நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 நவம்பர், 2025

புலவர் துரை. தில்லான்

  

புலவர் துரை. தில்லான் 

[புலவர் துரை. தில்லான் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இலக்கணப் புலமையுடையவர். பன்னூலாசிரியர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொறுப்புகளில் இருந்தவர். ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். ஆசிரியப் பணியை ஈடுபாட்டுடன் செய்ததுடன் சீர்திருத்தத் திருமணங்களை நடத்திவைத்தவர். எழுத்து, பேச்சு வழியாகத் தமிழ்ப்பணியாற்றியவர். சின்னாளபட்டியில் வாழ்ந்து வருபவர்] 

புலவர் துரை. தில்லான் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த துரைச்சாமி, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 15.06.1934 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் தொழில் வேளாண்மையாகும். தில்லான் என்பது தில்லையில் இருக்கும் இறைவன் நினைவாக அமைந்த பெயர் (சிதம்பரத்திற்குத் தில்லைவனம் என்று பெயர் உள்ளமையும் அவ்வூர் இறைவன் தில்லையான் என்று அழைக்கப்படுவதையும் நினைவிற்கொள்க. தில்லையான் என்பது மருவி தில்லான் என்று அமைந்தது. குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைக்குத் தில்லான் எனவும் பெண் பிள்ளைக்குத் தில்லையம்மாள் எனவும் பெயர் வைப்பது இன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கில் உள்ளது). புலவர் துரை. தில்லான் தம் பிறந்த ஊரான கும்மம்பட்டியில் முதல் ஐந்து வகுப்புகள் பயின்றவர். அருகில் உள்ள பஞ்சம்பட்டியில் உள்ள பள்ளியில் ஆறு முதல் எட்டு வகுப்புகளைப் பயின்றவர். 

புலவர் துரை. தில்லான் அவர்கள் 1952 முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் ஆர்வ மேலீட்டால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் படிப்பு, புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி முதலியவற்றைப் படித்தவர்.  தொடக்கப்பள்ளி ஆசிரியராக எட்டு ஆண்டுகளும் தமிழாசிரியராக 33 ஆண்டுகளும்  பணியாற்றியவர். நல்லூர் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம், வேடசந்தூர், நி. பஞ்சம்பட்டி முதலான ஊர்களில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிப் புகழ்பெற்றவர். 

புலவர் துரை. தில்லான் இல்லற வாழ்வு 

புலவர் துரை. தில்லான் அழகுத்தாய் அவர்களை 15. 09. 1958  இல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்குப் பொன்னரசி, மங்கையர்க்கரசி, அன்புச்செல்வி, தாமரைக்கண்ணன், வசந்தமாலை ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

புலவர் அழகுத்தாய், புலவர் துரை. தில்லான் 

புலவர் துரை. தில்லானின் ஆசிரியப் பணியும் சமூகப் பணியும் 

புலவர் துரை. தில்லான் அவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியராக நல்லூர்ப் பள்ளியில் இணைந்ததிலிருந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுடன் அமையாமல் ஊர் மக்களுக்குப் பலவகையில் உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவரிடம் படித்து முன்னேறியவர்களின் பட்டியல் மிக நீண்டதாகும். வறுமையிலும் அறியாமையிலும் இருந்த மக்கள் கூட்டத்திலிருந்து பிள்ளைகளைப் பிரித்தெடுத்து, அவர்களுக்கு நல்லறிவும் நற்புண்பும் ஊட்டி வளர்த்துள்ள இவர்தம் தூய உள்ளத்தை வாழ்க்கைத்தடம் என்ற பெயரில் இவர் எழுதியுள்ள தன்வரலாற்று நூலில் கண்டு மகிழ முடியும். 

சின்னாளப்பட்டு, வேடசந்தூர் பகுதிகளில் பல்வேறு சீர்திருத்தத் திருமணங்களை நடத்திவைத்து, பலர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர். வறுமையில் உழன்ற மாணவர்களுக்கு இயன்ற அளவு நிதியுதவிசெய்து, அவர்களைப் படித்தவர்களாகவும் பணிபுரிபவர்களாகவும் மாற்றியமைத் துள்ளார். தம்முடன் பணியாற்றிய ஆசிரியர்கள், தமக்கு உதவிய ஊர்ப்பெரியவர்கள், தம்மிடம் படித்த மாணவர்கள் குறித்து இவர் நினைவிலிருந்து எழுதியுள்ள செய்திகள் தமிழகத்துக் கல்வி முறையை அறிந்துகொள்ள உதவும் ஆவணச் சான்றுகளாக உள்ளன. பள்ளிகளுக்கு உரிய கட்டடங்கள் கட்டியது, மின் இணைப்புப் பெற்றது, சாலை வசதிகளை மேம்படுத்தியது என்று கல்விப்புலத்துக்கு அப்பால் செய்துள்ள பணிகள் இவரைத் தொழுது வணங்கும்படிச் செய்கின்றது. 

தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம், இந்தித் திணிப்பு, காமராசரின் கல்விப்புரட்சி, குறித்த பல செய்திகளையும் புலவர் தில்லான் பதிவுசெய்துள்ளார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், அருட்கவி அரங்க. சீனிவாசன், தமிழண்ணல் முதலான அறிஞர் பெருமக்களுடன் தமக்கிருந்த தொடர்பினையும் வாழ்க்கைத் தடம் நூலில் புலவர் துரை. தில்லான் பதிவுசெய்துள்ளார். 

பாவாணர் பெயர்த்தியின் வறுமையறிந்து உதவியமை 

மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் மகன்வழிப் பெயர்த்தி பரிபூரணம் அவர்கள் வறுமையில் வாழ்வதைக் குமுதம் இதழ்(17.8.2005) வாயிலாக அறிந்து தம் ஆசிரியர் இயக்கம் சார்ந்த நண்பர்களின் துணையுடன் 27,500 உருபாவினை(09.10.2005) வழங்கியமை இவரின் ஈர உள்ளத்துக்குச் சான்றாகும்.(வாழ்க்கைத் தடம், பக்கம் 214). 

தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தொடர்பு 

புலவர் துரை. தில்லான் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பல்வேறு முதன்மைப் பொறுப்புகளை ஏற்றுக் கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். மாநிலத் தேர்வுச் செயலராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர்(1988-1994) கழகத்தின் சார்பில் வெளிவந்த “நமது தமிழாசிரியர்” திங்களிதழின் பொறுப்பாசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ்நாட்டு அரசின் பாடநூல் குழுவில் பத்தாம் வகுப்புக்கு உரிய பாட நூல் உருவாக்கும் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய பட்டறிவு உடையவர். 

ஆசிரியர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் 

புலவர் துரை. தில்லான் தாமே முயன்று படித்துப் பெரும்புலமை பெற்றவர். அதனால் தம்மைப் போல் பலரும் தமிழ் படிப்பதற்கு உரிய வகுப்புகளை நடத்திப் பலரைத் தமிழாசிரியராக மாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. இலக்கணத்தை மிக எளிமையாக மக்கள் வழக்கில் உள்ள உதாரணங்களைக் காட்டி விளக்குபவர். எனவே இவரின் பணிகளைப் பல்வேறு அரசு அமைப்புகள் பயன்படுத்திக்கொண்டன. பல மாவட்டங்களில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு இலக்கணப்பாடம் நடத்தியவர். தமிழ் வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் சமத்துவ முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து உழைத்து வருபவர். 92 அகவையிலும் சின்னாளப்பட்டியில் இருந்தபடி தமிழ்ப்பணிகளிலும் அறப்பணிகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு வாழ்ந்து வருபவர். 

புலவர் துரை. தில்லான் பெற்ற சிறப்புகளும் விருதுகளும் 

துரை. தில்லானின் தமிழ்ப்பணிகளையும் கல்விப்பணிகளையும் போற்றி அரசும் அமைப்புகளும் பல்வேறு சிறப்புகளைச் செய்துள்ளன. அவற்றுள் சில: 

1.   தமிழ்ச்செம்மல் விருது, தமிழ்நாடு அரசு, 21.12. 2022

2.   நல்லாசிரியர் விருது, தமிழ்நாடு அரசு, 1985

3.   இலக்கணச் செம்மல், திரு.வி.க. மன்றம், கரூர்

4.   இலக்கணக் குரிசில், திருக்குறள் மாமணி, தமிழாசிரியர் கழகம்

5.   செம்மொழிச் செம்மல், திண்டுக்கல் தமிழ்ச்சங்கம் 

புலவர் துரை. தில்லானின் தமிழ்க்கொடை 

1.   குழந்தைப் பாடல்கள்

2.   ஒரு நூல் தூது செல்கிறது

3.   இலக்கணத் தடம் – எழுத்து

4.   இலக்கணத் தடம் – சொல்லதிகாரம்,2016

5.   இலக்கணத் தடம் – பொருள்

6.   இலக்கணத் தடம் – யாப்பு, 2023

7.   வள்ளலார் இலக்கண மாண்பு

8.   வள்ளலாரின் விரிவுரைத் திறன்

9.   வாழ்க்கைத் தடம், 2021

 


 


 


  

சனி, 29 நவம்பர், 2025

புலவர் பெ. கறுப்பண்ணன்

 

புலவர் பெகறுப்பண்ணன் 

[புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர்.  நடையனூர் அரங்கசாமி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் இயற்றியுள்ள தொல்காப்பியம் - திருக்குறள் ஒப்பாய்வு நூல் அரிய ஆராய்ச்சி நூலாகும். இலக்கியப் பொழிவுகள் ஆற்றுவதில் ஈடுபாடுகொண்ட இவர் கண்ணர்குல வரலாறு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.] 

பெ. கறுப்பண்ணன் அவர்கள் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை அடுத்துள்ள மோளையாண்டிபட்டி என்னும் சிற்றூரில் உழவர்குடியில்  பிறந்து, வாழ்ந்த சி. பெரியசாமி, பொன்னம்மாள் ஆகியோரின் மகனாக 26.04.1945 இல் பிறந்தவர். 

பெ. கறுப்பண்ணன்  மோளையாண்டிபட்டியில் அமைந்துள்ள ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்.  அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்றவர். ஒரத்தநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் - 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர். 

பெ. கறுப்பண்ணன் திருவையாறு அரசர் கல்லூரியில் 1963 முதல் 1967 வரை வித்துவான் வகுப்பில் பயின்றவர். அதுபொழுது அங்குப் பணியாற்றிய தமிழ்நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களின் அன்புக்கு உரிய மாணவராக விளங்கியவர். அவர் வழங்கிய ஆங்கிலச் சான்றிதழைத் தம் வாழ்வின் பெறற்கரும் செல்வமாகப் போற்றி வருபவர். சென்னை, சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி பெற்று, கரூர் மாவட்டம் காவிரியின் தென்கரையின்பால் உள்ள நடையனூர் அரங்கசாமி உயர்நிலைப் பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராக 1968 இல் பணியைத் தொடங்கி, 2002(மார்ச்சு) ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றவர். 

புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் 1971 ஆம் ஆண்டு மா. காளியம்மாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். மா. காளியம்மாள் அவர்களும் ஆசிரியர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இல்லறப் பயனாய் மருத்துவர் க. கண்ணன், மருத்துவர் க. கவிதா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இம்மருத்துவர்கள் இருவரும் கரூரிலும் கொடுமுடியிலும் மருத்துவப் பணியாற்றி வருகின்றனர். 

புலவர் பெ. கறுப்பண்ணன் பணியில் இருந்தவாறு சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வெழுதித் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று கல்வியியல் பட்டம் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் கரூர் மாவட்டத் தலைவராகப் பணியாற்றியவர். இலக்கியச் சொற்பொழிவாற்றியும் தமிழில் நூல்களைப் படைத்தும் தமிழ்த்தொண்டாற்றி வருபவர். 

இவர் எழுதியுள்ள தொல்காப்பியம் – திருக்குறள் ஒப்பாய்வு என்னும் நூல் தமிழாய்வு உலகில் குறிப்பிடத்தக்க நூலாக வெளிவர உள்ளது. தொல்காப்பியக் கருத்துகள் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதைத் தம் புலமைநலம் தோன்ற ஒப்பிட்டுக் காட்டி, புலவர் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

தமிழின் வேர்கள் என்ற இவர்தம் நூல் தமிழுக்கு ஆக்கமான நூலாகும். தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை, எழுத்தின் தோற்றம், பெயர், சார்பெழுத்துகள் ஓர் ஆய்வு, எழுத்துகளின் பிறப்பு, முறை, உரு – வரிவடிவம், உயிர்மெய், புணர்ச்சி முதலான 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. இந்நூலில் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் இலக்கண ஈடுபாடு சிறப்புற்று விளங்குவதை அறியலாம். 

பெ.கறுப்பண்ணன் அவர்களுக்கு இலக்கணச் செம்மல் என்னும் விருதினை மயிலம் பொம்மபுர ஆதீனம் 19 ஆம் பட்டத்தின் நூற்றாண்டு விழா கருவூரில் நடைபெற்றபொழுது அறிஞர்களால் வழங்கப்பெற்றுப் பாராட்டப்பெற்றவர். 

புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் தமிழ்க்கொடைகள்: 

1.   வாழ்த்தும் வாழ்வும் நேர்நிறையில் வாழ்த்துக. சங்கம் – கண்ணதாசன் வரை ஆய்வு

2.   கற்புக் காண்டம்

3.   கண்ணர்குல வரலாறு

4.   வருகைப் பருவம் – கலிவிருத்தம், காவடிப்பாடல். ஏடு பதிப்பு

5. திருக்குறள் – ஒருவரி தொகுப்புரை : 1330 குறளுக்கும் ஒருவரியில் இசைப்பா. அதிகாரக் கட்டுரைகள்

6. கொங்கு மங்கைக்கோர் மங்கல வாழ்த்து: ஆய்வு நூல்; தங்கைக்கிணைச்சீர், தாய்க்கு எழில் திங்கள் சீர், மனைவிக்கு மணச்சீர், மகளுக்குத் திரட்டி சீர், அருமை அய்யனின் சடங்கு.

7.   தமிழின் வேர்கள் தமிழ் எழுத்துகள் குறித்த ஆய்வு நூல். (2022)

8.   கறுப்புச்சாமி – வெண்பா மாலை – முன்னோர் வழிபாடு (வெளியீடு:2024 )

9.   தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு


தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையரின் சான்று (1967)









 

 

 

திங்கள், 24 நவம்பர், 2025

இலண்டன் சிவாப் பிள்ளை மறைவு!

  


இலண்டன் சிவாப் பிள்ளை (1942-2025)

 இலண்டனில் வாழ்ந்து வந்த சிவாப் பிள்ளை அவர்கள் கம்போடியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்த நிலையில் மாரடைப்பால் அங்கு இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவருக்கு வயது 83 ஆகும். கடந்த கால் நூற்றாண்டாக ஐயாவுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். என் தந்தையார் ஒத்த வயதுடைய ஐயா அவர்கள் என் வகுப்புத் தோழர் போல் பழகியவர். முதன் முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழாசிரியர் சங்கத்து மாநாட்டில் கண்டு பழகினேன். அதுமுதல் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, உரையாடியுள்ளோம். 

 சிவாப் பிள்ளை அவர்கள் 1942 மே 9 இல் இலங்கையில் பிறந்தவர். பெற்றோர் சிவ. கணபதி பிள்ளை, நாகம்மா ஆவர். இந்துக் கல்லூரியில் 19 அகவை வரை கல்வி பயின்றவர். பிறகு இலங்கையில் உள்ள மாணவ ஆசிரியர் பயிற்சியைக் (Teacher Training) கோப்பாய்க் கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேரமாகப் பயின்றவர். இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த இடையூற்றின் காரணமாகவும் செல்வச் செழிப்பின் காரணமாகவும் இலண்டனுக்கு 1967 இல் படிக்கச் சென்றார். Diplomo in Mecanical Enginering பயின்றவர். பகுதிநேரமாகக் கணிப்பொறி, தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார். நாட்டிங்காம் பல்கலைக்கழகம் இவர்தம் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது. பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி ஆய்வாளராகப் (1977-1980) பணி புரிந்தார்.  1980 இல் கோல்டுசுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றவர். தமிழ்க் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிப்பதைத் தம் பணியாகச் செய்து வந்தவர். 

 இறையீடுபாடு கொண்ட சிவாப் பிள்ளை அவர்கள் தமிழகம் வரும்பொழுதெல்லாம் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா அவர்களின் விருந்தினராகத் தங்கிச் செல்வது வழக்கம். அண்மையில் தமிழகம் வந்திருந்தபொழுது தருமபுர ஆதீனம்,  தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணி விழாவில் கலந்துகொண்டு, ஆசிபெற்றவர். 

 கம்போடியா பயணத்தின்பொழுது சிவாப் பிள்ளையின் உயிர் பிரிந்தமையை நினைத்து வருந்துகின்றேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். 

 05.10.2008 இல் தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் சிவாப் பிள்ளை குறித்து நான் எழுதிய கட்டுரையை என் வலைப்பதிவிலும் பதிந்துள்ளேன். ஆர்வலர்கள் படிக்க வருகை தாருங்கள்.