நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

மொழிபெயர்ப்பாளர் முனைவர் த. சித்தார்த்தன்

 

முனைவர் . சித்தார்த்தன் 

[முனைவர் த. சித்தார்த்தன் சென்னைத் தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும், அனைத்து இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். இன்று மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். சிலகாலம் தினமலர் நாளிதழில் பணியாற்றியவர். சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தடாகம் பதிப்பகம், மணற்கேணி, நவ இந்தியா பதிப்பகம், இந்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்களுக்காகப் பல நூல்களை மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். சென்னையில் வாழ்ந்து வருகின்றார்] 

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் நான் ஈடுபட்டிருந்தபொழுது, அனைத்து இந்திய வானொலி நிலையம் (AIR) உரையாற்றுவதற்கு வழங்கும்  வாய்ப்புகள் பேருதவியாக இருந்தன. அவ்வாறு வானொலி நிலையம் சென்றபொழுது (1994 ஆம் ஆண்டளவில்) நிகழ்ச்சித் தயாரிப்பளாராக இருந்த த. சித்தார்த்தன் அவர்களைச் சந்திக்கவும், உரையாடவும் சூழல்கள் கனிந்தன. மாணவப் பருவத்தில் இருந்த என்னை அன்புடன் நடத்திய விதமும், மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய விதமும் என் மனத்துள் நிழலாடுகின்றன. அதனால்தான் அப்பொழுது நான் பதிப்பித்த விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலில் நன்றி என்ற பகுதியில் த. சித்தார்த்தன் அவர்களின் பெயரைப் பதிந்து, என் அன்பை வெளிப்படுத்தியிருப்பேன்(1995). 

த. சித்தார்த்தன் அவர்கள் சென்னை வானொலியில் பணியாற்றியபொழுது மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்த நினைவும் உள்ளது. தொலைபேசி வாயிலாக அவ்வப்பொழுது உரையாடுவது உண்டு. த. சித்தார்த்தன் அவர்களுடன் அமைந்த அத்தகைய உரையாடல்கள் வழியாக அவர்தம் மொழிபெயர்ப்புப் பணிகளை அறிந்து, அதுகுறித்து எழுதுவதற்கு உரிய காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். அவர்தம் தமிழ் வாழ்க்கை அமைதி நிறைந்தது. அவர்தம் பணிகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன. தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் அவர் வாரி வழங்கியிருக்கும் தமிழ்க்கொடை போற்றுதலுக்கு உரியன. இவர்போலும் அமைதியாகத் தமிழ்ப் பணியாற்றிவரும் அறிஞர்களைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமாக அமையும். 

த. சித்தார்த்தன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்  06.06.1957 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் ந. தங்கவேலு,  பட்டம்மாள் என்பனவாகும். தந்தையார் சாலைமேம்பாட்டுப் பணிக்காகச் சாலைச் சமனி உந்து (Road roller) ஓட்டும் ஓட்டுநராக இருந்தவர். அதனால் பல ஊர்களில் அவர் பணியாற்றும் வாய்ப்பு இருந்தது. அதனால் த.சித்தார்த்தன் அவர்கள் இளம் அகவை முதல் சுவாமிமலையை அடுத்துள்ள திருவலஞ்சுழி என்னும் ஊரில் வளர்ந்தவர். திருவலஞ்சுழியில் தொடக்கக் கல்வியும் சுவாமிமலையில் உயர்நிலைக் கல்வியும் பயின்றவர். தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் இளம் அறிவியல் (விலங்கியல்) பயின்ற பின்னர் கும்பகோணம் அரசு கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவர்தம் பேராசிரியர்களாக மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்), கு.வெ. பாலசுப்பிரமணியன் முதலனாவர்கள் விளங்கினர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர். வ. செயதேவன் மேற்பார்வையில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்தவர். ஒன்றரை ஆண்டுகள் தினமலர் நாளிதழில் பணியாற்றிய பட்டறிவும் இவருக்கு உண்டு. 

தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற போட்டித் தேர்வெழுதித் சென்னைத் தலைமைச் செயலகத்தில் எழுத்தர் பணியில் இணைந்து ஏழாண்டுகளுக்கும் மேலாக எழுத்தராகப் பணியாற்றியவர். பின்னர் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் 1992 இல் பணியில் இணைந்தவர். 1996 ஆம் ஆண்டு வரை அங்குப் பணியாற்றிய பிறகு 1997 முதல் 2003 வரை சென்னை வானொலியில் பணியாற்றியவர். 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கோவை வானொலியில் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. அக்காலகட்டத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தம் முனைவர் பட்ட ஆய்வைப் பகுதிநேரமாக நிறைவுசெய்தவர். ஊட்டி வானொலியில் பணியாற்றிய பிறகு 2014 முதல் 2017 வரை மீண்டும் சென்னை வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது சென்னையில் வாழ்ந்துவரும் த. சித்தார்த்தன் முழுமையாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். 

சித்தார்த்தன் அவர்களின் வாழ்நாள் பணிகளை அரசுநிலையில் அமைந்த எழுத்தர் பணி, வானொலிப் பணி எனவும், ஆர்வமாக மேற்கொண்டுவரும் மொழிபெயர்ப்புப் பணி என்றும் வகைப்படுத்திக்கொள்ளலாம். 

த. சித்தார்த்தன் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தடாகம் பதிப்பகம், மணற்கேணி, நவ இந்தியா பதிப்பகம், இந்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்கள் இவர்தம் நூல்களை வெளியிட்டுள்ளன. இவற்றுள் புதினம், இலக்கியம், சிறுகதைகள், தொன்மக்கதைகள், குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தேச வரலாறு, உடற்பயிற்சி, சாகச விளையாட்டு, பணிக் கலாச்சாரம், அறிவியல், நடப்பில் இருந்துவரும் போக்குகள் முதலிய பொருண்மைகள் குறித்து இவர்தம் நூல்கள் உள்ளன. 

சவகர்லால் நேருவின் உலக சரித்திரம் என்னும் நூல் ஓ. வி. அளகேசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1948 இல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள வடமொழி, ஆங்கில வழக்குச் சொற்கள் நீக்கப்பட்டு, பொருத்தமான தமிழ்மொழிச் சொற்கள் சேர்த்து, மறுசீரமைக்கப்பட்டு இவரால் இந்நூல் வெளியீடு கண்டுள்ளது. குன்றக்குடி அடிகளாரின் ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

மனத்தின் குரல் 

மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சரின் மனத்தின் குரல் நிகழ்ச்சியைத் தொடக்கம் முதல் கடந்த பத்து ஆண்டுகளாக மொழிபெயர்த்து வழங்கிய பெரும் பணியையும், சரிபார்க்கும் பணியையும் த.சித்தார்த்தன் செய்துவருகின்றார். 

மத்திய அரசின் திட்டம் மாத இதழின் அதிகாரப்பூர்வமற்ற ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார்.

த. சித்தார்த்தன் எழுதிய - மொழிபெயர்த்த நூல்கள்: 

1.           சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் - ஆனந்த் தெல்தும்ப்டே- (மொ.பெ) த. சித்தார்த்தன் 

2.       பெண் மருத்துவர்கள் சொல்லப்படாத கதைகள் - கவிதா ராவ் - (மொ.பெ) த. சித்தார்த்தன்

3.  தனித்திருக்கும் தீவுக் கூட்டம் - பங்கஜ் ஷெக்சாரியா - தமிழில் த. சித்தார்த்தன்

4.       நவபாரத சிற்பிகள்- பங்கிம் சந்திர சட்டர்ஜி, எஸ். கே. போஸ், 2026

5.       இந்திய விடுதலை இயக்க வரலாறு (நான்கு தொகுதிகள்) தாராசந்த், 2026

6. புனிதப் பசுவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், பிரெடிரிக் ஜே.சிமுன்ஸ்,2025

7. பேச்சு சுதந்திரம் தேசிய வாதமும் தேசத் துரோகமும், நீதிபதி ஏ.பி.ஷா, மணற்கேணி, 2025

8.   திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு வ.வே.சு ஐயர் முன்னுரை (1916 இல் வெளிவந்த வ.வே.சு.ஐயரின் ஆங்கில முன்னுரைக்கு முதன்முதல் அமைந்த மொழியாக்கம்.)

9. தந்தையரும் தனயர்களும், குர்கன் கான்ஜியன், ஆர்மீனிய நாவலின் தமிழாக்கம், 2025 சனவரி

10. நிலைமாறும் தீவுகள், ஆங்கிலத்தில் பங்கஜ் ஷெஷாரியா, 2024

11. மனம் நிறைந்த மக்கள் சேவை, ஆங்கிலத்தில் எம் எம் இராஜேந்திரன்

12. உழைப்பு தரும் ஆனந்தம், ஆங்கிலத்தில் எஸ்.ஏ. சாப்ரே

13. தண்ணீர் (ஆசிய பசிபிக் நாடுகளில் தண்ணீர்பற்றி உலவுகின்ற கதைகள்), 2001

14. மரபணு சகாப்தம், ஆங்கிலத்தில் பிமன் பாசு, 2006

15. பூந்தென்றலோ வாழ்க்கை (ஈப்ரு மொழிச் சிறுகதைகள்), 2003

16. டாக்டர் ஜாகிர் உசேன், குருஷித் ஆலம்கான், 1998 

வெளிவர இருப்பவை: 

1.   கே.ஆர்.நாராயணன் வாழ்க்கைச் சித்திரம்

2.   உடற்பயிற்சியும் உடல்நலமும்

3.   சாகசப் பயணமும்

4.   நீலவானப் பேரரசு

5.   விவேகானந்தரின் கதை (பதிப்பாசிரியர் ரோமா சட்டர்ஜி)

6.   காவல்துறை விசாரணைகளில் அறிவியல்

7.   நீங்கள் கற்பனைகூட செய்திருக்க முடியாது, ஒப்பனையின் வரலாறு 

எழுதியுள்ள நூல்கள்: 

1.   அன்றாட வாழ்வில் அறிவியல்

2.   நம்மைச் சுற்றி, சூழலியல் கட்டுரைகள் அடங்கிய நூல்

3.   சூழல்மொழி - சுற்றுச் சூழல் கட்டுரைகள் – த. சித்தார்த்தன்

4.   உயிர்ச்சொல் (மேன்மை வெளியீடு) - த. சித்தார்த்தன்

5.   உதயணகுமார காவியம் பகுப்பாய்வு, 2026

6.   Probabilistic Orientation (English) Psychology 2026









திங்கள், 7 செப்டம்பர், 2026

பொங்கு தமிழ் மன்றத்தின் நிறுவுநர் தமிழ்நாடன் மறைவு!

 

தமிழ்நாடன் 

குவைத்து நாட்டில் பொங்கு தமிழ் மன்றம் என்னும் அமைப்பை நிறுவிப் பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்துவந்த பொறியாளர் தமிழ்நாடன் அவர்கள் 08. 08. 2026 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் காலம் தாழ்ந்து அறிந்து, நண்பர்களுக்கு இத்துயரச் செய்தியை அறிவிப்பதில் மிகுந்த வருத்தம்கொள்கின்றேன். 

தமிழ்நாடன் அவர்களின் இயற்பெயர் மோகன்ராசு என்பதாகும். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ள குணவாசல் என்னும் ஊரில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் திரு. கண்ணுசாமி ஆசிரியர்   என்பதாகும். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியைப் பயின்ற தமிழ்நாடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பயின்று பொறியாளராக மலர்ந்தவர். பணியின் பொருட்டு, குவைத்து நாட்டுக்குச் சென்ற தமிழ்நாடன் தமிழன்பர்களுடன் இணைந்து பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைக் குவைத்து நாட்டில் நடத்தியவர். தமிழ்நாடு பொறியாளர் குழுமத்துடன் இணைந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகள், பொங்கல் விழாக்கள், கண்காட்சிகளைக் குவைத்து நாட்டில் நடத்தித், அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளும் தமிழர்களும் தங்கள் பழம்பெருமையை அறிவதற்கு வழிசெய்தவர். 

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடன் அவர்களுடன் எனக்கு நெருங்கியத் தொடர்பு எற்பட்டது. என் தமிழாய்வு முயற்சிகளை அறிந்த தமிழ்நாடன் தமிழகம் வரும்பொழுதெல்லாம் புதுச்சேரியில் உள்ள நம் இல்லத்துக்கு வருவதும் உரையாடுவதுமாக இருப்பார். இங்கிருந்து தேவைப்படும் நூல்களை வாங்கிச் சென்று, குவைத்தில் நடைபெறும் விழாக்களில் பரிசாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஈழத் தமிழ் மக்கள் பட்ட பெருந்துயரத்தைக் கண்டு கலங்கியவர். நம் தமிழ்நாடன். அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தவர். 

தமிழ்நாடன் அவர்களும் அவர்களின் நண்பர்களும் அழைத்த அழைப்பின்பேரில் குவைத்து நாட்டுக்கு 2012 திசம்பர் 14,15 ஆகிய நாள்களில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினனாகச் சென்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளாகும். அப்பொழுது குவைத்து நாட்டில் என்னை உரையாற்றச் செய்து, அங்குள்ள முதன்மையான இடங்களைச் சுற்றிப்பார்க்க வழிவகைசெய்த அன்பு நண்பர் தமிழ்நாடன் அவர்களின் உதவியை என்றும் நன்றியுடன் போற்றுவேன். 

தமிழ்நாடன் அவர்கள் தமிழகத்தின் புகழ்மிக்க ஆளுமைகளான இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார், இரா. இளங்குமரனார், பேராசிரியர் நன்னன், ஒரிசா பாலு, சுப.வீ,  உலகநாயகி பழனி, இயற்கை மருத்துவர் சுதந்திராதேவி, அறிவுமதி, வேல்முருகன், சின்னபொண்ணு, இரா.மதிவாணன், சமூக ஆர்வலர் முத்துகிருட்டினன் முதலான ஆளுமைகளைக் குவைத்து நாட்டுக்கு அழைத்து, அவர்களின் சொற்பொழிவுகளையும் கலை நிகழ்வுளையும் சிறப்பாக நிகழ்த்திக்காட்டியவர். திரு. சேதுமாதவன் அவர்களின் வழியாகத் திருக்குறள் தொடர் வகுப்புகளை நடத்தச் செய்து திருக்குறள் தொண்டிலும் தமிழ்நாடன் ஈடுபட்டவர்.

பெருந்தொற்றுக் காலம் முதல் உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடன் மருத்துவ உதவிகளைப் பெற்று உடல்நலம் தேறி வந்தவர். தமிழ் உணர்வாளர்களையும் குடும்பத்தினரையும் பெருந்துன்பத்தில் ஆழ்த்துமாறு சென்னையில் 08.08.2026 இல் இயற்கை எய்தினார். தமிழ்நாடனின் மறைவு அறிந்த தமிழிய உணர்வாளர்கள் குவைத்து, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட ஊர்களில் அவர்தம் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். தமிழ்நாடனின் பணிகளை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வோம்!






தொடர்புடைய பதிவுகள்

பதிவு 1

பதிவு  2

பதிவு 3

சனி, 5 செப்டம்பர், 2026

நினைவில் தங்கிய ஆசிரியர் திருநாள்!

 

 

பிரபு, இராமநாதன், மு.இளங்கோவன், அசோக்குமார், பாலாஜி 
மற்றும் சிறப்பு விருந்தினர்கள்

சிங்கப்பூரில் பணியாற்றும் என் நண்பர் முனைவர் பா. இராமநாதன் அவர்கள் இன்று (05.09.2026) புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டுச் சமுதாயக் கூடத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதாகவும் ஓய்விருந்தால் வந்து சந்திக்குமாறும் அன்பு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த கிழமைதான் அவரைச் சிங்கப்பூரில் சந்தித்து உரையாடினேன். நாங்கள் இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி, ஆய்வு மாணவர்களாக வளர்ந்தவர்கள். பன்னெடுங்கால இடைவெளிக்குப் பிறகு பலமுறை சிங்கப்பூரில் சந்தித்துள்ளோம். அவரைக் காணும் நோக்கில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்க அறைக்குச் சென்றேன். 

புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு மாநாட்டுக் கூடத்தின் முகப்பில் ஓரிருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து, படியேறி, முதல்மாடி செல்லும்பொழுது ஓர் அன்பர் வருக! வருக என்று அழைத்தார். ஒப்புக்கு அவரிடம் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் பின்வரிசையில் சென்று நான் அமர்ந்துகொள்ள கதவினைத் திறக்க முற்பட்ட பொழுது, வரவேற்பு கொடுத்த அந்த அன்பர் முன்வரிசைக்கு வருமாறு அழைத்துச்சென்றார். போகும்போது அவர் வாய்மொழியில்,  “ஆதிபராசக்தி கல்லூரி” என்ற ஒற்றைச் சொல் மட்டும் காதில் விழுந்து இனித்தது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் நான் பணியாற்றிய நினைவு வந்தது. அழைத்துச் சென்றவரின் உயரமும், தோற்றமும் இவர் அக்கல்லூரியில் பணியாற்றியவர் போலும் என்ற நினைவுடன் அரங்கின் உள்ளே நுழைந்தேன். அப்பொழுதுதான் அவர் காதருகே சொன்னார். எம் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது ஐயா என்றார். ஆசிரியராகிய நீங்கள் இந்த நிகழ்வுக்கு வந்துள்ளது எனக்கு மிகப்பெரிய பெருமை என்று உள்ளம்குளிர உரைத்தார். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய என் நினைவுகளை மீட்டி, ஆதிபராசக்தி கல்லூரியில் படித்தவரா? அல்லது நம்முடன் பணியாற்றியவரா? என்று நினைத்துப் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் இவரை என்னால் நினைவுகூர இயலவில்லை. 

முதல்வரிசையில் அமர்ந்தேன். அருகில் இருந்த அன்பர் ஒருவரிடம், என்னை அழைத்து வந்த இவர் யார்? என்று கேட்டேன். சார்! இவர்தான் பாலாஜி வரதன்.  Village Technology School நிறுவனத்தின் இணைச் செயல் அதிகாரி என்றார். இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி அவர்களின் பெயரும் பாலாஜிதான் என்று குறிப்பிட்டார். எத்தனையோ வகையில் நினைவில் கொண்டுவரப் பார்த்தேன். என்னிடம் பயின்றவரா? என்னுட்ன் பணியாற்றியவரா? என்று முயன்று பார்த்தும் பாலாஜி அவர்களை நினைவில் கொண்டுவர இயலவில்லை.

 

பாலாஜி வரதன்

நிகழ்வு நடைபெறும் மேடையில் ஆசிரியர் பெருமக்கள் பரிசுபெறுவதும், அதனை முதன்மை விருந்தினர்கள் எடுத்து வழங்குவதுமாக இருந்தனர். என் நண்பர் பா. இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர் என்பதால் முதல் வரிசையில் பார்வையாளர்களுடன் நான் அமர்ந்திருப்பதை அறிந்து இன்ப முகத்தால் வரவேற்றார். 

விருது பெறும் ஆசிரியர்களின் பெயர்கள் படிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் என்னை வரவேற்று அழைத்துச் சென்ற அதே பாலாஜி, ஒலிவாங்கி முன்னர்த் தோன்றி, அரங்கில் இருந்தவர்களை நோக்கி, நண்பர்களே! ஒரு மகிழ்வான செய்தி. ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் படித்த பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று நம் ஆசிரியர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இன்று எதிர்பாராத வகையில் என் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இந்த அரங்கிற்கு வந்துள்ளார். நான் யார் என்பதை அவரால் நினைவுகூர இயலாதபடி என் தோற்றம் மாறியுள்ளது. இவர் ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது உயிர் வேதியியல் (BioChemistry) துறையில் நான் இளம் அறிவியல் வகுப்பில் பயின்றபொழுது மொழிப்பாடம் நடத்திய பெருமை இவருக்கு உண்டு. இவருடன் பேராசிரியர் வைத்தீஸ்வரன் அவர்களும் பணியாற்றியவர். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறி, என்னை மேடைக்கு அழைத்து, சிறப்பு ஆரம் நல்கிச் சிறப்பிக்கும்பொழுதுதான் புரியாத புதிர்கள் பல விடுபட்டன. 

சிறப்பு ஆரத்தையும் நினைவுப் பரிசையும் பெற்றுக்கொண்டு, மேடையிலேயே அமருமாறு சொன்னார்கள். பலரின் பார்வையும் என்மீது வியப்போடு விழுந்துகொண்டிருந்தது. நிகழ்ச்சித் தொடர்ந்தது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த ஆசிரியர் பெருமக்கள் தங்களின் கல்விப்பணிகளுக்காகச்  சிறப்பு ஆரங்களைப் பெற்றவண்ணம் இருந்தனர். இந்த நிகழ்வைப் பாராட்டிச் சிறிது நேரம் உரையாற்றுமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். 

கிடைத்தற்கு அரிய இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு, நானும் நல்லாசிரியர் ஒருவரால் உயர்கல்வி கற்க நேர்ந்ததையும், இன்று பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையையும் சொன்னேன். தம்பி பாலாஜி அவர்கள் நான் வகுப்பில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வகுப்பெடுப்பேன் என்று சொல்லி அறிமுகம் செய்ததால், அரங்கில் இருந்த அனைவரும் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடுமாறு வேண்டுகோள் வைத்தனர். நானும் நினைவில் வந்த ஒரு நடவுப்பாடலைப் பாடி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். 

வ. பாலாஜி அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் என்ற ஊரைச் சேர்ந்தவர். பெற்றோர் பெயர் வரதன் – நகோமி என்பனவாகும். 25. 05. 1983 இல் பிறந்தவர். இளம் அறிவியல் படிப்பில் உயிர் வேதியியல் பயின்றவர். பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பயிற்சி மற்றும் மேம்பாட்டு கல்விசார் தலைமைத்துவத் துறையிலும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் துறையிலும் ஆளுமை மிக்கவர். 

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலாஜி அவர்கள் இத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். பெரும் நிறுவனப் பயிற்சியாளராகவும் விளங்குபவர். செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), ட்ரோன் தொழில்நுட்பம், ஏரோமாடலிங் (Aeromodelling), 3D பிரிண்டிங், புதுமை, தொழில்முனைவு, வடிவமைப்பு சிந்தனை (Design Thinking), தலைமைத்துவ மேம்பாடு மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் திறன்கள் ஆகியவற்றில் இவர் ஆற்றல் பெற்றுள்ளார். 'வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல்' (Village Technology School)-இன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் இணை நிறுவனராக, நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு, கல்விசார் புதுமை மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கற்றல் சூழல்களை உருவாக்குவதில் முதன்மையான பங்காற்றுகின்றார். மேலும், VTS குளோபல் இன்னோவேஷன்ஸ் LLP-யின் இயக்குநர், ரோபோட்டிக்ஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் தமிழ்நாடு-இன் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவர், மற்றும் BYST சென்னைக் கிளையின் இணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகிப்பதன் மூலம் தொழில்முனைவு, திறன் மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தீவிரமாகப் பங்களித்து வருகிறார். 

பாலாஜி வரதன் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கியுள்ளதுடன்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் இளம் புதுமையாளர்களுக்கும் பயிற்சி வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் தம் அறிவை விதைத்து, இருபத்தியொன்றாம் நூற்றாண்டை வழிநடத்தும் மாணவர்களை உருவாக்கி வரும் பாலாஜி வரதனைப் போலும் உயர் மாணவர் ஒருவரை ஆசிரியர் திருநாளில் (05.09.2026) சந்தித்தமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றேயாகும். 

வாழ்க பாலாஜி வரதன்! வளர்க அவர்தம் நிறுவனங்கள்!!

பாலாஜி வரதன், மு.இளங்கோவன்


சதீஷ், ஹபீப், இராமநாதன், மு.இளங்கோவன், பாலாஜி

### பாலாஜி வரதனின் நிறுவனப் பணிகளைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருது!

 


 தமிழ் வளர்ச்சிக்குத் தனிமாந்தர்களும், பெரும் வள்ளல்களும், நிறுவனத்தாரும் துணைநின்றுள்ளமையை வரலாறு பதிவுசெய்துள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுர ஆதீனம் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தமிழ்ப் பணிகளும் சமயப் பணிகளும் வரலாற்றில் என்றும் நிலைபெற்று நிற்பனவாகும். 

  தருமபுர ஆதீனம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், சமய, தத்துவ நூல்களையும் போற்றிப் பாதுகாத்துப் பரப்பியுள்ள வகையாலும், திருமுறைகளைப் பண்மணம் குறையாமல் ஓதுதல் - ஓதுவித்தல் செய்த வகையாலும் தமிழ்க் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் தமிழ்ப் புலவர்களைப் பயிற்றுவித்துப் பைந்தமிழுக்குத் தொண்டாற்றுவதற்குப் புறந்தந்த வகையாலும், சமயப் பணிகளுக்கும் மக்கள் பணிகளுக்கும் ஆதரவு நல்கிவரும் வகையாலும் என்றும் நம் நன்றிக்குரிய சமய நிறுவனமாகத் திகழ்ந்துவருகின்றது. 

 தருமபுர ஆதீனத்தின் தகைமிகும் தலைவராகத் தற்பொழுது சமயத்தொண்டும் தமிழ்த்தொண்டும் ஆற்றி வரும் இருபத்தேழாம் பட்டம் தவத்திரு கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்கள் அண்மைக்காலமாக அறம்பல செய்து வருகின்றமையை அனைத்துலகும் அறியும். தம் முன்னோர்களின் நெறியில் நின்று தமிழறிஞர்களைப் போற்றும் வகையிலும் தருமபுர ஆதீனத்தில் பணியாற்றிய அறிஞர்களின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும் பேரறிஞர்களின் பெயரில் விருதுகளை அண்மையில் நிறுவி, அறிஞர்கள் பலரை அழைத்துப் போற்றி வருகின்றமை தமிழ் நிலைபெறுதற்குரிய பெரும்பணியாகும். 

 அவ்வகையில்  புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினைத் தருமபுர ஆதீனத்தில் 29.  08. 2026 நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம்  வழங்கியது. 

 மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குச்  ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், நூல் பரிசுகள் முதலியனவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து, குருமகா சந்நிதானங்கள் ஆசி கூறினார்கள். 

 தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற நிகழ்வில் முனைவர் மு. இளங்கோவனுக்குச்  ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினைத் தவத்திரு குருமகா சந்நிதானங்கள் வழங்கும் அரிய காட்சியைப் படமாக்கித் தமிழன்பர்களின் பார்வைக்கு வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். 

 விருது நல்கிப் புரந்தருளியமைக்கும், படக்காட்சிகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கவும் இசைவு நல்கிய முனைவர் தவத்திரு கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கும் கடப்பாடு உடையோம்.

காணொலி இணைப்பு: இங்கே

சனி, 29 ஆகஸ்ட், 2026

முனைவர் மு. இளங்கோவனுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர் விருது!

 

தவத்திரு  கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் 
சுவாமிகள் மு.இளங்கோவனுக்கு விருது நல்கி, ஆசி வழங்குதல்

தமிழ்ப்பணியும் சமயப் பணியும் செய்துவரும் தருமபுர ஆதீனம் தொடர்ந்து  தமிழ்த்தொண்டாற்றிவரும் அறிஞர்களுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர்களின் பெயர்களில் நினைவு விருதினை  வழங்கிவருகின்றது

புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் . தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினை தருமபுர ஆதீனத்தில் இன்று (29/08/2026) நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம்  வழங்கியது

தருமபுர ஆதீனத்தின் இருபத்தேழாம் பட்டம், தவத்திரு முனைவர், கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்கள் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குத்  . தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பன்னிரு திருமுறை நூல் தொகுப்பு, திருக்குறள் உரைவளத் தொகுப்பு முதலியவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து ஆசி கூறினார்கள்

முனைவர் மு. இளங்கோவன் தமிழ் இணையத்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் பாராட்டும் வகையில் தண்டபாணி தேசிகர் விருது தருமபுர ஆதீனத்தால்  வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

முரசு நெடுமாறனாரைக் கண்டு வணங்கினேன்!

  

முரசு நெடுமாறனாரிடம் தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூல் அளிக்கும் முனைவர் மு. இளங்கோவன்

 அண்மையில் மலையகச் செலவு மேற்கொண்டிருந்தேன். உலகத் தொல்காப்பிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதையும் தொல்காப்பிய அறிஞர்களைக் கண்டு மகிழ்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இச்செலவு அமைந்தது.  தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட உள்ள தொல்காப்பியக் கோட்டத்தின் இடத்தினைக் காண்பதையும் என் செலவில் இணைத்துக்கொண்டேன். யாவும் சிறப்பாக அமைந்தன. 

 24.08.2026 மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முனைவர் முரசு நெடுமாறனார் அவர்களைக் கண்டு வணங்கும் பேறு பெற்றேன். முரசு ஐயாவுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுக் காலமாக, வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது. மலேசியத் தமிழர்களையும் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம் செய்த பெருந்தகை முரசு நெடுமாறனார் என்று பனிமலை உயர்வில் நின்று உரக்கச் சொல்ல இயலும். 

 முரசு நெடுமாறனார் உருவாக்கிய மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் அரும்பெரும் தமிழ்ப் புதையல் உருவாக்கும் அற்றைப் பொழுதிலிருந்தே முரசு அவர்களின் உழைப்பையும் தமிழ் ஆர்வத்தையும் கண்டு கண்டி வியந்துள்ளேன். மலேசியாவுக்கு முதன்முதல் சென்றபொழுது(2001) என்னையும் என் பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்களையும் வரவேற்று, இல்லிருத்தி, விருந்தோம்பிய நினைவுகள் கால் நூற்றாண்டைக் கடந்த பின்பும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. முரசு அவர்களின் குடும்பத்தார் காட்டிய அன்பையும் பெரும் பாசத்தையும் எண்ணி எண்ணி உருகுகின்றேன். முரசு அவர்களுக்கும் எனக்கும் நடந்த கடிதத் தொடர்புகளும், உரையாடல்களும் தனியொரு நூல் வரையும் அளவுக்கு செய்திச்செறிவு கொண்டவை. காலம் கனியும்பொழுது தனிநூல் உருப்பெறும். இது நிற்க. 

 முரசு அவர்கள் சற்றொப்ப தொண்ணூறு அகவையைத் தொட உள்ளார். தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட உயரிய சிறப்பு ஆரங்களைப் பெற்று ஆரங்களுக்குப் பெருமைசேர்த்தவர். மாநாடுகள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து, தமிழாய்வுக்குத் துணைநின்றவர். இத்தகு பெரும்புலச் சான்றோரைக் கண்டு தகைசால் தமிழ்த்தொண்டர்கள் என்ற என் நூலினை அவர்தம் மாணடி சேர்த்து, மனங்குளிர்ந்த வாழ்த்தினைப் பெற்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளில் ஏற்றம் தரும் பொழுதாகும். 

 முரசு நெடுமாறனார் நூற்றாண்டினைக் கண்டு, எங்களை வழிநடத்த  வணங்கி வாழ்த்துகின்றேன்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் குறள்நெறிக் கழகம் நடத்தும் திருக்குறள் மறுமலர்ச்சி மாநாடு


நாள்: 02. 08. 2026, ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை 9 மணி முதல் (முழுநாள் நிகழ்வு) 

இடம்: வி.வி. சண்முகம்வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபம், அருப்புக்கோட்டைச் சாலை, அல்லம்பட்டி, விருதுநகர் 

 மாநாட்டு நிகழ்வுகள்: பேரணி, கொடியேற்றம், திருவள்ளுவர் படத்திறப்பு, திருக்குறள் இசை நிகழ்ச்சிகள், தொடக்க விழா, நூல்கள் வெளியீடு, வாழ்த்துரை, விருதுநகர் மாவட்டத்தில் மறைந்த குறள்நெறிச் சான்றோர்களின் படத்திறப்பு, பாட்டரங்கம், வழக்காடு மன்றம், உரையரங்கம், கருத்தரங்கம், நிறைவு விழா பரிசளிப்பு என்னும் அமைப்பில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்குறள் அறிஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். 

ஒருங்கிணைப்பாளர்: புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் 

தொடர்பாளர்கள்:

பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் - 8056035782

பேராசிரியர் கா. சிறீதர் - 9486592380

தலைமையாசிரியர் கா. நல்லதம்பி - 9443631639







வியாழன், 30 ஜூலை, 2026

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் சிறப்பு நேர்காணல்

 


 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இலக்கியத்துறையின் முன்னைத் தலைவரும் மூத்த தமிழறிஞருமான கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, படைப்பு நூல்கள் என்று பன்முக ஆற்றலால் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பெருந்தகையாளர் ஆவார். இவர்தம் கடந்தகால வாழ்வியலை அறிந்துகொள்ள, 25.07.2026 அன்று தஞ்சையில் பேராசிரியரின் “வள்ளுவம்”  இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். தமிழகத்துக்குத் தேவையான தமிழ்க் கல்வி சார்ந்தும், தமிழிலக்கியப் போக்குகள் குறித்தும், தம் கடந்தகால தமிழ் வாழ்வு குறித்தும், தம் ஆசிரியப் பெருமக்கள் குறித்தும் பெருமையோடு உரையாடிய செய்திகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். 

 கடல்கடந்த நாடுகளிலும் தமக்கான மாணவச் செல்வங்களைப் பெற்றுத் திகழும் கு.வெ.பா. ஐயாவை நிகர்த்த நற்றமிழ்ச் சான்றோர்களை இற்றைத் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிஞர் பெருமகனாரின் அரிய செவ்வியைக் கேட்டுச் சுவைக்குமாறு உரிமையோடு தங்களை வேண்டுகின்றேன்.

காணொலி இணைப்பு

செவ்வாய், 28 ஜூலை, 2026

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2026

 

 

  தமிழ்நாட்டு அரசு கலை, பண்பாட்டுத்துறை ஆதரவுடன், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப்புலமும் இணைந்து நடத்தும் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு 2026, ஆகத்து மாதம் 04, 05, 06 ஆகிய நாள்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது

  04. 08. 2026 (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழத்து இசைத்துறை மாணவர்களின் மங்கல இசை, வாழ்த்துப் பாடல்களுடன் தொடக்க விழா இனிதே தொடங்குகின்றது. முனைவர் தி. அருட்செல்வி அவர்கள் வரவேற்புரையாற்றவும், சிங்கப்பூர்த் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவுநர் ப. புருடோத்தமன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். 

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ்த் தொகுதி 6 தமிழிசைப்பாடல்கள் நூலினைத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.அறிவுடைநம்பி வெளியிட, இசையறிஞர் குரு. ஆத்மநாதன் பெற்றுக்கொள்வார். 

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ்த் தொகுதி 3 தமிழிசைப்பாடல்கள் நூலினைப் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முனைவர் ஆர். சிங்காரவேல் வெளியிட, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 

 முனைவர் வி. எல் .வி. சுதர்சன் அவர்கள் எழுதிய இன்தமிழ் இசைப்பாடல்கள் நூலினைப், ப. புருடோத்தமன் வெளியிட, பண்ணிசைப் பேரறிஞர் திருத்தணி என். சுவாமிநாதன் பெற்றுக்கொள்வார்கள். 

 தருமபுர ஆதீனம் இருபத்தேழாம் பட்டம்  முனைவர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு  திருத்தணி என் சுவாமிநாதன், குடந்தை தி. இலட்சுமணன் ஆகியோர்க்கு முதுபெரும் பாணர் விருதினையும்,  திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்களுக்குப் பெரும்பாணர் விருதினையும் வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். 

 பொறியாளர் இரா. கோமகன் வாழ்த்துரை வழங்கவும், முனைவர் வ. ல. வே சுதர்சன் நன்றியுரை வழங்கவும் உள்ளனர். 

 இந்தப் பன்னாட்டு மாநாட்டில் இசையறிஞர்கள் டி. கே. எஸ். கலைவாணன், திருபுவனம் ஆத்மநாதன், வலிவலம் ஆர். எஸ். வெங்கட்ராமன் ஆகியோரின் இன்னிசைப் பயிலரங்குகள் நடைபெற உள்ளன. 

  முனைவர் மு. இளங்கோவன்,  முனைவர் செ. கற்பகம், முனைவர் இரா. கா. குமார், முனைவர் தி. அருட்செல்வி, முனைவர் வ. ல. வே. சுதர்சன், முனைவர் நா.கிரிஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு அமர்வுகள் நடைபெற உள்ளன. 

 தமிழிசை ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.