நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
காசித்திருமடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசித்திருமடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஏப்ரல், 2011

கயிலைமாமுனிவர் சதாபிசேக விழா மலர்


கயிலைமாமுனிவர் சதாபிசேக விழாமலர்

  திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் அதிபர் தவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில்(06.04.2011) திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  தவத்திரு கயிலைமாமுனிவர் அடிகளார் அவர்களின் பன்னருஞ் சிறப்பினை எடுத்துரைக்கும் சதாபிசேக மலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சற்றொப்ப நானூறு பக்கம் அளவுள்ள மலரில் தமிழகத் திருமடங்களைச் சார்ந்த சான்றோர்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தவத்திரு அடிகளாருடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களின் பட்டறிவுகளை மிகச்சிறப்பாக எழுதியுள்ளனர். தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் துறவு வாழ்க்கையின் அரிய படங்கள் பல இடம்பெற்றுள்ளன.

 திருப்பனந்தாள் திருமடம் தவத்திரு குமரகுரபரர் அடிகளால் காசியில் நிறுவப்பட்ட மடத்தின் கிளைமடமாகும். இம்மடத்தின் இருபத்தொன்றாம் அதிபராக இருந்து பல்வேறு சமய நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டும், கல்விநிறுவனங்கள் பலவற்றை நிலைநிறுத்தியும், பல அறக்கொடைகள் நிறுவியும் தமிழ்த்தொண்டு புரிந்துவரும் தவத்திரு அடிகளார் அவர்களின் வாழ்க்கை வரலாறும் திருமடத்துப்பணிகளும் மிகச்சிறப்பாக இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.

 கவிதைகள், கட்டுரைகள் யாவும் தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் அருள் வாழ்க்கையை எடுத்துரைக்கும் ஆவணங்களாக உள்ளன. தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் அயல் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் தமிழ், ஆங்கிலமொழியில் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கண்ணைக் கவரும் வண்ணத்தில் அச்சான இந்த மலர் பாதுகாக்கும் தரமுடையது. மலரை அழகிய வடிவில் உருவாக்கிய இணைஅதிபர் தலைமையிலான மலர்க்குழு பாராட்டுக்கு உரியது.

வியாழன், 27 ஜனவரி, 2011

பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா இணையதளத் தொடக்கவிழா


 திருப்பனந்தாள் கல்லூரியின் மேனாள் முதல்வரும் கல்வெட்டியல் அறிஞரும் பன்னூலாசிரியரும் பன்மொழியறிஞருமான பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா அவர்களின் அறிவுக்கொடை, தமிழ்ப்பணிகளைத் தாங்கி நிற்கும் இணையதளம் தொடக்க விழா நடைபெற உள்ளது. 30.01.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்குத் திருப்பனந்தாள் திருமடத்தின் அதிபர் தவத்திரு. கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் திருக்கையால் திருப்பனந்தாள் திருமடத்தில் நடைபெறும் விழாவில் இணையதளம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

 காசித் திருமடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளார்கள்.

 கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சுப்பிரமணியன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன், பாலசுப்பிரமணியன், விசயராகவன், இரா.சுப்பராயலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.

 பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் தொகுப்புரை வழங்கவும் பேராசிரியர் அரங்க. சிவப்பிரகாசம் அவர்கள் வரவேற்கவும் உள்ளனர். புலவர் இராம.சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

இணையதள முகவரி:

www.venkataramaiah.org