்கினார்

நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக விபுலாநந்த அடிகளார்  ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழிசை ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்இந்த நிகழ்ச்சியை இசைத்துறைப் பேராசிரியர்கள் முனைவர். நா. கிரீஷ்குமார், தி. பாலச்சந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
விபுலாநந்த அடிகளார் படத்துக்கு மலர் வணக்கம்

இசைப்பேராசிரியர்களும் மாணவர்களும்

புலமுதன்மையர் க. முத்துராமன் வாழ்த்துரை

முனைவர் நா. கிரிஷ்குமார் வரவேற்புரை


இசைத்துறைத் தலைவர் ஆர். கே.குமார் வாழ்த்துரை

மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து

திங்கள், 21 மே, 2018

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு!






நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத் தெரு,
புதுப்பாளையம், கடலூர்

மொழி வாழ்த்து: புலவர் மு. நாகப்பன்

தலைமை: புலவர் சந்தான சுகிர்தராசு

வரவேற்புரை: வாழ்நாள் வழிகாட்டி அரங்க. இரகு

முன்னிலை: பேராசிரியர் இராச. குழந்தைவேலனார்
           சிந்தனையாளர் நம். கார்மேகவண்ணன்

பாராட்டு அரங்கம்:
திராவிடத் தொண்டர் திரு. மாதவன் அறுபது அகவை நிறைவுப் பாராட்டு

பாராட்டுரை: கவிஞர் .எழிலேந்தி
கவிஞர் இராச. சொக்கநாதன்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுகவுரை
முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட ஒளிவட்டினைப் பெற்று வாழ்த்துரை: பாவலர் சு. சண்முகசுந்தரம்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு

கருத்துரை: பங்கேற்பாளர்கள்

நன்றியுரை சாது. சாஇராசதுரை

அனைவரும் வருக!

சனி, 17 பிப்ரவரி, 2018

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் சப்பான் நாட்டில் வெளியீடு!



விபுலநாந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடுகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் 
கா. பாலமுருகன். முதல்படி பெறுகின்றார் டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா. அருகில் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள்.

     சப்பான் நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்குப் பொறியாளர்களும், மேலாண்மை பயின்றவர்களும் சென்றுள்ளனர். அவ்வாறு சென்று  சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்த ஆண்டு டோக்கியோ மாநகரில் அமைந்துள்ள கொமாட்சுகவா சகுரா அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினர் (03.02.2018). ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பத்தார் கலந்துகொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

     அண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்கறிஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, உரையாற்றினர்.

      சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. முதல் படியைச் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.

     தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின்  சப்பானியக் கிளை இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவரும் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதினைச் சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கிப் பாராட்டியது.

     சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

சப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழுவினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கியமை அனைவரையும் வியப்படைய வைத்தது.

     பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையுறைப் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் மு.இளங்கோவன்


உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சப்பானியக் கிளை உறுப்பினர்கள்

மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதை வழங்குகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா. பாலமுருகன். அருகில் சப்பான் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு. கலைவாணன்.

திங்கள், 15 ஜனவரி, 2018

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு




முனைவர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, முனைவர் பா. ஜம்புலிங்கம் பெற்றுக்கொள்ளும் காட்சி


     தஞ்சாவூரை அடுத்துள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா 08.01.2018 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் இசைத்தமிழ் ஆய்வறிஞருமான முனைவர்  சண்முக. செல்வகணபதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிட்டு, விபுலாநந்த அடிகளாரின் தமிழிசைப் பணிகளையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கிப் பேசினார்.

     விபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து, வழக்கிழந்திருந்த யாழினை மீட்டுத் தந்த அருஞ்செயலைப் பாராட்டினார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தங்கி, யாழ்நூலை உருவாக்கினார் எனவும், எனவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் இந்த ஒளிவட்டு வெளியீடு காண்பது பொருத்தம் எனவும் குறிப்பிட்டார். யாழ்நூலில் இசைத்தமிழ் வரலாறு ஆராய்ச்சி முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனவும், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருமுறைகள், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட தமிழ் நூல்களில் இருந்த இசைத்தமிழ்க் குறிப்புகளை அடியொட்டி, அடிகளார் இந்த யாழ்நூலை உருவாக்கியுள்ளதால் தமிழிசை உலகம் விபுலாநந்த அடிகளாருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது என்று தம் உரையில் முனைவர் செல்வகணபதி குறிப்பிட்டார்.


     பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னை உதவிப் பதிவாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், திருவையாறு தங்க. கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் கரந்தை. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். கரந்தை உமா மகேசுவரனார் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வெ. சரவணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியின் செயலர் புலவர் இரா. கலியபெருமாள், புலவர் ம. கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, தம் ஆவணப்பட அனுபவங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இசையறிஞர் சண்முக. செல்வகணபதியின் சிறப்புரை

ஆவணப்படத்தினை ஆர்வமுடன் காணும் ஆசிரியர்களும், தமிழார்வலர்களும்

செவ்வாய், 2 ஜனவரி, 2018

சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு


சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா பெற்றுக்கொள்ளும் காட்சி.

இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள ஆனந்தபவன் உணவக மாடியில் 31.12.2017 மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள கங்கைகொண்டான் கழகமும், கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கவிமாலை மா. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினைச் சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் வெளியிட,  சிங்கப்பூர் ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளைப் பொறியாளர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஆவணப்படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அறிமுகம் செய்தார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் படப்பிடிப்பு அனுபவங்களையும், ஆவணப்படத்தின் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிஞர் தியாக.இரமேஷ், கவிஞர் தங்க. வேல்முருகன், எழுத்தாளர் இலியாஸ், வழக்கறிஞர் கலாமோகன், பேராசிரியர் ஆ.இரா. சிவக்குமாரன், எழுத்தாளர் சங்கத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிஞர் சீர்காழி செல்வராசு உள்ளிட்ட படைப்பாளர்களும், பல்வேறு தமிழமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதிகமாகக் கலந்து கொண்டனர்.

ஆர். தினகரனிடம் இருந்து, முனைவர் சுப. திண்ணப்பன் ஒளிவட்டினைப் பெறும் காட்சி. அருகில் கவிமாலை மா. அன்பழகன், மு.இளங்கோவன், பொறியாளர் ப.புருஷோத்தமன்

மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் முகமது ஹனிபா

ஒளிவட்டினைப் பெற்றுக்கொள்ளும் 
வெட்டிக்காடு சோ.இரவிச்சந்திரன்

திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் அவர்கள் ஒளிவட்டினைப் பெறும் காட்சி

அரங்கு நிறைந்த அறிஞர் பெருமக்கள்

பார்வையாளர்களின் ஒருபகுதியினர்

ஆவணப்படத் திரையிடலை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் தமிழார்வலர்கள்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஒளிவட்டினைப் பெறும் தொடர்பு முகவரி:
0091 9442029053

படங்கள் உதவி: கவிஞர் தியாக.இரமேஷ்