நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பாவேந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவேந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 நவம்பர், 2016

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்!



தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவையொட்டிப் புதுச்சேரியில் தனித்தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வரங்கில் அறிஞர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நடைபெறும் ஆய்வரங்கில் புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு. வி. பி. சிவக்கொழுந்து அவர்களும் பொறியாளர் மு. பாலசுப்பிரமணியன் அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். ஆணையர் திரு. த. தியாகராசன் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும், முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்கள் பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

முனைவர் க. தமிழமல்லன் நன்றியுரை வழங்க உள்ளார்.

நாள்: 22.11.2016 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வேங்கட நகர், புதுச்சேரி-605 011

ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!


தொடர்புக்கு: 0091 97916 29979

திங்கள், 29 ஏப்ரல், 2013

கொள்கைப் பாவலர் தமிழேந்தியின் தமிழ் வாழ்க்கை…



கவிஞர் தமிழேந்தி அவர்கள்

சிந்தனையாளன் என்ற ஏட்டின் பின்னட்டையைப் படித்துவிட்டுதான் பலர் இதழைப் படிப்பார்கள். அந்த அளவு தமிழுணர்வு சார்ந்த, மக்கள் நலம் நாடும் பாட்டுக்களை வடித்துப் புகழ்பெற்றவர் கவிஞர் தமிழேந்தி. அரக்கோணத்தில் வாழ்ந்து வரும் கவிஞர் தமிழேந்தி அவர்கள் தனிப்பாடல்களும் கட்டுரைகளுமாக வரைந்தவர். அண்மையில் மூன்று நூல்களை வெளியிட்டு அனைவரின் எதிர்பார்பையும் நிறைவுசெய்துள்ளார். இந்த நூல்கள் வருமாறு: 1. தமிழேந்தி கவிதைகள் 2. திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே, 3. பன்முக நோக்கில் பாவேந்தர்.

கவிஞர் தமிழேந்தியின் பாடல்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை நினைவூட்டும் தரமுடையவை. இவர் பாவேந்தரின் நெறியில் நின்று வாழ்ந்து வருபவர். பகுத்தறிவு, மொழிப்பற்று, சமூக மேம்பாட்டுக்குப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படைத்து வருபவர். அன்னாரின் வாழ்க்கையையும் தமிழ்ப்பணிகளையும் இங்கு நினைவுகூர்கின்றேன்.

கவிஞர் தமிழேந்தி அவர்களின் இயற்பெயர் யுவராசன் என்பதாகும். 07.06.1950 இல் அரக்கோணத்தை அடுத்த மின்னல் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சுப்பிரமணி, வள்ளியம்மாள். பிறந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தவர். புகுமுக வகுப்பை மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரியில் நிறைவுசெய்தவர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்தவர்(1967-69). 1970 முதல் இடைநிலை ஆசிரியர் பணியாற்றியவர். தனித்தேர்வராகப் புலவர், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். 1992 முதல் தமிழாசிரியர் பணிபுரிந்தவர். முதுகலைத் தமிழாசிரியராக 2006 இல் பணி ஓய்வுபெற்றவர்.

சென்னை வானொலியில் 1972 முதல் இவர் எழுதிய இசைப்பாடல்கள் அரக்கோணம் சு. யுவராசன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் ஒலிபரப்பாகியுள்ளன.  நான்கு கவிதை நாடகங்களையும் வானொலிக்காக எழுதி வழங்கியுள்ளார்.

இவர்தம் கவிதையாற்றலைப் போற்றி 2000 ஆம் ஆண்டில் பாவேந்தர் மரபுப்பாவலர் விருதும், வேலூர்  உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாவேந்தர் விருதும் வழங்கிப் பாராட்டியுள்ளன. தமிழகத்தின் உயர்ந்த விருதுகளும் சிறப்பும் பெறத்தக்க இந்தப் பாவலரைத் தமிழ் அமைப்புகள் அழைத்துச் சிறப்புச் செய்யவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பும் பரிந்துரையும் ஆகும்.

1972 இல் இராணி என்னும் அம்மையாரை உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அருவி, கனிமொழி(இரசியா), பாவேந்தன் என்ற மூன்று மக்கள்செல்வங்கள். அனைவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தவர்.

சொல்லும் செயலும் ஒன்றென வாழ்ந்துவரும் கவிஞர் தமிழேந்தி அவர்கள் அறிஞர் ஆனைமுத்து அவர்களின் அரசியில் நிலைப்பாட்டை முன்னெடுத்து வருபவர். தந்தை பெரியார், பாவேந்தர் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்.




முகவரி:
கவிஞர் தமிழேந்தி அவர்கள்,
வள்ளுவர் இல்லம், 44 இராசாசி வீதி,
அரக்கோணம்- 631 001
கைப்பேசி: 94434 32069

சனி, 3 நவம்பர், 2012

பாவேந்தர் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன்(03.11.1928)


திரு.மன்னர்மன்னன்

 திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகம் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது(1991-92). 

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிருந்த நான் “பாவேந்தர் இன்றிருந்தால்...” என்ற தலைப்பில் கவிதை எழுதிப் பல்கலைக் கழக அளவில் முதல்பரிசு பெற்றேன். அப்பொழுது பல்கலைக் கழகத்திற்குப் பரிசு பெறச் சென்றபொழுது திரு. மன்னர் மன்னன் அவர்களை முதன்முதலாகக் கண்டேன். அரங்கில் இருந்த அனைவரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் முகவொற்றுமை மன்னர்மன்னன் ஐயாவுக்கு அப்படியே பொருந்தியிருப்பதைக் கண்டு வியப்பு மேலிட்டுப் பார்த்தனர். அவர்களுள் நானும் ஒருவன். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் திருக்கையால் அப்பொழுது பரிசிலும் சான்றும் பெற்றேன். 

 பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பைத் தேர்வுசெய்திருந்தேன். ஆய்வுக்காக ஒருமுறை திரு.மன்னர்மன்னன் அவர்களைக் கண்டு உரையாடித் தகவல் பெற்றுள்ளேன்(1993). படிப்புக்குப் பிறகு என் பணிநிலை வெவ்வேறு ஊர்களில் இருந்தது. 

 மீண்டும் புதுச்சேரியில் பாரதிதாசன் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகு அடிக்கடி திரு.மன்னர்மன்னன் ஐயா அவர்களை இலக்கியக் கூட்டங்களிலும் பாவேந்தர் பிறந்தநாள், நினைவுநாள் விழாக்களிலும் சந்தித்து வணங்கி உரையாடி மகிழ்வது உண்டு. திரு.மன்னர்மன்னன் ஐயாவுடன் உரையாடும் பொழுதெல்லாம் பாவேந்தர் படைப்புகள் குறித்தும், பாவேந்தரின் வாழ்க்கையைக் குறித்தும் பல செய்திகளைக் கேட்டு மகிழ்வேன்.

பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க கவிதைகளை வழங்கிய பெருமைக்குரிய பெரும்பாவலர் ஆவார். திராவிட இயக்க வரலாற்றிலும், தமிழ்த்தேசிய வரலாற்றிலும் பாவேந்தருக்குக் குறிப்பிடத்தக்க பெருமை உண்டு. தமிழ்ச்சிறப்பு, இந்தி எதிர்ப்பு, இயற்கையைப் பாடுவது, சமூகச் சீர்திருத்தம், பெண்கல்வி, பெண்ணுரிமை குறித்து இவர் பாடிய பாடல்கள் என்றும் நினைவுகூரும் தரத்தினை உடையவை.

அதனால்தான் பாவேந்தருக்குத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கடல் கடந்த நாடுகளிலும் அன்பர்கள் உண்டு. மலேசியாவில் வாழ்ந்த திரு மருதை என்னும் அன்பர் தம் மகனுக்குப் பாவேந்தர் நினைவாக மன்னர்மன்னன் (விரிவுரையாளர், மலேயா பல்கலைக் கழகம்) எனவும், இளந்தமிழ் எனவும் பெயரிட்டுள்ள பாங்கறிந்தால் பாவேந்தரின் கவிதை இந்த உலகம் முழுவதும் சிந்தனையைத் தூண்டியுள்ளது என்று அறியலாம். 

இத்தகு பெருமைக்குரிய பாவலர் தமிழகத்து மக்களனைவரையும் தம் குடும்பமாக எண்ணி வாழ்ந்தவர். தமிழகத்து இளைஞர்கள் பலர் பாவேந்தரைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்தனர். 

 இத்தகு பெருமைக்குரிய புரட்சிப் பாவலரின் மகனான திரு. மன்னர்மன்னன் ஐயா அவர்கள் பாவேந்தரைப் பற்றி எழுதிய “கறுப்புக் குயிலின் நெருப்புக்குரல்” என்னும் நூல் அரிய வரலாற்று நூலாகும். திரு.மன்னர்மன்னன் அவர்கள் வேறு தலைப்புகளிலும் பல நூல்களை எழுதித் தமிழ் உலகிற்கு வழங்கியவர். 

ஆய்வாளர்கள் பலரும் பாவேந்தர் ஆய்வுகளில் மாறுபட்டு நிற்கும்பொழுதெல்லாம் உரிய திருத்தங்களை வழங்குவதில் முன்னிற்பவர் திரு. மன்னர் மன்னன். பாவேந்தரின் வெளிவராத ஆக்கங்கள் பல வெளிவரவும் காரணமாக விளங்குபவர். பாவேந்தரின் குடும்பப் பொறுப்புகள், அச்சகம், பதிப்புப்பணி, இலக்கியப் பணிக்குத் தோன்றாத் துணையாக விளங்கியவர். திரு.மன்னர்மன்னன் அவர்கள் குடும்பப் பொறுப்புகளையும் அச்சகப் பணிகளையும், பதிப்புப் பணிகளையும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டதால் பாவேந்தரின் சிறந்த ஆக்கங்கள் தடையின்றி வெளிவந்தன. 

திரு.மன்னர் மன்னன் அவர்கள் இளம் அகவை முதல் தந்தையாரின் கொள்கைகளை ஊன்றிக் கவனித்ததால் பாவேந்தரின் கொள்கைகள் இவரிடமும் இயல்பாகப் பதிந்தன. பாவேந்தரின் இயல்புகள் பலவும் திரு. மன்னர் மன்னனிடம் படிந்தன. பல்வேறு நூல்களை எழுதியும் வானொலி வழியாக ஒலிவடிவில் பல புதுமையான நாடகங்களை வழங்கியும், இலக்கிய இதழ்கள் நடத்தியும், பதிப்புப்பணிகளில் ஈடுபட்டும், கவிதை நூல்கள் வரைந்தும் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றும் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்புகளையும், படங்களையும், நூல்கள் குறித்த விவரங்களையும் இங்குப் பதிந்து வைக்கின்றேன். 

 மன்னர்மன்னன் அவர்களின் இயற்பெயர் கோபதி ஆகும். இவர் பிறந்த நாள் 03.11.1928. தந்தையார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் (கனக.சுப்புரத்தினம்), தாயார் திருவாட்டி.பழநியம்மா. உடன்பிறந்தோர் சரசுவதி(அக்கா), வசந்தா, இரமணி. பிரெஞ்சுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 

 மன்னர்மன்னன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சாவித்திரி அம்மையார் ஆவார். இவர்களின் திருமணம் 1955 இல் முத்தமிழ் விழாவாக நடைபெற்றது. கோவை அய்யாமுத்து அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினார். மன்னர்மன்னன் சாவித்திரி வாழ்க்கை இணையருக்குச் செல்வம், தென்னவன், பாரதி என்ற ஆண்மக்களும், அமுதவல்லி என்ற மகளும் உண்டு. 

 மன்னர்மன்னன் அவர்கள் இளம் அகவையில் தமிழ் ஈடுபாட்டால் "முரசு" என்னும் கையெழுத்து ஏட்டை வெளியிட்டார். இவருடன் இந்த ஏடு உருவாக்குவதில் கவிஞர் தமிழ்ஒளியும் இணைந்து பணிபுரிந்தவர். அரசுக்கு எதிரான ஏடாக இது இருந்ததால் இருவரையும் பிரெஞ்சு அரசு குற்றம் சாற்றியது. மன்னர்மன்னுக்கு 14 அகவை என்பதால் தண்டனை இல்லை. தமிழ்ஒளியைத் தண்டித்தது. கோபதி என்ற இயற்பெயரில் குற்றம் சுமத்தப்பட்டதால் மன்னர்மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 

 1947 இல் அயலவர் ஆட்சி அகல வேண்டும் என்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாவேந்தரின் குயில் இதழ் தொடர்ந்து வெளிவருவதற்கும், பாரதிதாசன் பதிப்பகம், பழநியம்மா அச்சகம் சிறப்பாகச் செயல்படுவதற்கும் துணையாக இருந்தவர். மணிமொழி நூல்நிலையம், மிதிவண்டிநிலையம் நடத்திய பட்டறிவும் இவருக்கு உண்டு. 

 பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநிலக் கிளையை முதன்முதல் 1947 இல் தோற்றுவித்த நிறுவுநர்கள் ஐவரில் மன்னர்மன்னனும் ஒருவர். 1954 இல் இந்தியாவுடன் புதுவை மாநிலம் இணைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு, புதுவையிலிருந்து வெளியேறி விடுதலைக்குப்பின் தம் தந்தையாரின் கவிதைப் பணிக்குப் பாடுபட்டவர். 

 1964 இல் பாவேந்தரின் மறைவுக்குப் பின் தம் பொறுப்பில் வானம்பாடி, தமிழ்முரசு, வழிகாட்டி முதலிய இதழ்களை வெளியிட்டவர். பாரதிதாசன் குயில் என்ற இலக்கிய இதழ் இவரின் எழுத்துத் திறனுக்கும் தமிழுணர்வுக்கும் சான்றாகும்.

 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 45 நாள் சிறையில் இருந்தவர். 1968 இல் புதுவை வானொலியில் எழுத்தாளர் பணியில் இணைந்தார். பணியில் இணைந்த பிறகு தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான நாடகங்களைப் புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒலிபரப்பும் முயற்சியில் உழைத்தவர். சிறந்த கலைஞர்களையும் அறிஞர்களையும் அழைத்து மிகுதியான வாய்ப்புகளை வழங்கியவர். 

 பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கையைக் கலங்கரை விளக்காகக் காட்டும் கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நூலினை இருபதாண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதி வெளியிட்டவர். மன்னர்மன்னனின் சிறுகதைகள் “நெஞ்சக் கதவுகள்” என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இது தமிழக அரசின் இரண்டாம் பரிசைப் பெற்ற பெருமைக்குரிய நூலாகும்.

 பாவேந்தரின் இலக்கியப் பாங்கு என்னும் நூல் புதுவை அரசின் 5000 உருவா பரிசைப் பெற்றது. இவரின் 16 நூல்களும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறப்பு சேர்ப்பன. சில நூல்கள் கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்ட பெருமைக்குரியன. தமிழ்நாட்டரசின் இயல் இசை நாடக மன்றம் இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் போற்றியுள்ளது. 

1991(மலேசியா ,சிங்கப்பூர்), 1992(பிரான்சு), 1996 இல் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு பாவேந்தருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் கருத்து உரைஞராகப் (Consultant) பணியாற்றியவர். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பாவேந்தரின் கவிதைகள் ஆங்கில ஆக்கம் பெற்று வெளிவர உதவியவர். 

 பாவேந்தரைப் பற்றி இவர் எழுதிய பாவேந்தர் இலக்கியப் பாங்கு, பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம் முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. பாட்டுப் பறவைகள் என்ற இவரின் நூல் பாரதியின் பத்தாண்டுக்காலப் புதுவை வாழ்வையும், பாரதிதாசனாருடன் அமைந்த தொடர்பையும் சிறப்பாக விளக்குகின்றது. நிமிரும் நினைவுகள் என்ற பெயரில் மன்னர்மன்னன் பலவாண்டுகளாக இலக்கிய ஏடுகளில் எழுதிவந்த புதுவை வரலாற்றுக் கட்டுரைகள் இவரின் பவள விழா வெளியீடாக வெளிவந்துள்ளது. 

 புதுவை அரசின் கலைமாமணி விருது(1998), தமிழ்மாமணி விருது(2001) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழ்நாட்டரசின் திரு.வி.க. விருதும்(1999) இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டரசின் தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடப் பொதுக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.

 மன்னர்மன்னன் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று(2000) மிகச்சிறந்த தமிழ்ச்சங்கக் கட்டடம் உருவாகக் காரணமாக இருந்தவர். தொடர்ந்து தமிழ்ப்பணியைத் தொய்வின்றி ஆற்றிவரும் திரு. மன்னர்மன்னன் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ப்பணியாற்ற அவரின் பிறந்த நாளில் வாழ்த்துகின்றேன். 

 முகவரி: 

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள் 
 எண். 4, முதல்தெரு, காந்திநகர், 
 புதுச்சேரி- 605 009 
 தொலைபேசி: 0091 413 2275207


நான்கு அகவைச் சிறுவனாக மன்னர்மன்னன்(கோபதி)


மாணவனாக மன்னர்மன்னன்




பாவேந்தர் சாயலில் மன்னர்மன்னன்


மன்னர்மன்னன் இன்றையத் தோற்றம்


கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் நூல் மேலட்டை


வானம்பாடி இதழ்



வானம்பாடி இதழ்


மன்னர்மன்னன் நூல்


மன்னர் மன்னன் நூல்


குறிப்பு: படங்களையும் கட்டுரையையும் எடுத்து ஆள விரும்புவோர் இசைவுபெறுக. எடுத்த இடம் சுட்டுக.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

புதுவையில் பாவேந்தர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்துச், சிறப்புச் செய்தல்!


புதுவை முதல்வர் அவர்கள் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்தல்

தமிழ் மக்களுக்குப் பாடல்கள் வழியாக உணர்ச்சியூட்டித் தமிழ் உணர்வுபெறச் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

பாவேந்தர் பிறந்த புதுவை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று(29.04.2012) காலை பதினொரு மணியளவில் புதுவை சட்டப்பேரவையின் எதிரில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள், சட்டப்பேரவைத்தலைவர் சபாபதி அவர்கள், அமைச்சர்கள் இராசவேலு அவர்கள், தியாகராசன் அவர்கள், அரசுகொறடா நேரு அவர்கள் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். பிற தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

புதுவையில் உள்ள பாவேந்தர் இல்லத்துக்கு நான் காலை 10 மணிக்குச் சென்றேன். மன்னர் மன்னன் ஐயா எங்களுக்கு முன்னதாக நினைவில்லத்தில் குடும்பத்தினருடன் இருந்தார்கள். பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் இடத்துக்குப் புறப்படுவோம் என்றார். பாவேந்தர் பெயரன் கோ.பாரதியின் வண்டியில் திரு.மன்னர்மன்னன் அவர்கள் அமர்ந்துகொண்டார். நான் என் வண்டியில் பாவேந்தர் சிலை அமைவிடத்திற்குச் சென்றேன். அங்குப் பொதுவுடைமை இயக்கத்தவர்களும், திராவிடர் கழகத்தினரும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்து உரையாடிக்கொண்டிருந்தனர். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடினர்.

புதுவை முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் ஆர்வமுடன் வந்து மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பாவேந்தரின் நினைவில்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய நிகழ்வுகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு வாழ்த்தினர்.
பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக ஒன்றுகூடித் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்குப் பாடல்வழி பாடுபட்ட மாபெரும் பாவலரை நினைவுகூர்ந்தனர்.


மன்னர்மன்னன் ஐயா அவர்களுடன் மு.இ, மற்ற நண்பர்கள்


திராவிடர் கழகத்தினர் ஐயா மன்னர்மன்னன் அவர்களுடன்

வியாழன், 21 ஏப்ரல், 2011

பாவேந்தர் நினைவுநாள் காட்சிகள்


பாவேந்தர் சிலை(நினைவில்லத்தில்)

பாவேந்தரின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில்(நினைவில்லம்) காலை பத்துமணிக்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள்,அரசு அதிகாரிகள், திராவிட இயக்கம்சார்ந்த தோழர்கள், பாவேந்தர் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள் வந்து சேர்ந்தனர்.

பாவேந்தரின் இளைய மகள் அம்மா வசந்த தண்டபாணி அவர்கள் முன்னதாகவே வந்து சேர்ந்தார்கள். பாவேந்தர் நினைவுகளை அவர் வழியாக அறிந்தேன். பாவேந்தர் எழுதிய பாட்டுச் சூழல்களை வசந்தா அம்மா அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அவற்றைச் சிறிது நேரம் ஒலிப்பதிவு செய்துகொண்டேன்.

பாவேந்தரின் திருமகனார் ஐயா மன்னர்மன்னன் அவர்களும் பாவேந்தரின் பெயரர் பாவலர் பாரதி அவர்களும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நினைவில்லம் வந்தனர். அவர்களின் வருகையை ஒட்டிக் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அவர்கள் பாவேந்தர் சிலைக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தினார். அதன்பிறகு ஒவ்வொருவராக மலர்தூவி வணக்கம் செலுத்தினோம். பாவேந்தர் பற்றாளர்கள் பாவேந்தரை நினைவுகூர்ந்து உரையாடினர். சிலர் பாவேந்தரின் இசைப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சியூட்டினர். பாவேந்தரின் நினைவு தமிழ் வாழும் காலம் எல்லாம் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு காட்டியது.


சட்டமன்ற உறுப்பினர் இ.இலட்சுமிநாராயணன் மலர்தூவி வணங்குதல்


முனைவர் மு.இளங்கோவன் மலர்தூவி வணக்கம் செலுத்துதல்


பாவேந்தரின் கொள்ளுப்பெயர்த்தி,மன்னர்மன்னன்,மு.இளங்கோவன்,சிவ.இளங்கோ


பாவேந்தரின் இளையமகள் வசந்தா,மு.இ


மு.இளங்கோவன்,மன்னர்மன்னன்,கோ.பாரதி

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நெருப்புப் பாவலன் பாவேந்தன்

பணம்பறிக்கும் எழுத்தாளர் கூட்டம் எல்லாம்
பச்சையான செய்திகளை எழுதித் தாளில்
பிணமாக்கி இளைஞர்களை உழல வைக்கும்
பேயாட்சி புரிகின்ற இந்த நாட்டில்
மணங்கமழும் செந்தமிழை மலர்த்தித் தூக்க
மறவனெனத் தோன்றியவெம் புலவரேறு,
பிணக்கமிலாக் கொள்கையினை வகுத்துக் கொண்டோன்
பீடுமிகு பாவேந்தப் பெரியோர் தாமே!

தந்தையவன் பெரியாரின் தன்னே ரில்லாத்
தன்மான இயக்கத்தில் இணைந்து நின்று
முந்தியசீர் எண்ணிடவே புலவோர் தம்மை
மொத்துலக்கைப் பாட்டாலே அடித்தெழுப்பிச்
சிந்தனையை ஊற்றெடுக்க வைத்த என்றன்
செங்கோவின் பிளிறொலியாம் வரிகள் எல்லாம்
இந்தவளர் தலைமுறையும் ஒலிப்பதெண்ண
எரியென்றே அன்னவனை ஒப்பம் செய்வோம்!

மங்கையவள் தருகின்ற இன்பம் எல்லாம்
மாத்தமிழின் சுவையினுக்கு ஈடாய் ஆமோ?
எங்கள்தமிழ் சீரெல்லாம் பிழைக்க வந்தோர்
ஏமாற்றி மறைத்தேதான் சென்றா ரென்று
பொங்குசின அரிமாவாய் முழங்கி இந்தப்
புவியோர்க்கு மறவுணர்வை ஊட்டி நின்று
சங்கெடுத்து முழக்கம்செய் பாவேந்தன்போல்
சாற்றுதற்கும் ஆளுண்டோ? உண்டா இங்கே!

மக்களினை ஏய்க்கின்ற மடயர் எல்லாம்
மாற்றுவழி பின்பற்றிப் பதவி தேடி
இக்காலம் தன்னிலேதான் அலைவதெண்ணிப்
பாவேந்தன் எரிமலையாய் வெடித்துச் சொன்னான்!
முக்காலம் புகழ்நிலைக்க வேண்டும் என்றால்
முத்தமிழை ஆள்வோரே காப்பீராக!
திக்கிகழ இம்மொழிக்குக் கேடு செய்தால்
தீப்பந்தம் கொளுத்திடுவோம் என்றான் வீரன்!

ஆள்வோரால் பாவேந்தன் அந்த நாளில்
அலைக்கழிக்கப் பட்டாலும் அவனை ஏத்தி
வேள்என்றே புகழ் விரும்பிக் கத்துகின்றோம்!
வீறுணர்வைப் பெற்றோமா? வீரம் உண்டா?
மீள்வதற்கே அவன்பாட்டை நினைத்தோமா?நாம்
மேன்மைஎழ விழாவெடுப்போம்! மேலே உள்ள
ஆள்வோர்கள் தமிழ்மொழிக்குக் கேடு செய்தால்
அனல்கக்கும் பாவேந்தன் மறவ ராவோம்!

14.03.1991

புதன், 16 ஜூன், 2010

இருபதாம் நூற்றாண்டு: பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை




தமிழ்க்கவிதைகள் காலந்தோறும் உருவம்,உள்ளடக்கம், உத்திமுறைகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கண்டு வந்துள்ளன.இதற்கு அவ்வக் காலங்களில் வாழ்ந்த திறமையான புலவர்களும் சமூக அமைப்பும் காரணமாக அமைந்தனர்.இருபதாம் நூற்றாண்டைப் பொறுத்தவரை தமிழ்க்கவிதைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகள் கண்ட படிநிலை வளர்ச்சியைக் காட்டிலும் இருபதாம் நூற்றாண்டில் கண்ட வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியாகத் தெரிகின்றது.

பாரதியார், பாரதிதாசன் என்ற இரு பெரும் சுடர் மணிகள் தோன்றித் தமிழ்க்கவிதையின் பன்முக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டனர்.'சொல் புதிது சுவை புதிது சோதி மிக்க நவகவிதை' என்று பாரதியார் தம் கவிதையை நமக்கு அடையாளப்படுத்தினார்."புதுவையிலே வெடித்தெழுந்த ஊழித்தீயின் புனைபெயர்தான் பாரதிதாசன்; உன் பாடல்கள் எதுகைகளின் பட்டியல்கள் அல்ல;பொங்கும் எரிமலையின் முகவரிகள்"என்று பாரதிதாசனைப் புலவர் புலமைப்பித்தன் அறிமுகப்படுத்துவார்.அந்த அளவு நெருப்புக் கவிதைகளை எழுதித் தமிழர்களுக்கு இனமான உணர்வூட்டிவர் பாவேந்தர் ஆவார்.

பாவேந்தரின் பாடல்கள் தொடக்கத்தில் பக்திப் பாடல்களாகவும்,தேசியப் பாடல்களாகவும், திராவிட இயக்க உணர்வுப்பாடல்களாகவும் விளங்கிப் பின்னர்த் தனித்தமிழ் உணர்வூட்டும் பாடல்களாக மலர்ந்தன.பாரதியோ பக்தியிலும் தேசியத்திலும் ஊறியப் பாடல்களைத் தந்து அழியாப் புகழ்பெற்றான்.பாரதியின் பாடல்களைப் படித்து அவர்க்கு ஒரே வாரிசாகப் பாரதிதாசன் மட்டும் தோன்றினார்.ஆனால் பாரதிதாசனின் கவிதைகளில் தோய்ந்து ஒரு பாட்டுப்படையே தோற்றம் பெற்றுள்ளது.அந்தப் படையினரைப் "பாரதிதாசன் பரம்பரை" என்று அறிஞர் உலகம் அழைக்கும்.

பாரதியார் இளமையில் மறைந்தமை தமிழ்க் கவிதைத்துறைக்குப் பேரிழப்பாகும்.உயிருடன் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் பல காப்பியங்களையும் உயிரோட்டமான பாடல்களையும் தந்திருக்க வாய்ப்புண்டு.அதற்குரிய தமிழ்மொழியாளுமையும், யாப்பிலக்கணத் தேர்ச்சியும் பாரதியாரிடம் இருந்துள்ளதை அவர் படைப்புகள் வழியாக அறியலாம்.

மக்கள் பயன்படுத்தும் இசை வடிவங்களை உள்வாங்கிக்கொண்டு மக்களுக்குப் பாட்டு வடிப்பவர்களையே மக்கள் நினைக்கிறார்கள். பாரதியாரிடம் சிற்றூர் மக்களின் இசையும், செவ்வியல் இசையும் கையிருப்பாக இருந்ததால் அவர் பாடிய பாடல்கள் யாவும் இசை நயம் கொண்டு மக்களுக்கு விருப்பமான இசைப்பாடல்களாக மிளிர்ந்தன.

பாரதியாருக்குப் பிறகு தமிழ்க்கவிதையுலகினை வழிநடத்திய பெருமை பாவேந்தருக்கு உண்டு.பாரதியாரின் தொடர்பு பாவேந்தரின் பாட்டுக்குப் புதுமுறை,புதுநடை காட்டியது.தந்தை பெரியாரின் தொடர்பு பாவேந்தரை 'நானொரு நிரந்தர நாத்திகன்' என்று மாற்றியது.1936 இல் பாவேந்தரின் 'பாரதிதாசன் கவிதைகள்' முதல்தொகுதி வெளியானது.பாவேந்தரை இக்கவிதைத் தொகுதி நன்கு அறிமுகம் செய்தது.கடவுள் மறுப்பு,சமய எதிர்ப்பு,சமுதாய நிலை, பொதுவுடைமை,தொழிலாளர் நலன் முதலியன இந்நூலின் பாடு பொருளாகும். இக்கருத்துகளின் ஈர்ப்பினால் பல இளங்கவிஞர்கள் தோன்றினர்.

பாரதிதாசன் பாடல்கள் சமுதாயத்தில் நிலவிய கொடுமைகளை எதிர்த்தவையாகும். இந்திமொழித் திணிப்பு,பெண்ணுரிமை வேண்டல், பகுத்தறிவுப் பாடல்களைப் பாவேந்தர் எழுதினார்.இதனைக் கற்ற இளைஞர்கள் பலர் பாவேந்தரின் பாடல்களைப் பரப்பவும் அதன் வழியில் எழுதவும் தோன்றினர்.அவர்களுள் முருகு.சுப்பிரமணியன்,அரு.பெரியண்ணன் என்னும் இரண்டு செட்டிநாட்டு இளைஞர்கள் பாவேந்தர் புகழ் பரப்புவதற்கு என்று பொன்னி என்ற பெயரில் இலக்கிய இதழொன்றைத் தொடங்கினர்(1947).புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த அந்த இதழ் பின்னாளில் சென்னையிலிருந்து வெளிவந்து நின்றது.அந்த ஏட்டில் (1947 பிப்ரவரி தொடங்கி 1949-அக்டோபர் வரை) 48 கவிஞர்களைப் "பாரதிதாசன் பரம்பரை" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.அப்பட்டியலில் இடம்பெறும் சுரதா, முடியரசன், வாணிதாசன், புதுவைச்சிவம், வா.செ.குலோத்துங்கன், மு.அண்ணாமலை, பெரி.சிவனடியான், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற பாவலர்களாக வலம் வந்தனர்.

இப்பட்டியலில் இடம்பெறாமல் பாவேந்தர் கவிதைகளைக் கற்று அவர் வழியில் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அன்றும், இன்றும் பாடல்புனையும் பாவலர்கள் உண்டு.இவ்வகையில் பெருஞ்சித்திரனார்,கோவேந்தன்,தங்கப்பா,சாலை இளந்திரையன், எழில்முதல்வன்,காசி ஆனந்தன்,புலவர் புலமைப்பித்தன்,கடவூர் மணிமாறன், பாளை எழிலேந்தி,மகிபை பாவிசைக்கோ, தரங்கை. பன்னீர்ச்செல்வன், தமிழியக்கன், பொன்னடியான் உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.பாவேந்தரின் கொள்கைகளில் ஆழமான பற்றுக்கொண்டு அவர் வழியில் பாடல் புனைந்து பின்னாளில் புதுப்பாக்களில் தமிழ் உணர்வூட்டும் படைப்புகளை நல்கும் ஈரோடு தமிழன்பன்,மரபுப் பாடலில் செழுமையான தொகுதிகளை உருவாக்கிய வேழவேந்தன் உள்ளிட்ட பாவலர்களை நாம் சுட்டியாக வேண்டும்.

கவியரசு கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கம்பதாசன் ஆகியோரின் பாடல்களில் பாவேந்தரின் சாயலைப் பல இடங்களில் காணமுடியும்.

பாரதிதாசன் பரம்பரையினர் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே இணைப்புத்தொடராக விளங்கினர். இவர்கள் சங்க இலக்கியங்களுக்குப் பிறகு இலக்கிய உலகில் இழந்துவிட்ட தமிழ் மரபுகளை மீண்டும் வளரச் செய்த பெருமைக்கு உரியவர்கள்.சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட கருப்பொருளான இயற்கைப் பொருள்களைத் தனித்தனியாக விரிவாகப் பாடியுள்ளனர்(காடு,நிலா,புறா முதலான தலைப்புகளில்).

சங்க இலக்கியங்களில் தூய தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இடைக்கால நூல்களில் சமற்கிருதச் சொல்லாட்சிகளைக் காணமுடிகிறது. பாரதிதாசன் பரம்பரையினரின் படைப்புகள் மீண்டும் தனித்தமிழ்ப் பெயர்கள் தாங்கி வெளிவந்துள்ளன.சங்க இலக்கியங்களில் சமயச் செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன.பிற்கால நூல்களில் மதக்கருத்துகளும் மூட நம்பிக்கைக்குத் தூபமிடும் சாத்திரக் கூறுகளும் மண்டிக்கிடந்தன.பாரதிதாசன் பரம்பரையினரின் எழுச்சி தமிழிலக்கியங்களில் சமயம் சாரா இலக்கியங்கள் வகுக்க வழிகோலின. சங்க இலக்கியங்கள் வீர உணர்ச்சியையும்,தமிழர் பண்பாட்டையும் ஊட்டியதுபோலப் பரம்பரையினர் படைப்புகள் தமிழ்,வீர உணர்ச்சியை ஊட்டின.எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக அறுபட்டுக் கிடந்த தமிழ் மரபுகளை இணைத்துச்சேர்த்த பெருமை பாரதிதாசன் பரம்பரையினர்க்கு உண்டு.

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் குறிப்பிடப்படும் சுரதா அவர்கள் பாவேந்தருடன் நெருங்கிப் பழகியவர். பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இயற்கையைப் பாடவும்,சொற்செறிவைக் கவிதையில் அமைக்கவும்,வரலாற்றுச் செய்திகளைப் பாட்டில் வடிக்கவும் பாவேந்தரிடம் கற்றவர் சுரதா.அதுபோல் பாவேந்தரின் காப்பியம் புனையும் போக்கினையும், மொழியாளுமையையும், தமிழ்ப்பற்றையும், தமிழிசை ஈடுபாட்டையும் முடியரசன் கவிதைகளில் காணமுடிகின்றது.முடியரசனின் பூங்கொடி காவியம் தமிழ்க்காப்பிய உலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்ட வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிதாசனின் நேரடி மாணவராக விளங்கி,அவர்தம் வழியில் இயற்கை குறித்த கவிதைகளைப் பாடியவர்களுள் வாணிதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவ்வகையில் வாணிதாசனின் எழிலோவியம்,எழில் விருத்தம் நூல்கள் குறிப்பிடத்தகுந்தன.பாவேந்தர் வழியில் வாணிதாசன் மொழியுணர்வு, இன உணர்வு சார்ந்த பல பாடல்களை வழங்கியுள்ளார். இந்தி எதிர்ப்புப் பாடல்களை வாணிதாசன் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். வாணிதாசனிடம் திராவிட இயக்க உணர்வு,பொதுவுடைமைச் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதை அவர்தம் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.வாணிதாசன் பாவேந்தர் வழியில் பல சிறுகாப்பியங்களையும்,கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

புதுவைச்சிவம் பாவேந்தரின் மாணவராகவும் நண்பராகவும் விளங்கியவர்.பாவேந்தர் அரசுப்பணியில் இருந்த காரணத்தால் புதுவைச்சிவம் பெயரில் இதழ் நடத்தியும்,பதிப்பகம் நடத்தியும் இயக்கப்பணிகளில் ஈடபட வேண்டியிருந்தது.தம் மாணவர் சிவத்தைக் கவிதை எழுதும்படித் தூண்டிக் கவிதை நூலுக்குத் தாமே வாழ்த்துப் பாவும் பாவேந்தர் வழங்கியுள்ளார். சிவம் பாவேந்தரின் வழியில் நின்று கைம்மை வெறுத்த காரிகை என்ற பெயரில் கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்தும் பாட்டுத்தொகுதியை வெளியிட்டுள்ளார். மேலும் பெரியார் வாழ்வியலைப் பாட்டாக வடித்த பெருமை சிவத்துக்கு உண்டு(1944).

பாவேந்தரின் கவிதைகளை ஆழமாகப் படித்ததுடன் பாவேந்தரின் உதவியாளராகச் சிலகாலம் இருந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார்.பட்டுக்கோட்டை அழகிரியிடம் பரிந்துரைக்கடிதம் பெற்றுப் பொதுவுடைமைத் தலைவர் வ.சுப்பையா வழியாகப் பாவேந்தரின் தொடர்பைப் பெற்றவர் நம் பட்டுக்கோட்டையார்.

1952 இல் இச்சந்திப்பு நடந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எதனை எழுதத் தொடங்கினாலும் "வாழ்க பாரதிதாசன்" என்று எழுதித் தொடங்கும் அளவிற்குப் பாரதிதாசன் மேல் பற்றுக்கொண்டவர். பாவேந்தரிடம் இலக்கண இலக்கிய நுட்பம் அறிந்தவர்.

பாவேந்தரின் புரட்சிக்கவியில் இடம்பெறும் "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை" என்னும் பகுதி "ஆடைகட்டி வந்த நிலவோ-கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ" என்று கல்யாணசுந்தரம் வழியாக மறுவடிவம் கண்டுள்ளது.

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்" என்று பாவேந்தர் பாடியதை

"இலங்கை மாநகரத்திலே இன்பவல்லி நீ இருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்"

என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார்.

இதுபோன்ற எண்ணற்ற கவிஞர்களின் வரிகளைச் சான்றுகளாகக் கண்ட பாவேந்தர் பாரதிதாசன் பின்னொரு நாளில் பின்வருமாறு எழுதினார்.

"என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்மர்
என்நடை தம் நடை; என்யாப்புத் தம்யாப்பென்(று)
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்
திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவ(ர்)

இருப்பிடம் என்றன் இருப்பிடம்"(பாரதிதாசன் படைப்புத்திறன்,பக்கம்,12).

அந்த அளவு பாவேந்தரின் கவிதைத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் பரவி நிற்கின்றது.







கட்டுரையைத்
த சண்டே இந்தியன் இதழில் நேரடியாகப் படிக்க இங்கே

நனி நன்றி:
இக்கட்டுரையைச் செம்மொழிச் சிறப்பிதழில் வெளியிட்ட
த சண்டே இந்தியன்(27,சூன்,2010) இதழுக்கு!

திங்கள், 3 நவம்பர், 2008

புதுச்சேரியில் பாவேந்தர் இல்லத் திருமணம்...


அழைப்பிதழ்

பாவேந்தரின் இளையமகள் இரமணி அவர்களின் பெயரன் பொறிஞர் ச.கு.முகிலன்(பெற்றோர் திரு.சபா.குப்புசாமி,பாவலர் மணிமேகலை குப்புசாமி)-சு.இரேகா(பெற்றோர் ந.சுப்பிரமணி யன்-உமாமகேசுவரி) ஆகியோரின் திருமணம் புதுச்சேரி ஆனந்தா திருமண மண்டபத்தில் 03.11.2008 திங்கள் கிழமை காலை நடைபெறுகிறது.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி 02.11.2008 ஞாயிறு மாலை ஆனந்தா திருமண மண்டபத்தில் நிகழ்வுற்றது.புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்களும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தமிழ் மொழி,இன உணர்வாளர்களும் பெருந்திரளாக வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மக்கள் இசைக்குழுவைச் சார்ந்த புதுவை திரு.செயமூர்த்தி அவர்களின் இன்னிசை அனைவரையும் ஈர்த்தது.பாவேந்தரின் பாடல்கள்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்,உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் பாடல்களைப் பாடித் தமிழ் உணர்ச்சியூட்டி அவையினரை மகிழ்ச்சிப்படுத்தினார்.தமிழ் உணர்வுடன் பாடிவரும் செயமூர்த்தி உலகத் தமிழர்களால் வளர்க்கப்பட வேண்டிய கலைஞர்.


புதுவை செயமூர்த்தி தமிழிசை வழங்குகிறார்


புதுவை செயமூர்த்தி இன்னிசை வழங்குகிறார்


புதுவை செயமூர்த்தி குழுவினருடன்

காலையில் நடைபெற உள்ள திருமணத்தில் பெரியாரியல் அறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமை தாங்குகிறார்.புதுச்சேரி அரசின் முன்னாள் முதலமைச்சர் திருநிறை ந.அரங்கசாமி அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.முனைவர் இரா.திருமுருகனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.தனித்தமிழ்க்கழகம் சார்ந்த அன்பர்கள் திருமணத்திற்கு வருகை தருபவர்களை அன்புடன் வரவேற்கின்றனர்.

திருமண அழைப்பிதழ் புதுமையாக அச்சிடப்பட்டிருந்தது. பாவேந்தரின் குடும்பவிளக்கு நூல் அழகுடன் அச்சிடப்பட்டு அதில் அழைப்பிதழ் இணைக்கப்பெற்று அனைவருக்கும் வழங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.