நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
நாமக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாமக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூலை, 2016

புலவர் பொ.வேல்சாமியின் உரைகளை ஆவணமாக்கும் பணி!

புலவர் பொ.வேல்சாமி

புலவர் பொ. வேல்சாமியின் கட்டுரைகளைக் காலச்சுவடு, தீராநதி, கவிதாசரன் உள்ளிட்ட ஏடுகளில் படித்ததுண்டு. ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் ஐயம் ஏற்படும்பொழுது அவருடன் உரையாட நினைத்தாலும் இருப்பிடம் அறியாது, காலங்கள் உருண்டோடின. சிலவாண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் சென்ற ஓர் இளங்காலைப் பொழுதில் பொ. வேல்சாமியின் இல்லம் சென்று கண்டுவந்தேன். அதன் பிறகு ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் இருவரும் உரையாடுவோம். சில நேரம் உரையாடல் மணிக்கணக்கில் நீள்வதும் உண்டு. பயனுடைய செய்திகளை  அமுதசுரபிபோல வழங்குவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் நூல்கள் இணையத்தில் கிடைப்பதைக் கண்டு அதனை உடனுக்குடன் தெரிவிப்பவர். அரிய பழைய நூல்களை மின்படிகளாக மாற்றி வைத்துள்ள இணையதளங்களின் முகவரிகளை எடுத்துரைப்பவர். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஒவ்வொரு முறையும் கூறத் தயங்குவதில்லை. இவரின் இல்லத்தின் அருகில் நாம் இருந்தால் நம் அறிவுத்தாகம் தணிப்பார் என்று நினைத்து, ஏமாற்றம்கொள்வதுண்டு.

பதிப்புச் சார்ந்த செய்திகளில் எனக்கு ஐயம் ஏற்பட்டால் உடனே பொ. வேல்சாமியை அழைத்து, தெளிவு பெறுவேன். உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பைத் தொடங்க நினைத்தபொழுது நோக்கம் கூறினோம்; ஆர்வமாகத் தழுவி அன்புமொழிகளைத் தந்தவர். இந்த மன்றத்தின் பொழுது, சற்றும் தயங்காமல் இணைந்துகொண்டவர். தொல்காப்பியம் தொடர்பில் சலிப்பில்லாமல் மணிக்கணக்கில் செய்திகளைச் சொல்பவர்.

தொல்காப்பியத்தின் பழைய பதிப்புகள் குறித்து விரல்முனையில் செய்திகளை வைத்திருப்பவர். பிற நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தொல்காப்பியம் பற்றியும், சங்க நூல்கள் பற்றியும் அறிவித்திருந்த நூற்றாண்டுப் பழைமையுடைய அறிவிப்புகளை நினைவூட்டுபவர்; ஆங்கிலப் பாதிரிமார்கள் தம் நூல்களிலும், அகரமுதலிகளிலும், நூலடைவுகளிலும் தொல்காப்பியம் குறித்து, வெளிப்படுத்தியுள்ள செய்திகளை நுட்பமாக விளக்குபவர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் கேட்கும் உரைகளை உலகம் கேட்கவேண்டும் என்று உறுதிபூண்டேன்; அந்த உரைகளும் உலகு உள்ளவரை நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வேட்கையுற்றேன்.

பொ. வேல்சாமியைப் புதுச்சேரிக்கு ஒருமுறை வந்து, உலகத் தொல்காப்பிய மன்றத்தில் சொற்பொழிவாற்றும்படிக் கேட்டுக்கொண்டேன். நாளும் நேரமும் வாய்க்கவேண்டும் என்று இருவரும் மாதக் கணக்கில் காலம் கடத்தினோம். நான் கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கிற்குச் சென்று, திரும்பிய பிறகு பொழிவை வைத்துக்கொள்ளலாம் என்று மனத்தளவில் உறுதியுரைத்தார்; உரைத்தபடி நாளும் கொடுத்தார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஏழாம் பொழிவுக்கு வருகை தரும் பொ. வேல்சாமியின் வருகைக்குக் காத்துக்கிடந்தேன்.

தொல்காப்பிய மன்றப் பொழிவுகள் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணிக்கு நிறைவுறும். தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை எனப் பதினைந்து நிமையம் கழிந்தாலும் ஒன்றேகால் மணிநேரம் சிறப்புரை அமையும். ஒன்றேகால் மணிநேரத்தில் பொ.வேல்சாமியின் பொழிவை அடக்கமுடியாது என்ற நினைவு எனக்குப் பிறகுதான் வந்தது.

பொ. வேல்சாமி அவர்களோ நாமக்கல்லில் முட்டைவணிகம் செய்யும் தொழில் முனைவர். அவரின் நிறுவனத்தில் சரக்குந்து ஓட்டவும், முட்டைகளைக் கணக்கிடவும், பணத்தை வாங்கி வைக்கவும் எனப் பல பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இவருக்கு உண்டு. வணிகத்தை விட்டுவிட்டு, தமிழ்க்காப்பு முயற்சிக்கு முதல்நாளே புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று கேட்க எனக்குத் தயக்கம் இருந்தது. இருப்பினும் என் விருப்பத்தைச் சொன்னதும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் முதல்நாள் இரவே புதுச்சேரிக்கு வர ஒப்புதல் தந்தார். தொல்காப்பியப் பொழிவுக்குரிய நாளும் வந்தது. பொ. வேல்சாமி தம் மகிழ்வுந்தில் புதுச்சேரிக்கு வந்துகொண்டிருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தார். அவர் தங்குவதற்கு ஒரு விடுதியை ஏற்பாடு செய்திருந்தேன். இரவு பதினொரு மணியளவில் புதுவை வந்து சேர்ந்தார். கையில் இருந்த சிற்றுண்டியைக் கொடுத்து, உண்டு, ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு இல்லம் திரும்பினேன்.

23. 07. 2016 காலை 7 மணியளவில் விடுதியின் கதவைத் தட்டினேன். குளித்து முடித்தார்; உடைமாற்றிக்கொண்டு உடன்புறப்பட்டார். இந்த நேரத்தில் ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் வந்து இணைந்துகொண்டார்; சிற்றுண்டி முடித்தோம். புதுவையின் கடற்கரை ஒட்டிய கழிமுகப் பகுதியில் இருந்த அமைதியான தென்னந்தோப்பில் எங்களின் மகிழ்வுந்து நின்றது. படப்பிடிப்புக்கு ஆயத்தமானோம். ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தினோம்; பொ. வேல்சாமியை இருக்கையில் அமரவைத்து, அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் உரைப்பகுதிகளை நினைவூட்டிப் பேசும்படிக் குறிப்பிட்டோம்.
பொ. வேல்சாமியுடன் உரையாடும் மு..இ.

பொ.வேல்சாமி தமிழின் பன்முகத் தளங்களைக் கற்றறிந்தவர். கரந்தைப் புலவர் கல்லூரியின் மாணவர். பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ச.பாலசுந்தரம் போன்றவர்களிடம் பழந்தமிழ் நூல்களைப் படித்தவர். இலங்கைப் பேராசிரியர். கா. சிவத்தம்பியுடன் பழகி ஆய்வுப்போக்குகளை அறிந்தவர். இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, வரலாறு, சமூகவியல், கோட்பாட்டு ஆய்வுகளைக் கற்றுத் துறைபோனவர். எனவே இவரின் பேச்சை ஒரு வரம்பிட்டு அடக்க வேண்டும் என்று நினைத்தேன். இல்லையென்றால் பேச்சு வேறு வேறு வடிவங்களைப் பெற்றுவிடும் என்று நினைத்தேன். கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றைக் கரைக்குள் அடக்கி, கல்லணை கட்டித் தேக்கி, அதன் வேகத்தை வயலுக்குள் அமைதியாக்கி அனுப்பும் ஓர் உழவனைப் போல் புலவர் பொ. வேல்சாமியின் பேச்சை அமைக்க நினைத்து, சில தலைப்புகளில் தங்கள் பேச்சு இருக்கும்படி விரும்புகின்றேன் என்று கூறினேன். முழுவதும் உடன்பட்டதுடன் தலைப்புகளையும் செப்பமாக அமைக்க அறிவுறுத்தினார். அந்த வகையில்,

1.            நானும் தமிழும்
2.            தமிழ் மரபில் தொல்காப்பியம் பெற்ற இடம்
3.            தொல்காப்பியமும் வடமொழி மரபும்
4.            தொல்காப்பியமும் உரையாசிரியர்களும்
5.            தொல்காப்பியத்தைத் தமிழ்மக்கள் மறந்த வரலாறு
6.            தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு
         
என்ற தலைப்புகளில் அமையும்படி பொ. வேல்சாமியின் உரையைக் காணொளியில் பதிவு செய்தோம். ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் அவரின் உதவியாளரும் என் உள்ளக் குறிப்பறிந்து மிக உயர்ந்த தமிழ்ப்பணிக்குத் துணைநின்றனர். எங்களின் படப்பிடிப்புப் பணிக்கு வழக்கம்போல் இடமளித்து உதவிய திரு. செயப்பிரகாஷ் இராசு அவர்கள் என்றும் தமிழர்களின் நன்றிக்குரியவர். பொ. வேல்சாமியின் வாய்மொழியில் தமிழர்கள் தங்கள் பழம்பெருமையை விரைவில் கேட்டும், பார்த்தும் மகிழலாம்.

பதிந்த காட்சிகளைக் கண்டு மகிழ்தல்

படப்பிடிப்பில் இணைந்த முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

படப்பிடிப்பில்...

புதன், 18 ஜூன், 2014

கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு


எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி

கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு விருதுக்கு இந்தியா, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
                                                                                           
நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக ரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

புதினம்(நாவல்), கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை, மொழி பெயர்ப்பு, ஆகிய  நான்கு பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒரு பிரிவில் நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும், பிற பிரிவுகளில் வரப்பெற்ற இலக்கியங்களுக்குச் சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.

முதன்மை விருதுக்குத் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாவிட்டால், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு ஒரு இலட்சம் உரூபாய் பண முடிப்பு வழங்கப்படும்.

இந்த அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு இலக்கிய விருதுகள், பரிசுகளுக்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்தும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நூல்களின் முதல் பதிப்பு 2011, னவரி 1-ஆம் தேதி முதல் 2013, திசம்பர் 31-ஆம் தேதிக்குள் வெளிவந்திருக்க வேண்டும்.

படைப்புகளின் இரு படிகளுடன், தாமே உருவாக்கிய விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

 திரு. சி.ரங்கசாமி,
6-175, கே.ஜி.போஸ் அஞ்சல் நகர்,
போதுப்பட்டி கிளை அஞ்சல், நல்லிப்பாளையம் (வழி),
நாமக்கல் -637 003, தமிழ்நாடு

என்ற முகவரிக்கு ஆகத்து 31-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.


காலங்கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. நூல்களுடன் எழுத்தாளர்கள் சார்ந்த விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். நூல்களைப் படைப்பாளிகளும், பதிப்பகத்தாரும் அனுப்பலாம். படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவு அறக்கட்டளையைச் சார்ந்தது என்று டாக்டர் பொ. செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 3 அக்டோபர், 2011

நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா


கு.சின்னப்ப பாரதி, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், 
மு.இளங்கோவன், டாக்டர் பொ.செல்வராஜ், சி.ப.கருப்பண்ணன்

உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புதினமாக எழுதியவர் கு.சின்னப்ப பாரதி. கவிதைகள், சிறுகதைகளையும், தன்வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை உலக அளவில் தமிழ்ப்படைப்பாளர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பரிசளித்துப் பாராட்டிவருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு, பாராட்டு விழா அக்டோபர் இரண்டாம் நாள் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் தொடங்கிய விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். இந்த விழாவிற்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்ததுடன் இலங்கை, மலேசியா, இலண்டன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முனைவர் பா. கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றறது.

கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். அந்தோனி ஜீவா, கலை இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெ.மாதையன், முனைவர் மு.இளங்கோவன், மலேசியா எழுத்தாளர் பீர்முகமது, இலங்கை கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றினர்.

பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேசினார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்மொழிக்கு எனத் தனி சாகித்ய அகாதெமியை அரசு நிறுவ வேண்டும் எனவும், கு.சின்னப்ப பாரதி போன்ற எழுத்தாளர்கள் போற்றி மதிக்கப்பட வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.

தனது பிறந்த நாளைச் சக எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிக் கொண்டாடும் சிறந்த பண்பாட்டைத் தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் காட்டியிருக்கிறார் கு.சி.பா. எனவும் தமிழகத்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களைப் போன்று எழுதிக் குவித்து வருகின்றனர். ஆனால் எதைச் சொல்ல வருகிறோம், நமது கதையின் களம் எது, சமுதாயத்துக்கு இதனால் என்ன நன்மை விளையப் போகிறது என்றெல்லாம் யோசித்து எழுதுவதுதான் கு.சி.பா.வின் பாணி.

அவரது கதைகளில் யதார்த்தம் இருக்கும். நிஜ மனிதர்கள், நிஜ உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வது கு.சி.பா.வுக்குக் கைவந்த கலை எனவும் குறிப்பிட்டார்.

இவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாதெமி, ஞானபீட விருதுகள் ஏன் தள்ளிப் போகின்றன என்று தெரியவில்லை எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பனிநிலவு நூலை எழுதிய இலண்டனில் வாழும் வவுனியா இரா.உதயணன் அவர்களுக்கு முதல்பரிசாக ஐம்பதாயிரம் உரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் பத்தாயிரம் அளவில் நூலாசிரியர்களுக்குப் பணப்பரிசும் பாராட்டுச் சான்றும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கி அனைவரையும் பாராட்டினார்.

பரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் விவரம்:

வி.ஜீவகுமாரன் (டென்மார்க்)
- சங்கானைச் சண்டியன்

நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு)
- மாத்தகரி

சை.பீர்முகமது (மலேசியா)
- பெண் குதிரை

நடேசன் (ஆஸ்திரேலியா)
- வண்ணத்திகுளம்

தெணியான் (இலங்கை)
- ஒடுக்கப்பட்டவர்கள்

கே.விஜயன் - (இலங்கை)
- மனநதியின் சிறு அலைகள்

சிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்

தனபாலசிங்கம் (இலங்கை)
- ஊருக்கு நல்லது சொல்வேன்

கலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்

உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.

பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

ஆர்.எஸ்.ஜேக்கப் - பனையண்ணன்,

சுப்ரபாரதி மணியன்
-சுப்ரபாரதி மணியன் கதைகள்

முனைவர் மு.இளங்கோவன் - இணையம் கற்போம்

புவலர். இராச.கண்ணையன் - குறளோசை

ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி

குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்

லேனா தமிழ்வாணன்
- ஒரு பக்கக் கட்டுரை 500

வெண்ணிலா - நீரில் அலையும் முகம்

பூங்குருநல் அசோகன்
- குமரமங்கலம் தியாக தீபங்கள்

கூத்தங்குடி அழகு ராமானுஜன்
- காவிரி மண்ணின்
நேற்றைய மனிதர்கள்

வாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:

தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மயிலை பாலுவுக்கும், தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தில்லியைச் சேர்ந்த எச். பாலசுப்ரமணியத்துக்கும் அளிக்கப்பட்டது.

அதேபோல், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி புரிந்து, அவர்களை ஊக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த புரவலர் ஹாசிம் உமருக்கு இலக்கியக் கொடைச்சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விழாவில், எச்.பாலசுப்ரமணியம் இந்தியில் மொழியாக்கம் செய்த பனி நிலவு, உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த தாகம், இந்திய இலக்கியத்திற்குக் கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட்டது.

சி.அரங்கசாமி நன்றியுரையாற்றினார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்கியதுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்..


கொழுந்து ஆசிரியர் அந்தோனி ஜீவா(இலங்கை)பரிசுபெறல்


வவுனியா உதயணன் பரிசுபெறல்


தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மு.இளங்கோவன்


பார்வையாளர்கள்,


பார்வையாளர்கள், பரிசுபெறுவோர்


மு.இளங்கோவன் உரை

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது விழா 2011


அழைப்பிதழ்

கு.சின்னப்ப பாரதி அவர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளைத் தாங்கி, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தம் புதினங்களில் இடம்பெறச் செய்தவர். நிலைத்த படைப்புகளை வழங்கி உலகப் புகழ்பெற்றவர். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பணப்பரிசில் வழங்கிப் பாராட்டப்பட உள்ளன. இதற்கான விழா எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது.

காலை 9.30 மணியளவில் தொடங்கும் விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்குகின்றார். இந்த விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். வெளிநாட்டிலிருந்தும் பல பேராளர்கள் வருகைதர உள்ளனர்.

முனைவர் பா,கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.

கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றவும், ச.தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றவும் உள்ளனர். பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேச உள்ளார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றுவார்.

சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். வவுனியா இரா.உதயணன், அத்திப்பள்ளி இராம மோகனராவ் (தெலுங்குமொழிப் படைப்பாளர்) ஆகியோர் விருதும் பரிசும் பெற உள்ளனர்.

சிறப்புப் பரிசிலாக வெளிநாட்டினர் பத்துப்பேரும், தமிழ்நாட்டினர் பன்னிருவரும் பரிசுபெற உள்ளனர். நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட உள்ளது. நூல் வெளியீடும் நடைபெறுகின்றது. சி.அரங்கசாமி நன்றியுரையாற்ற உள்ளார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்க உள்ளார்.


அழைப்பிதழ் (பின்பகுதி)

திங்கள், 8 மார்ச், 2010

நாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களில் தமிழ் இணையம் அறிமுகம்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் கல்வித்துறையில் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது.அம்மாவட்ட ஆட்சியராக விளங்கும் திரு.சகாயம் இ.ஆ.ப.அவர்களின் தன்னம்பிக்கை,தமிழ்ப்பற்று,தூய்மையான ஆளுகை ஆகியவற்றை நண்பர்கள் வழியாகவும்,செய்தி ஏடுகள் வழியாகவும் அறிந்திருந்தேன்.அவர்களை வாய்ப்பு நேரும்பொழுது கண்டு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அதனிடையே காவல்துறையில் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்ப்பற்றாளர் திரு.கருப்பண்ணன் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று அங்கு(நாமக்கல்)ச் செல்ல பலநாள் நினைத்தும் 05.03.2010 அன்றுதான் கைகூடியது.நானும் திருவாளர் கருப்பண்ணன் அவர்களும் முன் பார்த்தறியாதவர்கள்.உணர்வொத்தவர்கள்.

புதுச்சேரியில் என் பணிமுடித்து,மாலை 6 மணியளவில் விழுப்புரத்தில் தொடர்வண்டி ஏறினேன்.இரவு 9.15மணியளவில் திருச்சிராப்பள்ளி சென்றடைந்தேன்.உணவுக்குப் பிறகு நாமக்கல் நோக்கிச் செலவு. இடைக்கிடையே நான் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறேன் என்று அன்பு வினவுதல் நம் கருப்பண்ணன் ஐயாவிடமிருந்து தொடர்ந்துகொண்டிருந்தன.நடு இரவு 12.15 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனக்காகக் கருப்பண்ணன் அவர்கள் காத்திருந்தார்.என்னைக் கண்டதும் ஐயாவுக்குச் சிறிது மருட்சியாக இருந்தது.காரணம் நான் அகவை முதிர்ந்த ஆளாக இருப்பேன் என்று நினைத்து முதலில் ஏமாற்றம் அடைந்தார்கள்.ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆனோம்.

அந்த நடு இரவில் சில காட்சிகளைக் காட்டினார்.நகராட்சி இசைவு பெற்று மக்களுக்குப் பயன்படும் பொன்மொழிகளைப் பேருந்து நிலையச்சுவர்களில் அவர் ஓய்வுக் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து தம் கைப்பட எழுதி வருவது கண்டு மகிழ்ந்தேன்.கையூட்டுக்கு எதிராக ஒரு போராளியாகச் செயல்படும் இவர் தம் பணிக்காலத்தில் தூய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.மக்களின் வரிப்பணத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும் அம்மக்களுக்கு உழைப்பதே தம் கடமை எனவும் கூறினார்.இவர் போன்ற அதிகாரிகளைப் பார்க்கும் பொழுதுதான் அரசு ஊழியர்களில் சிலராவது நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.

இரவு அவர் இல்லத்தில் தங்க வைத்து உரையாடினார்.நடு இரவு இருவரும் கண் அயர்ந்தோம்.காலையில் கண் விழித்ததும் என்னைக் காண நூல் தொகுப்பாளர் திரு. இராமசாமி ஐயா அவர்கள் வந்துவிட்டார். அவர்கள் கீழே விழுந்து கால் பாதிக்கப்பட்ட சூழலிலும் என்னைக் காண வந்தமை நெகிழ்ச்சியாக இருந்தது.அவர் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்?.முன்பே அன்னாரைத் தமிழ் ஓசை நாளேட்டில் நேர்கண்டு எழுதி அவரின் தமிழ்ப்பணியை வெளியுலகுக்குக் கொண்டுவந்தேன்.(என் வலைப்பூவிலும் அவர் பற்றி செய்தி உள்ளது).சிறிது உரையாடி மீண்டும் சந்திப்பதாக உறுதியளித்து, செல்வம் கல்லூரிக்குக் காலை 9.30 மணிக்குச் சென்றோம்.

செல்வம் கல்வி நிறுவனம் நாமக்கல்லின் புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரி எனப் பல நிறுவனங்கள் உள்ளன.ஆசிரியர்களும் மாணவர்களுமாக 150 பேருக்கு மேல் அரங்கில் ஒன்றுகூடினோம். தினமணி செய்தியாளர் திரு.முருகன் அவர்கள் வந்திருந்து செய்திகளைச் சேகரித்து மறுநாள் கோவைப் பதிப்பில் விரிவாக வெளியிட்டிருந்தார்.

தமிழ் இணைய வரலாற்றை நினைவூட்டித்,தமிழில் நாம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் ஆங்கில அறிவு அதிகம் தேவை என நினைக்காதீர்கள்,ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி,தமிழ்த்தட்டச்சு தொடங்கி மின்னஞ்சல்,வலைப்பூ,நூலகங்கள்,மின்னிதழ்கள் பற்றி எடுத்துரைத்தேன்.அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் வரவேற்றார். திரு.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு.செந்தில் அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுவைக்குப் புறப்பட்டேன்.திரு.இராமசாமி ஐயாவைச் சந்திக்க இயலாதவாறு என் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தது.அவரிடம் மீண்டும் ஒருமுறை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.


திரு.கருப்பண்ணன்,திரு.இராமசாமி


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்


பேராசிரியர்கள்,மாணவர்கள்


நானும்,கல்லூரி முதல்வர் திரு.செந்தில்குமார் அவர்களும்


நான்,திரு.கருப்பண்ணன்(காவல்துறை-ஓய்வு),திரு.சொக்கலிங்கம்(முதல்வர்),பிற பேராசிரியர்கள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

நாமக்கல்-கடலூர் இணையப் பயிலரங்குகள்

கடலூர் மாவட்ட மைய நூலகம் 
 
 கடந்த மார்ச்சு மாதம் 16.03.2009 வைகறை நான்கு மணியிருக்கும். கரூர் வள்ளுவர் விடுதியல் நல்ல தூக்கத்திலிருந்தேன். செல்பேசி மணி அடித்தது. மறுமுனையில் இன்னும் விழிக்கவில்லையா?. நான் பேராசிரியர் இராசசேகர தங்கமணி பேசுகிறேன் என்று பேராசிரியர் பேசினார். நான் நள்ளிரவு இரண்டு மணிக்குதான் படுத்தேன். இன்னும் ஒருமணி நேரத்தில் விழிக்கிறேன் என்று சொல்லி சிறிது நேரம் அயர்ந்து கிடந்தேன். 
 
 ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வரும்பொழுது ஆறு மணி. எனக்காகப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி உந்து வண்டியில் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று அவர்தம் வளமார்ந்த வீடு கண்டு மகிழ்ந்தேன். கரூவூரில் மனை வாங்கிப் புதியதாக வீடு கட்டித் தம் பணி சிறக்க வாழ்ந்து வருகிறார். இவர் தம் மக்கள் இருவர் அமெரிக்காவில் உள்ளனர். பேராசிரியர் இராசசேகர தங்கமணி எழுதிய பதிப்பித்த நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். அவர் பெற்ற விருது, பட்டங்கள், பரிசில்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார். முற்றாக அனைத்தையும் பார்வையிட ஒருநாள் ஆகும். ஒரு மணி நேரத்தில் அவற்றை இயன்றவரை பார்த்தேன். அதற்குள் அவர் கணிப்பொறியைத் தமிழ் மென்பொருள் இறக்கித் தமிழில் தட்டச்சிடும்படி செய்தேன். அதற்குள் வழக்குரைஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் வள்ளுவர் விடுதியில் காத்திருப்பதைத் தொரிவித்தார். எனவே பேராசிரியர் இராசசேகர தங்கமணி என்னை வள்ளுவர் விடுதிக்கு உடன் அழைத்து வந்தார். 
 
 வழக்கறிஞரிடம் பேசிய பொழுது அவரின் தமிழார்வம் கண்டு வியந்தேன்.பல்வேறு தமிழ்நலம் சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது அறிந்து மகிழ்ந்தேன். அவரிடம் என் நாமக்கல் செலவு பற்றித் தெரிவித்தபொழுது நாமக்கல்லில் உள்ள தமிழார்வலர்கள் சிலருக்குத் தொலைபேசியிட்டுப் பேசி என் வருகை பற்றி உரைத்தார். அவரிடமும் விரைந்து விடைபெற நேரந்தது. அதற்குள் முன்பே திட்டமிட்டபடி கரூர் நூலக அலுவலர் திருவாளர் செகதீசன் ஐயா அவர்கள் என் அறைக்கு வந்தார்கள். அனைவரும் சிற்றுண்டி உண்டோம். காலை 8.30 மணியளில் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களிடமும் நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களிடமும் விடைபெற்று 9.45 மணியளவில் நாமக்கல் சென்று சேர்ந்தேன். 
 
  நாமக்கல் மாவட்ட நூலகம் முகப்பு 
  நாமக்கல் மாவட்ட நூலகர்கள் 
 
 அங்கு நூலக அலுவலர் அவர்களும்  பொது உந்தில் வந்து என்னை அழைத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் சார்ந்த நூலகர்கள் பலருக்குக் கணிப்பொறி, இணையம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினேன்.அனைவரும் கற்றுத் தெரிந்துகொண்டனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
  மாலை நான்கு மணியளவில் புறப்பட்டுப் புதுவை வரத்திட்டமிட்டிருந்தேன். அதற்கிடையில் திருவாளர் நா. ப. இராமசாமி ஐயாவுடன் மாரண்ணன் அவர்களும் வந்திருந்தார். நாமக்கல் இராமசாமி ஐயா தாம் முப்பதாயிரம் நூல்களைப் பாதுகாத்து வருவதைச் சொன்னார்கள். அதைக் காணாமல் வந்தால் என்னால் இரவு தூங்கமுடியாது எனக் கருதி அவர் நூலகம் சென்று அனைத்து நூல்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்டு மீண்டும் ஒருநாள் அமைதியாக வந்து பார்வையிடுவேன், பயன்கொள்வேன் என்று உரைத்து, ஐயாவிடம் விடைபெற்று மீண்டேன். 
 
  நூலகர் திரு. வேலு அவர்கள் என் உடன் வந்து உதவினார். 5.15 மணியளவில் பேருந்து ஏறிச் சேலம், விழுப்புரம் வழியாக நடு இரவு புதுவை வந்து சேர்ந்தேன். காலையில் என் கல்லூரிப்பணி முடிந்தேன் .மாலை நான்கு மணிக்கு முன்பே திட்டமிட்டபடி கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடலூர் மாவட்டம் சார்ந்த பல நூலகர்களுக்கு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிக்கு அழைத்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் கல்பனா சேக்கிழார் அவர்களும் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது. 
 
கடலூர் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில்... 
 
நூலக அலுவலர் அவர்களும் நூலகரும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். 6 மணி வரை என் உரை அமைந்தது. இணையமும் மின்சாரமும் வாய்ப்பாக இருந்தன. ஆறு நாட்களாகப் பல்வேறு பயிற்சிபெற்ற அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டி மகிழ்ச்சியூட்டினேன். அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்து சேர்ந்தேன். இரண்டு நாளும் கடுமையான பணி. கடுமையான உழைப்பு. ஆனால் பலருக்கு இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் அனைத்துத் துன்பங்களும் பறந்தன.

திங்கள், 30 மார்ச், 2009

நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்பு


நா.ப.இராமசாமி

 நாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும். அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு. அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி பெற்றனர்.

 நூலகர்களுக்கு நடுவே அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவர் இடையில் வந்து இணைந்து கொண்டு அரங்கில் நடப்பனவற்றை உற்று நோக்கியவண்ணம் இருந்தார். அவரை இடைவெளி நேரத்தில் வினவினேன். அவர் பெயர் நா. ப. இராமசாமி. பழையப் புத்தகங்கள் தொகுத்துப் பாதுகாக்கும் இயல்பினர் என்று அறிந்தேன். பயிலரங்கு முடித்து உடன் ஊருக்குப் புறப்படும்படி முன்பு என் பயணத்திட்டம் வகுத்திருந்தேன். இராமசாமி அவர்களிடம் பேசிய பிறகு என் பயணத்திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு நேரே அவர் அலுவலகத்திற்குச் சென்றேன். மிகப்பெரும் அறிவுக் களஞ்சியத்தைத் தன் பாதுகாப்பில் வைத்திருந்த அவரைக் காணாமலும் அவர் அலுவலகம் செல்லாமலும் வந்திருந்தால் என் பயணம் எளிமையான ஒன்றாகவே அமைந்திருக்கும்.

 நா.ப.இராமசாமி அவர்கள் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர் இவர் தந்தையார் படிப்பறிவு இல்லாதவர். கைரேகை பதிக்கும் பழக்கம் உடையவர். எளிய உழவர் குடும்பம். இராமசாமி அவர்கள் இளமையிலேயே கையில் கிடைத்த, கண்ணில் கண்ட இதழ்களைப் படிக்கும் பழக்கம் உடையவர். அந்தக் காலத்தில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்,சிறுவர் நூல்கள் இவற்றை ஆர்வமுடன் படித்தார். அழ. வள்ளியப்பாவின் படைப்புகள், செட்டிநாட்டிலிருந்து வந்த சிறுவர் இதழ்களைப் படிக்கத் தொடங்கினார். பொதுவுடைமைக் கொள்கைகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த எழுத்துகள் அறிமுகம் ஆகின்றன. தொடர்ந்து கற்றலை ஒரு ஆர்வத் தொழிலாக மேற்கொண்டார்.

 இதன் இடையே மாடுகளுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிடு, கயிறு, பருத்திக்கொட்டை விற்கும் கடையைச் சிறப்புடன் நடத்தி முன்னேற்றம் கண்டார். அரசியல் சார்பு அமைகிறது. தமிழகத்தின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய காமராசர், சம்பத், வாழப்பாடியார், நாவலர், இரா.செழியன் உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. மேலும் மொராசி தேசாய். செகசீவன்ராம் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைக் காணவும், பேசவுமான சூழலும் வாய்த்தது. இப்படி கல்வி, அரசியல் துறைகளில் ஈடுபாட்டுன் விளங்கிய இராமசாமி அவர்கள் இன்றுவரை பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இவருக்குச் சம்பத் தலைமையில் திருமணம். இவர் பிள்ளைகளுக்குத் தலைவர்களைக் கொண்டு சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தன.

 வெளியூர்ப் பயணங்களில் கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். இன்று முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாக்கும் அறிஞராக விளங்குகிறார். தமிழகத்தில், பிற நாடுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிக் கேட்டால் நா முனையில் செய்திகளை வைத்துள்ளார். ஒரு நூல் பற்றிக் கேட்டால் ஒருநூறு நூல்களை எடுத்துக் கண்முன் அடுக்கிவிடுவார். இந்த நூல்களை நமக்கு எடுத்துக் காட்டுவதில் சிறிதும் அலுத்துக்கொள்ளாமல் ஆர்வத்துடன் இவர் செயல்படுவது கண்டு மகிழ்ச்சியே ஏற்படும். பழைய நூல்களை வைத்திருக்கும் ஆர்வலர்கள் தானும் பயன்படுத்தாமல், பிறர் பார்வைக்கும் வைக்காமல் அழியவிட்டுவிடுவது வழக்கம். ஆனால் இராமசாமி அவர்கள் எடுத்து வழங்குவதில் சலிப்படையாதவர். இவருடன் உரையாடியதிலிருந்து...

உங்கள் இளமைப் பருவம் பற்றி...

 நாமக்கல்லில் வாழ்ந்த பழனியாண்டிக் கவுண்டர், காளியம்மாளுக்கு மகனாக 15.10.1939 இல் பிறந்தேன். என் தந்தையார் வண்டியோட்டியும் மூட்டை சுமந்தும் குடும்பம் நடத்தியவர். படிப்பறிவு இல்லாதவர். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்பொழுதே பொதுவுடைமை, திராவிட இயக்க உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதழ்களைப் படிப்பதும் அண்ணா, சம்பத், நாவலர் பேச்சு கேட்டதும் இயக்க ஈடுபாட்டுக்குக் காரணம். அணில், பாலர் மலர், பூஞ்சோலை (அழ.வள்ளியப்பா), ஜில் ஜில்(தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு) உள்ளிட்ட இதழ்களை இளமையில் படித்தேன்.

 அமெரிக்க அரசு அந்த நாளில் அமெரிக்கன் ரிப்போட்டர் என்ற இதழை இலவசமாக அனைவருக்கும் வழங்கியது. ஆர்வமுடன் படிப்பேன். இரண்டாம் படிவத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபொழுதே என் படிப்பு வேட்கை தொடங்கிவிட்டது. சோவியத் நாடு இதழும் படிக்கத் தொடங்கினேன். 1958 இல் உழவுப்பொருள் கடையைக் கவனித்தேன். இதே ஆண்டில் திருமணமும் நடந்தது.

நூல்கள்சேர்க்கும் பழக்கம் உங்களுக்கு எப்பொழுது தொடங்கியது?

 வெளியூர் செல்லும் பொழுது மறக்காமல் பழையப் புத்தகக் கடைக்குச் செல்வது உண்டு. சேலம், சென்னை மூர்மார்க்கட், திருச்சி, மதுரையில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் நூல் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மூர் மார்க்கட்டில் எனக்காக நூல்களை எடுத்து வைத்திருந்து வழங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. உரோசா முத்தையா அவர்களை அவரின் இல்லத்தில் கண்டு அவரிடமும் நூல்களை வாங்கி வந்த பட்டறிவு உண்டு. அவரிடம் இருந்து ஆறு பழைய கடிதங்களை வாங்கி வந்தேன். 1894-1900 ஆண்டில் எழுதப்பட்டன. அந்தக் கடிதங்கள் செட்டிநாட்டிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இந்தக் கடிதங்களில் தமிழில் மட்டும் முகவரி எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுதினால் அந்த நாடுகளுக்குச் செல்லும்படியாகத் தமிழ் மொழிக்கு மதிப்பு இருந்துள்ளது.

உங்களிடம் உள்ள பழைமையான குறிப்பிடத் தகுந்த நூல்கள்?

 இராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள். மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840 பதிப்பு, இராட்லர் அகராதி (1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் உள்ளன. இதில் படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு(1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்), இவை தவிர ஓவியம், சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல் கலை (1912) குறித்த நூல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன. பாளையங்கோட்டையில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

உங்கள்அரசியல் வாழ்க்கை?

 திராவிடஇயக்கம், பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் இருந்தாலும் சம்பத் அவர்களின் தமிழ்த்தேசியக்கட்சியில் ஈடுபட்டு உழைத்தேன். சம்பத் பேராயக் கட்சியில் இணைந்த பிறகு நான் காமராசர் அவர்களுடன் இருந்தேன். பின்னர் வாழ்ப்பாடி இராமமூர்த்தி அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. காமராசர் கொள்கையை இன்றும் தாங்கி வாழ்கிறேன். சனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.

உங்கள் பகுத்தறிவுக் கொள்கை?

 தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையும் சமூகச்சீர்திருத்தக் கொள்கையும் எனக்கு உடன்பாடான கொள்கைகள். எந்த வகையான சடங்கும் இன்றி எங்கள் குடும்பத்தில் திருமணம் செய்தோம். பார்ப்பனர்களை எங்கள் பகுதியில் திருமணத்திற்கு அழைப்பது இல்லை.


நா.ப.இராமசாமி தாம் தொகுத்த நூல்களுக்கு இடையே

உங்கள் நூல் தேடும் முயற்சி பற்றி?

 இன்று வரை புத்தகத்துக்காக நான் செலவு செய்வதற்குத் தயங்குவது இல்லை.பழைய புத்தகங்களை எந்த விலை சொன்னாலும் வாங்கிவிடுவேன். இப்பொழுதும் பழைய புத்தகங்களையும் புதிய புத்தகங்களையும் வாங்குகிறேன். நாமக்கல் மாவட்ட மைய நூலகம் வளர்ச்சி பெற பல வகையில் உதவியுள்ளேன்.

உங்கள் நாணயம் சேகரிப்பு பற்றி..

 என்னிடம் பழைய நாணயங்கள் பல உள்ளன. சேரர், உரோமானியர், சீனர் காலத்து நாணயங்கள் உள்ளன. கரூர் ஆற்றுப்பகுதியில் கிடைத்த பல நாணயங்களை நான் வாங்கிப் பாதுகாக்கிறேன். கொடுமணல் நாணயங்கள் என்னிடம் உள்ளன. நடுகற்கள் இரண்டைப் புலவர் இராசு அவர்களுடன் இணைந்து கண்டெடுத்துள்ளேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி?

 நான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன், 1973 இல் சப்பான் நாட்டிற்கும் 1987 இல் உருசியாவிற்கும் 1999 இல் பிரிட்டன், பிரான்சு, தாய்லாந்து, பெல்சியம் நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். மலேசியா, பிலிப்பைன்சு, ஆங்காங், சென்று வந்துள்ளேன். 2004 சனவரி ஒன்றில் யாழ்ப்பாணம் சென்று வந்தேன். அங்குப் பல நாள் தங்கிப் பல ஊர்களையும் முக்கியமான தலைவர்களையும் கண்டுவந்துள்ளேன். 3800 நூல்களை (சற்றொப்ப ஐந்து இலட்சம் மதிப்புள்ளது) தமிழீழத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்.

உரோசா முத்தையா நூல்கள் தொகுப்பு முயற்சி பற்றி?

 உரோசா முத்தையா அவர்களைப் பல முறை நேரில் கண்டுள்ளேன். செட்டிநாட்டில் அவர் தொகுத்த நூல்கள் குறிப்பிடத் தகுந்தன. கட்டுக்கட்டாக கடிதங்களைத் திரட்டியவர். அச்சில் உள்ள இதழ்கள். நூல்கள், அழைப்பிதழ்கள் எனப் பலவற்றையும் தொகுத்துப் பாதுகாத்தவர். ஓம் சக்தி இதழில் அவரின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்துள்ளது.

உங்கள் நூல்களை எதிர்காலத்தில் என்ன செய்ய முடிவுசெய்துள்ளீர்ர்கள்?

 என்னிடம் உள்ள பல நூல்களையும் தமிழீழம் விடுதலை அடைந்தால் கொடுக்க அணியமாக உள்ளேன்

ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உங்களால் உதவமுடியும்?

 ஆய்வாளர்கள் பலரும் என் நூலகத்துக்கு வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான நூல்களை மட்டும் எடுத்துப்படிக்கிறார்கள். அனைத்து நூல்களையும் பார்வையிடவோ, படிக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. பல பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் நூலகத்துக்கு வருகின்றனர். பலர் நூல்களை இரவலாக எடுத்துச்செல்லுவர். சிலர் நூல்களைத் திருப்பித் தருவதில்லை.

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் என்னிடம் இருந்த அரிய நூல்களைப் பெற்று மறுபதிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் எனக்கு எழுதியோ, பேசியோ முன் தகவல் தந்து வந்து பார்க்கலாம். என் நூலகத்தைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்களுக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் உதவ என்றும் தயாராக உள்ளேன்.

முகவரி: நா.ப.இராமசாமி
நூல் சேகரிப்பாளர்,
சேலம் சாலை, நாமக்கல், தமிழ்நாடு.
பேசி: 04286-231704

திங்கள், 16 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு முதல் அமர்வு நிறைவு...

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் 16.03.2009 திங்கள் காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் உரிய நேரத்தில் கலந்துகொண்டேன்.

மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.யுவராசு அவர்கள் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. மாவட்ட நூலகர் திரு.இரா.வேல்முருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நூலகர்களும்,இணைய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த அனைத்துச் செய்திகளும் காட்சி விளக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

பயிலரங்கச் செய்திகள் உடனுக்குடன் உள்ளூர்த் தொலைக்காட்சிகள், செய்தி ஏடுகள் வழியாக நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.பகல் ஒரு மணி வரை பயிலரங்கு நடந்தது.
உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்துள்ளனர்.

இரண்டு மணிக்கு மின்வடிவில் வெளிவரும் இதழ்கள் அறிமுகம் செய்யும் காட்சி விளக்கமும், வலைப்பூ உருவாக்கம் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஞாயிறு, 15 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு

நாமக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைநூலகம்,ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளும்
தமிழ் இணையப்பயிலரங்கு 16.03.2009 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்துப் பயிற்சியளிக்க உள்ளார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட மைய நூலக அலுவலர்,மாவட்ட நூலகர் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.