நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 28 அக்டோபர், 2026

பேராசிரியர் நாகப்பா. நாச்சியப்பன்

 

நாகப்பா. நாச்சியப்பன்(28. 05. 1949 - 15. 07. 2003)

[பேராசிரியர் நாகப்பா. நாச்சியப்பன் புதுச்சேரி அரசின் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தித் திருப்பரங்குன்றம் குறித்த செய்திகளை ஆய்வுலகுக்குத் தந்தவர். பன்னூலாசிரியாகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். இவரின் நெறிப்படுத்தலில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.] 

பேராசிரியர் நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் காரைக்குடியை அடுத்துள்ள கண்டனூர் என்னும் ஊரில் 28. 05. 1949 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் இராம. நாகப்பச் செட்டியார், நா. மீனாட்சி என்பனவாகும். இவருடன் பிறந்தவர்கள் நா. இராமனாதன், நா. நாகப்பன், நா. கருப்பஞ் செட்டி, நா. சண்முகநாதன், வீர. அலமேலு ஆவர். 

கண்டனூர் சிட்டாள் ஆச்சிப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த நாகப்பா. நாச்சியப்பன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில்  கல்லூரிப் படிப்பைப் பயின்றவர். இளம் அறிவியல் பாடத்தையும் (விலங்கியல்), முதுகலைத் தமிழ்ப் பாடத்தையும் பயின்றவர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் மேற்பார்வையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நான்கு ஆண்டுகள் நிகழ்த்தியவர். முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியபொழுது பெரும் பேராசிரியர்களான ச. தண்டபாணி தேசிகர், க. வெள்ளைவாரணனார், குடவாயில் பாலசுப்பிரமணியனார் உள்ளிட்டவர்களின் அன்பினைப் பெற்றவராக விளங்கியவர். 

நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் ச. தண்டபாணி தேசிகரைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் சிவதீட்சை பெற்றுக்கொண்டவர். நாச்சியப்பனார் மனைவி திருவாட்டி தமயந்தி அவர்களும் இவ்வாறு தீட்சை பெற்றவர் ஆவார். 

நாச்சியப்பனார் அவர்கள் தொல்லியலில் பட்டயமும், காந்திய நெறியில் சான்றிதழும் பெற்றவர்.                      

நாகப்பா. நாச்சியப்பனார் நா. தமயந்தி அவர்களை 1976 ஆம் ஆண்டில்  இல்லறத் துணைவியாக ஏற்றவர். இவர்களுக்கு நாச்சு நாகப்பன் என்ற அண்ணாமலை, நாச்சு சுப்பிரமணியன் என்ற இரெத்தினசபாபதி, நா. விசாலாட்சி ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

பேராசிரியர் நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் குழந்தை இலக்கியப் படைப்பிற்காகத் தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற பெருமைக்குரியவர். தம் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைத் தம் படைப்புகளில் பயன்படுத்தியவர். 

நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் புதுவை அரசு கல்லூரியில் உரையாளராகத் தம் கல்விப்பணியை 1973 இல் தொடங்கியவர். பின்னர் புதுவை அரசுக்கு உரிமையான காரைக்கால்  அறிஞர் அண்ணா கல்லூரி, ஔவையார் கல்லூரி, புதுச்சேரியில் அமைந்துள்ள தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றில் துணைப்பேராசிரியராகவும், இணைப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலத்தில் சிலவாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் 15.07.2003 இல் இயற்கை எய்தியவர். 

நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் தமிழுக்குப் பல நூல்களை இயற்றி அணிகளாக வழங்கியுள்ளார். அவை படைப்பு நூல்கள், ஆய்வு நூல்கள் என்னும் தரத்தினவாகும். மனித விலங்குகளின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு),  வீரப்பதக்கம் (சிறார் நாடகம்), வடலூர் வள்ளலார், திருக்கோயில் ஆய்வு (Temple Research Methodology), திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம், தமிழ்நாட்டில் பைரவர் வழிபாடு, கோட்டைமுனி ஐயா, சித்தூரில் ஒரு சித்தர் முதலியன இவர்தம் தமிழ்க் கொடைகளாகும். கோகுலம் இதழில் இவர்தம் சிறுகதை வெளியாகியுள்ளது. 



நாகப்பா. நாச்சியப்பனின் திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம் என்னும் தலைப்பில் அமைந்த முனைவர் பட்ட ஆய்வேடு குறிப்பிடத்தகுந்த ஆய்வேடாகும். இந்த ஆய்வேடு 1989 இல் நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்த நூல் முன்னுரை திருக்கோயில் அமைப்பு, இலக்கியங்களில் திருப்பரங்குன்றம், வரலாற்றில் திருப்பரங்குன்றம், கோயில் ஆட்சிமுறை, நாள் வழிபாடும் திருவிழாக்களும், கோயிலும் குடிகளும், குன்றைச் சூழ்ந்துள்ள கோயில்கள், நாட்டுப்புற வழிபாடு என்னும் தலைப்புகளில் விரிவான செய்திகளைக் கொண்டுள்ளது. பிற்சேர்க்கையாக இலக்கியங்களில் பரங்குன்றம், பரங்குன்று பற்றிய இலக்கியங்களின் பட்டியல், நாட்டுப்புறப் பாடல்கள், கல்வெட்டுக் குறிப்புகள், கோயிலுக்குரிய சொத்துக்கள், திருப்பரங்குன்றம் ஊரில் உள்ள மடம், மண்டபங்கள், கோயில் நிருவாக அதிகாரிகள் வரிசை, கோயில் அறங்காவலர்கள் ஆட்சியாளர்கள் வரிசை, துணைநூற்பட்டியல், வரைபடங்கள், நிழற்படங்கள் என்ற வரிசையில் நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 

பேராசிரியர் நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் தம் ஆய்வுக்காலத்தில் திருப்பரங்குன்றத்துக் கோவில் சார்ந்த செய்திகளைக் கொண்ட செப்புப் பட்டயம் தேவதானப்பட்டியில் இருப்பதை அறிந்து அதனைக் கண்டறிந்து, அப்பட்டயத்தின் செய்திகளை ஆய்வேட்டில் அமைத்தவர். அதுபோல் திருப்பரங்குன்றம் கோவிலில் மூத்த தேவியின் சிற்பம் இருப்பதை ஆய்வுலகுக்கு வெளிப்படுத்தியவர். 

நாகப்பா நாச்சியப்பன் பல மாணவர்களுக்கு முனைவரபட்ட ஆய்வுநெறியாளராக இருந்தவர். அதுபோல் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் 18 பேருக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார். 

 நாச்சியப்பனாரின் பாடம் நடத்தும் முறையும், பக்தி ஈடுபாடும், ஆய்வார்வமும், சொற்பொழிவாற்றும் திறமும் இன்றும் மாணவர்களாலும் பொது மக்களாலும் நினைவுகூரப்படுகின்றன. நாகப்பா. நாச்சியப்பனின் ஆய்வுப்பணிகள் என்றும் தமிழாய்வு உலகில் போற்றப்படும். 

நன்றி: முனைவர் ஆ. அருணாசலம், பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்

 

கருத்துகள் இல்லை: